Monday, 28 September 2026

சாமானியக் குடிமக்களின் வெற்றி

வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த 3 நாள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது நாட்டின் சாமானியக் குடிமக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. இதனைச் சாத்தியமாக்கிய மத்திய அரசின் நிதி அமைச்சகம் பாராட்டுக்குரியது.  

இப்போதைய நடைமுறைகள் படி மாதத்தின் 30 நாட்களில் நான்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு சனிக்கிழமை என 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கிகள் வார நாட்களில் முழு வேலை நேரமும் சனிக்கிழமைகளில் பாதி வேலை நேரமும் இயங்கும் என்பதும் ஞாயிறு விடுமுறை என்பதும் ஆகி வந்த நடைமுறை. மத்திய அரசு அதனை நான்கு ஞாயிறு விடுமுறை இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறை என அறிவித்தது. நம் நாட்டைப் போன்ற சிறு விவசாயிகளும் சிறு வணிகர்களும் மிகுந்திருக்கும் நாட்டில் அவர்கள் வங்கியை அதிகம் பயன்படுத்துவது தங்க நகை அடமானக் கடனுக்காகவே. ஒரு விவசாயிக்கு அவசரத் தேவைக்காக வெள்ளியன்று மதியம் 3 மணிக்கு பணம் தேவைப்படுகிறது எனில் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை என்றால் அவரால் திங்கட்கிழமை மட்டுமே வங்கியை அணுக முடியும். இவ்விதமான சூழ்நிலை ஏற்படுவது நகை அடகுக் கடைகளுக்கே சாதகமாக முடியும். 

நான்கு ஞாயிற்றுக்கிழமை இரண்டு சனிக்கிழமை விடுமுறை போக மாதத்துக்கு குறைந்தபட்சம் 2 தினங்களாவது பொது விடுமுறை வங்கி ஊழியர்களுக்கு கிடைக்கவே செய்கிறது.

ரயில்வே, தபால் துறை இயங்குவது போல வங்கிகளும் இயங்க வேண்டும் என்பதே யதார்த்த நிலை. 

வங்கி ஊழியர் எதிர்பார்ப்புக்கு சாமானிய மக்களின் ஆதரவு இல்லை ; சாமானியக் குடிமக்கள் வங்கிகள் திருப்திகரமான சேவையை அளிப்பதில்லை என அபிப்ராயம் கொண்டிருக்கும் நிலையில் மேலும் பொதுமக்கள் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்ற நிலையிலேயே வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றிருக்கின்றனர். இது நாட்டின் சாமானியக் குடிமக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.