Tuesday, 24 November 2026

நெடுங்கல் நின்ற மன்றம்

 

மகவாயிருந்த நாளிலிருந்து பூம்புகார் சென்று கொண்டிருக்கிறேன். இன்றும் குழந்தைகள் கடல் பார்க்க பூம்புகாருக்கு பெற்றோருடன் வருவதைக் காண்கிறேன். இன்றும் குழந்தைகள் கடல் காண பூம்புகார் அழைத்துச் செல்லுங்கள் எனப் பெற்றோரிடம் கோரிக் கொண்டிருக்கின்றன. எனது நண்பர் தனது 2 வயது மகளை சில மாதங்களுக்கு முன் முதல் முறை பூம்புகார் அழைத்துச் சென்றதைச் சொன்னார். முதல் முறை கடல் பார்த்த அம்மகவு தந்தையிடம் கூறியிருக்கிறது : ‘’அப்பா கடல் எவ்வளவு பெருசு’’. எத்தனை பெரிதாயிருக்கிறது கடல் என கடலைக் கண்டதும் உணர்பவர்கள் மீண்டும் மீண்டும் கடல் நோக்கி வருகிறார்கள். வான்கடலில் பள்ளி கொண்டிருக்கிறான் ஆழிக்கிறைவன். உலகியல் வாழ்க்கையை ‘’சம்சார சாகரம்’’ என்கிறது மரபு. 

பூம்புகாரில் கடற்கரையை ஒட்டி ‘’நெடுங்கல் நின்ற மன்றம்’’ உள்ளது. சிலப்பதிகாரத்தில் பண்டைய பூம்புகார் நகரில் இந்த மன்றம் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அதனைக் கொண்டு சிற்பி கணபதி ஸ்தபதி இந்த மன்றத்தை செதுக்கி உருவாக்கியிருக்கிறார். 


வஞ்சகத்தால் துரோகத்தால் மனம் பிறழ்ந்தவர்கள், நஞ்சு அருந்தியவர்கள், பாம்பு கடித்து விஷமேறியவர்கள், பேய் பிடித்தவர்கள் இந்த மன்றத்துக்கு வந்து தங்கள் இன்னல் நீங்கிச் சென்றனர் என்னும் குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. 

வஞ்சகத்தையும் துரோகத்தையும் எதிர்கொண்டவர்கள் அதை மறப்பதேயில்லை. ஓயாத அலைகளாக அகத்தில் அவை எழுந்து கொண்டேயிருக்கின்றன. மானுட வாழ்வில் ‘’விஷ பரீட்சை’’ எப்போதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. விஷ பரீட்சையினூடாகவே விஷத்துக்கான முறிவு மருந்துகளும் உருவாகின்றன. சர்ப்பங்களைக் கையாள்பவனும் சர்ப்பங்கள் குறித்த முழு அறிவு கொண்டவனுமே உலகியல் ஞானம் நிறையப் பெற்றவன். அதிகாரப் பேய் பிடித்தவர்களும் பணப்பேய் பிடித்தவர்களும் இந்த உலகில் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

நெடுங்கல் நின்ற மன்றத்துக்கு எதிரில் நீர்க்கடல். நெடுங்கல் நின்ற மன்றதுக்குப் பின்னால் நிலத்தில் வாழும் மனிதக்கடல். நீர்க்கடலில் அலைகள் எழுந்து எழுந்து விழுகின்றன. மனிதர்கள் பிறந்து பிறந்து இறக்கிறார்கள். இறந்து இறந்து பிறக்கிறார்கள். 

இரண்டுக்கும் இடையில் வான் நோக்கிக் கொண்டிருக்கிறது நெடுங்கல்.