Tuesday, 27 October 2026

நன்நிமித்தம்

 
சென்ற வாரம் ‘’1000 பெண்கள் - 1000 பசுக்கள்’’ முயற்சி குறித்து 3 வங்கி மேலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அக்கடிதத்தின் நகலை 3 வங்கிகளின் தலைமை அலுவகத்துக்கும் அனுப்பியிருந்தேன். மேலும் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியருக்கும் அனுப்பி வைத்திருந்தேன். அது ஒரு காந்திய வழிமுறை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் போது அந்த விஷயம் குறித்து ஒரு விவாதம் உருவாகும். நாம் எதிர்பார்த்திராத உத்தேசித்திராத அம்சங்கள் நமக்கு சுட்டிக் காட்டப்படலாம். நமது செயல்முறையை வடிவமைத்துக் கொள்ள அது பெரிய அளவில் உதவும். இன்று 3 மேலாளர்களையும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். தொடர்ந்து சந்திக்கிறேன் எனக் கூறி அடுத்தடுத்த நிகழ்வுகளை விளக்குவதாகக் கூறினேன். 

வங்கிகளுக்கு செல்லும் போது வழியில் 1000 மலைமாடுகளைக் கொண்ட ஒரு மாட்டு மந்தையைக் கண்டேன். சாலையில் இடையர்கள் அந்த மந்தையை வழிநடத்திக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். வயல்களில் மாட்டுக் கிடைக்காகச் செல்கின்றன. மாட்டுக் கிடை என்பது விவசாயிகள் மாட்டு மந்தையை தங்கள் விளைநிலத்தில் தங்க வைப்பர். அங்கிருக்கும் புல்லைத் தின்று அந்த வயலில் மாடுகள் சாணம் இடும். மாட்டுச் சாணம் சிறப்பான உரம் என்பதால் வயலுக்கு விவசாய வேலைக்கு பயிர் வளர்ச்சிக்கு அது சிறப்பாக உதவும். ‘’1000 பெண்கள் - 1000 மாடுகள்’’ விஷயமாக வங்கி மேலாளர்களைக் காணச் செல்கையில் 1000 மலைமாடுகளைக் கண்டதை நன்நிமித்தமாகக் கருதினேன்.