Wednesday, 5 August 2026

உடன்பிறந்தானிடம் பிறந்த வீட்டுப் பெருமை





மத்திய நிதியமைச்சர் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ஊழியர்களும் நிதியமைச்சகமும் ஒரு குடும்பம் என ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் கூறியிருந்தார். வங்கி என்னும் போது கோடானுகோடி வங்கி வாடிக்கையாளர்களும் அதில் அடங்குவார்கள். விரிவான பொருளில், மத்திய நிதியமைச்சர் வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள், நிதியமைச்சகம் ஆகிய மூன்றும் ஒரு குடும்பம் என்று சொன்னதாகவே அர்த்தம் கொள்வோம். நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் வங்கித்துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக சிறப்பிக்கும் விதமாக நிதியமைச்சர் அதனைக் கூறினார். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘’உடன்பிறந்தானிடமே பிறந்த வீட்டுப் பெருமை பேசுவது’’ என. உலகெங்கும் பெண்கள் பிறந்த வீட்டுப் பெருமை பேசுவதுண்டு. அதை எவரிடமும் பேசலாம் - உடன்பிறந்தவர்களைத் தவிர. ஏனென்றால் உடன் பிறந்தவர்களுக்கு தங்கள் வீட்டின் பலங்களும் தெரியும் ; பலம் குறைவான விஷயங்களும் தெரியும். பேசுபவருக்குத் தெரிந்திருப்பதை விடக் கூடுதலாகக் கூடத் தெரியும். அது போல வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஊழியர்கள் குறித்து நன்றாகவே தெரியும். நிதியமைச்சகம் அறிந்திருப்பதை விடவும். ஏனென்றால் வங்கி வாடிக்கையாளர்கள் தான் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை வங்கிக்குச் சென்று வங்கிச் சேவைகளைப் பெறுகிறார்கள். 

வங்கி ஊழியர்களிடம் வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது : 

நீண்ட பட்டியல் வழங்க முடியும். மிகச் சுருக்கமாக சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன். 

1. வங்கி ஊழியர்கள் அனைவரும் அலுவலக உதவியாளரிலிருந்து வங்கி மேலாண் இயக்குநர் வரை புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம் வங்கி என்பது ஒரு வர்த்தக அமைப்பு என்பதையும் வங்கி வர்த்தகம் செய்கிறது என்பதையும். இந்தப் புரிதல் இருந்தாலே வாடிக்கையாளர் இன்னும் சிறப்பான சேவையைப் பெறுவார்கள். 

2. நம் நாட்டில் சமூகத்தின் பொருளியலுடன் வங்கிகளுக்கு மிக நெருக்கமானத் தொடர்பு உள்ளது. வங்கிகள் சிறப்பாக செயல்பட்டால் சமூக முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். 

3. வாடிக்கையாளர்கள் வங்கியிடமும் வங்கி ஊழியர்களிடமும் எதிர்பார்ப்பது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் பணியாற்றுங்கள் என்பதே. 

4. புறநானூற்றுப் பாடல் ஒன்று ‘’நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் ; எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா றதுவே’’ என்கிறது. அதாவது, ‘’நீங்கள் நல்லது செய்யாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை ; நல்லது அல்லாதவற்றை செய்யாமல் இருங்கள் ‘’ என்பதே அதன் பொருள். வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களிடம் எதிர்பார்ப்பதும் அதுவே.