Wednesday, 6 February 2019

ஆயிரம் சூரியன்கள் உதிக்கின்றன

பூமியில் தினமும்
ஆயிரம் சூரியன்கள் உதிக்கின்றன
பிறர் பொருட்டு துயர் கொள்ளும் போது
பிறருக்காகப் பிராத்திக்கும் போது
பிறர் கண்ணீர் துடைக்க கரங்கள் எழுகின்ற போது
பிறருக்கு தன் வாழ்நாளின் பாதியை அளிக்கும் போது
பிறரின் வலியைக் குறைக்க முயற்சிக்கும் போது
பிறரின் துயர் மிகு கதைக்கு செவிகொடுக்கும் போது
பிறருக்காக கண்ணீர் சிந்தும் போது
பிறருக்காக எல்லா முயற்சிகளும் செய்யும் போது
பிறர் என்று யாரும் இருக்க முடியாது என்று உணர்கிற போது

பூமியில் தினமும்
ஆயிரம் சூரியன்கள் உதிக்கின்றன

நீ என்னை அறிவாய்

நீ என்னை அறிவாய்
ஒரு சிறுவன் போல
நான் திக்கித்  திணறுவதை
உனக்காக
அங்கும் இங்கும் அலைவதை
உன் முகம் மலர
செயல்கள் பல ஆற்றுவதை
உன்னை
எப்போதும் ஒரு விண்மீனாய் நினைப்பதை
உனது ஒவ்வொரு சீரடிகளின் வண்ணங்களையும்
சேகரித்துக் கொள்வதை
உன்னை
எப்போதும் கேட்கும் இசையாக
எண்ணிக் கொள்வதை
உன்னிடம்
அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை

நீ என்னை அறிவாய்

Tuesday, 5 February 2019

இன்றென இருத்தி

நீ
இன்றைக்கு இருப்பதைப் போல
என்றைக்கும் இரு
மாசற்ற தூய்மையாக
சிறியன எண்ணாத சிந்தையுடன்
உற்சாகமாக சிரித்த முகத்துடன்
இதம் அளிக்கும் இன்சொற்களுடன்
மிதக்கும் இனிமை போல நடந்து கொண்டு
எப்போதும்
உன்னைச் சுற்றி சந்தோஷம்
பரவச் செய்து
உடன் இருப்பவர்கள் துயருக்கு
ஆறுதல் அளித்துக் கொண்டு

நீ
இன்றைக்கு இருப்பதைப் போல
என்றைக்கும் இரு

உன் ஞாபகம் வருவதுண்டு

உன் ஞாபகம் வருவதுண்டு
தவிட்டுக் குருவி ரியர் வியூ ஆடியை கொத்திக் கொண்டிருக்கும் போது
பகலில் அணிலின் கிரீச்சிடல் கூடத்தில் கேட்கும் போது
குழந்தைகள் பள்ளிப் பேருந்துக்கு காத்து நிற்கையில்
மழை ஓயாமல் பெய்யும் போது
அதிகாலைப் பனியில் நடந்து செல்லும் போது
உதயத்தின் ஒளி காணும் போது
தற்செயலாக வான் பார்க்கும் போது
மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே இருக்கும் போது
தென்றல் வீசிச் செல்லும் போது
பெருங்கடல் முன் நிற்கும் போது
ஆற்றில் மூழ்கி எழும் போது

உன் ஞாபகம்
உன் ஞாபகம் வருவதுண்டு

கிருஷ்ண முரளி - 4

இந்த ஆற்றின் கரையில்
படித்துறையில்
நதி ஈரம் நிரம்பிய மென்காற்றில்
புனல்
சுழித்துப் புன்னகைக்கையில்
உன் மலர்ச்சிரிப்பை
நினைக்கிறேன்
தூய அச்சிரிப்பின் ஒளியில்
என் அகத்தை வைக்கிறேன்
உன் இதழ் அறியும்
மூங்கில் இசை
காற்றில் கரைவது போல்
இக்கணத்தில்
நிறைந்து
இல்லாமல் ஆகிறேன்

கிருஷ்ண முரளி - 3

என் அன்பின் மலர்களில்
உறைகிறது
உனக்கான குளிர் இளம் தேன்
உன் இசையின் மாயம்
ஹிருதயத்தில்
ஊறச் செய்கிறது
இனிமையின் பரவசங்களை
உன் கருணையில்
நீர்மை கொள்கின்றன
என் விழிகள்
உன் முடிவிலா அன்பில்
கரைந்து கொண்டேயிருக்கிறேன்
கணம் கணமாய்

Monday, 4 February 2019

வான் அகப் பறவைகள்

ஹரித்வாரிலும் ரிஷிகேஷிலும்  கங்கையைப் பார்ப்பது என்பதே நாள் முழுதுக்குமான செயல்பாடு. காலை கங்கையில் நீராடி விட்டு ஒரு படித்துறையில் அமர்ந்து கொண்டால் கங்கையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நதிச்சுழிகள் உருவாகும். நீரோட்டத்தின் போக்கு அவ்வப்போது மாறும். மலையகப் பகுதிகளுக்கு உரிய திடீர் மௌனம் கவியும். எங்கோ ஒரு சிற்றாலயத்தில் ஒலிக்கும் மணியோசை கேட்கும். திடீரென ஒரு சாமியார் கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக இன்னொரு குழு பஜ்ரங் பலி கி ஜெய் என்பார்கள். கங்கையைப் பார்க்க பார்க்க இராமாயணம் நினைவுக்கு வரும். காளிதாசன் நினைவுக்கு வருவான். மகாத்மா நினைவுக்கு வருவார். கங்கையைப் பார்ப்பதும் பார்த்து ஊர் திரும்பியதும் கங்கை நினைவுகளை மீட்டிக் கொண்டு ஊரில் வாழ்வது என்பதும் ஒரு கொடுப்பினை. நினைக்கும் போது இப்போதே கிளம்பிச் சென்றால் என்ன என்று தோன்றாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. நான் கங்கையின் முழுத்தடத்தையும் கண்டவனல்ல. காவிரியின் தடத்தை ஓரளவு கண்டிருக்கிறேன். எனக்கு கங்கை என்றால் இப்போது ஹரித்வாரும் ரிஷிகேஷும் தான்.

அதுல் அறிவுரைப்படி ரிஷிகேஷில் சுற்றி விட்டு ஹரித்வார் திரும்பிக் கொண்டிருந்தேன். அது ஒரு ஷேர் ஆட்டோ. ஹரித்வாருக்கு நான்கு கிலோ மீட்டருக்கு முன்னால் இறக்கி விட்டு விட்டு ஒரு சிறு மலைக் கிராமத்துக்கு வாகனம் சென்று விட்டது. 

அந்த கணம் என் கண் முன் ஒரு மலை. அந்த மலையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு கருமேகங்கள் தம்மைத் திரட்டிக் கொண்டிருந்தன. இமயமலைப் பகுதிகளில் சட்டென மேகம் உருவாவதும் மேகம் உருவானதும் ஒரு சிறு மழை பொழிவதும் இயல்பான காட்சிகள். அப்போது அங்கே ஒரு சிறு மழை பெய்தது. நான் நின்றிருந்த சாலைக்கும் என் முன்னால் சற்று தொலைவில் இருந்த மலைக்கும் இடையே அளவில் மிகப் பெரிய மரம் ஒன்று இருந்தது. நான் அந்த மலையையும் மரத்தையும் பார்த்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டு நின்றேன். அம்மழை என்னைப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டேன். மழை விட்டதும் அம்மரத்திலிருந்து ஒரு பறவை வெளிப்பட்டு வான் நோக்கி எழுந்தது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பறவைகள் வான் மேலெழுந்தன. அத்தனை பறவைகள் அம்மரத்தில் இருந்திருக்கக் கூடும் என எவராலும் எண்ண முடியாது என்னும் அளவு அவை மழையின் போது ஓசையற்று இருந்தன. அவை எழுந்ததின் விளைவாக அம்மரத்தின் இலைகளிலிருந்து மழைநீர் ஓயாமல் சொட்டிக் கொண்டிருந்தது. முதலில் பறந்த பறவை ஒரு சுற்று சுற்றி வட்டமிட்டது. 

அந்த கணத்தில் என் மனதில் ஓர் எண்ணம் உருவானது. அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அதில் இமயமலையின் ஒரு பறவையாகப் பறந்து இமயத்தின் சாரலில் சிறகடிக்க வேண்டும் என.

இயல்பு

ஒரு மலருக்கு
தான் மலராய் இருப்பதன்
தர்க்கங்கள்
தெரிவதில்லை
அந்திப் பொழுது
ஒப்பனைகளில்
ஆர்வமோ
நம்பிக்கையோ
கொள்வதில்லை
புகையும்
எரிமலைக் குழம்புகள்
குளிர்ந்து விடவே
விரும்புகின்றன
தன் இயல்பில் இருக்கிறது
தண்ணீர்
தாகம் தீர்த்துக் கொண்டு

Sunday, 3 February 2019

கிருஷ்ண முரளி - 2

உனது இருப்பு
சந்தனக் குளிர்ச்சி கொண்ட காற்றாக
ஆதுரம் அளிக்கிறது
வெண்மதியென
ஒளி வீசுகின்றன
உனது நினைவுகள்
மூழ்கிய நதியில்
விழி திறக்கும் போது
காணும் அலைவுகளாய்
உனது இசை
அலைக்கழிக்கிறது
நீ நிறைந்திருக்கும்
காற்றை
சுவாசிக்கும் தோறும்
வான் அகங்கள் நோக்கி
பறக்கிறது
என் அகப் பறவை

Friday, 1 February 2019

கிருஷ்ண முரளி - 1

உனது இசை
கடக்கச் செய்கிறது
பழகியிருக்கும் பெருந்தொலைவுகளை
படிந்து போயிருக்கும் மனநிலைகளை
சாதாரண அன்றாடத்தின் மாறா சலிப்பை
உனது இசை கேட்ட
முதல் கணம்
என் அகத்தில் உணர்ந்தேன்
என் நதியில் ஓடும் நீரின் மென்னோசையை
என் பூங்காக்கள் மலரத் துவங்குவதை
நீ
நதிகளால் ஆன நதியாக
ஓடிக் கொண்டிருந்தாய்
தயக்கத்தால் முகம் கவிழும்
என் கரம் பற்றி இழுக்கிறாய்
என் அகம் மாறியிருப்பதை
அவ்வப்போது உணர்கிறேன்
உனது இசை
என்னை அன்பின் பெருங்கடலில்
மூழ்கச் செய்கிறது
நான் உனக்கு
கண்ணீரை அர்ப்பணிக்கிறேன்
என் அன்பின் கண்ணீரை
என் பிரியங்களின் கண்ணீரை
என் உணர்வின் கண்ணீரை
தன் சிறகுகளை
சிலுப்பிக் கொள்ளும்
சிட்டுக்குருவியைப் போல்
துடிக்கும் உயிர் கொண்ட
கண்ணீரை