Saturday, 4 July 2026

கால்பந்து ஆடும் சிறுவன்

எங்கள் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பம் இருக்கிறது. அந்த விவசாயக் குடும்பத்தின் தலைவர் எனது நண்பர். சென்ற ஆண்டு எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இயற்கை எய்தினார். 

அவரது மகனுக்கு 18 வயது ஆகிறது. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். காமர்ஸ் அக்கவுண்டன்சி பிரிவு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறான். IELTS தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்கிறான். 

18 வயது ஆகியிருக்கும் அந்த இளைஞன் தனது 6 வயதிலிருந்து 12 வருடமாக தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என தினமும் 6 மணி நேரம் கால்பந்து வீரனாகப் பயிற்சி எடுத்தான். பள்ளிப்பாடங்களில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்ததால் அவனது கால்பந்து ஆர்வத்துக்கு வீட்டில் யாரும் தடை ஏற்படுத்தவில்லை. அவன் சிறுவனாயிருந்த நாட்களிலிருந்தே அவனை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே காண முடியும். நம் சூழலில் ஒரு சிறுவன் தன்னார்வத்தில் 6 வயதிலிருந்து தினமும் 6 மணி நேரம் 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பது என்பது அபூர்வமானது என்பதை எவரும் உணர முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் அவன் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது ; இருக்கிறது. 

அவன் தனது கால்பந்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா செல்ல விரும்புகிறான். சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொண்டுள்ளான். IELTS மதிப்பெண் நன்றாக இருப்பதால் அவனுக்கு  ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் கிடைக்கக் கூடும். 

இங்கே ஊரில் மாநகரங்கள் போல கல்விக்காக வெளிநாடு செல்ல ஆலோசனை கூறும் மையங்கள் இல்லை.  

விசா கிடைக்க கடந்த 2 ஆண்டுகளின் வங்கிப் பரிவர்த்தனைகள், கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித்தாக்கல் ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் வங்கியில் குறைந்தபட்சமான வரவு செலவு மட்டுமே உள்ளது. விவசாயத் தொழிலுக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை என்பதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

15 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் என்னிடம் உதவி கேட்டு வந்தான். அவனுக்குத் தேவைப்படும் உதவி விசாவை உறுதி செய்வதில் தான். எனக்கு இந்த விஷயம் புதிது. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் என அச்சிறுவனிடம் கூறியிருக்கிறேன்.