நான் சிறுவனாக இருந்த போது - 1990களில் - ‘’இந்தியா டுடே’’ இதழ் மூலமாகவே எனக்கு இஸ்ரேல் அறிமுகமானது. ஆகாஷ்வாணி செய்திகளில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்குமான மோதல் என்னும் செய்தி அடிக்கடி ஒலிக்கும். மேற்குக்கரை, காஸா ஆகிய பெயர்கள் செய்திகளில் கேட்கும்.
இஸ்ரேல் குறித்து நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் என்னை இஸ்ரேலுக்கு மிக நெருக்கமாக உணரச் செய்தது. அதாவது, இஸ்ரேல் தேசத்தின் குடிமக்கள் அனைவரும் தங்கள் தேசத்தின் எல்லையை ராணுவ வீரர்களாக மாறி ராணுவ வீரர்களுடன் உடனிருந்து நாட்டின் எல்லையைக் காக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்னும் விஷயத்தை எவரோ சொல்லக் கேட்டு அறிந்ததிலிருந்து இஸ்ரேல் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. சிறுவர்கள் எப்போதும் ராணுவப் பணியை மகத்தான பணியாகக் கருதுவார்கள் ; எல்லா சிறுவர்களுக்கும் தாங்கள் ராணுவ வீரனாக வேண்டும் என்பதே அந்தரங்கக் கனவாக இருக்கும். ஆதலால் இஸ்ரேலின் அந்த வழக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம் நாட்டிலும் அந்த வழக்கம் இருந்தால் நானும் நம் நாட்டின் எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடலாமே என எண்ணினேன்.
1990களில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என்னை இஸ்ரேலுக்கு மேலும் நெருக்கமாக்கியது. இஸ்ரேல் கல்லூரி மாணவர்கள் நம் நாட்டில் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கின்றனர். அவர்களை காஷ்மீரில் ஊடுறுவியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலரை சிறையிலிருந்து விடுவித்தால் மட்டுமே பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என மத்திய அரசை மிரட்டினர். இஸ்ரேலியர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் காவலுக்கு இருந்த பயங்கரவாதிகள் தங்கள் இயந்திரத் துப்பாக்கிகளை இஸ்ரேலியர் முன் வைத்து விட்டு பக்கத்து அறைக்குச் சென்றிருக்கின்றனர். அந்த இஸ்ரேலிய கல்லூரி மாணவர்கள் இயந்திரத் துப்பாக்கியை எடுத்து இயக்கி அங்கிருந்த பயங்கரவாதிகளைக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து வந்தனர். இஸ்ரேலில் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களை இயக்கும் பயிற்சியும் கட்டாயம் உண்டு. இந்த விஷயம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கவனத்தில் இல்லை.
இஸ்ரேலியர்கள் மிகுந்த தேசபக்தி கொண்டவர்கள் என்பதையும் இஸ்ரேலின் அரசியல் கட்சிகள் இஸ்ரேலின் நலனை எப்போதும் முதன்மையாகக் கொள்பவை என்பதும் என்னை இஸ்ரேல் மேல் மேலும் ஆர்வம் கொள்ளச் செய்தது.
இஸ்ரேலின் அண்டை நாடுகள் ஏழு. அவை அத்தனையுமே இஸ்ரேலின் பகை நாடுகள். ஏழு அண்டை நாடுகள் பகை நாடுகளாக இருக்கையில் ஒரு தேசம் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக இயங்குகிறது என்பது மகத்தான விஷயமே.
இஸ்ரேலிய தேசம் ஒரு பாலைவன தேசம். ஆனால் இஸ்ரேலியர்கள் உலகுக்கே வழிகாட்டும் வகையிலான விவசாயத்தையும் நீர் மேலாண்மையையும் நடைமுறைப்படுத்தினர் என்பது அந்த தேசத்தை மேலும் நேசிக்கச் செய்தது.
‘’இந்தியா டுடே’’வில் தான் ‘’மொஸார்ட்’’ என்னும் பெயரை வாசித்தேன். இஸ்ரேல் உளவு அமைப்பின் பெயர் அது. குட்டி நாடான இஸ்ரேலின் உளவு அமைப்பு எவ்விதம் சி ஐ ஏ , கே ஜி பி ஆகிய பெரிய நாடுகளின் உளவு அமைப்புகளை விட வலுவாக நுட்பமாக இருக்கிறது என்பது சிறுவனான எனக்கு பேராச்சர்யம் தந்தது.
இஸ்லாமிய பயங்கரவாதம் உலக நாடுகள் பலவற்றுக்கு நிகழ்த்த இருந்த பல அழிவு வேலைகளை உளவறிந்து அந்த நாடுகளுக்குக் கூறி அவை நிகழாமல் தடுப்பதில் ‘’மொஸார்ட்’’ மகத்தான பணியை ஆற்றுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்ரேலின் அப்பாவி பொதுமக்களைத் தாக்கிக் கொன்ற போது உலகமே இஸ்ரேலுக்காக கண்ணீர் சிந்தியது ; துயர் கொண்டது. அவ்விதம் துயர் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
இஸ்ரேல் குறித்து விரிவாக வாசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பங்களில் ஒன்று.