சிட்டுக்குருவிகளுக்கு வல்லூறை எதிர்க்கும் ஆற்றலைத் தருகிறேன்.
- குரு கோவிந்த் சிங்
நாம் சிந்தித்திருக்கும் ’’1000 பெண்கள் - 1000 பசுக்கள்’’ தற்போது துவக்க நிலையில் இருக்கிறது. நம் திட்டமிடல் வெற்றி பெற சாத்தியக்கூறுகள் மிக அதிகம். ஏனெனில் இதன் லாபவிகிதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு 33 சதவீதம். நான்காம் ஆண்டிலிருந்து லாபவிகிதம் 100 சதவீதம். ஒரு தொழில் 33 சதவீத லாபத்துடன் இயங்குகிறது என்பது மிகச் சிறப்பானது என்பதை லௌகிகம் அறிந்த எவரும் எளிதில் உணர்வார்கள். ஒரு தொழில் 100 சதவீத லாபத்துடன் இயங்கினால் அதன் மதிப்பை எவரும் உணர்வார்கள். பெரும் தொகை ஒரு சிறிய கிராமத்தில் முதலீடு செய்யப்படுவதால் அதன் பெரும் லாபத்திலிருந்து ஒரு சிறு பங்கை அக்கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். அவ்விதம் அந்த கிராமத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிடுகிறேன்.
(1) 1000 பசுக்களின் சாலையின் ஒரு பகுதியாக ஒரு வேத பாடசாலை இயங்கும். அங்கே வேதியர்கள் 7 பேர் நாள் முழுதும் வேதம் ஓதிக் கொண்டு இருப்பார்கள். நித்ய வேத பாராயணம் நிகழ்ந்து கொண்டிருக்கும். வேதம் பயிலும் மாணாக்கர்கள் 20 லிருந்து 30 பேர் அங்கே வேதம் பயில்வார்கள். அவர்கள் குடும்பத்துக்கு மாதாமாதம் ஒரு கணிசமான தொகை அனுப்பி வைக்கப்படும். வேதம் பயிலும் மாணவர்களுக்கு வேதக்கல்வியுடன் பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் அளிக்கும் கல்வியும் பிற அடிப்படைக் கல்விகளும் அளிக்கப்படும்.
(2) 1000 பசுக்களின் சாலையின் ஒரு பகுதியாக தினமும் கணபதி ஹோமம், அக்னி ஹோத்ரம் ஆகிய வேள்விகள் நிகழும்.
(3) ஓதுவார்கள் மூலம் தேவாரம் நாள் முழுதும் ஓதப்படும். தேவாரம் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும். தேவாரம் பயிலும் மாணாக்கரின் குடும்பத்துக்கு மாதாமாதம் கணிசமான தொகை அனுப்பி வைக்கப்படும்.
(4) ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் நாள் முழுதும் ஓதப்படும். ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும். பிரபந்தம் பயிலும் மாணவர்களின் குடும்பத்துக்கு மாதாமாதம் கணிசமான தொகை அனுப்பி வைக்கப்படும்.
(5) 1000 பசுக்களின் சாலையின் ஒரு பகுதியாக ஆயுர்வேத மருத்துவமனையும் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மையமும் இயங்கும். ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் சிறப்பான ஊதியம் வழங்கப் பெறும்.
(6) ஊரில் ஒரு அலோபதி மருத்துவமனை இயங்கும்.
(7) ஊரில் உள்ள குழந்தைகள் கால்பந்து, கை பந்து, வாலிபால், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகளை விளையாடுவதற்கு உலகத் தரமான விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
(8) களரி பயிற்சி மையம் உருவாக்கப்படும்.
(9) ஊர் மக்கள் பயன்படுத்தும் விதமான சிறப்பான உடற்பயிற்சிக் கூடம் உருவாக்கப்படும்.
(10) 1000 பசுக்களின் சாலையின் ஒரு பகுதியாக ஊரில் பல மொழிகள் பயில்வதற்கான கல்விச்சாலை நிறுவப்படும். தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பானிஸ், சீனம், அரபி, லத்தீன், கிரீக், ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் தினமும் பயிற்றுவிக்கப்படும்.
(11) பல்வகை தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படைக் கல்வி வழங்கப்படும்.
(12) அடிப்படை விவசாயக் கல்வி அனைவருக்கும் அளிக்கப்படும்.
(13) அடிப்படை சட்டக் கல்வி அனைவருக்கும் அளிக்கப்படும்.
(14) அனைவருக்கும் யோகக் கல்வி அளிக்கப்படும். யோகப் பயிற்சிகள் அனைவரும் செய்யும் விதமான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
(15) ஊர் முழுதும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு அவை பராமரிக்கப்படும்.
(16) ஊரில் புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படும் ; ஊரின் நீர்நிலைகள் பராமரிக்கப்படும்.
***
‘’பெரிதினும் பெரிது கேள்’’ என்றான் நம் மூதாதை பாரதி.
அதன் படி மகாசக்தியிடம் நாம் நம் கோரிக்கைகளை சமர்ப்பிப்போம்.