Thursday, 15 October 2026

கோதாவரி - காவிரி இணைப்பு

சில தினங்களுக்கு முன்னால், தமிழக முதலமைச்சர் ஜோசஃப் விஜய் ஆந்திரப் பிரதேச மாநிலம் சென்று அங்கு நடைபெறும் ‘’விஜயவாடா உத்சவ’’த்தில் கலந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். ஆந்திர முதலமைச்சருடன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கை திட்டம் குறித்தும் கோதாவரி - காவிரி இணைப்பு குறித்தும் பேசியிருக்கிறார். 

கோதாவரி பாரதப் பண்பாட்டுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டது. பாரதப் பண்பாட்டுக்கு மிகப் பெரும் பங்களிப்பை நல்கியது. கோதாவரியின் கரைகளில் ஞானிகள் பலர் வாழ்ந்திருக்கின்றனர். கோதாவரி ஒரு நதி மட்டுமல்ல ; அது ஒரு பண்பாட்டு அடையாளம். 

ஆயிரக்கணக்கான் ஆண்டுகளாக கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அமுதூட்டும் அன்னையாக விளங்குபவள் கோதாவரி. 

பொங்கிப் பெருக்கெடுக்கும் கோதாவரியைக் காண நேரும் எவரும் மானுடம் எத்தனை மகத்தானது என்பதை உணர்வார்கள். 

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பணியாற்றும் காலமே கோதாவரி - காவிரி இணைப்பினைச் செயலாற்ற மிக உகந்த காலம் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழக முதலமைச்சர் ஜோசஃப் விஜய் இருந்த மேடையில் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது ; மிகுந்த அர்த்தம் பொதிந்தது ; ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. 

கோதாவரி - காவிரி இணைப்பு நிகழ்ந்தால் நாகபுரியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும். தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் பலன் பெறும். 

வட பெண்ணை, தென் பெண்ணை, பாலாறு, கெடிலம், கொள்ளிடம், காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு கோதாவரியின் நீரை அளிக்க இயலும். தென் பாரத நிலத்தில் மிகப் பெரிய அளவில் உணவு தானிய உற்பத்தியை மேற்கொள்ள இயலும். கோடானுகோடி விவசாயிகளின் குடும்பத்துக்கு வளத்தையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்கும் செயலாகும் கோதாவரி - காவிரி இணைப்பு . 

தக்காண பீடபூமியின் அமைப்புக்கு ஏற்றவாறு இயற்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிராத வகையில் இந்த இணைப்பு எவ்விதம் செயலாக்கப்பட வேண்டும் எனத் திட்டமிட உறுதியான பலம் பொருந்திய அமைப்பு தேவை. அத்திட்டமிடலுக்குத் தகுந்த விதத்தில் செயலாக்க தேவையான நிதியைப் பெற ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவு தேவை. இஸ்ரேலின் தொழில்நுட்ப ஆலோசனை தேவை. அல்லும் பகலும் அயராது உழைக்கும் பணியாளர்கள் தேவை. இவை அனைத்தும் நரேந்திர மோடி தலைமைக்கே சாத்தியம் என்பதையே ஆந்திர முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார். 

கோதாவரி - காவிரி இணைக்கப்பட்டால் அதன் மிகுந்த பயனைப் பெறப் போகிறவர்கள் தமிழக விவசாயிகளே. தமிழக முதலமைச்சர் ஜோசஃப் விஜய்க்கு இது ஒரு வரலாற்று வாய்ப்பு. 60 ஆண்டுகளாக தமிழக அதிகாரத்தில் இருந்து வந்த திராவிடக் கட்சிகளை வீழ்த்தி அரசமைத்திருக்கும் ஜோசஃப் விஜய் கோதாவரி - காவிரி இணைப்புக்காக மத்திய அரசுடனும் ஆந்திர அரசுடனும் இணைந்து செயல்படுவாராயின் தமிழக வரலாற்றின் தமிழக அரசியலின் மகத்தான சாதனையைச் செய்த ஒருவராக பல நூற்றாண்டுகளுக்கு தமிழக மக்களால் நினைவுகூரப்படுவார்.