Saturday, 27 June 2026

தொழிலதிபர்

சிதம்பரம் அருகே ஒரு சிற்றூர். அங்கே புதிய விதத்தில் ஓர் உணவகம் அமைத்திருந்தார்கள். எவ்விதம் என்றால் அந்த உணவகத்தில் கேக் வகைகள் கிடைக்கும் ; சாண்ட்விச், கட்லெட் போன்றவை இருக்கும் ; ஐஸ்கிரீம்கள் இருக்கும். இவை அனைத்துமே வழக்கமான முறையில் மைதா, ஜீனி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பாரம்பர்ய வகை அரிசி ரகங்களான கருப்பு கவுனி மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீமும் தயார் செய்கிறார்கள். அவர்கள் உணவகத்தில் 20 லிருந்து 25 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  அந்த சிற்றூரை ஒரு பெரிய கிராமம் என்று கூற முடியும்.  கருப்பு கவுனி கேக் ஆர்டர் செய்தால் 20 நிமிடத்தில் அந்த கேக்கை அந்த தருணத்தில் தயாரித்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு கேக் ஆர்டர் மற்றும் உணவு ஆர்டர் ஃபோன் மூலம் வருகிறது. மாலை 3 மணிக்கு ஒரு ஆர்டர் வந்தால் மாலை 3.30க்கு வந்து கேக்கைப் பெற்றுக் கொள்ளவும் என செய்தி அனுப்பி விடுகிறார்கள். கேக் தயாராகி விடுகிறது. 3.30க்கு வந்து பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் அந்த உணவகத்தில் நிகழ்கின்றன. அந்த உணவகத்தில் கேக் , சாட் வகைகள், ஐஸ்கிரீம் அனைத்துமே வழக்கமான விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஐஸ்கிரீம் கூட இயற்கை உணவுப்பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனக்கு அங்கே இருந்த போது ‘’ஸ்டார்பக்ஸ்’’ காஃபி ஷாப்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் அங்கே தற்செயலாக செல்ல நேர்ந்தது. நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அந்த உணவகத்தின் புறச்சூழல் மிக இனிமையானதாக இருந்ததால் எங்கள் உரையாடலிலும் அந்த இனிமை கூடுதல் இனிமையைச் சேர்த்தது. 

இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் இளம் தம்பதியர். கணவனுக்கு 30 வயது இருக்கக் கூடும் . அவரது மனைவிக்கு 26 வயது இருக்கலாம். கேக் , ஐஸ்கிரீம் என அனைத்தையும் இந்த தம்பதியினரே செய்கின்றனர். பரிமாற ஓரிரு பணியாளர்கள்  இருக்கின்றனர். தம்பதியர் இருவருக்குமே உணவு சமைத்தலில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இவ்விதமான ஒரு தொழில் முயற்சியை செய்து பார்த்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்பின் படி அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5000க்கு வணிகம் நிகழக் கூடும். 

அந்தப் பிரதேசத்தில் இருக்கும் வங்கிகள் இந்த இருவரையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர்கள் வணிகத்தின் வடிவத்தை புதிய தொழில்முனைவோருக்கான ஒரு சாத்தியமாக வங்கிகள் மாநிலமெங்கும் முன்வைக்கலாம்.

அவர்களின் சிறு குழந்தைக்கு 6 வயது இருக்கும். அவன் தன் அன்னையின் பக்கத்திலேயே நிற்கிறான். அன்னை எங்கு சென்றாலும் உடன் செல்கிறான். கேஷ் சாளரத்தில் அடுமனையில் பரிமாறும் இடத்தில் எங்கும் கூட கூட வருகிறான். அன்னை தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது அக்குழந்தையின் எதிர்பார்ப்பு. அந்த அன்னை அவனையும் பார்த்துக் கொண்டு தன் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். 

உணவுக்கான தொகையை அளித்த போது எவ்விதம் எல்லா உணவுப் பொருட்களும் 50 சதவீதம் குறைவான விலையில் தர முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்தப் பெண் ‘’இடம் சொந்த இடம் என்பதால்’’ எனச் சுருக்கமாகச் சொன்னார். 

இந்த உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதியரைப் போன்ற தொழிலதிபர்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் மேலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். 

அவர்கள் குடும்பம் நலமுடன் வாழ இறைமையிடம் வேண்டிக் கொண்டேன்.