Sunday, 22 March 2020

அழகு

நினைவிருக்கிறதா
நீர் ஆற்றின் கரையில்
மெல்ல அசையும்
பசும்நாக்குகள்
காற்றுடன் உரையாடும்
விருட்சத்தின் அடியில்
காத்திருக்கச் சொன்னாய்

மூச்சுக் காற்றென
சுழல்கின்றன
பகல் பொழுதும்
இரவும்

கண்ணீரால்
முற்றும்
உடல் கரைக்க இயலுமா?
மனம்?
உணர்வு?

நீ மட்டுமே
எஞ்சியிருக்கிறாய்
நினைவுகளாக
உன்னிலிருந்தே அர்த்தமாகின்றன
முடிந்த
நடக்கும் காலங்கள்

எனது
கண் நீர்த் துளிகள்
உன்னைக் கவசமெனக் காக்குமெனில்
அவை
என் தவமாகும்

இனிமை நிறைந்த
உன் நிலத்தில்
எனது கண்ணீர்த் துளிகள்
அசௌகர்யம்
உணரச் செய்திடுமோ
என்று
பதைக்கிறேன்

சந்தித்த
முதல் பொழுதிலிருந்து
இன்னதென்று அறிந்திட முடியாத
இவ்வாறென மொழிய இயலாத
இப்பொழுது எனக் கூறிட இயலாத
தொகுத்துக் கொள்ள இயலாத
உணர்வுகளால்
இப்போதும்
அலைக்கழிக்கப்படுகிறேன்

சந்திப்புக்கான
காத்திருப்பு
கடவுளுக்கான காத்திருப்பாயாவதும்
வாழ்வின் அழகுதானே?

Saturday, 21 March 2020

பயணம்

உனது மெல்லிய புன்னகையை
முகம் சாயும் நாணத்தை
அன்பின் நீர்மை நிறைந்த கண்களை
பிரியங்கள் உரையாடும் மௌனத்தை
இனி
காண இயலாமல் கூட போகலாம்
இந்த பெரும் உலகின்
கணக்கற்ற வலைப்பின்னல்களின் சாத்தியத்தில்
கணக்கற்ற சந்திப்புகளின் வாய்ப்புகளில்
தற்செயலாகக் கூட
ஓர் எளிய விருப்பம்
நிகழாமல் போகலாம்
அந்திப் பொழுதாய்
நிறை நிலவாய்
வானாய்
நீரலைகளாய்
விண்ணாய்
கண்ட
அன்பினை
மீண்டும் அவ்வாறு காண்பதற்கு
பயணிக்கப் போகும்
காலம் எவ்வளவு?
தூரம் எவ்வளவு?

Friday, 20 March 2020

ஹிந்த் ஸ்வராஜ்

நான் என்னுடைய கல்லூரி நாட்களில் ‘’சத்திய சோதனை’’ வாசித்தேன். தமிழில் பரவலாக அறியப்பட்ட நூல். அவர் தனது ஆரம்பகட்டங்களில் எழுதிய நூல். ஓர் ஆன்ம சாதகனின் துவக்க காலக் குறிப்புகள் என எண்ணினேன். பின்னர் பொறியியல் இறுதி ஆண்டில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது ‘’வாக்கியங்களின் சாலை’’ நூலில் லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ என்ற நூல் குறித்து எழுதியிருந்த கட்டுரை அந்நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாரதீய வித்யா பவனின் வெளியீடாகக் கிடைத்த அந்நூலை வாசித்தேன். காந்தியை மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் நூல் என்று எண்ணினேன். பல பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறேன். ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டிய நூல் என்று கூறுவேன். பின்னாட்களில் அந்நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அது ஓர் இலக்கிய இதழில் வெளியானது. அக்கட்டுரையில் தமிழில் காந்தி குறித்த முக்கியமான நூல்களாக மூன்று நூல்களைக் குறிப்பிட்டேன். அவை 1. காந்தி வாழ்க்கை (லூயி ஃபிஷர்) (தமிழ் மொழிபெயர்ப்பு) 2. தென்னாப்ரிக்க சத்யாக்ரகம் (மகாத்மா காந்தி) (தமிழ் மொழிபெயர்ப்பு) 3. இன்றைய காந்தி (ஜெயமோகன்) ஆகிய மூன்று நூல்களைக் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்தில் சாவி எழுதிய ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை வாசித்தேன். முக்கியமான நூல். நேற்றும் இன்றும் மகாத்மா காந்தியின் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூலை வாசித்தேன். காந்தி நூல்களில் மிகவும் முக்கியமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஒரு வாசகரும் ஆசிரியரும் உரையாடிக் கொள்ளும் பாணியில் இந்நூலை வினா - விடை பாணியில் மகாத்மா அமைத்திருக்கிறார். உரையாடிக் கொள்ளும் வாசகரும் ஆசிரியரும் மகாத்மாவே. தேசம் குறித்தும் தேசப்பணி குறித்தும் தான் சிந்தித்தவற்றை தான் பரிசீலித்தவற்றை கேள்வி பதிலாக அளித்துள்ளார். 

இந்த தேசத்துக்கென ஒரு ஆன்மா உள்ளது என்று காந்தி உறுதியாக நம்புகிறார். எழுதப்பட்டுள்ள அல்லது தொகுக்கப்பட்டுள்ள மன்னர்களின் சரித்திரம் மட்டுமல்ல இந்திய வரலாறு என்று ஐயமின்றி முன்வைக்கிறார். இந்நாட்டின் விவசாயிகளை எந்த மன்னரின் அரசாட்சியும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். அவர்களை அச்சமின்றி தயக்கமின்றித் தங்கள் கடமையைச் செய்யும் வீரர்கள் என்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் தங்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். அதற்கு எவ்விதமான புறத் தூண்டலும் காரணமல்ல என்பதை பதிவு செய்கிறார். இந்த கோணம் எனக்கு ஆச்சர்யமளித்தது. உறுதியான சொற்களில் மகாத்மா இதனை நிறுவுவது மேலும் வியப்பைத் தந்தது. ‘’ஜெய் ஜவான் ஜெய் கிசான்’’ என்ற கோஷம் உருவானதின் பின்னணி புலப்படத் துவங்கியது. 

இந்திய தேசிய காங்கிரஸ் ஆற்றிய செயல்கள் குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் காந்தி விவாதிக்கிறார். 

இந்தியா ஒரே தேசம் என்பதை காந்தி விளக்குகிறார். இந்திய மக்கள் ஒரே பண்பாடு கொண்டவர்கள். அவர்களது நம்பிக்கைகளில் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் இந்தியா ஒரே தேசமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பை ஒன்றுபடுத்தும் மேன்மையான அப்பண்பாடு சமகாலத்தில் அக்கறையுடன் காத்து முன்னெடுப்பது இந்நாட்டு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்கிறார்.

இந்தியாவின் கைத்தொழில்கள் காக்கப்படுவதே இந்தியாவைக் காப்பதற்கான வழி என்று உறுதியாகக் கூறுகிறார். இயந்திரமயமாக்கல் பலன்களை விட அழிவை அதிகமாகத் தரக்கூடியது என்று அவதானிக்கிறார்.

வழக்கறிஞர்களையும் மருத்துவர்களையும் மகாத்மா கடுமையாக சாடுகிறார். நீதிமன்றங்களே நீதி சொல்ல வேண்டும் என்பது வழிக்கறிஞர்கள் சம்பாத்தியத்துக்கான வழியாகவே அமையும் என்கிறார். அவரே ஒரு வழக்கறிஞர் என்பதோடு யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இது. இந்திய கிராமங்களின் பாரம்பர்யமான பஞ்சாயத்து போன்ற முறைகளே ஆதரிக்கப்பட வேண்டும் என்கிறார்.

நவீன மருத்துவம் மருத்துவத்தின் அறத்தைச் சிதைக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார் மகாத்மா. ஒரு மருத்துவர் நோயாளிக்கு அறிவுறுத்தும் இடத்தில் இருக்க வேண்டியவர். மருந்து தருவது மட்டும் தனது வேலை என்று அவர் நினைப்பாராயின் அதை விடப் பெரிய சமூகத் தீமை வேறொன்றில்லை என்கிறார். நோயின் காரணத்தை நோயாளியின் வாழ்விலிருந்து நீக்குவதும் மருத்துவரின் பணியே என்கிறார் மகாத்மா.

அரசாங்கம் எண்ணிக்கையில் மிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே மகாத்மாவின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. விவசாயம் மதிக்கப்படும் நெசவு போற்றப்படும் கைத்தொழில்கள் முக்கியத்துவம் பெறும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கைக்கொள்ளும் சமூகம் குறித்த கனவை மகாத்மா உருவாக்குகிறார். இந்நூலை வாசிக்கும் போது அது சாத்தியமானதே என்ற நம்பிக்கையை நாமும் அடைகிறோம்.

சிறு நூலாயினும் மிக முக்கியமான நூல் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’.

Thursday, 19 March 2020

வாசிப்புப் பயிற்சி

சில மாதங்களுக்கு முன், வாசிப்பு மாரத்தானில் 40 நாட்களில் 100 மணி நேரத்துக்கு மேல் வாசித்தேன். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேர வாசிப்பு. எளிய இலக்குதான். ஆனாலும் ஒரு நாள் கூட விடுபடாமல் வாசிக்க வேண்டும் என்பது விதி. ஒரு நாளும் விடுபடவில்லை. இன்று ஒரு பயிற்சிக்காக 10 நாட்களில் 100 மணி நேர வாசிப்பை மேற்கொள்ளலாம் என்று தோன்றியது. புத்தகங்களுடன் சொற்களுடன் மேலும் நெருக்கமாக இருக்க ஒரு வாய்ப்பு. அடுத்த பத்து நாட்கள் எங்கும் வெளியூர் செல்லப்போவதில்லை. மாலைத் தென்றல் மகிழச் செய்யும் வசந்த காலம் தேசமெங்கும் தொடங்குகிறது. ஆர்வம் கொண்டு என் இளம் வயதில் புத்தகங்கள் வாசித்த நாட்களே எனது வாழ்வின் வசந்த காலமாக இருந்திருக்கிறது. எண்ணத்தில் இனிமை நிறைந்திருக்குமாயின் எல்லா காலங்களும் வசந்தமே!

Monday, 16 March 2020

நவகாளி யாத்திரை

எழுத்தாளர் சாவியின் ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறு நூல். மகாத்மா வங்காளத்தில் இந்திய சுதந்திரத்தை ஒட்டி நிகழ்ந்த மத வன்முறைகளை தடுக்கும் பொருட்டு நவகாளி பகுதியில் பாத யாத்திரையாகச் செல்கிறார். அந்த யாத்திரையில் பங்கு பெறும் பொருட்டு சென்னையிலிருந்து சாவி செல்கிறார். சென்னையிலிருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் வழியே இன்னொரு ஊருக்குச் சென்று கங்கையின் துணை ஆறுகளான இரண்டு பெரும் நதிகளை மோட்டார் படகில் கடந்து ஒரு ஊரையடைந்து அங்கிருந்து இருபது மைல் கால்நடையாக நடந்து மகாத்மா இருக்கும் இடத்தைக் கண்டடைகிறார். சாவி மகாத்மா மீது பெரும் மதிப்பு கொண்டவர். ‘’கல்கி’’ இதழில் பணியாற்றியவர் ஆதலால் கல்கியுடனும் ராஜாஜியுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். அவருக்கு மகாத்மா என்றுமே வழிகாட்டி. 

நவகாளியில் நடந்த வன்முறைகள் காந்தியை பெரும் சோர்வு கொள்ளச் செய்கின்றன. அவர் ஆழமான மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார். அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோல்வியடைந்து விட்டனவா என்ற ஐயம் அவருக்கு உண்டாகிறது. வாழ்நாள் முழுவதும் தான் மேற்கொண்ட ஆன்ம பயிற்சி முழுத் தோல்வியைச் சந்திக்கிறதா என்ற குழப்பம் அவருக்கு உண்டாகிறது. பின்னர் அறிவிக்கிறார்: அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோற்காது. எளிய மனிதனாகிய தான் தோல்வி அடையலாம். அவ்வாறாயின் அது தன் ஆத்ம பலத்தின் தோல்வியே தவிர அஹிம்சையின் தோல்வி அல்ல. 

நவகாளி பகுதியில் ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களான ஒன்பது பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த குடும்பத்தில் ஒருவர் கூட எஞ்சவில்லை. அந்த குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நாய் உயிருடனிருக்கிறது. மகாத்மா சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரில் உள்ளவர்கள் முற்றழிக்கப்பட்ட அந்த குடும்பத்தைக் குறித்து மகாத்மாவிடம் கூறுகிறார்கள். அந்த வீட்டுக்கு மகாத்மா செல்கிறார். அப்போது அந்த வீட்டின் நாய் வாலை ஆட்டியவாறு மகாத்மாவைச் சுற்றி வருகிறது. அவரை எங்கோ அழைக்கிறது. அவர் அந்த நாயின் பின்னால் செல்கிறார். ஒன்பது நபர்களின் உடலும் புதைக்கப்பட்டிருக்கும் இடுகாட்டுக்கு மகாத்மாவை அழைத்துச் சென்று காட்டுகிறது. புதைமேட்டில் மோப்பம் பிடித்தவாறு இருக்கிறது. சில நிமிடங்கள் அங்கே இருந்து விட்டு மகாத்மா அங்கிருந்து புறப்படுகிறார். அப்போது மகாத்மாவுடன் அந்த நாயும் உடன் வருகிறது. மைல் கணக்காக  அவருடன் நடக்கிறது. நவகாளி யாத்திரை முழுதுமே உடனிருக்கிறது. சாவி இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

மகாத்மா அந்த பிராந்தியத்துக்கு முற்றிலும் புதியவர். தனக்கு உணவிட்டவர்களை இழந்த நாயின் துயரம் என்பது மிகக் கொடியது. அந்த துயரத்தை அது ஏன் மகாத்மாவிடம் பகிர்ந்து கொண்டது? தனது எஜமானர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு மகாத்மாவை ஏன் அழைத்துச் சென்றது? மகாத்மாவின் பயணத்தில் உடனிருக்க அது ஏன் முடிவு செய்தது? 

மகாத்மாவுடன் நவகாளி யாத்திரையில் இரண்டு நாட்கள் உடனிருந்த சாவி பதிவு செய்த நேரடி ஆவணமான இந்நூல் மிகவும் முக்கியமானது.

Wednesday, 11 March 2020

ஒரு தோழமை

மயிலாடுதுறைக்கு மேற்கே, மேம்பாலத்தின் இறக்கத்தையொட்டி ஒரு சிறு கிராமத்துச் சாலை பிரிந்து செல்கிறது. அதற்கு மறையூர் சாலை என்று பெயர். இருபுறமும் நெல்வயல்கள் பரவிக் கிடக்க சிறு சிறு வளைவுகளுடன் சிறு அரவமென அச்சாலை கிடக்கும். அதில் சற்றே பெரிய களம் ஒன்றையொட்டி ஓர் அரசமரம் உள்ளது. நீர் நிரம்ப பாயும் பாய்ச்சல் கால் ஒன்றின் அருகில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஈரம் மிகுந்து கிடக்கும் பகுதியில் அம்மரம் நாற்பது வருடங்களாக நின்றிருக்கிறது என்கிறார்கள். 

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது இம்மரத்தடியைக் கண்டடைந்தேன். எனக்கு மரத்தடிகள் மேல் எப்போதும் ஆர்வம் உண்டு. வட இந்தியாவில் மரத்தடிகளை ஒட்டி கிராமங்களில் எப்போதும் பதினைந்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக அமர்ந்திருப்பார்கள். இதனை ராஜஸ்தானில் அதிகம் காணலாம். முறுக்கு மீசை கொண்ட முதியவர்கள். மெல்லிய உடல் கொண்டவர்கள். மதிய நேரத்தில் வந்து அமர்ந்திருப்பார்கள். 

மறையூர் சாலை அரசமரத்தடிக்கு கல்லூரி நாட்களில் அடிக்கடி வருவேன். வார இறுதி நாட்களின் மாலைப் பொழுகளை அம்மரத்தடியில் அமர்ந்திருப்பேன். சென்றதும் என் இரு கைகளாலும் அம்மரத்தைத் தொடுவேன். அதில் செதுக்கி வைத்த இடம் போல ஒரு பரப்பு இருக்கும். அதில் வாகாக அமர்ந்து கொள்வேன். நானும் அந்த விருட்சமும் வேறல்ல என்பது போல மனம் ஒன்றியிருக்கும். 

கோடை காலத்தில் புதுத்துளிர்கள் துளிர்த்திருக்கும் போது ஒவ்வொரு இலையைச் சுற்றிலும் மின்மினிகள் வட்டமிடும். மின்மினிகள் மரத்தை தீபமென ஒளிரச் செய்யும். பல சூரிய அஸ்தமனங்களை அங்கிருந்து கண்டிருக்கிறேன். மனம் நம்பிக்கை கொள்ளும் இளமைப் பருவம் அழகானது. அதன் புனிதமான அறியாமைகளுடன் வாழ்க்கை குறித்து நம்பிக்கை மிகுந்திருக்கும் தளரா ஊக்கம் கொண்ட நாட்கள் அவை. நமது சமூக வாழ்க்கை நம்மை லௌகிகத்தையே வாழ்க்கை என நம்ப வைக்கிறது. லௌகிகம் எல்லைக்குட்பட்டது. 

பலரை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறேன். நண்பர்களை . உறவினர்களை. பரிச்சயமானவர்களை. அப்போதெல்லாம் வாரம் ஒருநாளாவது கடற்கரைக்குச் செல்வது என்பதும் வாரம் ஒருநாள் இந்த மரத்தடிக்கு வருவதும் என்பதும் தொடர்ந்து நடக்கும். பூம்புகார், கோணயாம்பட்டினம், வாணகிரி, சின்னங்குடி மற்றும் தரங்கம்பாடி என ஏதேனும் கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருப்பேன். 

மாறா செயலூக்கம் கொண்டிருந்த நாட்கள். வணிகம் சார்ந்த பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த நாட்களிலும் கூட இங்கே செல்வதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன். இருப்பினும் வருடக்கணக்காக மேற்கொள்ளும் செயலில் ஏற்படும் தேக்கம் உருவானது. என் வாழ்நாள் முழுதும் நான் நினைவுகூரும் இந்தியப் பயணங்களை மேற்கொண்டேன். புதிய நிலம் புதிய மனிதர்கள் என்பது பேரார்வமாயானது.

இன்று மீண்டும் மறையூர் சாலை அரசமரத்திடம் சென்றேன். நிறைய மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் அங்கே செல்கிறேன். அரசமரத்தை என் இரு கைகளாலும் தொட்டேன். ஒரு பிரியமான தோழனுடன் இருப்பதைப் போல மனம் அமைதி கொண்டது. சிவப்பு சூரியன் மெல்ல அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்தான். செக்கச் சிவந்த வானம். வானம் முன் நின்றேன். முயற்சிகள். தடைகள். சொல்லாக்காத துக்கங்கள். உலகையே அணைக்கும் கைகளில் சில கணங்களுக்கு என்னை ஒப்படைத்தேன். நம்பிக்கைகளுடன் திரும்பினேன்.

Tuesday, 10 March 2020

சிறுகதை - ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்

சமீபத்தில் எழுதிய சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


Sunday, 8 March 2020

நீ மௌனம் சூடியது எப்போது?

உனது கண்களை மூடி
நெற்றிப் பொட்டு விண்ணை எண்ண
மண்ணில்
மலரென அமர்ந்து
முடிவிலா ஒற்றைச் சொல் எழும்ப
நீ மௌனம் சூடியது எப்போது?

Monday, 2 March 2020

இரு வாரங்கள்

பத்து நாட்களாக உடல்நலத்தில் சிறு குறைவு. இருமல். சற்று சிரமமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ச்சியாகப் பேசினால் இருமல் வந்தது. உடல் சோர்வடைந்திருந்தது. சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். நலக்குறைவுடனே அவருடன் சுவாமிமலை, திருவலஞ்சுழி, பழையாறை ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வந்தேன். வணிகம் தொடர்பாக சில பணிகள். அலைச்சல்.