ஊரிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறார் எனது பட்டயக் கணக்காளர். அவர் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக பட்டயக் கணக்காளர்கள் இருக்கிறார்கள். அவர் வீட்டில் 6 பேர் பட்டயக் கணக்காளர்களாக இருந்திருக்கின்றனர். அவரது பாட்டனாரும் தந்தையும் சகோதரரும் பட்டயக் கணக்காளர்கள். மனைவியும் மகனும் பட்டயக் கணக்காளர்கள். சந்தித்த முதல் நாளிலிருந்து எங்களுக்குள் அன்பும் பிரியமும் உருவாகி விட்டது. அவர் வீட்டில் அனைவருமே என் மீது பிரியம் கொண்டவர்கள்.
3 தலைமுறையாக பட்டயக் கணக்காளர்கள் எனினும் பல தலைமுறைகளாக அவர்கள் பூர்வீக கிராமத்தில் பண்ணையார்கள். பல வேலி நிலங்களுக்கு சொந்தக்காரர்கள். ‘’வேலி’’ என்னும் நில அளவு ‘’7 ஏக்கர்’’ ஐ குறிக்கும். பல வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் என்று ஒருவரைச் சொன்னால் அவர் பெரிய பண்ணையார் என்று அர்த்தம்.
பழைய தஞ்சாவூர் பண்ணையார்களுக்கென்று பிரத்யேகமான பல வழக்கங்கள் உண்டு. இப்போது பரம்பரையாக பண்ணையார்கள் என்று மிகச் சிலரே இருக்கின்றனர். பெரும்பாலான பண்ணையார்கள் 70 ஆண்டுகளுக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் நிலங்களை விற்பனை செய்து விட்டார்கள். ஒருவர் இன்று 50 ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம் ; அவர் பண்ணையார் தான். ஆனால் அவர் பழைய பண்ணையார் மனோபாவம் கொண்டவராக இருக்க மாட்டார். மளிகைக் கடை வைத்திருத்தல், டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருத்தல், பால் வியாபாரம் செய்தல், ஃபார்மஸி வைத்திருத்தல் போல 50 ஏக்கர் நிலம் வைத்திருப்பதையும் ஒரு தொழிலாகக் கருதும் நில உரிமையாளர்கள் உண்டு. அவர்கள் பண்ணையார்கள் இல்லை. நில உரிமையாளர் மட்டும் தான். நான் சொல்லக் கூடிய விதமான பழைய பண்ணையார்கள் மொத்த காவிரி டெல்டாவில் இன்று ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கக் கூடும்.
எனது பட்டயக் கணக்காளரையும் அந்த பட்டியலில் கொஞ்சம் முயன்றால் சேர்த்திட முடியும்.
வழக்கமாக பட்டயக் கணக்காளர்கள் அலுவலகங்கள் காலை 10 மணிக்குத் துவங்கும். இவர் அலுவலகமும் அவ்விதம் தான். ஆனால் அவர் மதியம் 12.30க்கு தான் வருவார். பூஜை ஜபம் செய்து முடித்து விட்டு BRUNCH எனப்படும் காலை மதிய உணவுக்கு இடையேயான ’’ஃபுல் மீல்ஸ்’’ உணவை முடித்து விட்டு தனது பெரிய காரில் அலுவலகம் வந்து சேருவார். அவரது வேலை நேரம் என்பது 12.30 - 3.30 . மூன்று மணி நேரம் தான் அலுவலகத்தில் இருப்பார். 4 மணிக்கு வீட்டுக்குச் சென்றதும் ஒரு காஃபி அருந்துவார். பல தசாப்தங்களாக இதுவே அவரது வழக்கம். அவரது கிளையண்ட் அனைவரும் 12.30 - 3.30 நேரத்தில் தான் சந்திப்பார்கள்.
அவர் கிளைண்ட் அனைவரும் ஊரின் பெரும் செல்வந்தர்கள். அவர்கள் அனைவரும் பட்டயக் கணக்காளரிடம் மிகப் பணிவாக முதலாளியிடம் பணிந்து பேசும் பணியாள் போல தான் பேசுவார்கள்.
முதல் சந்திப்பிலிருந்தே என்னைத் தன் நண்பனாக எண்ணினார் என் பட்டயக் கணக்காளர். நண்பனாகவே நடத்தினார். நண்பனாக எனக்கு அவர் அலுவலகத்தில் பல உரிமைகளைக் கொடுத்திருக்கிறார். ஒருநாள் நான் அவரிடம் சொன்னேன் : ‘’சார் ! நீங்க நம்ம ஆஃபிஸை ஒரு பண்ணையார் போல நடத்துறீங்க.’’
கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து விட்டு பதில் சொன்னார். ‘’ நீ சொல்றது உண்மைதான்’’