Tuesday, 10 January 2023

மரபும் சமூகமும் இயற்கையும்

இந்திய மரபு என்பதை சுருக்கமாக இயற்கையுடன் இயைந்து வாழும் உணர்வு எனக் கூறிவிடலாம். இயற்கை இறையாக உணரப்படுவது உலகிலேயே இந்தியாவில் மிக அதிகம். இந்தியாவில் தோன்றிய சமயங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள், இந்தியாவின் வெவ்வேறு நிலப்பகுதிகளின் இலக்கியங்கள், நுண்கலைகள் என அனைத்திலுமே இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மையும் இயற்கையை வழிபடும் தன்மையும் உள்ளுறையாக இருப்பதைக் காண முடியும். 

தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் மக்களின் சமய நம்பிக்கை தாக்குதலுக்குள்ளானது. திராவிட இயக்கம் தன்னளவில் தனது கருத்தியல் அடிப்படையில் சமயத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும் சமயம் உருவாக்கியிருக்கும் மதிப்பீடுகள் மீது தாக்குதல் தொடுப்பதையும் தனது முறைமையாகக் கொண்டது. இயற்கையை தெய்வத்தின் ரூபமாகக் காணுதல் என்பது சமயத்தின் முறைமைகளில் முக்கியமானது. சிவன் என்பவன் கங்கையை சிரசில் கொண்டவன். நிலவையும் நாகத்தையும் அணியாக அணிந்தவன். விஷ்ணு கடலில் வசிப்பவன். மண், மரம், செடி, பிராணி, வானம், காற்று , தீ என அனைத்துமே வணக்கத்துக்குரியவை என்னும் உயரிய உணர்வைக் கொண்டவை இந்திய சமயங்கள். திராவிட இயக்கத்துக்கு இந்திய மரபு குறித்த எந்த புரிதலும் எப்போதும் இருந்ததில்லை. இந்திய மரபுக்குள்ளேயே இருந்த நாத்திக சிந்தனைக்கு மிக நெருக்கமான பிருஹஸ்பதியின் லோகாயதவாதத்தின் எளிய அறிமுகத்தைக் கூட திராவிட இயக்கம் பெற்றிருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் உருவாகி நிலைபெற்றிருந்த நாத்திக இயக்கத்தை தனது முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டது திராவிட இயக்கம். ஐரோப்பாவில் மதத்தின் பெயரால் நடந்த சண்டைகள் மிக அதிகம். சிலுவைப் போர்கள் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு நிகழ்ந்த நிலம் ஐரோப்பா. அந்த ஆறு நூற்றாண்டு கொட்டப்பட்ட குருதியின் விளைவாக உருவான இயக்கம் ஐரோப்பாவின் நாத்திக இயக்கம். கிருஸ்தவ திருச்சபையை எதிர்த்து உருவான இயக்கம் அது. கடவுளின் பெயரால் கிருஸ்தவ திருச்சபை நிகழ்த்தும் அதிகார அரசியலுக்கு எதிரான எதிர்க்குரல் அது. ஐரோப்பாவின் சமூக அமைப்புக்கும் தமிழ்நாட்டின் சமூகக் கட்டுமானத்துக்கும் எவ்வித ஒட்டு உறவும் கிடையாது. திராவிட இயக்கம் சமயத்தை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்த மண்ணின் மதிப்பீடுகள் அனைத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள். தொழில்நுட்பத்தின் சாதனைகளை மானுடத்தின் சாதனைகளாக முன்வைத்தனர். தமிழ்நாட்டில் இவ்வாறான பரப்புரை தொடர்ந்து நிகழ்ந்தது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகல் மனிதனின் நுகர்வைத் தூண்டக் கூடியவை. இயற்கையைச் சுரண்டும் இயல்பைக் கொண்டவை. இந்த தொழில்நுட்பம் இயற்கையைக் காக்கும் செயல்களால் சமப்படுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாட்டின் மரபே துணையாக வர முடியும். 

ஆனால் கடந்த நூறு ஆண்டுகளாக மரபு எதிர்ப்பு என்னும் நச்சு திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்டுள்ளது. அந்த நச்சு சிறு மிகச் சிறு அளவி்லேனும் மக்கள் அகத்தைத் தீண்டியுள்ளது. இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் தொழில்நுட்பத்தால் நிகழும் இயற்கையின் மீதான சுரண்டல் உருவாக்கும் அழ்விலிருந்து உலகைக் காக்க இயற்கையுடன் இயைந்து வாழ்தலையும் நுகர்வின் மீதான கட்டுப்பாட்டையும் முன்வைக்கின்றன. நம் மரபிலேயே இயல்பாக அமைந்த விஷயங்கள் அவை. 

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை விளக்க முடியும். தமிழ்நாட்டில் வயல்வெளிகளில் உள்ள பாம்புகளை கொல்லக் கூடாது என்னும் பழக்கம் இருந்தது. வயல்வெளி என்றல்ல எங்குமே பாம்புகளைக் கொல்லக் கூடாது ; அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே புதர் மண்டிய இடத்தில் விட்டு விட வேண்டும் என்ற விதியும் கட்டுப்பாடும் இருந்தது. வயலில் உள்ள பாம்புகள் விளைச்சலை உண்டு தீர்க்கும் எலிகளைத் தன் உணவாகக் கொள்பவை என்பதால் எலிகலைக் கட்டுப்படுத்தும் பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்பதால் அவை அழிக்கப்படக்கூடாது என்பது ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டது. எலியைக் கொல்லும் எலி மருந்து வந்த பின் விவசாயி பாம்புகளை அசௌகர்யமாக உணரத் துவங்கி அவற்றைக் கொல்லலானான். இரண்டு மூன்று தலைமுறைகளில் விவசாயிகள் பாம்பு எவ்விதம் தங்களுக்கு உதவுகிறது என்பதை மறக்கத் துவங்கினான். எலி மருந்தின் விஷத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் தன்மையை எலிகள் உருவாக்கிக் கொண்டன. அவற்றைக் கட்டுப்படுத்தும் பாம்புகள் இல்லாததால் எலிகள் தடையின்றி பெருகுகின்றன. 

இன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் சூழியல் அழிவுக்கான காரணங்களில் ஒன்று திராவிட இயக்கத்தின் மரபு எதிர்ப்பு பரப்புரை. சூழியல் விழிப்புணர்வு என்பது நமது மரபைப் புரிந்து கொள்ளுதலும் உணர்ந்து கொள்ளுதலுமே.  

Monday, 9 January 2023

நூறு பூமரங்கள்

இன்று காலை 6 மணிக்கு ஒரு அலைபேசி அழைப்பு. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். அலைபேசி மணி துயில் கலையச் செய்தது. ஏற்பட்ட முதல் எண்ணம் ஒரு வியப்பு. ‘’இன்று 100 பூமரங்கள் நட நியமித்த பணியாளர் இத்தனை சீக்கிரமா தனது ஊரிலிருந்து புறப்பட்டு விட்டு அந்த செய்தியைச் சொல்ல நம்மை அழைக்கிறார்’’ என்று எண்ணினேன்.  

‘’சார்! சொந்தக்காரங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம கும்பகோணம் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. அவரைப் போய் பாக்கணும் சார்”

எனது தூக்கம் முழுமையாகக் கலைந்து ‘’இன்னைக்கு மரக்கன்றுகளை நட வேறு யாரை ஏற்பாடு செய்வது ?’’ என்ற வினா கவலையாக உருமாற்றம் பெற்றது. 

பணியாளரின் கூற்றுக்கு ஆமோதிப்பைத் தவிர வேறெந்த பதிலையும் கூறி விட முடியாது. அதனால் எந்த பயனும் இல்லை. 

தெரிந்த நண்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்கள் தூக்கத்தைக் கலைத்து இன்று ஒரு பணியாளர் மட்டும் வேண்டும் என்றேன். 

‘’சார் ! ரெண்டு பேரை அனுப்பலாமா?’’

‘’அனுப்பலாம். ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆள் சம்பளத்தை சமமா பிரிச்சு எடுத்துக்கணும்.’’

‘’இல்லை சார் ரெண்டு பேர் வந்தா ரெண்டு ஆள் சம்பளம் கேப்பாங்க’’

‘’நூறு நந்தியாவட்டை கன்றுகள். காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சா கூட சாயந்திரம் 6 மணிக்கு ஒருத்தரே வச்சுரலாம். ஒரு மணி நேரத்துல 10 கண்ணு வச்சாக்கூட 100 கன்னு ஒருத்தரே நடலாம்’’

‘’ரெண்டு பேர் ரெண்டு ஆள் சம்பளம்னா டிரை பன்றோம் சார்’’

‘’ஒருத்தர் ஒரு ஆள் சம்பளம்னு டிரை பண்ணுங்க’’

ஒரு நண்பர் ஒரு ஆளைப் பிடித்து அனுப்பி வைத்தார். கல்லூரி முடித்த இளைஞன். ஆர்வமாக பணியைத் துவக்கினான். 

நாங்கள் பூமரக் கன்றுகள் நட்ட சாலையில் சென்ற எனது நண்பர் ஒருவர் இரும்புப் பாறை கொண்டு வந்து கொடுத்து உதவினார். 

அரைமணிக்கு ஒருமுறை சென்று மேற்பார்வை இட்டேன். 

சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றையும் செய்தேன். 

மாலை 6 மணிக்குள் 100 பூமரக் கன்றுகள் நடப்பட்டன. அனைத்துக்கும் நீர் ஊற்றினோம். 

Sunday, 8 January 2023

ஒரு வாசகர்

சில நாட்களுக்கு முன்னால், ஒரு வாசகர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு நாளின் அதிகாலையில் அவரது கடிதத்தைக் கண்டேன். அவர் தனது அலைபேசி எண்ணை  அளித்திருந்தார். அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த பணிகளில் மறந்து விட்டேன். இன்று அவரை அழைத்துப் பேசினேன். 

’’லீலாவதி’’ சிறுகதைக்குள் இடம் பெற்றிருக்கும் நாட்டிய நாடகம் , ‘’புள்ளரையன் கோவில்’’ சிறுகதையில் இடம் பெற்றிருக்கும் கொற்றப்புள் ஆகிய்வை அவரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது வாசக அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

சாகித்ய அகாடெமி, தேசிய புத்தக நிறுவனம் ஆகியவை வெளியிட்டிருக்கும் இந்திய நாவல்களை வாசிக்குமாறு அவருக்குப் பரிந்துரைத்தேன். தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, கிரிராஜ் கிஷோர், குர் அதுல் ஐன் ஹைதர், பைரப்பா, சிவராம் காரந்த் மற்றும் தகழி சிவசங்கர பிள்ளை ஆகியோரின் நாவல்கள் அவருடைய இலக்கிய வாசிப்பு மனநிலைக்கு மிக அணுக்கமாக இருக்கும் என்று கூறினேன். 


Saturday, 7 January 2023

14 மரங்கள் - தொடர் பிழைகள்

14 மரங்கள் தொடர்பாக 12.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்த போது மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகக் கருதி செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  அன்றைய தேதியில் மரங்களை வெட்டிய குற்றம் செய்தது ஒரு நபர். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர். கள்ளத்தனமாக மரம் வெட்டுதல், அதிகார துஷ்பிரயோகம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த விஷயம் வருவதால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தோன்றியது. 

இந்த விஷயத்தில் என்னென்ன நிகழ்கின்றன என்பதைக் கவனித்த போது நான் சட்டம் தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இணையம் மூலம் தேடி இந்த விஷயங்கள் குறித்த சட்டங்களைத் தேடிப் படித்தேன். அப்போது சட்டம் பற்றியும் சட்டம் எழுதப்படும் முறை பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மாணவனைப் போல புதிதாக தெரிந்து கொள்வதன் ஆர்வம் சட்டம் குறித்து ஏற்பட்டது. உதாரணத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் கள்ளத்தனமாக மரம் வெட்டுதலில் ஈடுபடும் போது அது எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்பதை ஊராட்சிகள் சட்டத்தில் பல பக்கங்களில் தேடிப் பார்த்தேன். கிராமங்களில் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டும் பொதுமக்களுக்கு என்ன தண்டனை என்பதை உணர்த்தும் சட்டம் ஒரு சிறு குறிப்பு போல இருந்தது. அது அனைவருக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் அது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. ‘’கள்ளத்தனமாக மரம் வெட்டுதல்’’ குறித்த சட்டத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அது தெள்ளத் தெளிவாக கள்ளத்தனமாக மரம் வெட்டப்படும் போது கிராம ஊராட்சி ஊழியர்களும் வருவாய்த்துறை ஊழியர்களும் செய்ய வேண்டிய கிரமங்கள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது. அதனைப் பலமுறை வாசித்திருக்கிறேன். சட்டம் என்பது பலமுறை வாசிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஒரு விஷயம் புலப்படும். இத்தனை நாள் இதனை கவனிக்காமல் இருந்தோமே என்று ஆச்சர்யம் உண்டாகும். 

தமிழ்நாட்டில் பொதுவாக மக்களுக்கு சட்டபூர்வமான செயல்முறைகள் மேல் நம்பிக்கையும் அதன் மீது பற்றும் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களும் பொது மக்களிலிருந்து வருபவர்கள் என்பதால் அவர்களிடமும் அதே வழக்கம் இருப்பதைக் காண முடியும். ‘’வழக்கமான நடைமுறை’’ என ஒன்று பழக்கத்தில் இருக்கும். அதையே அலுவலர்கள் பின்பற்றுவார்கள். 

கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும் போது கிராம நிர்வாக அதிகாரி வெட்டப்பட்ட மரங்களைக் குறித்த விபரங்களை ‘’சி’’ படிவம் என்ற படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். யாரேனும் புகார் அளித்தால்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கிடையாது. ஒரு கிராமத்தில் பொது இடத்தில் இருக்கும் எந்த மரமும் வெட்டப்படும் என்றால் அதனை தனது வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதலும் கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு வெட்டப்பட்ட மரத்தின் விபரங்களை ( வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் கனஅளவு, எடை) ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘’சி’’ படிவத்தை வழங்குவதும் கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள். கள்ளத்தனமாக மரம் வெட்டப்பட்டு 24 மணி நேரத்தில் ‘’சி’’ படிவம் அளிக்கப்பட்டு விட வேண்டும். அவ்வாறு அளிக்கப்படாமல் இருந்தால் அதுவே பணி நெறிமுறை மீறல் என்றாகும். வெட்டியவர் எவரெனத் தெரியாது வெட்டப்பட்ட மரத்துண்டுகளும் சம்பவ இடத்தை விட்டு அகற்றப்பட்டு விட்டன என்றால் கிராம நிர்வாக அதிகாரி அதனைக் காவல்துறையில் புகாராக அளிக்க வேண்டும்.  ‘’சி’’ படிவ அறிக்கை கிராம நிர்வாக அதிகாரியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்படும்.  வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரி அளித்த ‘’சி’’ படிவத்தை பரிசீலித்து அதில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வார். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார். அதன் பின்னர் வருவாய் வட்டாட்சியர் கிராம நிர்வாக அதிகாரியின் ‘’சி’’ படிவத்தையும் வருவாய் ஆய்வாளரின் அறிக்கையையும் அடிப்படையாய்க் கொண்டு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மதிப்பிட்டிருக்கும் பொருள் மதிப்பு குறைவாக இருப்பதாக வட்டாட்சியர் நினைத்தால் மரத்தின் மதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என தனது அறிக்கையில் எழுதி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டு மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட வேண்டும். வெட்டப்பட்ட ஒரு மரத்தின் மதிப்பு ரூ.1000க்குள் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கும் அந்த மரக்கிரயத்தின் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் வட்டாட்சியர் அதிகாரம் படைத்தவர். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.1000க்கு மேல் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யவும் அதன் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் கோட்ட ஆட்சியர் அதிகாரம் படைத்தவர். 

14 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது 09.07.2021 அன்று. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட தினம் 12.07.2021. வருவாய் வட்டாட்சியர் வெட்டப்பட்ட 14 மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயம் செய்து ஒரு மடங்கு அபராதம் ரூ.950 விதித்து கூடுதல் தொகைக்கு 8 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் சேர்த்து ரூ.2052 செலுத்தச் சொல்லி கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு உத்தரவிட்டது 13.07.2021 அன்று. அந்த உத்தரவில் உள்ள வாசகம் ‘’ 17.07.2021 அன்று வருவாய் ஆய்வாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ‘’ இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 14 மரங்கள் விஷயத்தில் இந்த உத்தரவு முக்கியமான ஒன்று. மாவட்ட நிர்வாகம் 14 மரங்கள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக வருவாய் வட்டாட்சியரின் ஆணையையே குறிப்பிடுகிறது என்பதால் அதில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் பெரும் முக்கியத்துவம் கொண்டதாகி விடுகிறது. 

நாம் ஒரு விஷயம் யோசித்துப் பார்ப்போம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது 12.07.2021 தேதியில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 12ம் தேதி அளிக்கப்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு தபாலில் அனுப்பப்பட்ட தேதி 19.07.2021. வருவாய் வட்டாட்சியர் 13.07.2021 அன்று பிறப்பித்த ஆணையில் அந்த ஆணையின் நகல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவாய் வட்டாட்சியர் முகவரியிட்டு எந்த தபாலும் அனுப்பப்படாத நிலையில் 13ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவின் நகலை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவருடைய மரக்கிரய நிர்ணய மதிப்பின் எல்லைக்குள் இந்த விஷயம் வருகிறது என்னும் போது 13ம் தேதி அந்த உத்தரவை அவர் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வருடத்துக்கு வருவாய் வட்டாட்சியரின் அதிகார எல்லைக்குள் ஓரிரு கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.1000க்குள் இருந்தால் வட்டாட்சியரே அபராதம் விதித்து ஆணை வெளியிட்டு விடுவார். அவர் அந்த ஆணையின் நகல்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப அவசியம் இல்லை. 14 மரங்கள் விஷயத்தில் ஏன அப்படி செய்தார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது. 

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய 14 மரங்களின் மதிப்பை ரூ.950 என வருவாய் வட்டாட்சியர் நிர்ணயம் செய்து விட்டார். கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு மரத்தின் மதிப்பில் ஒரு மதிப்பிலிருந்து 40 மடங்கு வரை அபராதம் விதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு மடங்கு அபராதம் விதிப்பது என்றும் முடிவு செய்து விட்டார். அவ்வாறெனில் வரியுடன் கூடிய தொகையான ரூ.2052ஐ ஊராட்சித் தலைவரின் ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்து செலுத்தச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதற்கான காரணம் தெரியாத ஒன்றாக இருக்கிறது. அபராதத்துடன் கூடிய வரி விதிப்பை வட்டாட்சியரின் ஆணை வெளியிடப்பட்ட பின் 120 நாட்கள் கழித்து இணையம் மூலம் செலுத்தியிருக்கிறார். ஆணை பிறப்பிக்கப்பட்ட 120வது நாளில் ரூ.1000 அதன் பின் 127வது நாளில் ரூ.1052 என இரண்டு தவணைகளாக செலுத்தியிருக்கிறார். இத்தனை காலதாமதத்தை மாவட்ட நிர்வாகம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. 

குறுக்கு வழிகள் அனைத்துமே நேர் வழிகளை விட மிக நீளமானவை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த தருணத்தில் நான் அந்த வாசகத்தைத் தான் நினைவில் வைத்துக் கொள்கிறேன். மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை சிறு எடுத்துக்காட்டாக மட்டுமே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட விபரங்கள் மேலும் பல விஷயங்களை புரியச் செய்கின்றன. 

ஐயத்துக்கு இடமான விதத்தில் நிகழ்ந்திருக்கும் செயல்பாடுகள் ஆவணங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு புகார் மனுவாக அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. இதில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னைக் கடிந்து கொள்கிறார்கள். இதில் ஈடுபடாதே என எச்சரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை அவ்வாறு கூறும் போதும் எனக்கு நானே என்னிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறேனா என்ற கேள்வியை என்னிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பதில் அவ்வாறு இல்லை என்பதே. ஒருமுறைக்கு பலமுறை ஆழமாக சிந்தித்துப் பார்த்தே இதனைக் கூறுகிறேன். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. நான் அரசாங்கம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். அரசாங்கம் சட்டப்படியாக இயங்கும் அமைப்பு என்பதில் தீவிரமான உறுதி கொண்ட்வன் நான். பொதுவாக தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அரசாங்கம் அரசாங்க அலுவலகங்கள் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருப்பார்கள். நான் எந்நாளும் அவ்வாறான அவநம்பிக்கை கொண்டதில்லை. அரசாங்க வேலையை இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் ஆற்றக் கூடிய நூற்றுக்கணக்கானோரை எனக்குத் தெரியும். ஒட்டு மொத்தமாக அரசாங்கம் என்பதை குற்றம் சாட்டுவது அவர்களின் அர்ப்பணிப்பை புறந்தள்ளுவதற்கு சமம். எந்த சூழ்நிலையிலும் நான் அதனைச் செய்ய மாட்டேன். தவறுகள் திருத்தப்பட வேண்டும் ; முறைகேடுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அரசாங்க அமைப்பும் சட்டமும் ஜீவித்திருப்பதனால்தான் ஒரு சாதாரண குடிமகனால் நியாயம் கேட்க முடிகிறது.  

இரண்டு தினங்களுக்கு முன்னால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டு ‘’14 மரங்கள்’’ விஷயம் தொடர்பாக அக்டோபர் மாதம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அது தொடர்பாக விசாரிக்க வந்தேன் என்று கூறினேன். அவருக்கு விஷயம் என்ன என்பது உடன் புலப்பட்டு விட்டது. வருவாய் கோட்டாட்சியரை சந்திக்குமாறு கூறினார். அவரைச் சந்தித்து விட்டு அவர் என்ன கூறுகிறார் என்பதைத் தங்களிடம் வந்து தெரிவிக்கிறேன் எனக் கூறி விட்டு வருவாய் கோட்டாட்சியரை சந்திக்கச் சென்றேன். அந்த அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் விஷயத்தை எங்களிடம் சொல்லுங்கள் ; நாங்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்து விடுகிறோம் என்று கூறினார்கள். ‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து விட்டு அவர்கள் கேட்டுக் கொண்டதின் படி நான் இங்கு வந்திருக்கிறேன். வருவாய் கோட்டாட்சியரை சந்திக்க வேண்டும்’’ என்று சொன்னேன். ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின் சென்று சந்தித்தேன். சுருக்கமாக - மிகச் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த கோப்பினை முழுமையாகப் பார்த்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி கேட்டுக் கொண்டிருப்பதன் பேரில் இங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயத்தை எதிர்பார்ப்பதாகக் கூறி விட்டு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பி வந்து விபரம் தெரிவித்து அவரிடம் விடை பெற்றேன். 

ஒரு புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த குழந்தைகளும் பெண்களும் நீரூற்றி வளர்த்த - பல நூறு பேருக்கு நிழல் அளித்து வந்த - வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டுள்ளன. மக்கள் தெரிவித்த எதிர்ப்பு துச்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் எத்தனை அடர்த்தியும் தீவிரமும் கொண்டது என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவார்கள். நிகழ்ந்த பிழை உரிய பிழையீடால் சமன் செய்யப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. 

14 மரங்கள் விஷயத்தில் ஒரு குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் இருக்கிறது. 
  

Wednesday, 4 January 2023

அன்புத் தம்பியின் கடிதம்

அன்புள்ள அண்ணனுக்கு.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'ஆயிரம் மணி நேரம் வாசிப்பு' கட்டுரையை வாசித்தேன்.
அதன் சார்ந்த உங்களால் எழுதப்பட்ட' சிறு துளிகள் பெருவெள்ளம்'. நான் கூட இனிவரும் நாட்களில் தினமும்  இரண்டு மணி நேரம் வாசிப்பதாக முடிவு எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எழுதிய
'காவேரியில் இருந்து கங்கை வரை ' கட்டுரை உங்களைப் பற்றிய ஒரு முழு அறிமுகம் எனக்கு கிடைத்துவிட்டது இனி வரும் காலங்களில் ஏதேனும் பயணம் மேற்கொண்டால்  தம்பியும் அழைத்துச் செல்லுங்கள்.

உங்களின் அறிமுகத்துக்கு நன்றி. தொடர்ந்து உங்களின் Blogகில் வரும் கட்டுரைகளை தினமும் வாசித்து வருகிறேன்.

 நான் எழுதலாம் என்று நீங்கள் கூறிய அந்த குறுநாவலை எழுதத் தொடங்கி உள்ளேன்.

நன்றி.

உங்கள்,

அன்புத் தம்பி

ஒற்றை மதிப்பெண்

மரங்கள் வெட்டப்படும் விஷயத்திற்கு நான் கொடுக்கும் தீவிர கவனம் எனது நண்பர்கள் பலரை சங்கடப்படுத்துகிறது. மென்மையாகவும் சற்று கடுமையாகவும் கூட தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கின்றனர். 

அவர்கள் முதல் காரணமாகச் சொல்வது மரங்கள் வெட்டப்படுவது குறித்து நாம் முறையீடு செய்யும் இடமான அரசாங்க அலுவலகம் அதனை ஒரு முக்கிய விஷயமாகக் கருதாது என்பதுடன் அதனை ஒரு முக்கியத்துவம் இல்லாத விஷயமாகவே கருதும்; அதனால் அது தொடர்பாக தொடர்ந்து செயல்படும் உங்கள் மேல் அதிகாரிகள் அதிருப்தி கொள்வார்கள் என்பது. இரண்டாவது காரணம், உங்கள் நேரத்தை இந்த விஷயம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்பது. மூன்றாவது நண்பர்கள் , நலம் விரும்பிகளின் சொற்களையும் மீறிய செயல்பாடு நண்பர்களின் நட்பில் இடைவெளியை உண்டாக்கும் என்பது. 

மரம் என்பது தன்னளவில் ஒரு உயிர் என்பதுடன் அது பல உயிர்களுக்கு உறைவிடமாக இருக்கிறது. ஒரு மரம் வெட்டப்படும் போது அதில் வசிக்கும் பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றுக்கான உறைவிடமும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மரங்கள் வெளியிடும் பிராண வாயுவால் மிகுந்த பலன் அடையக் கூடியது அதனைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களே. ஒரு மரம் அனாவசியமாக வெட்டப்படுவதால் மனிதர்களே முதன்மையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை முக்கியமான விஷயமாக நினைப்பது என்பது அவசியமானதே. ஓர் அரசு அலுவலகம் என்பதை பலர் இணைந்த ஒரு குழுவாகவே நான் எண்ணுகிறேன். சில படிநிலைகளில் அது குறைந்தபட்சம் மூன்று மனிதர்கள் கவனத்துக்காகவாவது செல்கிறது. அதற்கு மேல் அவர்களுடைய மாவட்ட அலுவலகம் இருக்கிறது. மாநில அலுவலகம் இருக்கிறது. எனவே தலைமை அலுவலகத்தின் கவனம் இருக்கும் என்ற நிலையிலாவது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது. அதனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எப்போதும் நம்பிக்கை இழக்க மாட்டேன். அது என் இயல்பு. எந்த சூழ்நிலையிலும் அதனை சீர் செய்ய எனது பங்களிப்பை எவ்வாறு அளிப்பது என்றே யோசிப்பேனே தவிர அதனை விட்டு விட்டு செல்ல மாட்டேன். 

இரண்டாவது விஷயம் என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பது. உண்மைதான். ஆனால் நான் அதனை விரும்பியே செய்கிறேன். என் கண்ணில் படும் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் நான் புகார் செய்கிறேன். ஓரிரு நாட்கள் முன் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் புகார் செய்கிறேன். பொது இடத்தில் உள்ள ஒரு மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே செல்ல நேரிட்டதில்லை. அவ்வாறு நேரிட்டால் மரத்தை வெட்டுபவர்களிடம் வெட்ட அனுமதி இருக்கிறதா என்று கேட்பேன். இல்லை என்று கூறினால் மரத்தை வெட்டாதீர்கள் என்று கூறுவேன். அவர்கள் மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டேன். 

மூன்றாவது விஷயம் நண்பர்கள் மனஸ்தாபம் கொள்வார்கள் என்பது. நான் மென்மையான அணுகுமுறையே கையாள்கிறேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள். வருத்தம் அடைந்தாலும் அவர்கள் விஷயத்தைப் புரிந்து கொள்கிறார்கள். 

பொறியியல் கல்லூரியில் எங்களுக்கு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் கல்லூரியில் பருவத் தேர்வு நடந்து விடைத்தாள்களைத் திருத்தி வகுப்பில் கொண்டு வந்து கொடுக்கும் போது ’’ நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மதிப்பெண்ணாவது எடுக்க வேண்டும். பூஜ்யம் எடுக்கக் கூடாது.   நீங்கள் தேர்வு எழுதிய பாடத்துக்கான வகுப்பு உங்களுக்கு மூன்று மாதம் நடந்திருக்கிறது. வாரத்துக்கு நான்கு பிரிவேளைகள் என மூன்று மாதத்தில் ஐம்பது பிரிவேளைகள் அமர்ந்து இந்த பாடத்தைக் கேட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் பூஜ்ய மதிப்பெண் பெறக்கூடாது. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரை இந்த தேர்வை எழுதச் செய்தாலும் அவர் பூஜ்யம் பெறுவார். அவருக்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆகி விடும்’’ என்று கூறுவார். 

மரங்கள் வெட்டப்படும் விஷயத்துக்காக முனைப்பு காட்டுவதில் நான் ஒற்றை மதிப்பெண் பெற்றிருப்பதாகவே எண்ணுகிறேன்.  

Tuesday, 3 January 2023

இரு மரங்கள்

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்துக்கு அருகில் உள்ள தெருவில் வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த இரண்டு புங்கன் மரங்கள் ஓரிரு தினங்கள் முன்னால் வெட்டப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு மரங்களுக்கும் நான்கு வயது இருக்கக்கூடும். இருபது அடி உயரம் வளர்ந்திருந்த மரங்கள். மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு மரங்கள்  வெட்டப்பட்டுள்ளன என்பதை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் முறை காட்டுகிறது. ஒரு மரத்தின் மதிப்பு ரூ.3500 இருக்கக் கூடும். இன்னொரு மரத்தின் மதிப்பு ரூ.2000 இருக்கக் கூடும். 

நேற்று இரு மனுக்களை தயார் செய்தேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று ; வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று. இரண்டுமே தகவல் பெறும் உரிமைச் சட்டப்படியான மனுக்கள். மனுவுடன் வெட்டப்பட்ட இரண்டு மரங்களின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தேன். இந்த இரண்டு மரங்களும் வெட்டப்பட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெறப்பட்டதா என்பது முதல் கேள்வி. அனுமதி கேட்டு விண்ணப்பித்தது யார் என்பது இரண்டாவது கேள்வி. அனுமதி அளிக்கப்பட்ட போது மரங்களின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு அந்த மதிப்புக்கான தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டதா என்பது அடுத்த கேள்வி. வெட்டப்பட்ட பின் வெட்டப்பட்ட மரம் பொது ஏலம் விடப்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டதா என்பது இன்னொரு கேள்வி. 

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களே மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் விஷயத்தை வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவித்து விடும். அனுமதி பெறப்படவில்லையெனில் , பதில் கொடுப்பதற்கான காலக்கெடுவான 30 நாட்களில் தவறிழைத்தவர் யாரெனக் கண்டறிந்து மரக்கிரயமும் அபராதத்தொகையும் வசூல் செய்து விட்டு அந்த தகவலை ஒரு பதிலாக அளிக்க முடியும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவே புகார் மனு அளிக்காமல் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவை அனுப்பியுள்ளேன். 

நமது கடமையை நாம் செய்துள்ளோம். அரசாங்கம் தனது கடமையைச் செய்யும் என நாம் எதிர்பார்க்கிறோம். 

Monday, 2 January 2023

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

மானுட வாழ்க்கையில் அடிப்படையான முக்கியமான இரு அம்சங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. உணர்வு மற்றும் தர்க்கம். இன்னும் நுண்மையாக நோக்கினால் இவை இரண்டும் சாதாரண கண்களுக்குப் புலப்பட்டு விடாத நுண் இழைகளால் வெவ்வேறு முறைகளில் இணைக்கப்பட்டே உள்ளன. எனினும் மிகப் பெரும்பான்மையான மானிட நிரை அவற்றைப் பிரித்து வைத்தே தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்கிறது. உணர்வு , தர்க்கம் இவற்றின் இணைப்பைப் புரிந்து கொள்வது என்பது தொலைதூரத்திலிருந்து காற்றில் வரும் இன்மணத்திலிருந்து அந்த மணத்துக்குரிய மலரை அறியும் திறனைப் போல ; உணர்வு , தர்க்கம் ஆகியவற்றை தனித்தனியே புரிந்து கொள்வது என்பது கண்களால் காணும் ஒரு மலை உச்சியை அடிவாரத்திலிருந்து ஏறிச் சென்று அறிவதைப் போல. 

நவீன தமிழ் இலக்கியத்தின் பொதுக் கூறுகளில் ஒன்று, சிறுகதையின் வடிவ கச்சிதம் மேல் பெரும் கவனம் கொண்டிருப்பது. கவிதை என்னும் இலக்கிய வெளிப்பாடு வகுக்கப்பட்டிருக்கும் எல்லா வடிவங்களையும் பல முறையோ அல்லது எல்லா முறையோ மீறிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தன் இயல்பாய் கொண்டிருக்கிறது. எனினும் தமிழ்ச் சிறுகதைகள் பொதுவாக முழுமையாக வடிவத்துக்குள் அடங்கி விட வேண்டும் என்ற சுயகட்டுப்பாட்டை ஒரு விதியாகக் கொள்கின்றன. வடிவத்தில் கச்சிதமான ஒரு சிறுகதையே சிறந்த சிறுகதையாக இருக்க முடியும் என்ற மௌன நிபந்தனையும் தமிழில் உள்ளது. இந்த நிபந்தனை மானுட வாழ்வின் - அதன் ஒரு கூறான தமிழ் வாழ்வின் - அரிய மானிட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான வாழ்க்கை சந்தர்ப்பங்களை நிகழ்வுகளை உணர்வுகளை தமிழ்ச் சிறுகதையின் பரப்புக்குள் கொண்டு வர இயலாமல் போகிறதோ என்ற ஐயம் உண்டாகிறது. இந்த கூற்றுக்கு விதிவிலக்காக உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் சிறுகதைப் படைப்பாளிகளும் தமிழில் உண்டு. வடிவ கச்சிததம் மேல் தீவிர ஈடுபாடு காட்டிய படைப்பாளிகளும் அவர்கள் சிறுகதைகளில் - அரிய மானிட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான வாழ்க்கை சந்தர்ப்பங்களை நிகழ்வுகளை உணர்வுகளை எழுதிய சிறுகதைகளே அவர்களின் ஆகச் சிறந்த படைப்புகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது ஒரு நகைமுரண். 

ஒரு சிறுகதையை வாசிக்கும் போது அதன் உணர்வுநிலை என்ன என்பதே அச்சிறுகதையுடன் என் முதல் தொடர்பாக இருக்கும். உணர்வின் அம்சம் அளவில் மிகச் சிறிதாகவும் அதனை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்லும் வடிவப் பிரக்ஞை கொண்ட சிறுகதைகளையும் வாசித்துப் புரிந்து என் அகத்தில் வகுத்துக் கொள்வேன் எனினும் உணர்வைத் தீவிரமாக முன் வைத்து மானுட அகத்துடன் உரையாடும் ஒரு இலக்கியப் படைப்பை நான் எனக்கான படைப்பாக எண்ணுவேன். வடிவ கச்சிதம் கூடிய உணர்வின் அம்சத்தை தர்க்கபூர்வமாக மிகச் சிறிதாக வைத்திருக்கும் சிறுகதைகள் மேல் எனக்கு எந்த புகாரும் இல்லை. நான் அவற்றைப் புரிந்து கொள்கிறேன். எனினும் நான் ஈர்க்கப்படும் படைப்புகள் மானுட உணர்வுகளை மானுட உணர்வுத் தத்தளிப்புகளை மானுட மேன்மையை மானுடத்தை எழுதும் படைப்புகளே. 

நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் இருக்குமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற’’ வர்களுக்கு சமர்ப்பிக்கிறான். அஜிதன் தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் அளிக்கும் படைப்புகளை அளிப்பார் என அவரது முதல் நாவல் ‘’மைத்ரி’’யும் முதல் சிறுகதை ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ கட்டியம் கூறுகின்றன. 

ஒரு சிறுகதை குறித்து ஒரு நாவல் குறித்து எழுதும் போது அதன் கதையை சொல்லாமல் அதன் வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும் என்ற சுயநிபந்தனையை எனக்கு விதித்துக் கொண்டவன் நான். எனது வாசிப்பனுபவப் பகிர்வு அந்த சிறுகதையை நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாசகனுக்கு உண்டாக்க வேண்டுமே தவிர நான் சிறுகதையை நாவலைக் காணும் கோணம் வாசகனின் வாசிப்புக்கு முன்னால் அவன் மனத்தில் பதிவாக வேண்டாம் என எண்ணுவேன்.

 ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’  கதைத்தன்மை மிகுந்த சிறுகதை. சிறுகதை ஆசிரியர் அஜிதன் இந்த சிறுகதைக்குள் வாசகன் கற்பனை செய்து நிரப்பிக் கொள்ள வேண்டிய உள்கதைகளை கதைக்குள் வைத்திருக்கிறார். 

ஜஸ்டினும் சகாயமும் உள்ளூர்க் கேடிகளாக உருவாகி வருகிறார்கள். ஜஸ்டினின் தந்தை ரௌடிகளால் கொல்லப்பட்டவர். அந்த சம்பவம் ஜஸ்டினை ரௌடியிசத்துக்குள் கொண்டு வருகிறது. ஆயுதத்தின் வல்லமை மெல்ல மெல்ல பிடிபட்டு ஆயுதம் முழுதும் கை வரும் நிலைக்கு குறைந்த காலத்தில் உயர்கிறான் ஜஸ்டின். ஜஸ்டினின் முதலாளி ஒரு நபரை அடையாளம் சொல்லி அவனைக் கொல்லுமாறு கூறுகிறார். இலக்கை வேவு பார்க்கிறார்கள். ஜஸ்டினுக்கும் சகாயத்துக்கும் தோதான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலக்கு சபரிமலைக்கு மாலை போட்டிருப்பது ஜஸ்டினின் கண்ணில் படுகிறது. ‘’சாமிக்கு மாலை போட்டிருப்பவனை எப்படி கொல்வது?’’ என்ற தயக்கம் ஏற்பட்டு கொல்லாமல் விட்டு விடுகிறான். ஜஸ்டினின் முதலாளி எரிந்து விழுகிறார். ஜஸ்டினையும் சகாயத்தையும் திறனற்றவர்கள் என வசை பாடுகிறார். நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன. முதலாளி கொலை வெறியை மறந்து தனது அன்றாடத்துக்கு முழுமையாகத் திரும்பி விடுகிறார். இப்போது ஜஸ்டினுக்கு இலக்கைக் கொல்ல எந்த பிரத்யேக கட்டளையும் இல்லை. இலக்கு சபரிமலை சென்று திரும்புகிறது. வேவு பார்த்தலை ஜஸ்டின் நிறுத்தவில்லை. வசமான இடம் ஒன்றில் ஜஸ்டின் கொலைக்கருவியுடன் இருக்கும் போது இலக்கு அங்கே வந்து சேர்கிறது. அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. கொலை செய்ய வேவு பார்க்க அத்தனை நாள் எடுத்துக் கொண்டதற்கான பலன் ஜஸ்டினுக்குக் கிடைக்கிறது. கொலைக்கருவி ஜஸ்டினை அந்த கணம் ஆட்கொள்கிறது. 

ஜஸ்டின் வாழ்வில் கொலைக்கருவிக்கு அவன் ஆட்பட்ட கணம் முக்கிய கணமாகி விடுகிறது. நியாயத் தீர்ப்பு நாள் வருகிறது.  மனித குமாரன் அவனுக்குத் தீர்ப்பளிக்கிறான். 

அஜிதனின் முதல் சிறுகதையை கதைத்தன்மை மிக்க எனினும் வடிவ கச்சிதமும் பொருந்திய சிறுகதை என்று சொல்ல முடியும். ரௌடிகளின் வாழ்க்கை என்பது கதைக்களனுக்கான ஒரு நிமித்தம் என்றே சொல்ல முடியும். எது சரி எது தவறு என்பதிலும் எந்த முடிவை எடுப்பது என்பதிலும் தெளிவின்றி குழம்பும் எல்லா மானுடர்களின் சங்கடங்களுக்கும் இந்த சிறுகதையை விரிவாக்கிக் கொள்ள முடியும். 

சிறுகதையில் ஜஸ்டினை யாராலும் முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கூடவே இருக்கும் சகாயத்தால். முதலாளியான மாமாவால். ஜஸ்டினால். ஏன் கதையை வாசிக்கும் வாசகனால் கூட ஜஸ்டினை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இலக்கைக் கொல்ல வாய்ப்பிருந்தும் இலக்கு சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் அழிக்காமல் விடுகிறான். ஆனாலும் வேவு பார்த்தலை அவன் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். மாமா விஷயத்தை மறந்து விட்டார் எனவே வேவு பார்க்க வேண்டாம் என சகாயம் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஜஸ்டின் செய்த பாதகத்துக்குக் கிடைத்த நியாயத் தீர்ப்பு என்ன என்பதே சிறுகதை. 

அஜிதன் ‘’மைத்ரி’’ நாவல் முன்னுரையில் தமிழில் தொடர்ந்து இயங்குவது தனக்கான மார்க்கம் எனத் தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்து ’’ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும் ‘’ வழியாக மறுவருகை புரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.  

Sunday, 1 January 2023

துவக்கம்


 இன்று முற்பகலில் சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றை மேற்கொண்டேம். பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் மூன்று பணியாளர்கள் வீட்டுக்கு வந்தனர். மதியம் ஒரு மணி வரையில் ஒரு வீட்டில் தோட்ட வேலை செய்து விட்டு அந்த பணி நிறைவு பெற்றதும் மதிய உணவருந்தி விட்டு வீட்டுக்கு வந்தனர். நான் அவர்களை என்னுடைய கட்டுமான மனைக்கு விலாசம் சொல்லி அனுப்பினேன். சிறிது நேரத்தில் நானும் சென்று சேர்ந்தேன். மண்டியிருக்கும் புல்லை அறுத்து முடித்து விட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன். நான்கு மணி அளவில் ஃபோன் வந்தது. நேற்று வந்து புல் அறுக்க உதவிய நண்பரை அழைத்துக் கொண்டு எனது மாருதி ஆம்னியில் சென்றேன். அறுத்த புல்லை ஆம்னியின் பின் சீட்டில் முழுமையாகத் திணித்தோம். இருபது மாட்டுக்கும் போதுமான அளவு புல் இருந்தது. பணியாளர்களுக்கு ஊதியம் அளித்து அனுப்பி விட்டு கோசாலைக்குப் புறப்பட்டோம். மாடுகள் என்னைப் பார்த்தவுடன் ஆர்வத்துடன் குரல் எழுப்பின. கவணையில் புல்லை நிரப்பினோம். உற்சாகமாக புல்லைத் தின்றன. பசுக்களுக்கு புல்லை அளிப்பதைக் காட்டிலும் ஒரு புதிய விஷயத்தை துவங்க மேலான இன்னொரு வழி இருக்கிறதா என்ன?  

மித்ரன்

வெளிச்சத்தால் ஆன நதி 
பிரவாகிக்கிறது
நாள் எல்லாம்
பசும் தளிர்கள்
சிறுமலர்கள்
கதிர் மணிகள்
உற்சாகத்துடன் உரையாடுகின்றன
நதியுடன்
அன்பின் நீர்மையுடன்
யாவற்றையும் தீண்டும்
மித்ரன்
பெருந்தீயாய் எரிந்து கொண்டிருக்கிறான்
எப்போதும்