Sunday, 16 August 2026

தெருவிளக்கும் தமிழக அரசியலும்

தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். 

தமிழகத்தில் 20006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி. 

அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும். 

இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது. 

2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன். 

2014ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. பியூஷ் கோயல் மத்திய மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஒரு பட்டயக் கணக்காளர் (சார்டட் அக்கவுண்டண்ட்). சி ஏ தேர்வில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் மின்சார சேமிப்பை நாடெங்கும் நிகழ்த்த மாநில அரசாங்கங்கள் தங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு இவற்றுக்குப் பதில் சி எஃப் எல் அல்லது எல் இ டி விளக்குகளை மத்திய அரசு வழங்கும் எனக் கூறினார். நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய பாதரச ஆவி விளக்குகளுக்குப் பதிலாக மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் எல் இ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் நாட்டுக்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.