Wednesday, 6 November 2019

அடித்தளமும் கட்டிடமும்


இன்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற போது எனது தெருவாசியான நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நல்ல மனிதர். பெரும்பாலும் பொழுது புலரும் முன் நான் நடக்கக் கிளம்பி விடுவேன். இன்று தாமதமாக எழுந்தேன்  என்பதால்  வழக்கமாக  பயிற்சியை முடிக்கும் நேரத்தில் துவங்கினேன். எனவே சந்திக்க நேரிட்டது. ஒன்றாக நடந்தோம். இன்றைய பயிற்சி வாக்கிங் ஆக இருக்காது; டாக்கிங் ஆக மாறும் என நினைத்தேன். அவ்வாறே ஆனது.

காவல்துறை டி.ஜி.பி ஆக இருந்த விஜயகுமார் குறித்து பேச்சு வந்தது. அதன் நீட்சியாக வீரப்பனைப் பற்றி. விஜயகுமாரைக் கடுமையாக வசை பாடினார். நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

‘’அரசாங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு. இந்திய அரசாங்கம் உலகின் சிக்கலான அமைப்புகளில் ஒன்று. அரசின் இயங்குமுறையே இந்திய மாநிலங்களில் வேறுபடும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பழக்கம்  உடையது. அரசாங்க அதிகாரிகள் அவர்கள் எல்லைக்குள் அவர்களுக்குத் தரப்படும் வேலையைச் செய்பவர்கள். உங்களுக்கு அவர் மேல் ஏன் தனிப்பட்ட வெறுப்பு?’’

‘’அவர் மலையாளி’’ என்றார் நண்பர்.

‘’அவரை வெறுக்க இந்த காரணம் மட்டும் போதுமா?’’

‘’வீரப்பனை அவர் கொன்றார்”

’’வீரப்பனைக் கொன்றார் என்பதற்காக விஜயகுமாரை வெறுக்கும் நீங்கள் தனது கைக்குழந்தையான சொந்த மகளைக் கொன்ற வீரப்பன் மீது எவ்வாறு மதிப்பு வைத்துள்ளீர்கள்?’’

நண்பர் மௌனமானார். சில வினாடிகள் அமைதியாக நடந்தோம்.

நான் நேரடியாகக் கேட்டேன். ‘’சாதிதானே உங்களுக்கும் வீரப்பனுக்கும் பொதுவானது?’’

நண்பர் ஆமாம் என ஒத்துக் கொண்டார்.

எனக்குச் சோர்வாக இருந்தது. தமிழ்நாட்டில் இந்த சோர்வு அடிக்கடி ஏற்படும். தமிழர்கள் இந்த சோர்வை அடிக்கடி உருவாக்குவார்கள்.

லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு தான் வசிக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது போல பொது இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இந்திய விடுதலை என்பது ஒரு மாமனிதர் மேல் சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அவர் சொற்கள் மேல் நம்பிக்கை வைத்த லட்சோப லட்சம் மக்கள் அவர் தலைமையை ஏற்றதால் – அவர் முன்வைத்த மேலான மதிப்பீடுகளின்  மேல் வைத்த நம்பிக்கையால் –சாத்தியமானது என்பது தெரியவில்லை.

அந்த நம்பிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் மீது அமர்ந்தவாறு சாதிக்காக எதையும் நியாயப்படுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அந்த மாமனிதர்
1. இந்திய நுகர்வின் பயன் இந்தியாவின் பெரும் உற்பத்தியாளனான பருத்தி விவசாயிக்குச் செல்ல  வேண்டும் என்பதற்காக கதர்த்துணிகளை உடுத்த வேண்டும் என்று ஓயாமல் கேட்டார்.

2. நமது சுகாதாரப் பண்புகளே நம்மைக் காக்கும்; நம்மை உலகம் உயர்வாய் மதிப்பிட வைக்கும் என்பதால் தூய்மையை நாளும் வலியுறுத்துவதை தனது அரசியலாகக் கொண்டார்.

3. மானுட குலம் அடையச் சாத்தியமான மேலான வழிமுறைகளை சமூக வாழ்வியலுக்கு முன்வைத்தார்.

4. எக்காரணம் கொண்டும் வெறுப்பு பொது வாழ்வில் இருக்கக் கூடாது என நினைத்தார்.

அவர் உருவாக்கிய அடித்தளத்தில் நாம் எழுப்பும் கட்டிடம் எவ்விதமானது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


ஆழமும் உயரமும் – 5


கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

கும்பகோணம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான சமய மையமாக இருந்திருக்கிறது. சோழர்கள், விஜயநகரம், நாயக்கர்கள் மற்றும் மராத்தியர் ஆட்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. விஜயநகரப் பேரரசின் மாமன்னரான கிருஷ்ணதேவ ராயர் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமகத்தில் கலந்து கொண்டிருக்கிறார். சோழர் பாணி மற்றும் நாயக்கர் பாணி கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் உச்சம் பெற்றுள்ள இடம் கும்பகோணம்.

பெருமாள் சன்னிதி இரத வடிவமைப்பு கொண்டது. பெருமாள் கரத்தில் சாரங்கம் என்ற வில்லேந்தியிருக்கிறார். ’’சாரங்கமுரைத்த சரமழை போல்’’ என்கிறது ஆண்டாள் திருப்பாவை.

கும்பகோணம் ராமசாமி கோவில்

ராமசாமி கோயில் ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் பெயர் பெற்ற தலம்.
 
திருஆதனூர்

அகோபில மடத்தால் பராமரிக்கப்படும் ஆலயங்களில் ஒன்று. பெருமாள் பள்ளி கொண்ட பெருமாள். அளக்கும் ’’படி’’யுடனும் ‘’எழுத்தாணி’’யுடனும் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் தலம். நரசிம்மரும் ஆஞ்சநேயரும் சிறப்பாக வழிபடப்படும் தலம்.

புள்ளம்பூதங்குடி

ஸ்ரீராமன் சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் இடம். கொள்ளிடக்கரையை ஒட்டிய ஊர்.

மன்னார்குடி

சோழர்களால் கட்டப்பட்ட ஆலயம் விஜயநகரப் பேரரசாலும் நாயக்க மன்னர்களாலும்  விரிவாக்கிக் கட்டப்பட்டது.  மன்னார்குடி திருக்குளமும் நாயக்க மன்னர்களால் வெட்டப்பட்டது. ஆலயம், கோபுரம், பிரகாரம், வீதி, தேர்  மற்றும் திருவிழா என அனைத்து சிறப்புகளும்  கொண்ட  தலம்.  இங்கே நடைபெறும் ‘’வெண்ணெய்த் தாழி’’ உற்சவம் தமிழ்நாட்டின் சிறப்பான  விழாக்களில் ஒன்று.

திருவாரூர்

ஆரூரா தியாகேசா என்ற பெருமுழக்கத்தோடு மெல்ல நகரும் ஆழித்தேர் என்பது சைவத்தின் பெரும் சிகரங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று. புற்று வடிவில் இறைமை வழிபடப்பட்டதிலிருந்து ஆரூரன் தியாகராஜராக வழிபடப்படுவது வரை பெரும் வரலாற்று நகர்வை ஓராலயத்தில் காண சாத்தியமான கோவில். ஆரூர் இசைக்குப் பெயர் போனது. சாக்த வழிபாட்டில் கமலாம்பிகை மிக முக்கியமான கடவுள். ஆலயம் அளவுக்கே பெரிய கமலாலயக் குளத்தை உடையது. முற்காலச் சோழர்களின் தலைநகராக இருந்த ஊர்.

Tuesday, 5 November 2019


நமது உறவில்
புரிதலின் வெவ்வேறு நிலைகள் இல்லை
சொல்லின் தேவை இல்லை
மௌனம் விதைக்கப்பட்ட நிலத்தில்
மௌனம் பூத்திருக்கும் காட்டில்
வானம்
மௌனமாய்ப் பார்க்கிறது
இன்னும்
முடிந்து தீராத
நாடகத்தை

ஆழமும் உயரமும் - 4


திருஇந்தளூர்

பெருமாளின் சயனத் திருக்கோலத்தில், காவேரிக்கரையில் உள்ளவை ஆதிரங்கம் (ஸ்ரீரங்க பட்டணம், மைசூர்), அப்பால ரங்கம் (கோவிலடி, கல்லணை), ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கம்,திருச்சி), சாரங்கம் (கும்பகோணம்) மற்றும் பரிமள ரங்கம் (திருஇந்தளூர், மயிலாடுதுறை) ஆகியவை பஞ்ச ரங்க ஷேத்திரங்கள் எனப்படுகின்றன. திருஇந்தளூர் பஞ்ச ரங்க ஷேத்திரங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

சந்திரன் வழிபட்ட தலம் என ஐதீகம்.

திருவிளநகர்

மயிலாடுதுறைக்கு நான்கு திசையிலும் ஆலமர் கடவுளுக்கான தலங்கள் நான்கு தலங்கள் உள்ளன. வள்ளலார் கோவில், திருவிளநகர் துறை காட்டும் வள்ளல் கோவில், பெருஞ்சேரி வாக்களிக்கும் வள்ளல் கோவில் மற்றும் மூவலூர் வழி காட்டும் வள்ளல் கோவில் ஆகியவை. திருவிளநகர் சம்பந்தர் தேவாரம் பெற்ற தலம். மயிலாடுதுறை – செம்பனார் கோவில் சாலையில் அமைந்துள்ளது.

செம்பொன்னார்கோவில்

சோழர் கால ஆலயம். தேவாரப் பாடல் பெற்றது. இவ்வூரில் சத்ரபதி சிவாஜி வழிபட்ட சுப்ரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது.

ஆக்கூர்
தான் தோன்றி ஈஸ்வரன் கோவில். சுயம்புவாக தோன்றிய தலம். சோழர் காலம்.

திருப்பாம்புரம்
நாக வழிபாட்டில் முக்கியத்துவம் உடைய தலம். சிவராத்திரி இரவன்று கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் மற்றும் நாகூர் ஆகிய தலங்களை அன்றைய இரவில் வழிபடுவர். இசைக்கு மிகவும் பெயர் பெற்ற இடம்.

திருமீயச்சூர்

லலிதாம்பிகை கோயில் கொண்டுள்ள தலம். சாக்த வழிபாட்டில் மிக முக்கிய இடம்.

சிறுபுலியூர்
கருவறை நிறைய பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் இங்கே சின்னஞ் சிறிதாக கைக்குழந்தை போல பள்ளி கொண்டிருக்கிறார். கிருபாசமுத்திரப் பெருமாள்.



Monday, 4 November 2019

ஆழமும் உயரமும் - 3


தலைச்சங்க நாண்மதியம்

நாங்கூர் திவ்ய தேசங்களுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அமைந்துள்ள தளம். பூம்புகார் வணிகத்தில் உச்சத்தில் இருந்த போது சங்கு விற்பனை இங்கே பிரதானமாக இருந்ததால் தலைச்சங்கம் என பெயர் பெற்றது என்கிறார் தமிழறிஞர் சுப்பு ரெட்டியார். வெண்சுடர் பெருமாள் நின்ற கோலம்.

கங்கை கொண்ட சோழபுரம்

சோழப் பேரரசு தன் பெரும் உயர்வுகளை நோக்கி வளரத் துவங்கிய காலகட்டத்தில் எழுப்பப்பட்ட ஆலயம். தமிழ்நாட்டின் சிற்பக் கலையின் மகத்தான உச்சங்களில் ஒன்று. யுனெஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட தலம்.

தாராசுரம்

சிறு சிற்பத்திலிருந்து ஒட்டு மொத்த ஆலயமும் முழுமை கொண்டுள்ள ஆலயம். யுனெஸ்கோ பட்டியலில் உள்ள தலம்.

திருபுவனம்

தேர் வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆலயத்தினை உடையது. சிற்பங்களுக்குப் பெயர் போனது.

Sunday, 3 November 2019

ஆழமும் உயரமும் – 2


சிதம்பரம்

வைணவத்தில் கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைக் குறிக்கும். சைவத்தில் அது சிதம்பரத்தைக் குறிக்கும். விசும்பின் உயிர் நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறான் ஆடலரசன். சிதம்பரம் என்றதும் என் நினைவில் எழுவது நாட்டியாஞ்சலி. சிறு வயதிலிருந்து பலமுறை பார்த்திருக்கிறேன். சின்னஞ் சிறுமிகள், இளம்பெண்கள்  கடவுளைத் தன் காதலனாக கணவனாக எண்ணி நடனமிடும் ஒரு கணத்தில் உணர்வின் அதிதூய தருணத்தை எட்டுவதன் மாயத்தை பலமுறை கண்டிருக்கிறேன். பேரரசிகளைப் போன்ற உணர்வுடன் அந்த ஒரு பொழுது அவர்கள் ஆவது அற்புதமான நிகழ்வு.

நடராஜர் சன்னிதி முன் நிற்கும் கணமென்பது வாழ்க்கை மேல் நம்பிக்கையை உண்டாக்குவது. ஒரு புறம் ஆடலரசன். இன்னொரு பக்கம் கோவிந்தராஜன். சிதம்பர தரிசனம் எவராலும் மறக்க இயலாதது.

ஸ்ரீமுஷ்ணம்

வராக வழிபாடு விஜயநகரப் பேரரசு பரவியிருந்த பகுதிகளில் முக்கிய இடம் பெற்றிருந்தது. அவர்களின் நாணயம் வராக முத்திரை பதிக்கப் பெற்றது. எனவே வராகன் என பெயர் பெற்றது. ஸ்ரீமுஷ்ணம் ஆலயம் ஒரு சிற்றாலயம். தினமும் பக்தர்கள் வந்த வண்ணமிருப்பர். வராக மூர்த்தி சுயம்பு. இந்த ஆலயம் சோழர் காலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசால் பல விரிவாக்கங்கள் செய்யப்பட்டுள்ள  ஆலயம்.

மேலக்கடம்பூர்

கோனார்க்கின் சூர்யக் கோவில் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஆலயம். ஆலய வடிவமைப்பே மிக அழகானது. இவ்வாறான ஓர் சிவாலயத்தை வேறெங்கும் காண இயலாது. சிறிய ஆனால் மிக முக்கியமான ஓர் ஆலயம்.

வலிவலம்

இந்த சிவாலயமும் வேறுபட்ட அமைப்பை உடையது. இறைவன் பெயர் கமலநாதன். இங்கே உள்ள வலம்புரி வினாயகர் பிரசித்தி பெற்றவர். தேவாரத்தின் பிரபலமான பாடலான

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

சம்பந்தரால் வலிவலம் இறைவனை நோக்கி பாடப்பட்டது.

திருக்கண்ணபுரம்

ஆலயத்தின் முன் ஆலயத்தை விடப் பெரியதாய் விரிந்திருக்கும் ஒரு திருக்குளம். சௌரிராஜப் பெருமாள் வசீகரமானவர். இந்த ஆலயத்துக்குப் பக்கத்தில் திருச்செங்காட்டாங்குடி உள்ளது.

நாகப்பட்டிணம்

சௌந்தர்ராஜ பெருமாள் ஆலயம். கடல் இருக்கும் ஊர்களில் அமைந்திருக்கும் ஆலயங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுவதைக் காணலாம். அழகின் திரு உரு சௌந்தர்ராஜன்.

Saturday, 2 November 2019

அன்பின் நிலம்


நாம் உரையாடிக் கொள்வதில்லை
நாம் விவாதிப்பதில்லை
நாம் பூசலிட்டு சண்டையிடுவதில்லை
அமைதியில் உறைகின்றன
நமது பிராந்தியங்கள்
நமது பாதைகள்
வானில் பறக்கின்றன
அன்பின் நிலத்தின்
பறவைகள்
வான் நோக்கி பூக்கின்றன
அன்பின் நிலத்தின்
மலர்கள்



உன்னிடம் வந்து விட எண்ணுகிறேன்
அந்த அமைதிக்கு
அந்த மௌனத்துக்கு
அந்த மெல்லிய வெளிச்சத்துக்கு
என்னிடம் சொற்கள் ஏதும் இல்லை
கரையும் அகம் மட்டுமே
கண்ணீர்
உன்னைச் சூழ்ந்திருக்கும் பிராந்தியத்தில்
சஞ்சீவி மணம்
அன்பு
உருமாற்றிக் கொண்டேயிருக்கிறது
ஒன்றை
மற்றொன்றாக

ஆழமும் உயரமும் - 1


தஞ்சை பயணச்சுற்றை நினைவுகளிலிருந்தே உண்டாக்கினேன். மோட்டார்சைக்கிள் ஓட்ட ஆரம்பித்ததிலிருந்தே இந்த பிரதேசங்களுக்குச் சென்றிருக்கிறேன். இந்த பகுதியில் பெரும்பாலும் நானும் என்னுடைய மோட்டார்சைக்கிளும் ஒருமுறை கூட செல்லாத பகுதி என்பது அனேகமாக இல்லை என்று சொல்லலாம். அப்போதெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. புதிதாக ஏதேனும் ஓர் ஆலயத்தின் பெயரைக் கேட்டால் மறுநாள் அல்லது அடுத்த சில நாட்களில் அங்கு சென்று வந்து விடுவேன். எனக்கும் பைக் பயணத்துக்கும் இடைவெளியே இருந்ததில்லை என்பதால் நினைத்தவுடன் கிளம்பியிருக்கிறேன். இன்றும் அதே பைக் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக. புதிதாக ஒரு கிராமத்துச் சாலையில் செல்வதாகத் தோன்றும் போது சில நிமிடங்களில் முன்னர் எப்போது பயணித்தோம் என்பது நினைவில் வரும். அன்று நடைபெற்ற சம்பவங்கள், அப்போதைய மனநிலை ஆகியவை துல்லியமாக மேலெழும்.

எந்த ஒரு தலத்தையும் வரலாற்றில் அதன் இடத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே திருத்தலங்களை நோக்கிச் செல்வது என்பது என்னைப் பொறுத்த வரையில் வரலாற்றை நோக்கிச் செல்வதே. நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் தோறும் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்கிறோம். நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளும் தோறும் நம்மைப் புரிந்து கொள்கிறோம்.

தஞ்சை பயணச்சுற்றில் இடம் பெற்றிருக்கும் தலங்கள் குறித்தும் அவை குறித்து என் மனதில் இருக்கும் மனப்பதிவுகள் குறித்தும் சிறு சிறு குறிப்புகளாக எழுதுவது இப்பிராந்தியத்தை மேலும் புரிந்து கொள்ள உதவக் கூடும்! இவை ஆய்வாளனின் குறிப்புகள் அல்ல. ஓர் பயணியின் குறிப்புகளே!

சீர்காழி

சைவம் தமிழ்நாட்டில் மிக வலுவாக நிலைபெற்றதற்கு காரணமான ஊர். தன் குறுகிய வாழ்நாளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று அங்கே இருந்த சிவாலயங்கள் குறித்து பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களைப் பாடி மிக அதிக சமூகங்களைச் சைவத்துக்குள் கொண்டு வந்து ஒரு வலுவான மறுதுவக்கத்தை சைவத்துக்கு உண்டாக்கிக் கொடுத்த திருஞானசம்பந்தர் பிறந்த ஊர். ‘’தோடுடைய செவியன்’’ திருஞானசம்பந்தரின் ‘’உள்ளம் கவர் கள்வனாக’’ காட்சி கொடுத்த ஊர். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம். சிவ பக்தர்களின் நினைவில் இனிக்கும் தலம். பைரவ வழிபாட்டின் அம்சமாக சட்டநாதர் வழிபடப்படும் இடம். சீர்காழி நகரின் ஒரு பகுதியாக ‘’திருக்கோலக்கா’’ என்ற அழகிய சிறு கோயில் ஒன்று உள்ளது.

மண்ணும் விண்ணும் அளக்கும் திரிவிக்ரமப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் காழிச் சீராம விண்ணகரம் இங்கே உள்ளது. தாடாளன் கோவில் என்பர்.

நாங்கூர் திவ்யதேசங்கள்

சோழநாட்டு திவ்யதேசங்கள் 40ல் 12 தலங்கள் நாங்கூரில் மட்டுமே உள்ளன. தில்லைவாழ் அந்தணர்கள் 3000 என்ற எண்ணால் குறிக்கப்படுவது போல நாங்கூர் 4000 என குறிக்கப்படுகின்றனர். வைணவத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர். தை மாதம் நடைபெறும் நாங்கூர் கருடசேவை மிகப் பிரசித்தமானது.

நரசிங்கன் பேட்டை

தஞ்சைப் பிராந்தியத்தில் இருக்கும் மிகச் சில பல்லவர் கால ஆலயங்களில் முக்கியமானது. பல்லவர்கள் நரசிம்ம வழிபாட்டில் பெரும் ஈடுபாடு கொண்டவர்கள். தென்னிந்தியாவை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட ஒரே அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கனவு கண்டவர்கள். ராஷ்டிரகூடர்களுக்கும் அதே கனவு இருந்தது. பின்னர் வந்த சோழர்களே அதை நனவாக்கினார்கள். பல்லவர்களால் அமைக்கப்பட்ட ஆலயம். ஆயிரத்து நானூறு ஆண்டுகள் வரலாறு உடையது. நரசிங்கன் பேட்டை நரசிம்மர் வரப்பிரசாதி. தினமும் பல ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் திருத்தலம். மயிலாடுதுறை – கும்பகோணம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

திருவெள்ளியங்குடி

பெருமாள் வில் ஏந்தி நின்ற கோலத்தில் இராமனாக சேவை சாதிக்கும் தலம்.பெருமாளின் அழகு அபூர்வமானது. அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.  கண் நோய் உடையவர்கள் வழிபட்டால் நோய் விரைவில் தீரும் என ஐதீகம்.

ஒருமுறை நான் சாமி கும்பிட அங்கே சென்றிருந்தேன். அப்போது ஒரு குடும்பம் சென்னையில் இருந்து வந்திருந்தது. பட்டர் அக்குடும்பத் தலைவரிடம் என்ன உத்தியோகம் என பொதுவாக விசாரித்தார். வந்தவர் விபரம் சொன்னார். அவர் சென்னையின் பிரபலமான கண் மருத்துவர்களில் ஒருவர். அடுத்த வாரம் தனக்கு கண் அறுவைசிகிச்சை நடக்க உள்ளதாகவும் அதற்காகவே இங்கே பிராத்தித்துக் கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார்.

திருவாவடுதுறை

மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின், தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு நிலை பெற்ற பின்னரே எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகம் ஒளிக்கு மீண்டது. விஜயநகரின் ஆதரவால் சமய நிறுவனங்கள் அக்காலத்திலேயே வளரத் துவங்கின. திருவாவடுதுறை மடம் நாயக்க மன்னர்களாலும் மராத்திய மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்டது.
உ.வே.சா-வின் ‘’என் சரித்திரம்’’ திருவாவடுதுறை மடம் குறித்த நுண் சித்திரங்களை  அளிக்கும் நூல். உ.வே.சா திருவாவடுதுறையை ‘’சிவ ராஜதானி’’ என்கிறார்.

மயிலாடுதுறை

அம்பிகை சிவபெருமானை மயில் வடிவம் கொண்டு பூஜித்த தலம். சுவாமியின் பெயர் மாயூரநாதர். அம்மன் அபயாம்பிகை. மாயூரநாதர் கோயில் கொண்ட தலமாதலால் இவ்வூர் மாயூரம் என பெயர் பெற்றது. திருஞானசம்பந்தர் மாயூரநாதர் மீது பாடிய தேவாரப் பதிகங்களில் மாயூரத்தை மயிலாடுதுறை என்கிறார்.

பதிகம் பாடும் போது இறைவனையும் திருத்தலத்தையும் வெவ்வேறு பெயர்களில் பாடுவது என்பது தமிழ் மரபு. மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள இறைவன் மாயூரநாதன். மாயூரநாதன் கோயில் கொண்டுள்ள ஊர் மயிலாடுதுறை. உ..வே.சா தம் ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்ற ஊர் மயிலாடுதுறை.

Friday, 1 November 2019

தஞ்சை பயணச்சுற்று


ஆரணியில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். வளைகுடாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர். பொறியியல் கல்லூரியில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். நான் கட்டுமானவியல். அவர் மின்னியல். கல்லூரி விடுதியில் எனது நண்பரின் அறைவாசி. அந்த வகையில் அறிமுகமானார். இந்தியா வரும் போதெல்லாம் தொடர்பு கொள்வார். சில நாட்களுக்கு முன் அவரிடமிருந்து ஓர் அழைப்பு. இன்னும் கொஞ்ச நாளில் இந்தியா வருகிறார். தஞ்சைப் பிராந்தியத்தின் ஆலயங்களைக் காண வேண்டும் என்றார். மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். நான் ஒரு திட்டத்தை உருவாக்குகிறேன் என்று சொன்னேன்.

தஞ்சைப் பிராந்தியத்தில் ஆலயங்கள் காலை 7 மணியிலிருந்து மதியம் 12.30வரை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்படும். 12.30-4.30 என நான்கு மணி நேரம். மாலை 4.30லிருந்து இரவு 9.30 வரை ஆலயங்கள் மீண்டும் திறந்திருக்கும். என்னுடைய காரில் பயணிப்பதாகத் திட்டம். காரில் பயணித்தால் காலை உணவை 6 மணிக்குள் முடித்து விட்டு புறப்பட்டு விடுவது உகந்தது. ஒவ்வொரு நாளும் மயிலாடுதுறையிலிருந்து பயணங்கள் துவங்கும். இரவு மயிலாடுதுறை திரும்பி விடுவதாக பயண வடிவமைப்பு.

நாள் 1

காலை 6 மணி – புறப்பாடு
காலை 6.30 மணி – சீர்காழி – காழிச் சீராம விண்ணகரம்
காலை 7.30 மணி – சீர்காழி – சட்டைநாதர் ஆலயம்
காலை 9.00 மணி – நாங்கூர் திவ்ய தேசங்கள்

வைணவத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் 108. அதில் 106 புவியுலகில் உள்ளவை. மற்ற இரண்டும் பரமபதமும், வைகுண்டமும். இந்த 108ல் 12 தலங்கள் நாங்கூரில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன. அவற்றில் ஆறு தலங்களை முதல் நாள் சேவித்து விடலாம்.

மதியம் 1 மணி – மயிலாடுதுறை திரும்பல்
மாலை 4 மணி – நரசிங்கப் பெருமாள் கோவில்,
மாலை 5 மணி – திருவெள்ளியங்குடி
மாலை 6 மணி – திருவாவடுதுறை
இரவு 8 மணி – மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி

நாள் 2

காலை 5 மணி – புறப்பாடு
காலை 6 மணி – சிதம்பரம் நடராஜர் ஆலயம்
காலை 9 மணி – ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் ஆலயம்
காலை 11.30 மணி – மேலக்கடம்பூர்
மதியம் 1 மணி – மயிலாடுதுறை திரும்பல்
மாலை 4 மணி – வலிவலம்
மாலை 6 மணி – திருக்கண்ணபுரம்
மாலை 8 மணி – நாகப்பட்டினம் சௌந்தர்ராஜ பெருமாள்

நாள் 3

காலை 8 மணி – புறப்பாடு
காலை 9 மணி – நாங்கூர் திவ்யதேசங்கள் 6
மதியம் 12 மணி – தலைச்சங்க நாண்மதியம்
மதியம் 1 மணி – மயிலாடுதுறை திரும்பல்
மாலை 4 மணி – கங்கை கொண்ட சோழபுரம்
மாலை 6 மணி- தாராசுரம்
இரவு 8 மணி- திருபுவனம்


நாள் 4

காலை 6 மணி - புறப்பாடு
காலை 7 மணி - திருஇந்தளூர்
காலை 8 மணி - திருவிளநகர்
காலை 9 மணி- செம்பொன்னார்கோவில்
காலை 10 மணி - பொன்செய்
காலை 11 மணி - ஆக்கூர்
மாலை 4 மணி - திருப்பாம்புரம்
மாலை 6 மணி - திருமீயச்சூர்
மாலை 7 மணி - சிறுபுலியூர்

நாள் 5

காலை 6 மணி - புறப்பாடு
காலை 7 மணி - கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில்
காலை 8.30 மணி- கும்பகோணம் ராமசாமி கோவில்
காலை 10 மணி - திரு ஆதனூர்
காலை 11 மணி - புள்ளம்பூதங்குடி
மாலை 4 மணி - மன்னார்குடி
மாலை 6 மணி - திருவாரூர்

நாள் 6

காலை 6 மணி - புறப்பாடு
காலை 7.30 மணி - பட்டீஸ்வரம்
காலை 9 மணி - திருக்கருகாவூர்
காலை 11 மணி - திட்டை
மாலை 4 மணி - கோவிலடி
மாலை 5.30 மணி  - ஆடுதுறை பெருமாள் கோவில்
மாலை 6.30 மணி - கபிஸ்தலம்
இரவு 7.30 மணி - ஒப்பிலியப்பன் கோவில்
இரவு 8.30 மணி - திருவிடைமருதூர்

ஆறு நாட்களில் 50 முக்கியமான ஆலயங்கள். அவர் வெளிநாட்டிலிருந்து ஆரணி வந்ததும் உடன் கிளம்பி மயிலாடுதுறை வரச் சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு மாதம் விடுமுறையில் வருகிறார். தஞ்சை ஆலயங்களைக் காண ஆறு நாட்கள் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன்.

தஞ்சைப் பிராந்தியத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கும் ஒரு பேராலயம் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு திட்டமிட்டு பட்டியலிட்டுக் கொண்டு சென்றால் ஏழெட்டு பயணங்களில் அனைத்தையும் தரிசித்து விடலாம்.