Monday, 8 May 2023

துளி நெருப்பு

எப்போதுமே ஒரு துளி நெருப்புதான் பெரும் காட்டை எரிக்கிறது. தீவிரமான அடர்த்தி மிக்க சிலரின் தன்னம்பிக்கைதான் மாபெரும் சமூக மாறுதல்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றது.

அறிவுச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பவனாக நான் எப்போதுமே மனிதர்களைச் சந்திப்பதிலும் மனிதர்களுடன் உரையாடுவதிலும் ஆர்வம் மிக்கவன். மேலும் பொதுப்பணி சார்ந்து எப்போதும் மக்கள் திரளுடன் இணைந்திருக்கிறேன். பொதுப்பணிகளில் நான் கவனித்த விஷயம் ஒன்று உண்டு. முன்னேற்றம் என்பதை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். முயற்சி செய்தல் என்பதை வாழ்வின் அடிப்படையான இயல்பாக பெண்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். சமூக மாற்றம் முன்னேற்றம் குறித்த சொற்கள் அவர்கள் முகங்களுக்கு ஒளி தருவதை நான் எப்போதும் காண்கிறேன். எத்தனை தடைகள் இருந்தாலும் எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் இமைப்பொழுதும் ஓயாமல் அவர்கள் முயல்கிறார்கள். உண்மையில் அவர்கள் பண்பாடு அவர்களுக்கு அளித்திருக்கும் கொடை அது ; ஆசி அது.  இந்த மண்ணில் பெண் தெய்வங்களே பேராற்றல் மிக்கவை. மாரியம்மனையையும் துர்க்கையையும் காளியையும் எப்போதும் உபாசிப்பவர்கள் என்பதால் முழுமை நோக்கிய வளர்ச்சி மீதான விருப்பம் என்பது அவர்களிடம் எப்போதும் இருக்கிறது. 

நேற்றும் இன்றும் நண்பர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நம்பிக்கையும் உற்சாகமுமே அவரது இயல்புகள். நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த ஒருவர் தனது சூழல் முழுவதையும் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் நிறைக்கிறார். தனது நுண்ணிய அறிவுத் திறனாலும் தீரா உழைப்பாலும் தனது துறையில் தனி இடம் பெற்றிருப்பவர் அவர். பொதுப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது அவரது பெரும் விருப்பம். அதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது செயல்திட்டங்களை அவர் சொல்லி கேட்ட போது என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த மானுடமும் மகிழ்ச்சி அடையும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை என் மனதில் எழுந்தது. 

அவர் காட்டை வெந்து தணிக்கும் துளி நெருப்பு.

Sunday, 7 May 2023

கம்பன் சொல்

இந்த கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். 


யுத்த காண்டத்தில் கம்பன் ஒரு பாடலில் துமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். வானர சேனை கடலில் பாலம் அமைக்க பாறைகளைத் தூக்கிப் போட்ட போது கடல் துளிகள் வானுலை அடைந்தன. மீண்டும் அமுதம் கடைகிறார்களோ என்ற ஆர்வத்துடன் தேவர்கள் பூமியைப் பார்ப்பதாக செய்யுள். சோழ மன்னன் இந்த பாடலை இயற்றிய கம்பனைப் பாராட்டுகிறார். மற்ற புலவர்களும் பாராட்டுகின்றனர். ஒட்டக்கூத்தர் ஒரு வினா எழுப்புகிறார். இந்த துமி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்கிறார். கம்பர் சாமானிய மக்கள் துளி என்ற வார்த்தைக்கு துமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று கூற தான் கேள்விப்பட்டதில்லை என்கிறார் ஒட்டக்கூத்தர். அவர்கள் விவாதம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் நிறைவடைகிறது. ஓரிரு நாளில் மன்னரும் கூத்தரும் கம்பரும் மாறுவேடத்தில் நகருலா செல்கிறார்கள். அப்போது ஓர் மூதாட்டி மோர் விற்றுக் கொண்டு வருகிறார்கள். அப்போது மூவரும் அவளை நிறுத்தி மோர் வாங்குகிறார்கள். தனது மண்பானையில் இருந்த மோரை மரக்கரண்டி கொண்டு கலக்குகிறாள் அந்த மூதாட்டி. அப்போது மூவரிடமும் சற்று தள்ளி நில்லுங்கள் ; துமி தெரிக்கும் என்கிறாள். கூத்தர் துமியா என்கிறார். ஆம் துமி மோர்த்துமி என்கிறாள் மூதாட்டி. சாமானிய மக்கள் துளி என்கிற வார்த்தையை துமி என்று கூறுவார்கள் என்று கம்பன் சொன்னது உண்மையே என கூத்தரும் அரசரும் உணருகிறார்கள். கம்பர் தனக்காக சொல்லரசியே மோர்க்கார மூதாட்டியாக வந்ததாக எண்ணுகிறார் என்று அந்த கதை செல்கிறது.  

எனது நண்பர் ஒருவரின் மகன் பெயர் தவன். தவன் என்கிற பெயர் எனக்கு புதிதாக இருந்தது. இந்த பெயரை எதனால் இட்டீர்கள் என்று கேட்டேன். தவம் செய்யக்கூடியவன் தவன் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் இட்டேன் என்றார். எனக்கு அது நூதனமாக இருந்தது. இதற்கு முன் இவ்வாறு ஒரு பெயரை நான் கேட்டதில்லை. பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு கம்பராமாயணம் வாசித்த போது கம்பர் அகத்தியரை ‘’அரும் தவன்’’ என்ற அடைமொழியுடன் அழைத்திருப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே ஆச்சர்யம். தவன் என்ற பதம் கம்பன் கையாண்டது என்பதை அறிந்ததால். மறுநாள் நண்பரைச் சந்தித்த போது ‘’தவன்’’ என்ற பெயர் குறித்து யாரும் கேட்டால் அது கம்பன் பதம் என்று சொல்லுங்கள் என்று கூறினேன். 

கம்பனில் நுழைதல்

கம்ப இராமாயணம் நமக்கு பள்ளியில் தமிழ்ப் பாடநூலின் ஒரு பகுதியாக அறிமுகம் ஆகியிருக்கும். அதன் பின்னர் மேடைப் பேச்சாளர்கள் கம்பனின் காவியத்திலிருந்து பேசும் பட்டிமன்றங்களையோ அல்லது வழக்காடு மன்றங்களையோ கேட்டிருப்போம். பட்டிமன்றங்களில் பேசுபவர்கள் தங்கள் நினைவிலிருந்தே பல பாடல்களைக் கூறுவதைக் கேட்கும் போது நமக்கு வியப்பாக இருந்திருக்கும் . ஒருவரால் எப்படி இத்தனை பாடல்களை நினைவில் வைத்திருக்க முடிகிறது என்று எண்ணி எண்ணி வியப்போம். பின்னர் எப்போதாவது ஒருமுறை கம்பராமாயண நூலை பார்க்க நேர்ந்தால் அதன் பக்க எண்ணிக்கையும் நூலின் அளவும் நம்மை மலைக்கச் செய்து விடும். நூலின் சில பக்கங்களை புரட்டிப் பார்த்து விட்டு எடுத்த இடத்தில் வைத்து விடுவோம்.  

சிறுவயதில் நான் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் காரைக்குடி கம்பன் கழக கம்பன் விழா உரைகளை பலமுறை கேட்டிருக்கிறேன். எனினும் பின்னாட்களில் நான் கம்பனில் நுழைய ஒரு சம்பவம் காரணமாக இருந்தது. 

எனது நண்பர் ஒருவருடன் நான் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்றனுக்குச் சென்றிருந்தேன். நண்பர் கம்பராமாயணத்தில் ஆர்வம் உடையவர். கோவிலுக்குள் நுழையும் போது அவர் ஒரு பாடலைச் சொன்னார் : ‘’ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்து ‘’ என்ற பிரபலமான கம்பன் பாடல். கும்பகர்ணம் விபீஷணனிடம் கூறியது. வீடணன் ராமனது சேனையில் வந்து இணைந்து கொள் என கும்பகர்ணனிடம் கூறுகிறான். அப்போது கும்பகர்ணன் சொல்லும் பதில் அது. நண்பர் சொன்னார் : நீர்க்கோலம் போன்ற அழகிய வாழ்வை விரும்பி நான் இராவணை விட்டு வர மாட்டேன் என்று கும்பகர்ணன் சொன்னதாக. அவர் கூறியவற்றை என் மனம் கேட்டுக் கொண்டது. என்றாலும் ஆலயத்தில் இருக்கும் நேரமெல்லாம் ‘’நீர்க்கோலம் நீர்க்கோலம் நீர்க்கோலம்’’ என அந்த வார்த்தையே மனதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆலய வழிபாடை நிறைவு செய்து ஆலயத்தில் இருந்த விருட்சம் ஒன்றின் அடியில் அமர்ந்தோம். நான் நண்பரிடம் சொன்னேன். ‘’இந்த நீர்க்கோலம் ங்கற வார்த்தையை கம்பன் அழகிய கோலம்னு சொல்ல சொல்லியிருப்பான்னு நினைக்கறீங்களா’’ என்றேன். நண்பர் யோசித்தார். நான் சொன்னேன் : ’’ஒரு குமரகுருபரர் செய்யுள் இருக்கு. நீரில் குமிழி இளமை நெடுஞ்செல்வம் நீரில் சுருட்டு நெடுந்திரைகள் நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் வழுத்தாது எம்பிரான் மன்று’’. கம்பன் வாழ்ந்த காலத்துக்கு ஐந்நூறு வருஷம் பிந்தி வந்த குமரகுருபரரோட இந்த பாட்டு கூட கம்பனோட ‘’நீர்க்கோலம்’’ங்கற சொல்லோட இன்ஸ்பிரேஷனா இருக்கலாம். கம்பன் ‘’நீர்க்கோலம்’’னு சொல்லி அர்த்தப்படுத்தறது ‘’நீர்க்கோலம் போன்ற அழகிய வாழ்வு’’ன்னு இல்ல. ‘’நீர்க்கோலம் போன்ற நிலையில்லாத வாழ்வு’’ன்னு தான் அர்த்தப்படுத்தறான்னு தோணுது. தண்ணீரில் போடப் படும் கோலம் போல நிலையில்லாத வாழ்வு’’ நாங்கள் இருவரும் இந்த விஷயத்தை யோசித்தவாறு அமைதியாக சில நிமிடங்கள் இருந்தோம். தொடர்ந்து நான் சொன்னேன் ‘’ இந்த வார்த்தை மூலமா கும்பகர்ணனை பெரிய ஹைட்டுக்கு கம்பன் கொண்டு போறார். அவன் அதிகமா சாப்டுட்டு எப்போதும் தூங்கிக் கிட்டே இருக்கற ஆள்னு எல்லாரும் நினைக்கறாங்க. அவன் அறிஞன். வாழ்க்கையோட அர்த்தம் அவனுக்கு தெரியும். இராமன் கூட இருந்தா இலங்கை அரசாங்கமே கிடைக்கும்னு தெரிஞ்சும் ‘’உலக வாழ்க்கை நிலையில்லாதது’’ங்கற வைராக்கியம் அவன் ட்ட இருக்கறதால அது தேவையில்லைன்னு சொல்றான்.’’ நாங்கள் இருவருமே அந்த கம்பனின் சித்திரத்துக்குள் சென்று விட்டோம்.

எனக்கு குமரகுருபரரின் நீரில் குமிழி இளமை பாட்டு தெரிந்ததால் கம்பனின் உத்தேசத்தை நோக்கிச் செல்ல அது உதவியது. மொழிப்பரப்பு என்பது பெருநதி போன்றது. நாம் நம் உள்ளங்கைகளில் அதன் அர்த்தத்தை அள்ளிக் குடிக்கிறோம். 

இந்த சம்பவத்துக்குப் பின் கம்பனின் ஒரு வாயில் எனக்குத் திறந்ததாக எண்ணினேன். அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது. கம்பனில் நுழைய அறிஞர் பி.ஜி. கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்ற நூல் பெருந்துணையாய் விளங்கக் கூடியது. அந்நூலை வாசித்தேன். வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நாளில் அதனை முழுமையாக வாசித்து முடித்தேன். அழகும் செறிவும் மிக்க எளிய நடை கொண்ட கம்பனின் 930 பாடல்களை அவனுடைய 10,000 பாடல்களிலிருந்து தேர்வு செய்திருப்பார். ஒரு புறம் பதம் பிரிக்கப்பட்ட கம்பன் பாடல். அதன் எதிர்ப்புறம் மிக எளிய விளக்கம். கம்பனின் காவிய அழகுக்கு சிறு ஊறும் செய்யாத விளக்கம். அந்த நூல் கம்பனை மேலும் அணுக்கம் கொள்ளச் செய்தது. இந்த நூல் tamilvu(dot)org இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. 

குகன் இராமனைக் காணுக் காட்சியை ஒரு நண்பருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். குகனை கம்பன் சில பாட்ல்கள் முன்னால் ‘’சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்’’ என்கிறான். அதாவது அவன் கோபமில்லாமல் சாதாரணமாகப் பார்த்தால் கூட அவன் பார்வை பற்றி எறிவது போல அனல் கொண்டிருக்கும் என்கிறான். இது சில நிமிடங்கள் முன்பு. இலக்குவனைக் கண்டு அவன் தான் இராமன் என அவன் தாள் பணிகிறார்கள் குகனும் அவன் குடிகளும். இலக்குவன் தான் இராமன் அல்ல இராமன் உள்ளே இருக்கிறார் தங்கள் வருகையை அவருக்கு அறிவிக்கிறேன் என குடிலின் உள்ளே செல்கிறான். குகனை அவன் பார்த்து சில வினாடிகளே ஆகியிருக்கின்றன. இராமனிடம் உங்களைக் காண ஒருவன் வந்திருக்கிறான். என்று கூறி வந்திருப்பவன் ‘’ உள்ளம் தூயவன் தாயினும் நல்லன் எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை’’ எனச் சொல்கிறான். 

ஒரு முறை மட்டுமே சில வினாடிகள் மட்டுமே இலக்குவன் குகனைப் பார்த்தான். அதற்குள் எப்படி உள்ளம் தூயவன் என்றான். இராம இலக்குவர்கள் அன்னையைப் பிரிந்து வந்திருக்கிறார்கள். இலக்குவனுக்கு குகனைப் பார்த்ததும் தன் அன்னையரின் நினைவு வந்து விட்டதா ? ஏன் தாயினும் நல்லன் என்றான். தூய உள்ளம் என்பது மேலான நிலை. தாய் என்பது மேலும் மேன்மையான நிலை. ஆனால் அவன் இந்த அறிமுகச் சொற்கள் மட்டும் போதும் என எண்ணவில்லை. மேலும் சென்று ‘’கங்கை நாவாய்களின் இறை’’ என இறை நிலைக்கு கொண்டு செல்கிறான் என்றேன். நண்பர் இங்கே ‘’இறை’’ என்பதற்கு தலைவன் என்பது பொருள் சொன்னார். இலக்குவன் முதலில் மேன்மையான மனிதன் என்கிறான் ; பின்னர் அன்னையினும் மேலானவன் என்கிறான் ; இந்த உணர்வின் நீட்சியில் ’’கங்கை நாவாய்களின் இறைவன்’’ என்கிறான். இங்கே தலைவன் என்பதிலும் இறைவனே பொருத்தமாக இருக்கும். சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் எவ்வாறு சில கணங்களில் இறைவன் ஆகி விட்டான்? 

கம்பன் வாலி வதைப்படலத்தில் ராமநாமத்தை ‘’தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’ என்கிறான். அவன் குடிலை அணுகியதும் குகன் அவ்விதம் ஆனானோ? 


திரு. பி.ஜி. கருத்திருமனின் நூலின் இணைப்பு 


https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2k0py#book1/


கம்பராமாயணம் - கோவை கம்பன் கழக வெளியீட்டின் இணைப்பு 


https://www.tamilvu.org/ta/library-l3700-html-l3700ind-133880

 

Saturday, 6 May 2023

கம்பன் புகழ் பாடுதல்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது பூர்வீகம் பழைய வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் கணிணி துறையில் பணியாற்றுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை சொந்த கிராமத்துக்கு வருவார். ஊருக்கு வரும் போதும் அமெரிக்காவில் இருக்கும் போதும் என்னுடன் அலைபேசியில் உரையாடுவார். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு தனது ஆதரவை எப்போதும் அளிப்பவர்.  

அவருக்கு கம்பன் பாடல்கள் மேல் தீவிரமான விருப்பமும் ஈடுபாடும் உண்டு. தனது சொந்த ஆர்வத்தில் கம்பனை வாசிக்கத் தொடங்கி கம்பனில் ஆழ்ந்து விட்டார். 

அமெரிக்காவில் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள தமிழ்க் குடும்பங்கள் இணைந்து ஒரு தமிழ்ப் பள்ளியை நடத்துக்கின்றன. வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழுடன் தொடர்பு இருக்கும் விதத்தில் தமிழ் வகுப்புகள் நடத்துகிறார்கள். தமிழில் ஆர்வம் உள்ள பெற்றோர் பகுதி நேர ஆசிரியர்களாக குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறார்கள். அந்த பள்ளியில் நண்பர் குழந்தைகளுக்கு கம்பன் பாடல்களை பாடமாக எடுக்கிறார். 

சமீபத்தில் அவர்கள் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஆறு குழந்தைகள் ஒவ்வொருவரும் ஐந்து நிமிடம் கம்பன் பாடல் ஒன்றைச் சொல்லி அதன் விளக்கத்தையும் காவியச் சுவையையும் கூறும் நிகழ்ச்சியின் காணொளியை எனக்கு அனுப்பியிருந்தார். 

மொழிப் பரிச்சயம் என்பது செவி சார்ந்தது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் ஒரு நாளின் பெரும் பகுதி பள்ளியில் இருக்க வேண்டியிருப்பதால் அமெரிக்க உச்சரிப்பு பாணி கொண்ட ஆங்கிலமே அவர்கள் மனத்தில் இருக்கும். சக குழந்தைகளுடன் உரையாடும் மொழியே அவர்களின் புழக்க மொழியாக மாறும். நண்பரின் பள்ளியில் வார இறுதி நாட்கள் இரண்டு நாளுமே அங்கிருக்கும் குழந்தைகள் தமிழ் பேச வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. அங்கே உள்ள குழந்தைகள் மொழியில் கம்பன் தமிழைக் கேட்டது பேருவகை அளித்தது. அந்த குழந்தைகள் தமிழையும் கம்பனையும் முழுமையாக உள்வாங்கியிருந்தன என்பது அவர்களின் உடல்மொழி மூலம் அறிய முடிந்தது. 

நண்பரின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. 

ஆர்வத்துடன் பங்கெடுத்த குழந்தைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்த பெற்றோரும் பாராட்டுக்குரியவர்கள்.   

தடையற்ற போதைப்பொருள் புழக்கம்

நேற்று எனது இரு சக்கர வாகனத்தின் என்ஜின் ஆயில் மாற்றுவதற்காக ஒரு டூ-வீலர் பட்டறைக்குச் சென்றிருந்தேன். அங்கே இருந்த மெக்கானிக் காலில் பெரிய கட்டு போட்டு அமர்ந்திருந்தார். ஆயில் மாற்ற வேண்டும் என்று சொன்னதும் பணியாளர் வந்து விடுவார் என்று கூறி சற்று நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் காலில் போட்டிருந்த கட்டைக் குறித்து விசாரித்தேன். 

இரண்டு மாதம் முன்பு சாலையின் ஒரு ஓரத்தில் ஒரு ஊருக்கு வழி கேட்டு டூ-வீலருடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் மறுபக்கத்தில் ஒரு டூ-வீலரில் மூன்று இளைஞர்கள் சென்றிருக்கிறார்கள். மூன்று பேருமே கஞ்சா புகைத்த போதையில் இருந்திருக்கிறார்கள். மிக அதிக வேகத்தில் வண்டியை இயக்கிய போது கட்டுப்பாடு இழந்து வண்டி சாலையில் சாய்ந்திருக்கிறது. மூவருமே சாலையில் விழுந்து மூவருக்குமே கடுமையான அடி. சாலையில் விழுந்த வாகனம் மிதமிஞ்சிய வேகத்தில் வாகனத்தில் இருந்த மூவரும் இல்லாமல் சாய்ந்தவாறு ஐம்பது அடி தள்ளி நின்று கொண்டிருந்த இந்த மெக்கானிக் காலில் மோதி கால் தசைகளைப் பிய்த்து கால் எலும்பை நொறுக்கியிருக்கிறது. எலும்பு முறிவு கடுமையாக ஆகி உலோகத்தால் எலும்புகளை இணைத்துக் கட்டி அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள். இப்போது சற்று உடல் நிலை தேறியிருக்கிறார் என்றாலும் இன்னும் முழுமையான ஆரோக்கிய நிலைக்கு இன்னும் வந்து சேரவில்லை. 

விபத்தை உண்டாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளதால் இந்த விஷயம் மிகக் கடுமையான கிரிமினல் குற்றம். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததா என்று கேட்டேன். சம்பவம் நடந்து அறுபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முதல் தகவல் அறிக்கை தரப்படவில்லை என்றார். புகாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்துக்கு அனுப்பியிருப்பதாகக் கூறினார். 

விபத்துக்குண்டான இழப்பீடு உங்களுக்கு கிடைக்க வேண்டும் ; அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். உங்களுக்கு சட்ட உதவி ஏதும் தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள் என்றேன். டூ-வீலர் மெக்கானிக் என்பதால் அவருடைய கஸ்டமர்கள் இரண்டு பேர் வழக்கறிஞர்கள். அவர்கள் உதவுகிறார்கள் என்று சொன்னார். 

கடையில் சற்று பெரிய நாற்காலி ஒன்றில் காலை முதல் மாலை வரை அமர்ந்தே இருக்கும் நிலைமை. அவர் பட்டறையில் இரண்டு பணியாளர்கள் இருக்கிறார்கள். பட்டறைக்கு வரும் வண்டிகளில் என்னென்ன பழுதுகள் அவை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று இவர் சொல்ல பணியாளர்கள் பணி புரிகிறார்கள். இப்போது இரண்டு மாதம் ஆகிவிட்டது. முழுமையாக குணம் ஆக மேலும் இரண்டு மாதம் ஆகும். சுயதொழில் புரிபவரான அவருக்கு நான்கு மாதங்கள் என்பது பெரிய காலம். 

கஞ்சா புழக்கம் என்பது இங்கே மிகத் தீவிரமாக இருக்கிறது. நகரின் நான்கு திசைகளிலும் நகரின் மையப்பகுதியிலும் கஞ்சா தீவிரமாக விற்கப்படுகிறது. கஞ்சாவுடன் மாத்திரை என்ற போதைப்பொருளும் உலவுவதாகச் சொல்கிறார்கள். 15 வயது முதல் 21 வயது வரையான இளைஞர்கள் மிக அதிகமாக போதை அடிமைகளாக உருமாறுகிறார்கள். 

என்ஜின் ஆயில் மாற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்து நாள் முழுதும் நகர முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அவருக்கு ஐந்து புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கக் கொடுத்தேன்.  

Friday, 5 May 2023

இறைமை நிழலில் அமைதி

இன்று காலை எனது நண்பர் ஒருவர் இயற்கை எய்தினார். எனது நண்பர். என் மேல் மிகுந்த பிரியம் கொண்டவர். கட்டுமானப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். தனது கடமையையும் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றியவர். தொழிலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளும் காலை 8.20 மணிக்கு கடையின் சாவிகளுடன் கையில் ‘’இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ செய்தித்தாளுடன் கடை வாசலில் நின்றிருப்பார். அவரை நான் அறிமுகம் செய்து கொண்ட காலத்தில் கடையின் ஷட்டரை அவர் திறக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அதனால் கடையின் பணியாளர் வருகைக்காகக் காத்திருப்பார். 8.30க்கு பணியாளர் வந்து கடை திறப்பார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தினமும் காலை ‘’இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ வாசிக்கும் பழக்கம் உடையவர். 

அதிர்ந்து பேச மாட்டார். சினம் கொள்ள மாட்டார். ஒரு ராணுவ வீரனுக்குரிய கூர்மையான பார்வையைக் கொண்டவர். வள்ளலார் மீது பெரும் ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டின் மூன்று குழந்தைகளை உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் பள்ளியில் படிக்க வைத்தார். அவரது ஊரில் இருந்த ஆன்மீக அமைப்புகள் பலவற்றை பலவிதங்களிலும் ஆதரித்தவர். 

கடந்த சில வாரங்களாக அவரது  உடல்நிலை நோயுற்றிருந்தது. சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் மீண்டு உடல் நலம் பெறுவார் என்றுதான் அனைவரும் எண்ணிணோம். நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு இன்று காலை வந்தார். வீட்டில் பதினைந்து நிமிடங்கள் இருந்திருக்கிறார். அதன் பின் உயிர் பிரிந்திருக்கிறது. 

இன்று காலை அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரது உடலும் முகமும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் போல் இருந்தது. 

ஒரு மூத்த சகோதரரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது. 

சகோதரர் இறைமையின் நிழலில் அமைதி கொள்ளட்டும். 

சாந்தி சாந்தி சாந்தி  

Thursday, 4 May 2023

உள்ளது உள்ளபடி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரிடம் மீடியேட்டர்கள் ரியல் எஸ்டேட் தொழிலின் நுட்பங்கள் என பல்வேறு விஷயங்களைக் கூறுவார்கள். அமைப்பாளர் கேட்டுக் கொள்வாறே தவிர அவற்றை முழுமையாக ஏற்க மாட்டார். ஒவ்வொன்று குறித்தும் அமைப்பாளருக்கு தனிப்பார்வை இருக்கும். 

பொதுவாக விலை குறையும் என்றால் விலையை குறைத்தால் ஒரு இடம் விற்பனை ஆக வாய்ப்பு அதிகம் என்பதால் ரியல் எஸ்டேட் மீடியேட்டர்கள் விலையைக் குறைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அமைப்பாளர் அந்த தியரியை நம்ப மாட்டார். ‘’ ஒரு செல்லர் இடத்தை விக்கறார்னா அந்த இடத்துல பொதுவா என்ன விலைக்கு பையிங் செல்லிங் நடக்குதோ அதை அனுசரித்துதான் விலை சொல்வார். அஞ்சு பத்து முன்ன பின்ன முடியுமே தவிர பெருசா விலையை குறைச்சு செல்லர் கொடுக்க மாட்டார்’’ என்று மீடியேட்டர்களிடம் அமைப்பாளர் சொல்வார். ‘’அப்புறம் செல்லருக்கு தன்னோட இடம் இவ்வளவு விலைன்னு சொல்ற ரைட் இருக்கு. அந்த விலைக்கு நம்மகிட்ட பார்ட்டி இருந்தா நாம அழைச்சுட்டு போகணும். இல்லன்னா சும்மா இருக்கணும். செல்லர் விலையை குறைச்சு சொல்லணும்னு நாம அவர்கிட்ட எதிர்பார்க்கக் கூடாது’’ என்று மீடியேட்டர்களிடம் சொல்வார். 

அமைப்பாளர் மீடியேட்டர்கள் இடம் சொன்னால் விலை சொன்னால் முதலில் இடத்தை நேரில் அழைத்துச் சென்று காட்டச் சொல்வார். பின்னர் நிலத்தின் உரிமையாளரிடம் அழைத்துச் செல்ல சொல்வார். உரிமையாளர் வாயால் அவர் இடத்துக்குச் சொல்லும் விலையை தனது காதால் கேட்ட பின்னரே அந்த விலையை இன்னொருவரிடம் சொல்வார். மீடியேட்டர்கள் அமைப்பாளர் ஏன் நிலத்தை வாங்குபவர் போல் நடந்து கொள்கிறார் எனக் குழம்புவார்கள். 

அமைப்பாளர் எந்த மீடியேட்டரின் பெயரையும் எவரிடமும் உரையாடும் போது கூறமாட்டார். எல்லா மீடியேட்டர்களையும் ‘’ எனக்குத் தெரிந்த மீடியேட்டர்’’ என்பார். வாங்குவதற்கு வாய்ப்புள்ளவர்கள் அன்றி எவரிடமும் இடம் இன்ன இடத்தில் இருக்கிறது எனக் குறிப்பிட்டு சொல்ல மாட்டார். ‘’ஒரு பிளாட்’’ என்பார். அவருக்குமே எல்லா இடங்களுமே ‘’ஒரு பிளாட்’’ தான். 

மீடியேட்டர்கள் அமைப்பாளரிடம் ‘’ சார் ! என்ன சார் உள்ளது உள்ளபடி சொல்லிடறீங்க. கொஞ்சம் ஏத்த இறக்கமா தான் சார் சொல்லணும்’’ என்பார்கள். உள்ளது உள்ளபடி சொல்லி என்ன வணிகம் நடக்கிறதோ அது மட்டும் நடக்கட்டும் என்பார் அமைப்பாளர்.   

ரியல் எஸ்டேட் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரின் தொழில் கட்டிடக் கட்டுமானம். இருப்பினும் மனை விற்பனை, வீடு விற்பனை, விவசாய நிலம் விற்பனை ஆகிய சமாசாரங்களும் அவர் தொழில் வட்டத்துக்குள் அடங்கும். சில நாட்களுக்கு முன்னால் அமைப்பாளருக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. ‘’ சார் ! உங்க ஃபிரண்டு அவரோட விவசாய நிலத்தை விக்கறாராமே ?’’. ‘’அப்படியா ! எனக்குத் தெரியாதே’’ ‘’அந்த இடத்துக்கு என் கிட்ட ஒரு பார்ட்டி இருக்கு . அதுக்கு முடிச்சுக் கொடுங்க சார்’’. ‘’ஏம்ப்பா எனக்கு விஷயமே நீ சொல்லித்தான் தெரியும். ஃபிரண்டு நம்பர் கொடுக்கறன். அவர்ட்டயே நீ பேசிக்க.’’ ‘’இல்ல சார் நேரா நாங்க பேசுனா சரி வராது. நீங்க மிடில்ல இருக்கணும். அப்பதான் முடியும்.’’ . அமைப்பாளர் நண்பருக்கு ஃபோன் செய்தார். ‘’ எனக்குத் தெரிஞ்ச ஒரு மீடியேட்டர் கொஞ்ச நேரம் முன்னாடி பேசுனார். உங்க விவசாய நிலத்தை சேல்ஸ் பண்ண இருக்கீங்கன்னு சொன்னார். எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். அவர் சொன்ன விஷயம் உண்மையா?’’ ‘’ஆமாம் உண்மைதான்.’’ அமைப்பாளர் அவரிடம் ‘’நான் உங்க நம்பர் கொடுத்திடறன். உங்க கிட்ட பேச சொல்றன்.’’. நண்பர் ‘’வேண்டாம் வேண்டாம். நீங்க என் பக்கத்துக்கு மீடியேட்டரா இருங்க. நான் உங்களுக்கு ஒன் பர்செண்ட் கொடுக்கறன்’’ என்றார். அமைப்பாளர் வேண்டாம் என்று சொன்னாலும் நண்பர் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார். அமைப்பாளர் மீடியேட்டருக்கு ஃபோன் செய்தார். ‘’ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கங்க. ஃபிரண்டு சைடுக்கு நான் மீடியேட்டர். உங்க பார்ட்டி சைடுக்கு நீங்க. உங்க கூட எத்தனை மீடியேட்டர் இருந்தாலும் உங்க கமிஷன்ல இருந்து அதை பிரிச்சு கொடுத்துக்கணும். டீல் முடிஞ்சதும் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது.’’ ‘’ அதெல்லாம் பண்ண மாட்டோம் சார். ஃபிரண்டு கிட்ட சொல்லி முடிச்சு வைங்க.’’ ‘’அவரு குழி 6000 சொல்றார்.’’ ‘’நம்ம பார்ட்டி 5000 எதிர்பாக்குது.’’ அமைப்பாளர் ‘’ 5500ன்னு முடிக்கலாம்’’ என்றார். 

பின்னர் மீடியேட்டரிடமிருந்து சில நாட்கள் ஃபோன் வரவில்லை. நில உரிமையாளர் ஃபோன் செய்தார். ‘’ சார் ! லேண்ட் முடிக்க பார்ட்டி இருக்குன்னு சொன்னீங்களே. என்னைக்கு வராங்க. ‘’ ‘’5500ன்னு ஃபைனல் ஃபண்ணலாமா?’’ ‘’சிங்கிள் பேமெண்ட்னா பண்ணிக்கலாம். ‘’ அமைப்பாளர் மீடியேட்டருக்கு ஃபோன் செய்தார். ‘’ லேண்ட் ஓனர் ஃபோன் பண்ணி என்னாச்சுன்னு கேக்கறார். என்ன பதில் சொல்ல?’’ . மீடியேட்டர் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். அமைப்பாளர் மீடியேட்டரிடன்  ’’ நான் எனக்குத் தெரிஞ்ச வேற மீடியேட்டர்ஸ்ட்ட விஷயத்தை சொல்லி பார்ட்டி இருக்கான்னு கேட்கட்டுமா?’’ . அமைப்பாளரின் இந்த கேள்விக்கும் மீடியேட்டர் மௌனத்தையே பதிலாகத் தந்தார். 

Wednesday, 3 May 2023

பத்திரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு ராசி உண்டு. அவர் நிலம் விற்றாலும் நிலம் வாங்கினாலும் பத்திரப் பதிவுக்கு சாட்சியாக இருந்தாலும் அந்த பத்திரப் பதிவு நிகழ சிறியதிலிருந்து பெரியது வரை அவர் தான் எல்லா வேலைகளையும் செய்வது போல ஆகி விடுகிறது. அமைப்பாளர் ஏன் அவ்வாறு ஆகிறது என யோசித்து யோசித்துப் பார்த்தார். நிலவரம் என்னவென்றால் அவருக்கு நிலம், மனை , வீடு குறித்த விபரங்கள் தெரியும். பத்திரம் எழுத உரிமம் பெற்ற எழுத்தரிடம் விபரங்களைக் கொடுக்க செல்லும் போது அந்த நிலம் மனை தொடர்பான முழுமையான தகவல்களுடன் செல்வார். வழக்கமாக அமைப்பாளர் ஏப்ரல் 2ம் தேதியே வீட்டு வரி, சொத்து வரி செலுத்தும் வழக்கம் உள்ளவர். முழு ஆண்டுக்கும் செலுத்தியிருப்பார். அந்த ரசீதுகள், டி.எஸ். எல். ஆர் வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு செல்வார். பத்திர எழுத்தர் அமைப்பாளரிடம் ஒருமுறை சொன்னார். ‘’ சார் !ஒரு டாகுமெண்ட்  எழுத வரும் போது ரொம்ப துல்லியமா எல்லா விபரங்களுடன் வரக்கூடாது ; அதே போல எந்த விபரமும் இல்லாமலும் வரக் கூடாது. இந்த ரெண்டுமே அதிகமா வேலை வைக்கும். ஒரு மையமா இருக்கணும் சார் !’’ . அமைப்பாளருக்கு இதைக் கேட்டதும் ஒரு தமிழ் சினிமா டயலாக் ஞாபகம் வந்தது. ‘’ ஈயம் பூசுனது போலவும் இருக்கணும். ஈயம் பூசாதது போலவும் இருக்கணும்.’’. 

தமிழகத்தில் ஒரு இடத்துக்கு மூன்று பேராக சேர்ந்து செல்லக் கூடாது என்று சொல்வார்கள். இந்தியா முழுக்கவுமே அந்த எண்ணம் உண்டு. மூன்று பேர் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே மிக எளிதில் மனப்பிளவு அவர்களுக்குள் உருவாகி விடும். இரண்டு பேருக்கு மனப்பிளவு உருவாகும் வாய்ப்பை விட மூன்று பேருக்கு மனப்பிளவு உருவாகும் வாய்ப்பு உண்டு. 

பத்திரம் பதிவு செய்யும் போது வாங்குபவர், விற்ப்வர், பதிவு செய்து தரும் அரசாங்கம் என மூவர் உருவாகி விடுகின்றனர். இந்த மூவருக்குள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு குறுகிய காலத்துக்கு ஏற்பட வேண்டும். நிலம் விஷயங்களில் விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே நடைமுறைப் புரிதல் இருக்க சாத்தியம் குறைவு. 

விதிமுறைகள் அவ்வப் போது மாற்ற்ம் அடைந்து கொண்டே இருக்கும். மளிகைக்கடையில் பொருள் வாங்குவது போல தினம் யாரும் பதிவு அலுவலகத்துக்கு செல்வது இல்லை. இரண்டு ஆண்டுகள் முன்பு ஒரு சொத்தை விற்றிருப்பார்கள். அதன் பின் இப்போது விற்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நினைவே அவர்களுக்கு இருக்கும். ஆனால் இப்போது அரசாங்க நடைமுறையில் நிறைய மாற்றம் இருக்கும். 

மக்களுக்கு மிக அணுக்கமாக பதிவு நடைமுறைகள் இருக்க வேண்டும் என அரசு விரும்பும். ஆனால் அது எந்த அளவுக்கு அணுக்கமில்லாமல் இருக்க முடியுமோ அந்த அளவு அணுக்கமில்லாமல் நடக்கும்.

அமைப்பாளரை பத்திரம் பதிவு செய்ய விரும்பும் அவரது நண்பர்கள் உதவிக்காகவும் ஆலோசனைக்காகவும் உடன் அழைத்துச் செல்வார்கள். பத்திர எழுத்தர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கி வாருங்கள் என்பார். அமைப்பாளர் வெளியே வந்ததும் நண்பரிடம் ‘’ இப்ப ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கணும்னு டாகுமெண்ட் ரைட்டர் சொல்றார். அந்த ஐம்பதாயிரம் பத்திரத்துக்கு கமிஷன் ஆயிரம் ரூபாய். ஆனா பத்திரத்துக்கான தொகையை நீங்க டிமாண்ட் டிராஃப்ட்டா கட்டலாம். ஐம்பதாயிரத்துக்கு டி.டி கமிஷன் நூறு அல்லது நூத்து ஐம்பது இருக்கும். ஆன்லைன்ல பேமெண்ட் பண்ணா அது கூட கிடையாது. ‘’. நண்பர் அப்பாவியாய் , ‘’பத்திரத்தை எதுல பிரிண்ட் பண்றது’’ என்று கேட்பார். ‘’சாதாரண கான்கொயர் பேப்பர்ல பிரிண்ட் பண்ணா போதும்’’ . நண்பரால் அப்படி ஒரு பத்திரத்தை கற்பனை கூட செய்ய முடியாது. அவருடைய மனத்தில் பத்திரம் என்றால் மதிப்பு அரசாங்க முத்திரையுடன் அச்சடிக்கப்பட்ட காகிதம் என்றே பதிவாகியிருக்கும். 

உண்மையில், சில ஆண்டுகள் முன் எல்லா பத்திரப் பதிவிலும் பத்திரத்துக்கான தொகை இணையம் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை அரசு இட்டது. அதனை எதிர்த்து மாநிலம் முழுதும் பத்திர எழுத்தர்கள் உண்ணாவிரதம் , போராட்டம், தர்ணா நடத்தினர். அரசு பத்திரம் அல்லது ஆன் லைன் மூலம் செலுத்துதல் என்ற இரு வாய்ப்புகளையும் கொடுத்தது. மக்கள் ஆன்லைன் மூலம் செலுத்துதல் தங்களுக்கு மிச்சம் என்று அறியாமல் பத்திரம் நோக்கியே செல்கின்றனர். 


ஞாயிறு போற்றுதல் , கடிதம்

 கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘’மூன்று வெயில் கவிதைகள்’’ குறித்து எழுதிய கடிதம் ஜெயமோகன்.இன் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு 

https://www.jeyamohan.in/182416/