Wednesday, 21 October 2026

1000 பெண்கள் - 1000 பசுக்கள் (துண்டுப் பிரசுரம்)

உ
கணபதி துணை
***

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
-சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை)

***
வாழ்க அந்தணர் வானவர் ஆவினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 

-திருஞானசம்பந்தர் தேவாரம்

***

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் நாம்உடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். 
-திருப்பாவை (பாசுரம் 28)

***
"ஆவோடு நிகரான எவ்வுயிரும் ஒன்றென்று
அறிந்தேநல் லொழுக்கமுறவே"
-வடலூர் இராமலிங்க அடிகள்

மதிப்பு மிக்க விவசாயிகளே ! கிராம மக்களே!

நம் நாடு விவசாய நாடு. ஒட்டு மொத்த தேசத்துக்கும் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் வாழும் ஒவ்வொரு விவசாயின் உழைப்பே உணவளிக்கிறது. விவசாயி தன் உழைப்பால் உருவாக்கும் உணவால் தான் உலகில் அறம் நிலைபெறுகிறது. எனவே தான் ‘’அன்னத்தைப் பெருக்குங்கள் ; அதனை விரதமாக மேற்கொள்ளுங்கள்’’ என தைத்ரீய உபநிஷத் அறைகூவுகிறது. தேசம் விவசாயிகளைச் சார்ந்திருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தே நமது முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ‘’ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்’’ என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். நாட்டின் எல்லையைக் காக்க இமைப் பொழுதும் சோராது நின்றிருக்கும் போர்வீரனின் பணிக்கு ஒப்பானது விவசாயியின் பணி என்பதை உலகம் உணரும் விதமாக அவர் ‘’ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!’’ என முழங்கினார். 

நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை ஆவினங்கள். பசுவை நாம் அன்னையாகவே எண்ணுகிறோம் ; பசுவை நாம் அன்னையாகவே கருதுகிறோம் ; பசுவை நாம் அன்னையாகவே வணங்குகிறோம். பசுக்கள் பரிபாலிக்கப்படும் கோகுலத்தில் அன்னை யசோதைக்கு மகனாக விளங்கினான் நம் கடவுள் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.நம் நாட்டின் விவசாயம் என்பது பல்லாயிரம் ஆண்டு காலமாக ஆவின வளர்ப்புடன் பிணைந்து இருப்பதே. 

நமது அன்றாட உணவில் பசுவின் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பால் மட்டுமன்றி பசும்பாலிருந்து உருவாக்கப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவையும் நம் நாட்டு மக்களின் அன்றாட உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பசும்பாலிலிருந்து உருவாக்கப்படும் நெய் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் பல்வேறு சமூகங்களின் மக்களால் உட்கொள்ளப்படுகிறது. 

நமது மரபு பசுவை நாம் கோரியதை அளிக்கும் காமதேனு என்கிறது. பசுக்களைப் பாதுகாத்தலை நம் மரபு நமக்கு கடமையாக அளிக்கிறது. 

நமது கிராமத்தில் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு முயற்சியை முன்னெடுக்க - மேற்கொள்ள இருக்கிறோம். நமது கிராமத்தின் மக்கள்தொகை தோராயமாக 4000 இருக்கக் கூடும். அதில் சரிபாதி எண்ணிக்கையில் (2000) பெண்கள் இருக்கிறார்கள். நம் கிராமத்தின் பெண்கள் அனைவரும் சேர்ந்து அல்லது நம் கிராமத்தின் 1000 பெண்கள் சேர்ந்து ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்க இருக்கிறோம். அந்த கூட்டுறவு அமைப்பின் மூலமாக நாம் உம்பளாச்சேரி, காங்கேயம், ஓங்கோல், கிர், தார்பார்க்கர், சாஹிவால் ஆகிய நாட்டு மாடுகளை வாங்க இருக்கிறோம். 1000 மாடுகள் ஒரு நாளைக்கு 5000 லிட்டர் பால் கறக்கும். நாம் பால் விற்பனை செய்யப் போவதில்லை. மாறாக நவீன உபகரணங்கள் மூலமாக பாலிலிருந்து நெய் தயாரிக்க உள்ளோம். நாம் மாதத்துக்கு 6000 கிலோ நெய் உற்பத்தி செய்ய முடியும். நாட்டு மாட்டின் நெய் வணிகச் சந்தையில் ஒரு கிலோ ரூ. 1000 என்று விலை போகிறது. நெய் விற்பனை மூலம் நம் கூட்டுறவு அமைப்பு மாதம் ரூ. 60,00,000 (ரூபாய் அறுபது லட்சம் ) பொருளீட்ட முடியும். மேலும் 1000 மாடுகளின் சாணத்தைக் கொண்டு நாம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய உள்ளோம். அதன் மூலம் மாதம் ரூ.10,00,000 ( ரூபாய் பத்து லட்சம்) பொருளீட்ட முடியும். மாடுகள் வாங்கவும் நெய் உற்பத்தி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க வங்கிக் கடன் ஏற்பாடு செய்து கொள்ள உத்தேசம் உள்ளது. வங்கிக்கடனுக்கான மாதாந்திரக் கட்டணமாக நாம் மாதம் தோராயமாக ரூ6,00,000 செலுத்த வேண்டியிருக்கும். மாடுகள் பராமரிக்கவும் நெய் உற்பத்தி செய்யவும் நியமிக்கப்படவுள்ள பணியாளர் ஊதியமாகவும் மாடுகளுக்கான பசுந்தீவனம் வாங்கவும் ரூ.29,00,000 செலவிட நேரும். மீதித் தொகை ரூ. 35,00,000 கூட்டுறவு அமைப்பின் லாபமாகும். அதனை கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களான 1000 பெண்களும் ஒவ்வொரு மாதமும் நபர் ஒன்றுக்கு ரூ.3500 வீதம் பெற முடியும். சில ஆண்டுகளில் வங்கிக்கடன் முற்றிலும் செலுத்தப்பட்டு விட்டது எனில் ஒவ்வொரு நபருக்கும் மாதம் ரூ.7000 கிடைக்கும். மாடுகளின் எண்ணிக்கை 3 லிருந்து 4 ஆண்டுகளில் 2000 ஆக வளர்ந்திருக்கும். 

1000 மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை நாம் சந்தை விலைக்கு வாங்குகிறோம். மாதம் ஒன்றுக்கு நாம் ரூ.25,00,000 மதிப்புக்கு பசுந்தீவனம் வாங்க இருப்பதால் அதனை நம் கிராமத்தின் விருப்பம் கொண்ட விவசாயிகளே உற்பத்தி செய்து தர முடியும். அதாவது நமது கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களான 1000 பெண்களின் குடும்பதினரே உற்பத்தி செய்து தரமுடியும். இதனால் நம் கிராமத்தில் மாதம் ரூ.25,00,000 அளவுக்கு பசுந்தீவனம் மூலமே பணப்புழக்கம் நிகழ்கிறது. மாடுகளைப் பராமரிக்கும் பணியிலும் நெய் உற்பத்திப் பணியிலும் கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களான 1000 பெண்களில் விருப்பமுடையவர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கு கூட்டுறவு அமைப்பே மாத ஊதியம் அளிக்கும். 

தற்போது கூறப்பட்டிருப்பது ஒரு ஆரம்ப நிலை சித்திரமே ஆகும். முழுமையான விரிவான சித்திரத்தை நாம் ஒன்று கூடி சிந்தித்து விவாதித்து உருவாக்குவோம். 

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
-கந்த புராணம்