அனுப்புநர்
ர.பிரபு
&&&&&
&&&
மயிலாடுதுறை - 609001
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001
ஐயா,
பொருள் : மயிலாடுதுறை மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் மனுக்கள் உரிய விதத்தில் தீர்வு காணப்படுவதில்லை என்பதைத் தெரிவிப்பது - உரிய விதத்தில் தீர்வு காணப்படாமல் பைசல் செய்யப்படுவது குறித்து புகாரளிப்பது.
இந்த மனுவின் நகல் கனம் தமிழக ஆளுநருக்கும் கனம் தமிழக முதலமைச்சருக்கும் கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கும் கனம் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சருக்கும் அனுப்பப்படுவதால் சற்று விரிவானது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் முறைப்படி உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது மாறாப் பற்று கொண்ட குடிமகன் என்ற வகையில் இந்திய அரசியலமைப்பின் முக்கிய அங்கங்கள் ஆன ராஷ்ட்ரபதி பவன், நீதி அமைப்புகள், பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றின் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதனாலேயே இந்த மனுவை எழுதுகிறேன். இந்த மனுவில் குறிப்பிடப்படும் விஷயங்கள் முற்றிலும் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை என் அகத்தில் இக்கணத்திலும் நிறைந்தே இருக்கிறது.
2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் எனது நண்பர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தின் சீட் கவர் மாற்றும் கடைக்குச் சென்றிருந்தேன். நண்பரின் வாகனத்துக்கு சீட் கவர் மாற்ற வேண்டியிருந்தது. அது 30 லிருந்து 45 நிமிடம் தேவைப்படும் பணி. அந்தக் கடையின் பணியாளர் சீட் கவர் மாற்றத் தொடங்கினார். ஜனநாயகத் திருவிழாவான தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டீர் களா என்று கேட்டேன். சற்று சோர்வுடன், ‘’ ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு போடுகிறோம் ; ஆனால் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை கூட நடப்பதில்லை’’ என அலுப்புடன் கூறினார். அரசாங்க அலுவலகத்தில் அவருக்கு நடக்காமல் இருக்கும் வேலை என்ன என்று கேட்டேன். அவர் தன்னைப் பற்றி சொன்னார். அவர் பெயர் %%% த/பெ %%%%. திருஇந்தளூர் %%%% பகுதியைச் சேர்ந்தவர். திரு. %%% , அவரது மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேர் கொண்ட குடும்பம். சீட் கவர் தைக்கும் கடையில் பணி புரிவதால் சொற்பமான மாத ஊதியம் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் வாழ்வை தன் குடும்பத்தின் வாழ்வை அமைத்துக் கொள்கிறார். அவருக்கு அரிசி ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஜீனி ரேஷன் கார்டு வழங்கி விட்டார்கள். %%% பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர். ஆகையால் எவ்விதம் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றிக் கொள்வது என்பது தெரியவில்லை. காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கடையில் வேலை இருப்பதால் அவரால் வட்ட வழங்கல் அலுவலகம் தொடர்ந்து செல்ல முடியவில்லை ; ஒரு சில முறை சென்று விட்டு பின்னர் சோர்ந்து போய் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டார். என்னிடம் என் கேள்விக்குப் பதிலாக மேற்படி விபரங்களைத் தெரிவித்தார்.
அவரிடம் நான், ‘’ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மனுநீதி நாள் முகாம் நடக்கும். அங்கே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். உங்கள் மனுவுக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளிக்கப்படும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அதனைக் கொண்டு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறியலாம். அங்கே உங்கள் கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கலாம். மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜீனி கார்டு அரிசி கார்டாக மாற்றித் தரப்படும் ’’என்று கூறினேன். நம்பிக்கையுடன் நான் இத்தனை முறைமைகளைக் கூறியதால் அவருக்கு நம்பிக்கை உண்டானது. ’’தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே இந்தக் காலகட்டத்தில் மனுநீதி நாள் முகாம் இருக்காது. வாக்குப் பதிவுக்குப் பின் மீண்டும் துவங்கும் ; அப்போது வந்து உங்களுக்கு மனு எழுத உதவுகிறேன்’’ என்றும் சொன்னேன்.
ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு முடிந்தது. மனுநீதி நாள் நடைமுறைகள் அதன் பின் தொடங்கின. ஆகாஷ்வாணி செய்திகள் மூலம் அதனை அறிந்த நான் திரு. %%% அவர்களை அவருடைய பணியிடத்தில் சந்தித்து அவர் மனு எழுத உதவினேன். அவர் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ‘’மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தால் அரசின் இயங்குமுறையைத் தெரிந்து கொள்ள உணர்ந்து கொள்ள அவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணினேன். தனது கடையின் பணியிலிருந்து அவரால் வர இயலவில்லை. பலமுறை மனுநீதி நாள் முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய பின் ஜூன் 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் திரு. %%%% மனு அளிக்கப்பட்டது.
ஜூன் 1ம் தேதி மனுநீதி நாள் முகாமுக்கு நானும் வந்திருந்ததால் அன்றைய தினத்தில் மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மனு ஒப்புகைச் சீட்டு 5 மணி நேரம் தாமதமாக மாலை 3 மணிக்கு மேல் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரிவித்து அதனை சரி செய்யக் கோரி ஒரு கடிதமாக எழுதினேன்.மாவடத்தின் பல பகுதியிலிருந்து வருகை தரும் மனுதாரர்களுக்கு உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கி அவர்கள் 5 மணி நேரம் காத்திருக்கும் அல்லலை நீக்குமாறு கோரினேன். எனது கோரிக்கை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப் பட்டிருக்கிறதா என்பதைக் காண ஜூன் 8ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாள் முகாம் சென்றேன். அன்றும் மனுதாரர்கள் ஒப்புகைச்சீட்டு பெற 5 மணி நேரம் காத்திருந்தார்கள் என்பதைக் கண்டேன். அன்றே இன்னொரு கடிதம் எழுதினேன். ஜூன் 11 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரைச் சந்தித்து ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மனுநீதி நாள் முகாம் தொடர்பான புகார் குறித்து தெரிவித்து அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜூன் 15 மனுநீதி நாளுக்கு வரும் மனுதாரர்கள் ஒப்புகைச் சீட்டுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இராமல் உடன் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதியான மின் ஆளுகை அலுவலகத்தில் சென்று சொல்லும்படி சொன்னார். அங்கு சென்று சொன்னேன். அவர்கள் ‘’சமூகப் பாதுகாப்பு திட்டம்’’ அலுவலகம் சென்று தெரிவிக்குமாறு கூறினர். அவ்விதமே செய்தேன். ஜூன் 15 அன்று ஆட்சியர் அலுவலகம் வந்து மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடன் வழங்கப்படுகிறதா என்பதைக் காண வந்தேன். மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடனுக்குடன் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அன்றைய தினமே நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன்.
ஜூன் 1ம் தேதி திரு. %%% அளித்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய ஜூன் 24 அன்று மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தேன். மனுநீதி நாள் முகாம் கோப்புகளுக்கு பொறுப்பான எழுத்தர் விடுப்பில் சென்றிருப்பதால் ஜூன் 25 அன்று வருமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜூன் 25 அன்று சென்று பார்த்தேன். திரு. %%% அவர்களின் மனுநீதி நாள் புகார் கோப்பு ஜூன் 4 அன்று பைசல் செய்யப்பட்டிருந்தது என்பதை இணையத்தில் மனுதாரரின் ஒப்புகை எண்ணை உள்ளிட்டு மனுநிலை அறிந்து கூறினர். ஆனால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து 21 நாட்களாக இந்த விஷயம் குறித்து எந்த தபாலும் வரவில்லை. தங்களிடம் எந்த தபாலும் இல்லை ; வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விசாரியுங்கள் என்று கூறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தேன். வட்ட வழங்கல் அலுவலகத்திலிலிருந்து மனுதாரரு க்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு கோப்பு மூடப்பட்டது எனத் தகவல் தெரிவித்தனர். ‘’நான் மனுதாரருடன் தொடர்பில் இருக்கிறேன் ; அவருக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை ‘’ என்று கூறினேன். மேலும் ‘’வட்ட வழங்கல் அலுவலகமாகிய தங்கள் அலுவலக தபால் ஆவணத்தைப் பரிசீலியுங்கள் ; ஜூன் 4 க்குப் பிறகு மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதில் பதிவாகியிருக்கும் அத்துடன் அதன் நகல் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதை யும் பரிசீலியுங்கள் ‘’ என்று சொன்னேன்.
அந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வட்ட வழங்கல் அலுவலகத்தால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதனால் தான் அந்தக் கோப்பு தங்களிடம் இருக்கிறதா என மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தேடிப் பார்த்தனர் என யூகித்தேன். அதாவது, வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் எந்தத் தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் அனுப்பாமல் மனுதாரர் கோப்பை மூடியுள்ளனர்.
மேற்படி விஷயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மனுநீதி நாள் முகாம், மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர், மின் ஆளுகை முகமை, சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகிய அலுவலகங்களுக்குப் பலமுறை சென்று வந்த அனுபவத்தின் அடிப்படையில் மனுதாரர் மனு தொடர்பாக முறைமைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பிழையாக் கோப் பு மூடப்பட்டுள்ளது என்பதை ஒரு சாமானியக் குடிமகனாக என்னால் யூகிக்க முடிகிறது. ஜூன் 1 அன்று திரு. %%% என்ற மனுதாரர் தனது ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர வேண்டி அளித்த மனு மீது மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்கொண்ட மேல்நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மனுவைக் கையாண்டவர்கள் அதனைக் கையாண்ட விதத்திலோ முறைமைகளிலோ பிழை செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் மாநில அரசு அலுவலகங்களுக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் ; தயங்குகிறார்கள் என்பதே இன்றைக்கும் யதார்த்தமாக இருக்கும் நிலை. சாமானிய மக்கள் எல்காட் தலைமை அலுவ்லகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய அலுவலக வாயிற்படிகளை மிதிப்பது இல்லை. தங்கள் சொந்த நிலத்துக்கு பட்டா வாங்க தங்கள் இடவிற்பனையைப் பத்திரப்பதிவு செய்ய தங்கள் வாகனத்துக்கு பதிவு எண் பெற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க என முறையே வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அலுவலகம், வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக வாயிற்படிகளையே மீண்டும் மீண்டும் மிதிக்கின்றனர். மேற்படி அலுவலகங்களில் குடிமக்களுக்கு நிகழ வேண்டிய சிறு பணிகளுக்குக் கூட - குடிமக்களின் அடிப்படை உரிமையான அரசு சேவைகளைப் பெறுவதற்கு கூட பெரும் பணம் லஞ்சமாகக் கேட்கப்படுகிறது என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சியரையும் நம்பி ‘’மனுநீதி நாள்’’ முகாம் அன்று மாவட்ட ஆட்சியரை நோக்கி நம்பிக்கையுடன் வருகிறார்கள். தமிழக மக்கள் இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றுக்குத் தேர்வான குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு பணி நியமன ஆணை வழங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இப்போதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் தங்களுக்கு இழைக்கும் அசௌகர்யங்களிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அவமதிப்புகளிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அநீதிகளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களைக் காப்பார் என உறுதியாக நம்புகிறார்கள். இந்த மனுவின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் அரசு அலுவலகங்களால் முறையாகக் கையாளப்படுவதை உ றுதிப்படுத்த வேண்டும் என்பதும் இது குறித்து மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவ்லகங்களுக்கும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுமே ஆகும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் வெற்றி பெறுகின்றன என அரசியல் கட்சிகள் மீதும் அதன் மறுபக்கமாக தமிழக வாக்காளர்கள் வாக்குக்குப் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்னும் புகார் தமிழக வாக்காளர்கள் மீதும் இருந்தது. 2026ல் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கட்சி மீது அதன் அரசியல் எதிரிகள் கூட வாக்குக்கு பணம் அளித்தார்கள் என்னும் குற்றம் சாட்டவில்லை. இன்றைய ஆளுங்கட்சி எந்த வாக்காளருக்கும் பணம் கொடுத்து வெற்றி பெற்று தமிழக சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக வரவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமான ஒன்று என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழக மக்கள் மாநில அரசின் அரசாட்சி முறைகளில் மாற்றம் தேவை என்பதற்காகவே ஒரு புதிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர். கோடானுகோடி தமிழக மக்களின் அபிலாஷை வெளிப்படையான ஊழலற்ற அரசு நிர்வாகமே ஆகும். ‘’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என்ற அளவில் எனது ஜூன் மாத அனுபவத்தை முன்வைத்துள்ளேன். இந்த விரிவான மனு தமிழக அரசு அலுவலக ஊழியர்களின் அலட்சிய மனோபாவத்தை யும் சாமானியக் குடிமக்களுக்கு ஏற்படும் அலைக்கழிப்பையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கக் கூடும்.
‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது தமிழ்மறையின் வாக்கு. இவ்விதமாக , குடிமக்கள் என்ற விதத்தில் அரசு அதிகாரிகளும் குடிமக்களும் சமமே. சாமானியக் குடிமக்களை அலைக்கழிக்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமையில்லை. அவ்விதம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது நீதிக்கும் நிர்வாகத்துக்கும் ஒவ்வாதது ஆகும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே ! தாங்கள் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘’தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’’ எனப் போதித்த ஐயா வைகுண்டரும் ‘’மனுஷனுக்கு ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே கடவுள்’’ எனப் போதித்த ஸ்ரீநாராயண குருவும் வாழ்ந்து வழிகாட்டிய மண்ணிலிருந்து தமிழகத்துக்கு வந்துள்ளீர்கள். தாங்கள் மாவட்ட ஆட்சித்த்லைவராக இருக்கும் காலத்தில் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் சிறப்பாகக் கையாளப்பட்ட்ன என்னும் நிலையை மாவட்ட நிர்வாகத்தில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த மனுவின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். சொற்ப மாத ஊதியம் பெற்று வறிய நிலையில் இருக்கும் மனுதாரர் திரு. %%% அவர்களின் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விரிவான மனு - கடிதம் கனம் தமிழக ஆளுநர், கனம் தமிழக முதலமைச்சர், கனம் வருவாய்த்துறை அமைச்சர், கனம் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், கனம் சமூகநீதித்துறை அமைச்சர் ஆகியோர் நேரடி கவனத்துக்குச் செல்லுமா என்பது ஓர் ஐயம். இந்த விரிவான மனு - கடிதம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்துக்கு செல்லுமா என்பது அதை விடப் பெரிய ஐயம். எனினும் மேற்கூறியோரின் அலுவலகங்களின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்ல வாய்ப்புண்டு. அவர்கள் கவனம் கொடுத்தால் தீர்க்கக்கூடிய விஷயங்களே இந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை. மனுவின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மனுதாரரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்..
ஜெய்ஹிந்த்!
தங்கள் உண்மையுள்ள,
&&&
இடம் : மயிலாடுதுறை
நாள் : 26.06.2026
நகல்
1. கனம் தமிழக ஆளுநர்
லோக் பவன்
கிண்டி - சென்னை
2. கனம் தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை
3. கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை
4. கனம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை
5. கனம் சமூகநீதித்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை