ஒவ்வொரு கணமும்
மலர்ந்து கொண்டே
ஒவ்வொரு கணமும்
மணம் பரப்பிக் கொண்டே
இருக்கிறது
மரணம்
என்னும்
நித்ய மலர்
மலரின் தேன் அருந்த
மலர் நோக்கி
ஒவ்வொரு கணமும்
நகர்ந்து கொண்டே
இருக்கின்றன
உயிர்கள்
ஒவ்வொன்றும்
ஜனித்த பொழுதிலேயே
நித்ய மலரின்
தேன் அருந்துகின்றன
உயிர்கள் பற்பல
கோடானுகோடி கணங்களுக்கு அப்பால்
மலர்த்தேன் சுவைக்கின்றன
பல உயிர்கள்
அருந்தித் தீராதது
மரணத்தின் மலர்த்தேன்
உயிர்கள் சில
மரணத்தின் தேன்
சுவைக்கும் முன்
சுவைத்து விடுகின்றன
அழிவின்மையின் அருந்தேனை
மரணத்தின் மலர்
இனியது
அதனினும் இனியது
அழிவின்மையின் மலர்