Tuesday, 4 August 2026

முடிவுகளும் தீர்வுகளும்


ஒரு போராட்டத்தைத் துவங்குவதும் முன்னெடுப்பதும் முக்கியமானது. 

அதை விடவும் முக்கியமானது ஒரு போராட்டத்தை எந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது என்பதை அறிந்திருப்பதும் ஆகும். 

ஜூலை 28, ஜூலை 29 ஆகிய இரு தினங்களும் ஐரோப்பியக் கல்லூரி ஒன்றின் சேர்க்கைக்காக அக்கல்லூரியின் அந்நாட்டு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப 78 வயது மூதாட்டியும் அவரது உறவினர்களும் உதவிக்காக நானும் சென்றிருந்தோம். விண்ணப்பத்தை அளித்த நாங்கள் கோரியது விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டோம் என்பதற்கான ஒரு ஒப்புகைச்சீட்டு. அதனை அளித்திருந்தால் நாங்கள் ஐரோப்பிய கல்லூரிக்கு அதனை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி அத்துடன் அந்த விஷயத்திலிருந்து வெளியே வந்திருப்போம். எங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படவில்லை. பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பத்தை நகலெடுத்துக் கொண்டு வரச் சொல்லி அதில் ‘’விண்ணப்பம் பெறப்பட்டது’’ என எழுதி ஒப்பம் இட்டு வங்கி முத்திரையுடன் கொடுத்திருக்கலாம். அதுவே ஒப்புகை தான். அதனையும் தரவில்லை. ஜூலை 28, காலை 11.30க்கு நாங்கள் அளித்த விண்ணப்பம் அன்று மாலை 3.45 மணி அளவில் கணிணியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு நாணய விஷயமாக அது அடுத்த நாள் கணக்குக்கு சென்று விட்டது. ஜூலை 29 அன்றும் பலமுறை வங்கிக்குச் சென்று ஒப்புகைச்சீட்டு கேட்டோம். அன்றும் தரப்படவில்லை. அன்று மாலை 6.45க்கு மூதாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது என குறுஞ்செய்தி வந்தது. அடுத்த நாள் காலை எங்களுக்கு மின்னணு ரசீது கிடைத்தது. 

நான் ஜனநாயகத்தின் மீது ஜனநாயக முறைமைகளின் மீது நம்பிக்கை கொண்டவன். ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்டவன் நான். சட்டத்தின் ஆட்சியில் ஜனநாயகத்தில் ஒரு சாமானியனுக்கு குரல் எழுப்ப உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையிலேயே நான் எனது குரலை எழுப்புகிறேன். 

ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஜூலை 28, ஜூலை 29 ஆகிய தேதிகளில் மூதாட்டிக்கு நடந்த நிகழ்வு குறித்து கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் தமிழாக்கத்தை என் தளத்திலும் வெளியிட்டேன். அந்தக் கடிதம் அனுப்புவதற்கு சற்று முன் வரை வங்கியின் தலைமைப் பொறுப்பு என்பது பொது மேலாளர் என எண்ணிக் கொண்டிருந்தேன். அனுப்புவதற்கு சற்று முன் இணையத்தில் தேடிய போது இந்தியன் வங்கியின் தலைமைப் பொறுப்பு ‘’தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் ‘’ என அறிந்தேன். கடிதத்தில் பொது மேலாளர் என இருந்த இடங்களில் ‘’எம் டி & சி இ ஓ’’ என பேனாவால் மாற்றி முகவரியில் ‘’எம் டி & சி இ ஓ’’ என எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதத்தின் நகலை முதலில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும் என நினைத்திருந்தேன். கடிதம் டிராஃப்ட் செய்த போது நகல் ரிசர்வ் வங்கி என்றே குறித்திருந்தேன். பின் ஓர் உள்ளுணர்வால் நகலை மத்திய நிதியமைச்சர் என மாற்றினேன். வழக்கமாக எனில் சி பி கி ராம் ஸ் ல் புகார் பதிவு செய்வேன். எனினும் இம்முறை என் உள்ளுணர்வு விரைவுத் தபாலில் கடிதத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறியது. 

சி பி கி ராம் ஸ் மிகச் சிறப்பான முறை என்றாலும் வங்கிகளால் ஒரு புகாரை அவர்களாகவே மூட முடியும். இதில் ஒரு ஆச்சர்யம் தபாலில் அனுப்பும் போது புகார் குறித்து விசாரித்து வாடிக்கையாளர் விசாரணையிலும் விசாரணை முடிவுகளிலும் திருப்தி அடைந்தார் என்னும் கடிதத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற பின் தான் புகார் கோப்பை மூட முடியும். திருப்திக் கடிதத்தை வாடிக்கையாளர் அளிக்கவில்லை என்றால் அந்தக் கோப்பை வங்கி நிர்வாகத்தால் அவ்வளவு எளிதில் மூட முடியாது. வங்கிகள் சி பி கி ராம் ஸ் புகாரை எளிதில் மூடுகின்றன. மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கிக்குச் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியின் அணுகுமுறையைப் புரிந்து கொள்வது எளிதானது இல்லை. தபாலில் அனுப்பும் போது வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் புகார்களை அணுகும் முறை வாடிக்கையாளருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை என் அனுபவம் எனக்கு சுட்டிக் காட்டியது. எனவே விரைவுத் தபாலில் கடிதம் அனுப்பினேன். 

அதை ஒரு கடிதம் என்றும் சொல்லலாம் ; புகார் என்றும் சொல்லலாம் ; ஆலோசனை என்றும் சொல்லலாம். இவை அனைத்துமே அதற்குள் இருந்தன. இவ்விதமாக எழுத வேண்டும் என்றும் என் உள்ளுணர்வே எனக்கு சொன்னது. இதனை ‘’எம் டி & சி இ ஓ’’ படிக்க வாய்ப்பு இருக்காது என்றே நான் எண்ணினேன். அவருடைய காரியதரிசி படிக்கவே வாய்ப்பு அதிகம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. மத்திய நிதியமைச்சருக்கு நகல் கடிதம் அனுப்பப்பட்டிருந்ததால் மத்திய நிதியமைச்சரின் அலுவலகத்திலிருந்து அதனை வங்கி ‘’எம் டி & சி இ ஓ’’ க்கு அனுப்ப வாய்ப்பு அதிகம். அவ்விதம் நகல் கடிதம் வரும் போது அதன் மூலாதாரமான எனது கடிதத்தை ஏன் தன் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை என சி இ ஓ கேட்க வாய்ப்பு உண்டு. எனவே அவர் கவனத்துக்குப் போயிருக்கலாம். 

திறந்த மனத்துடன் அந்தக் கடிதத்தை வாசிக்கும் எவருக்கும் அதில் உறைந்திருக்கும் உண்மையும் உணர்வும் புரியும். அந்தப் புரிதல் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு ஏற்பட்டது. அந்தக் கடிதம் மின்னஞ்சல் மூலம் வங்கியின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை பிற்பாடு அறிந்தேன். வெவ்வேறு பொது மேலாளர்கள் அந்தக் கடிதத்தை வாசித்தனர். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்கள் கேட்டு அறிந்தனர். 

இந்தியா போஸ்ட் இணையதளத்தில் நாம் அனுப்பிய ஸ்பீடு போஸ்ட் பெறுநரைச் சென்றடைந்து விட்டதா எனத் தேடி அறிய முடியும். கடிதம் 3ம் தேதி மாலை 3 மணி அளவில் சென்றடைந்துள்ளது என அறிந்தேன். எனக்கு கிளை மேலாளரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்த போது நேரம் இரவு 8 மணி. கிளை மேலாளர் இனிய மனிதர். சிறப்பாக வாடிக்கையாளர் சேவையை அளிக்கக் கூடியவர். ஜூலை 28, ஜூலை 29 ஆகிய இரு தினங்கள் அவர் டெபுடேஷனில் வெளியூர் சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் இவ்விதம் நிகழ்ந்திருக்காது என்பதை நான் அறிவேன். அவர் நிகழ்ந்த சேவைக் குறைபாட்டுக்கு மிகவும் வருந்தினார். அவர் வருத்தம் தெரிவித்தார். இரவு 8 மணியிலிருந்து இரவு 9.15 வரை பேசிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம் ஆகி விட்டதால் காலை வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். 

04.08.2026 அன்று காலை 7 மணியிலிருந்து தலைமை அலுவலகத்திலிருருந்தும் பிற அலுவலகங்களிலிருந்தும் உயர் அதிகாரிகளும் பொது மேலாளர்களும் தன்னைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாக மேலாளர் சொன்னார். காலை 10 மணிக்கு கிளைக்குச் சென்றேன். வட்டார மேலாளர் என்னிடம் பேச விரும்புவதாகக் கிளை மேலாளர் சொன்னார். வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று வட்டார மேலாளரைச் சந்தித்துப் பேசுகிறேன் என்று சொன்னேன். வட்டார அலுவலகம் 60 கி.மீ தொலைவில் நாகப்பட்டினத்தில் இருக்கிறது. அவ்வளவு தொலைவு செல்ல வேண்டாம் ; கிளையில் சிஸ்கோ ஐ பி ஃபோன் இருக்கிறது ; அதில் பேசுங்கள் என்றார். அது தரைவழி தொலைபேசி போலும் இருக்கிறது. அதன் சிறு திரையில் பேசுபவர் முகமும் தெரிகிறது. வட்டார மேலாளரிடம் விஷயத்தைக் கூறினேன். ‘’எனது கடிதம் உணர்வுபூர்வமானது ; அதில் வெளிப்பட்டிருகும் உணர்வு உண்மை ; எனது கடிதம் யாருக்கும் எதிரானது இல்லை ; யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட வெறுப்போ சினமோ இல்லை. தார்மீகக் குரல் ஒன்றை எழுப்பியிருக்கிறேன். எவ்விதம் எனக்கு குரல் எழுப்ப உரிமை இருக்கிறதோ அவ்விதமாகவே எனது எதிர்த்தரப்புக்கும் தன் கருத்தைப் பதிவு செய்ய முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் ; நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யுங்கள். விசாரணைக்குப் பின் ஒரு முடிவுக்கு வாருங்கள் ‘’ என்று சொன்னேன். நான் கூறிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டார். என் கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறேன் என்று கூறினார். 

நான் வீடு திரும்பினேன். மாலை 4 மணிக்கு கிளை மேலாளர் ஃபோன் செய்தார். ஜூலை 28 , ஜூலை 29 ஆகிய இரு தினங்களின் அன்னியச் செலாவணி கூடுதல் தொகைக்கு வங்கி அத்தொகைக்கான வங்கி வரைவோலையை கையில் வைத்திருக்கிறது ; வாடிக்கையாளரான 78 வயதான மூதாட்டிக்கு அளிக்கத் தயாராக இருக்கிறது என்று கூறினார். வங்கிக்குச் சென்றேன். மேலாளரை சந்தித்தேன். அவரை எனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து வாடிக்கையாளரான 78 வயது மூதாட்டியிடம் இந்தியன் வங்கி மேலாளரால் இந்தியன் வங்கியின் வங்கி வரைவோலை அளிக்கப்பட்டது. 

துணை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வட்டார மேலாளருக்கு உரியது. அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார். வங்கி அன்னியச் செலாவணி மாறுபாடு தொகையை வழங்கியிருப்பதே தார்மீகமாக அவர்கள் மேல் பிழை இருப்பதை ஒத்துக் கொள்ளும் செயல் எனக் கொள்ள முடியும். பிழை இழைத்தவர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் திருப்திக் கடிதம் அளிப்பேன் என சொல்வது மிக இறுக்கமான அணுகுமுறையாக அன்றி தளர்வான அணுகுமுறையாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது. மேலாளரும் வட்டார மேலாளரும் தொடர்பு கொண்டு பேசியதையும் நியாயம் நிலைநாட்டப்படும் அவர்கள் அளித்த உறுதிமொழியால் திருப்தி அடைந்துள்ளேன் ; இந்தப் புகாரை குளோஸ் செய்ய சம்மதிக்கிறேன் என கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.