அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்
கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் நிறுவனம் ஒன்றுடன் கடந்த 1 மாதத்துக்கு மேலாக தொடர்பில் இருக்கிறேன். சிறுவனின் கல்லூரி சேர்க்கை தொடர்பான பொறுப்பு அந்நிறுவன ஊழியர் ஒருவருக்குத் தரப்பட்டுள்ளது. அவரை சென்னையில் ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசினேன். நிதி ஏற்பாடுகள் தொடர்பாக தேவைப்படும் ஆலோசனை சொல்வதற்காக மற்ற விஷயங்களில் உதவுவதற்காக என அந்நிறுவனத்தைச் சேர்ந்த வேறு சிலருடனும் பேசினேன். அத்தனை உரையாடல்களும் மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தன. சிறுவனும் நானும் திட்டமிட்ட நிதி ஏற்பாடுகள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டே ஏற்பாடுகள் நடந்தன. உத்தேசித்த நாட்களுக்கு சில நாட்கள் தள்ளியே தொகை ஏற்பாடு செய்ய முடிந்தது ; தொகை அனுப்ப முடிந்தது. எனினும் அந்நிறுவன ஊழியர்களான இளைஞர்கள் தளரா மனத்துடன் எப்போதும் இருந்தனர். ஒவ்வொரு தருணத்திலும் செய்ய வேண்டிய விஷயம் என்னவோ அந்த விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர்.
நான் சாதாரண ஜி எஸ் எம் அலைபேசி பயன்படுத்துபவன். மடிக்கணிணியை டெஸ்க் டாப் கணிணி போல உபயோகிப்பவன். சிறுவனின் கல்லூரி சேர்க்கைக்கு பொறுப்பான ஊழியரும் அவரது குழுவும் முழுக்க முழுக்க ஸ்மார்ட்ஃபோனிலும் அதன் வழியே சகலவிதமான தொடர்பு முறைகளிலும் மூழ்கியிருப்பவர்கள். இருப்பினும் என்னிடம் ஒரு வார்த்தை கூட ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லையா எனக் கேட்கவில்லை. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்பதால் எந்த தகவல் இடைவெளியும் ஏற்படவில்லை. விபரங்கள் தேவைப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். மின்னஞ்சல் அனுப்புவார்கள். ஃபோனில் அழைப்பார்கள். கால்பந்து ஆடும் சிறுவனிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது ; ஆவணங்களை பி டி எஃப் வடிவில் அனுப்பினால் அவன் ஸ்மார்ட்ஃபோனுக்கு அனுப்பி விட்டு எனக்கு இவ்விதம் அனுப்பப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இவை அனைத்தும் தகவல் தொடர்பு முறைகள். இதனைத் தாண்டி அவர்களுக்கு நான் இயங்கும் விதம் குறித்து முழுமையான புரிதல் இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் இலக்கினை நோக்கிச் செல்ல எனது பங்களிப்பை எப்படி சிறப்பாக பயன்பெறச் செய்ய வேண்டுமோ அப்படி பயன்பெறச் செய்தார்கள்.
அந்த இளைஞர் குழுவின் சராசரி வயது 27 ஆக இருக்கக் கூடும்.
விஷயங்களைக் கையாள்வதில் அக்குழு காட்டும் பொறுமையும் அக்குழுவின் விடாமுயற்சியும் மகத்தானது. அக்குழு மகத்தான விஷயங்களை எப்போதும் சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.