என்னிடம் எப்போதும் ஒரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. அதாவது, ‘’காவிரி போற்றுதும்’’ பல விஷயங்களைத் திட்டமிடுகிறது ; செயல்படுத்துகிறது. ஒரு நுண் அமைப்பு சிந்தித்ததை அரசாங்கம் சிந்திக்காமல் இருக்குமா? அரசாங்கம் ஒரு விஷயத்தை சிந்தித்தால் எளிதில் செய்து விடும் அல்லவா?
இந்தக் கேள்வி ஆழ்ந்து யோசித்து பரிசீலிக்க வேண்டிய ஒன்றே. இந்தக் கேள்விக்கு பல பதில்கள் உண்டு. என் அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிந்த பதிலை நான் கூறுகிறேன்.
அரசாங்கம் என்பது பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு பெயர். அரசாங்கம் என்பதும் அரசாங்க மனநிலை என்பதும் ஒரே விதமானது அல்ல ; அவை பலவிதமானவை.
நம் மாநிலத்தில் ( மாநிலத்தை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சாமானிய குடிமக்கள் காணும் மத்திய அரசாங்கம் என்பதும் அஞ்சல்துறையும் ரயில்வேயுமே. மாநில அரசாங்கத் துறைகளான வருவாய்த்துறை, வாகனப் போக்குவரத்து, நகராட்சி, ஊராட்சி, பத்திரப் பதிவுத் துறை ஆகியவற்றுடனே பொதுமக்களுக்கு அதிக தொடர்பு) மாநில அரசாங்க மாநில அரசாங்க ஊழியர் மனப்பான்மை என்பது தங்கள் உயர் அதிகார அமைப்புக்கு பணிந்து நடத்தல் என்பது மட்டுமே. உயர் அதிகார அமைப்பு எதிர்பார்க்கும் பணியை செய்து முடிக்க மாட்டார்கள். தலைமையிடம் பணிவாகப் பேசுவார்கள் ; பணிவாக நடந்து கொள்வார்கள். அவ்வளவே. குறிப்பிட்ட கால வரையறைக்குள் எந்த பணியையும் செய்யும் இயல்பு என்பது அவர்களுக்குக் கிடையாது.
சமூகம் வளர வேண்டும் என நினைப்பவனுக்கு சமூகம் வளர வேண்டும் என பணி புரிப்வனுக்கு அத்தகைய வளர்ச்சி சமூகத்தின் அங்கத்தினர்களான பொதுமக்களால் மட்டுமே நிகழும் என்பதும் அரசாங்கம் மூலம் நிகழும் வளர்ச்சி என்பது மிக நுண்ணியது என்பதும் தெரியும்.
அரசாங்கம் சமூகத்துக்கு எதுவுமே செய்ததில்லையா? செய்திருக்கிறது. மருத்துவம் , கல்வி ஆகிய துறைகளில் பொதுமக்களுக்குப் பயன் தரும் விதத்தில் எவ்வளவோ விஷயங்களைச் செய்திருக்கிறது. எந்த ஜனநாயக அரசிடமும் எதிர்பார்க்கக் கூடிய விஷயமே அது.
சமூக வளர்ச்சிக்கு அரசு 1 சதவீதம் துணை புரிகிறது எனக் கூறலாம். இந்த மதிப்பீடு கறாரானது என எண்ணினால் சமூக வளர்ச்சிக்கு அரசு 9 சதவீதம் துணை புரிகிறது என்று சொல்லலாம். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சமூக வளர்ச்சிக்கு பொதுமக்களே 90 லிருந்து 99 சதவீதம் வரை பங்களிப்பாற்ற வேண்டும் என்பதே.
வாசகர்கள் இந்த விஷயம் குறித்து தங்கள் அபிப்ராயங்களை ulagelam(at)gmail(dot)com என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.