Sunday, 15 June 2025

காடறிதல் - 1

 காடும் காட்டுப்பாதையும் ஒன்றல்ல. 

காட்டுப்பாதையும் காட்டுப்பாதையின் இரு மருங்கிலும் தென்படும் காடும் காட்டின் சிறு பகுதி. மிகச் சிறு பகுதி என்றும் சொல்லலாம். 

காட்டுப்பாதை எவ்விதமாகவும் உருவாகியிருக்கலாம். மனிதர்கள் நடந்து உருவான காட்டுப்பாதைகளே அடிப்படையான காட்டுப்பாதைகள். அதன் பின் சகடம் கொண்ட வண்டிகள் செல்லும் பாதைகள் உருவாயின. சகட வண்டிகள் காலத்துக்கு ஏற்றார் போல் மாற்றம் கண்டு வந்திருக்கின்றன. 

காட்டுப்பாதையில் நாம் செல்லும் போது நாம் யானைகளைக் காணக் கூடும். குரங்குகளைக் காணக் கூடும். காட்டு அணில்களைக் காணக் கூடும். 

காடு என்பது தீவிரமான அடர்த்தி கொண்ட உயிர்த்தொகை. 

ஒரு பதிவு & ஒரு சிறுகதை

 சில நாட்களுக்கு முன், ‘’திக்குத் தெரியாத காட்டில்’’ என்ற பதிவினை தளத்தில் எழுதினேன். அதனை ஒரு சிறுகதையாக எழுதிப் பார்க்கலாமா என்று தோன்றியது. சிறுகதையை எழுதத் தொடங்கினேன். கணிசமான பகுதி எழுதிய பின் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவிலிருந்து சில பகுதிகளை நீக்கி விட்டு பெரும்பாலான பகுதிகளை அப்படியே சிறுகதையில் இணைத்துக் கொண்டேன். கடைசியாக சில பாராக்களை எழுதினேன். சிறுகதை நிறைவு பெற்றது. 

பதிவினை ‘’நகைச்சுவைக் கட்டுரை’’ என்று பதிவிட்டிருந்தேன்.சிறுகதையாக எழுதிய போது அதில் வேறு பல பரிமாணங்கள் இணைந்தன. 

நான் வியப்படைந்தது பதிவு சிறுகதையில் மிகக் கச்சிதமாகப் பொருந்திக் கொண்டதே ஆகும். எனது அ-புனைவு எழுத்துக்களும் புனைவு எழுத்துக்குரிய தன்மையுடன் இருப்பதாக என்னிடம் கூறப்படுவதுண்டு. 

இந்த சிறுகதை எழுதப்பட்டதில் இத்தனை எதிர்பாராமைகளும் வியப்புகளும் இருந்தது என்னை மிகவும் மகிழச் செய்தது.  

Saturday, 14 June 2025

அன்னம்

 இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். இன்று நான் மேற்கொண்ட முயற்சி எனக்கு பலவிதங்களில் பெரும்பயன் அளிக்கக்கூடியது. நான் இன்று பெருமகிழ்வையும் பெரும் அகவிடுதலையையும் உணர்கிறேன்.  இன்று சுடர்ந்திருக்கும் தீபத்தை என்றும் அணையாமல் காப்பேன். 

வீட்டில் எல்லோரும் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். 

இன்று மதியம் எனது உணவை நானே சமைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுநாள் வரை எனக்கு உணவை சமையல் செய்த பழக்கம் இல்லை. அடுப்பின் முன் பல நிமிடங்கள் நின்றிருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததேயில்லை. அல்லது அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். 

கம்பு, கேழ்வரகு ஆகிய இரு தானியங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் எளிய உணவுமுறைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கர்நாட்க மாநிலத்தில் கம்பும் கேழ்வரகும் மிகவும் விரும்பப்படும் உணவுகள். 

இன்று மதியம் கடைக்குச் சென்று கம்பு மாவு அரை கிலோ வாங்கி வந்தேன். அடுப்பை சுடரச் செய்து அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். தண்ணீர் சில நிமிடங்களில் கொதிக்கத் தொடங்கியது. அதில் கல் உப்பை போட்டுக் கொண்டேன். பின்னர் ஒரு டம்ளர் கம்பு மாவை அதில் கலந்தேன். ஒரு கரண்டி மூலம் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டேயிருந்தேன். 15 நிமிடம் இவ்விதம் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டேயிருந்தேன். 10 நிமிடத்திலேயே கம்பு மாவு களி பதத்துக்கு வந்தது. மேலும் 5 நிமிடங்கள் கலக்கி விட்டேன். அடுப்பின் நெருப்பை 15 நிமிடமும் சன்னத்திலேயே வைத்திருந்தேன். அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை வெளியே எடுத்து மூடி வைத்தேன். 15 நிமிடம் ஆறியதும் அதன் மேல் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலும் ஆறவைத்தேன். இது 6 மணி நேரம் மேலும் ஆற வேண்டும். எனினும் தேவை கருதி உடன் அருந்தவும் செய்யலாம். 

சமையல் செய்து கொண்டிருக்கும் போதே தீவிரமான பசி இருந்தது. உணவு அருந்தும் மேஜையின் மேல் நான் சமைத்த உணவைக் கொண்டு வந்து வைத்தேன். 

அதனைத் தொட்டு வணங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இவ்வாறான முறைகளால் ஆக்கப்பட்ட உணவுதான் உயிரைக் காத்துள்ளது ; உடலை வளர்த்துள்ளது என நினைத்த போது என் கண்களில் நீர் துளிர்த்தது. 

பசி தீவிரமாக இருந்தது. 

கம்மங்கூழைப் பருகத் தொடங்கினேன். மேலும் உப்பு தேவை என்று தோன்றியது. சேர்த்துக் கொண்டேன். முழுமையாகப் பருகினேன். இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. முக்கால் வயிறு நிரம்பி இன்னும் கால் வயிறு தேவை என்னும் நிலையில் உணவு முழுமையாகத் தீர்ந்திருந்தது. சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரங்களை நீரால் கழுவி வைத்து விட்டு வந்தேன். 

சமையலுக்குத் தேவையான கலன்களையும் உணவுப் பொருள்களையும் எடுத்து வைத்தல், அடுப்பை சுடரிட்டு சமையல் செய்தல், உணவு உண்ணல், உண்ட பாத்திரங்களை கழுவி வைத்தல் ஆகியவை ஒரே செயலின் வெவ்வேறு நிலைகள் என்ற எண்ணம் தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் பரவசமாக இருந்தது. 

மகாபாரதத்தில் யக்‌ஷப் பிரசன்னத்தில் யக்‌ஷன் கவலை இல்லாத மனிதன் யார் என்று கேட்க யுதிர்ஷ்டன் எந்த மனிதன் தனது உணவை தானே சமைத்துக் கொள்கிறானோ அவனே கவலை இல்லாதவன் என்று கூறுகிறான். 

இன்றைய அனுபவத்தின் பின் இனி எனது உணவை நானே சமைத்துக் கொள்வேன் என எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. 

Thursday, 12 June 2025

திக்குத் தெரியாத காட்டில் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஊருக்குப் பக்கத்தில் பெரிய பரப்புள்ள நிலம் ஒன்றை நண்பர் விலைபேசியிருக்கிறார். அதன் பெரும் பகுதி புதராக உள்ளது. கிரய உடன்படிக்கை செய்த பின் அந்த புதர்களை அகற்ற வேண்டும் என நண்பர் உத்தேசித்திருந்தார். நான் பலமுறை அந்த இடத்துக்குச் சென்றிருக்கிறேன். எனினும் அந்த புதர்களைக் கடந்து அந்த இடத்தின் இறுதி எல்லை வரை சென்றதில்லை. நேற்று வெளிநாடு வாழ் இந்தியரான எனது நண்பர் ஒருவரிடம் அந்த இடம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஆர்வம் மேலிட கூகுள் மேப் உதவியுடன்  அந்த இடத்தை தனது கணிணியில் பார்த்தார். அந்த இடத்தின் மேற்கு எல்லையை ஒட்டி 3 சிறு குளங்கள் இருப்பதாக செயற்கைக்கோள் பிம்பம் காட்டியது. அது குறித்து என்னிடம் கேட்டார். ஆழம் குறைவாக அந்த இடத்தின் பழைய உரிமையாளர்களால் வெட்டப்பட்ட குளங்களாக அவை இருக்கக் கூடும் என பதில் கூறினேன். எனினும் எனக்கும் அவை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவல். இன்று வேறு ஒரு வேலையாக அந்த ஊரைக் கடந்து சென்றேன். அப்போது அந்த இடத்துக்குச் சென்றேன். 

அந்த இடத்தின் நீளம் 500 அடியாக இருக்கக்கூடும். நூறு அடி தூரம் வரை நடந்து செல்ல முடிந்தது. அதன் பின் முழுமையாகப் புதர்கள். ஒரு ஆர்வத்தில் அந்த புதர்களின் உள் நுழைந்தேன். இயல்பான வழமை என்றால் அந்த இடத்தில் இன்னொருவர் உடன் இல்லாமல் நுழைய முயன்றிருக்க மாட்டேன். இருவர் சேர்ந்து ஒரு செயலைச் செய்வது என்பது அடிப்படையில் மிக்க பலன் கொண்டது. அது வேலையின் பாரத்தை தர்க்கபூர்வமாக பாதியாக மட்டுமல்ல பத்தில் ஒரு பங்காகக் கூட ஆக்கி விடும். அதன் இன்னொரு எல்லை என்பது அபூர்வமாக அந்த பாரத்தை மேலும் கூட்டவும் வாய்ப்பு உண்டு. 

நூற்று ஒன்றாவது அடியிலிருந்து இருநூறாவது அடி வரை மெல்ல ஊடுறுவி சென்றேன். மண்ணெங்கும் பல்வேறு விதமான செடி கொடிகள் மண்டியிருந்தன. முட்செடிகள் அதிகம் இல்லை. எனவே முன்னகர்ந்து செல்ல முடிந்தது. அத்தனை புதர் மண்டியிருப்பதால் நிச்சயம் நாகங்கள் அங்கே இருக்கக் கூடும் என எண்ணினேன். மண் கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கும் பச்சை. சுருண்டிருக்கும் ஏதேனும் ஒரு நாகத்தின் மீது கால் வைக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் கட்டிடப் பொறியாளர்களுக்கென ஒரு உள்ளுணர்வு உண்டு. அதன் துணையுடன் முன்னகர்ந்தேன். இருநூறு அடி சென்று விட்டேன். நான் வந்த வழியில் இருக்கும் செடிகளை ஒடித்து விட்டுக் கொண்டே வந்திருக்க வேண்டும். செல்ல வேண்டிய இடம் வரை சென்று விட்டு திரும்பும் போது ஒடிந்திருக்கும் செடிகளை அடையாளமாகக் கொண்டு வந்து விடலாம். நான் அவ்விதம் செய்யவில்லை. அந்த புதர்களில் மனிதர்கள் நடமாடும் பாதை இருக்கும் என்றே யூகித்திருந்தேன். இருநூறு அடிக்கு மேல் அவ்வாறு இல்லை. முட்புதர்கள் அதிகம் இருந்தன. அவை என் உடலில் குத்த ஆரம்பித்தன. தோல் எரிச்சலை உண்டாக்கும் செடிகள் தோலை எரியச் செய்தன. கிட்டத்தட்ட அந்த இடத்தின் மையத்துக்கு வந்து விட்டேன். அங்கே உயரமான மரங்கள் சில வட்டமாக அடர்ந்திருந்தன. அவற்றின் உச்சிக்கிளைகளில் கழுகுகளும் பருந்துகளும் கூடு கட்டிக் குடியிருந்தன. எனது பிரவேசத்தை உணர்ந்து அனைத்தும் ஒலியெழுப்பி வானில் சிறு உய்ரம் பறந்து வட்டமடித்தன. இத்தனை கழுகுகளும் பருந்துகளும் கூடு கட்டி இருப்பதால் தான் பாம்புகள் அவ்வளவாக இல்லாமல் இருக்கின்றன என எண்ணினேன். தர்க்க மனம் இவ்விதம் நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கையில் பாதி தூரம் வந்து விட்டதால் இன்னும் பாதி தூரம் தானே சென்று விடுவோம் என முன்னே சென்றேன். முன்னே என்று சொல்கிறேனே தவிர பக்கவாட்டில் பல அடிகள் நடந்தே முன்னே சில அடிகள் செல்ல முடிந்தது. முன்னே சில அடிகளும் பக்கவாட்டில் பல அடிகளும் சென்றதால் பக்கவாட்டு பகுதியில் அதிக தூரம் சென்று விட்டேன். அங்கே நிறைய கறையான் புற்றுகள் இருந்தன. தமிழக அரசியல் மேடைகளில் ‘’கறையான் புற்றில் புகுந்த கருநாகம்’’ என்னும் பதம் அதிகமாக பயன்படுத்தப்படும். அந்த புற்றுகளை ஒட்டி நடக்கும் போது எந்த புற்றில் எந்த பாம்போ என்ற தயக்கத்துடன் தாண்டி தாண்டி சென்றேன். அங்கே சில குளவிக் கூட்டமும் வண்டுகளும் தென்பட்டன. 

பாம்பு கடித்தால் கூட உயிர் பிழைக்க சில சதவீதங்களாவது சாத்தியம் உண்டு. விஷ வண்டுகள் கடித்தால் கதை மிக விரைவில் முடிய அதிக வாய்ப்புகள் உண்டு. விஷ வண்டுகளும் குளவிகளும் முகத்திலும் கைகளிலும் கடிக்க ஆரம்பிக்கும். அவை சூழ்ந்து கொள்ளும். அந்த இடத்துக்குப் புதிதான அன்னிய பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது ; அதனால் தனது உயிர்க்கூட்டத்தின் வாழ்தலுக்குப் பாதிப்பு என அவற்றின் உள்ளுணர்வில் இருக்கும். எனவே சூழ்ந்து கொட்டும். நம் கையில் நெருப்போ புகையோ இல்லையென்றால் அவற்றிடமிருந்து தப்புவது மிகவும் கடினம். 

குளவிகளும் வண்டுகளும் கொட்டி நிலைகுலைந்து பின்வாங்கிச் செல்லும் போது ஒரு கட்டு விரியனோ அல்லது கண்ணாடி விரியனோ கடித்தால் எவ்விதம் இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். சூரிய வெளிச்சம் இருந்த இடம் ஒன்றில் சென்று அந்த சிறு இடத்தில் எந்த ஜந்துக்களும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சில நிமிடங்கள் மெல்ல நிலைப்படுத்திக் கொண்டு நின்றேன். எங்கும் பச்சைப் புதர்கள் என்பதால் காற்று மென் ஈரத்துடன் இருந்தது. சில இடங்களில் மட்டுமே சூரிய வெளிச்சம் உள்ளே இருந்ததால் மண்ணும் ஈரமாகவே இருந்தது. நான் நின்று கொண்டிருந்த இடத்தின் உண்மையான சிக்கல் மனித நடமாட்டம் உள்ள பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 300 அடிகள் தூரத்தில் நான் இருக்கிறேன். நான் அபயக்குரல் எழுப்பினாலும் அந்த புதரின் அடர்த்தியைத் தாண்டி எவருக்கும் கேட்காது. உண்மையான சிக்கல் அதுவே என்பதைப் புரிந்து கொண்டேன். பின்வாங்க வேண்டியது மட்டுமே உடன் செய்ய வேண்டியது என எண்ணினேன். எனது பார்வை மேலும் கூர்மை கொண்டது. கண்ணில் ஏதும் ஜந்துக்கள் தென்படுகிறதா என பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். நான் நடந்து வந்த பாதை அல்ல இப்போது சென்று கொண்டிருப்பது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அதை விடவும் இங்கே முட்செடிகள் அதிகம். விதவிதமான கொடிகள் என் உடலை நான் நடந்து செல்கையில் சுற்றின. 

அவற்றை அறுத்து விட்டு நகர்ந்தேன். பாச பந்தங்கள் கூட இவ்விதமானவை தான் என்ற எண்ணம் சம்பந்தமில்லாமல் தோன்றியது. எங்கெல்லாம் சூரிய வெளிச்சம் இருக்கும் திட்டுகள் உள்ளனவோ அங்கே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் என சென்று கொண்டேயிருந்தேன். கொஞ்ச நேரத்தில் கழுகுகளின் பருந்துகளின் கூடுகள் இருக்கும் மரங்களுக்கு அடியில் வந்தேன். இன்னும் பாதி தூரம் இருக்கிறது என எண்ணி நகர்ந்தேன். எங்கெல்லாம் புதர் அடர்த்தி குறைவோ அங்கே சென்று சில வினாடிகள் நிலை கொண்டு விட்டு தொடர்ந்து நகர்ந்தேன். நேரப் பிரக்ஞை அப்போது என் அகத்தில் இல்லை. அந்த காட்டுப்புதர் மட்டுமே என் பிரக்ஞையில் இருந்தது. மெல்ல நகர்ந்து நகர்ந்து சாலை இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன். 

சோழர் படையில் ‘’காடுவெட்டிகள்’’ என்ற பிரிவு உண்டு. படை ஒரு காட்டைக் கடந்து செல்லப் போகிறது எனில் அந்தக் காட்டை அந்த படை எவ்வளவு விரைவில் கடக்க முடியுமோ அவ்வளவு விரைவில் கடக்க பாதையை உருவாக்கித் தருவதே அவர்கள் பணி. அவர்களுக்கு காடுகள் குறித்து காட்டுயிர்கள் குறித்து காட்டு மரங்கள் குறித்து வானியல் குறித்து மண்ணியல் குறித்து ஆழமான அறிவு உண்டு. அந்த குழு படை எந்த காட்டைக் கடக்க வேண்டுமோ அந்த காட்டுக்கு பல நாட்கள் முன்னரே வந்து காடுவெட்டி பாதை உண்டாக்குவார்கள். அந்த படைப்பிரிவு குறித்த எண்ணத்துடன் அந்த இடத்தை நீங்கிச் சென்றேன். 

Tuesday, 10 June 2025

திறப்பு


வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவரில் இருக்கும் இரும்பு gateக்கு ஒரு பூட்டும் சாவியும் உண்டு. தினமும் இரவு அதனைப் பூட்டுவேன். காலையில் திறப்பேன். தினமும் சில வினாடிகள் மட்டும் ஈடுபடும் செயல். சில நாட்களாக அதனைப் பூட்டித் திறப்பது இலகுவாக இல்லை. கடினப்பட்டு அதனைச் செய்வதைப் போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனை சரி செய்ய வேண்டும் என நினைப்பேன். இரவு உறங்கச் செல்லும் நேரம் , காலையில் விழித்ததும் சென்று திறக்கும் நேரம் என அந்த இரு சந்தர்ப்பங்கள் தவிர வேறு சந்தர்ப்பங்களில் அதனை கவனிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இன்று மாலை வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்த போது அந்த பூட்டினைக் கண்டேன். கடைத்தெரு செல்லும் போது அதனை எடுத்துக் கொண்டு சென்றேன். பூட்டு பழுது பார்ப்பவர் ஒருவர் கடைத்தெருவில் சாலையோரத்தில் அமர்ந்திருப்பார். அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அவர் இன்று வரவில்லை. வீட்டுக்கு வந்தேன். பூட்டின் உட்பகுதிகளில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் ஊற்றினேன். சில நிமிடங்களில் பூட்டு இலகுவாக இயங்க ஆரம்பித்தது. எளிய விஷயம் தான். என்றாலும் எனக்கு அது அளித்த மகிழ்ச்சி என்பது மிகப் பெரியது.  வாழ்க்கை இவ்விதமான சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளால் ஆனது என்பது என் எண்ணம். 

Monday, 9 June 2025

பிச்சாண்டி

 
நேற்று எனக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். அவரிடம் அவரது பெயர் என்ன என்று கேட்டேன். தனது பெயர் பிச்சாண்டி என்று கூறினார். அந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவர் தன் பாட்டனாரின் பெயரைத் தனக்கு வைத்திருக்கிறார்கள் என்று கூறினார். சைவத்தில் பிச்சாண்டி எனப்படும் பிச்சாண்டவர் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டவர் என்பதை அவருக்குக் கூறினேன். 

தாருகாவனத்தில் முனிவர்கள் வேள்வி இயற்றி வந்தனர். வேள்வி இயற்றுவதில் தாங்கள் அடைந்திருக்கும் திறன் குறித்து அவர்கள் ஆணவம் கொண்டிருந்தனர். தாங்கள் வசித்த தாருகாவனத்தை மானசீகமான கோடொன்றால் எல்லையிட்டிருந்தனர். அவர்கள் ஆணவம் அழிக்க சிவன் ஒரு காட்டாளனாக அங்கே நுழைந்தான். அங்கிருந்தவர்களிடம் பிச்சை கோரினான். முனிவர்கள் அவனது மீறலைக் கண்டு சினந்து அவன் மீது வேள்வி மூலம் நாகங்களையும் படைக்கலன்களையும் ஏவினர். அவை அனைத்தையும் அவன் ஆபரணங்களாக்கிக் கொண்டான். உலகின் மொத்த இருளையும் ஒரு யானையாக ஆக்கி அவன் மேல் ஏவினர். அதனை அவன் உரித்துப் போர்த்தி கஜசம்ஹார மூர்த்தி ஆனான். 


பிச்சாண்டி என்ற பெயரிலிருந்து நாம் எவ்வளவோ தூரம் செல்ல முடியும். 

இந்திய இலக்கியங்கள் எவ்விதம் பிச்சாண்டவர் கதையைக் கூறுகின்றன ; எவரெவரால் எவ்விதம் எந்த காலத்தில் கூறப்பட்டுள்ளன. நாடெங்கும் இருக்கும் பிச்சாண்டவர் சிற்பங்கள் என்னென்ன என காலத்தால் நீண்ட ஒரு பயணத்தை நிகழ்த்த முடியும். நாம் மரபை அறிந்திருந்தோம் எனில். மரபை அறிய ஆர்வம் கொண்டிருந்தோம் எனில். 

Saturday, 7 June 2025

மிக அவசரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 நண்பர் ஒருவர் வெளியூர்க்காரர். இங்கே அவருக்கு இரண்டு கிரவுண்டுக்கும் கூடுதலான அளவுள்ள மனையை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவரது மனையின் ஆவணங்கள் வங்கிக்கு அளிக்கப்பட்டு அவற்றின் பேரில் கடன் பெறப்பட்டுள்ளது. நண்பர் ஆவணங்களின் நகல் என்னிடம் இருந்தது. நான் எல்லா அசல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டேன். நேற்று இரவு 7.55க்கு நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என்னுடைய அலைபேசிக்கு வந்தது. அதாவது, மனையின் ஆவணங்களின் நகல் வருமான வரி தாக்கலுக்காக அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே உடன் கூரியரில் அனுப்புமாறு கேட்டிருந்தார். விஷயம் மிக அவசரம் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த நாளான சனிக்கிழமையான இன்று தான் கூரியர் அனுப்ப முடியும். அது அவருக்கு திங்களன்று கிடைக்கும். நான் ஸ்கேன் செய்து சேமித்து வைத்திருந்த ஆவணங்களை அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். மிக அவசரம் என்பதால் அவர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வார் என. எனவே மின்னஞ்சல் அனுப்பப்பட்ட விபரத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. ‘’நான் உங்களை கூரியரில் அனுப்பச் சொன்னேன்’’ என்றார். ‘’ரொம்ப அவசரம்னு மெசேஜ் செஞ்சீங்க. அதனால தான் மெயில் போட்டேன். உங்க மெசேஜ் வந்தப்ப நேரம் நேத்து நைட் 8 மணி. அதுக்கு மேல கூரியர் அனுப்ப முடியாது. சனிக்கிழமை புக் பண்ணா நடுவுல ஞாயிறு லீவு. திங்கட்கிழமைதான் உங்க கைக்கு கிடைக்கும். அது உங்களுக்கு ஓ.கே னா எனக்கும் ஓ.கே.’’ என்றேன்.

Wednesday, 4 June 2025

கவசம்

நான் தினமும் கணிசமான தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வழக்கம் கொண்டவன். இருபத்து ஏழு ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தை இயக்குகிறேன். நான் வாகனம் இயக்கத் துவங்கிய நாட்களில் இருந்த சாலை அமைப்பும் சாலையில் செல்லும் வாகன அளவும் இன்று இல்லை. சாலைகள் அகலமாகி உள்ளன. சாலையில் செல்லும் வாகன அளவு அதிகரித்து உள்ளது.  என் மீது அக்கறை கொண்ட நண்பர் என்னை இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் கூறி சில வாரங்கள் ஆகின்றன. இன்று என் அறையின் பரணில் இருந்த ஹெல்மெட்டை வெளியே எடுத்து பைக்கில் பயணிக்கும் போது அணிந்து சென்றேன். 

சில ஆண்டுகளுக்கு முன்னால், ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணித்த போது பயணத்தின் எல்லா நாட்களும் ஹெல்மெட் அணிந்திருந்தேன். தன் மண்ணின் எல்லா பிராந்தியங்களிலும் அமைதியாக சகஜமாக பயணிக்கும் வாய்ப்பை நாடு வழங்கியிருக்கிறது ; அந்நாட்டின் மகனாக பயணியாக நாடு வகுத்திருக்கும் போக்குவரத்து விதியைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வின் மேலீட்டால் பயண நாட்கள் முழுமைக்கும் ஹெல்மெட் அணிந்தேன். 

முதல் நாள் ஹெல்மெட் அணியும் போது உடலுக்கு பாரமான ஒன்று உடலுடன் இருப்பதாகத் தோன்றும். வெளி ஓசைகள் எதுவும் இல்லாதது போல் ஆகி விடும். இருப்பினும் சில மணி நேரங்களில் உடல் பழகி விடும் ஹெல்மெட் உடலின் ஒரு பகுதி என உடலும் மனமும் ஏற்றுக் கொள்ளும். 

இன்று அணிந்த ஹெல்மெட் சென்ற ஆண்டு புதிய இரு சக்கர வாகனம் வாங்கிய போது அந்த வாகனத்துடன் வழங்கப்பட்ட ஒன்று. இன்று அதனை அணிந்ததும் ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணம் நினைவில் எழுந்தது. அந்த பயணத்தின் மனநிலையும் உருவானது. 

இன்றும் ஓசைகள் இல்லாமல் போய் விட்டதாக ஒரு எண்ணம். மெல்ல வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தேன் ஹெல்மெட்டுடன். 

Monday, 2 June 2025

ஒரு புதிய வாரம்

 லௌகிகமாக ஒரு வாரம் என்பது திங்கள்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைகிறது. ஒருநாள் அல்லது இரண்டு நாள் வார இறுதி விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமையில் மீண்டும் பணிகள் தொடங்கும் என்பதால் திங்கட்கிழமை காலை என்பது மிகவும் பரபரப்பு கொண்டதாக இருக்கக்கூடியது. எல்லா விதமான தொழில் புரிபவர்களுக்கும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை நல்விதமாக இருந்தால் அந்த வாரம் முழுவதும் நன்றாக இருக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. 

இந்த வாரம் மூன்று மாதங்களுக்கு முன்னால் விண்ணப்பித்த நண்பர் நிலத்தின் தனிப்பட்டா கைக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு அது முக்கியமான ஆவணம். எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அது தேவை. ஓரிரு நாட்களுக்குள் எங்களுக்கு அந்த பணி செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மூன்று மாதங்கள் ஆக்கியிருக்கிறார்கள். அப்படியும் இன்னும் கைக்கு வரவில்லை. வாரத்தின் முதல் நாளான திங்களன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 

பேச்சுவார்த்தைகள் மூலம் முக்கிய கட்டத்துக்கு கொண்டு வந்த வணிகங்களை ஒப்பந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். நிறைய பணிகள் இந்த வாரம் இருக்கின்றன.  

Sunday, 1 June 2025

அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடுங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

நண்பர் புத்தகங்கள் சூழ இருப்பவர். அவரது வீட்டுக் கூடத்தில் அவரது எழுது மேஜையில் மேலும் புத்தகங்களுக்காக ஒதுக்கியுள்ள புத்தகப் பரண்கள் கொண்ட அறையில் என எங்கும் புத்தகங்கள் இருந்தன. அவருடன் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது யுவால் நோவா ஹராரியின் ‘’சேப்பியன்ஸ்’’ புத்தகம் கண்ணில் பட்டது. அவரது அலுவலக அறையில் கண்ட புத்தகத்தின் பிரதிகள் அவரிடம் 4 இருப்பதைக் கண்டேன். ஒரு பிரதியை படித்து விட்டுத் தருகிறேன் என எடுத்து வந்து உடன் வாசித்து விட்டு அடுத்த சில நாட்களில் அவரைக் காணச் சென்ற போது அவரிடம் அதனை திருப்பிக் கொடுத்து விட்டேன்.  என்னிடம் இருக்கும் 1000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருக்கும் புத்தக அலமாரி வீட்டில் என்னுடைய அறையில் இருக்கிறது. எனது அறை மாடியில் இருப்பதால் என் புத்தக அலமாரி யார் கண்ணிலும் படாது. நானாக அழைத்துச் சென்று காட்டினால் தான் உண்டு. நண்பர் வீட்டில் இருந்த புத்தகங்களை முழுமையாகக் காண வேண்டும் என விரும்பினேன். இருப்பினும் எனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒருநாள் என் கட்டுப்பாட்டைத் தளர்த்தி அவரது புத்தகப் பரண்களைத் துழாவினேன். நண்பரிடம் நுண்கலைகள் தொடர்பான புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன என்பதை அவதானித்தேன். தமிழகத்தில் நவீன இலக்கியம் வாசிப்பவர்கள் எண்ணிக்கை 1000 என ஒரு கணக்கீடு உண்டு. நவீன இலக்கிய நூல்களைப் பிரசுரிக்கும் பதிப்பகங்கள் 1000 பிரதிகள் அச்சிட்டு அத்தனை பிரதிகளையும் 5 லிருந்து 7 ஆண்டுகளில் விற்பனை செய்து முடிப்பார்கள். எனவே நவீன இலக்கியத்தை 1000 பேர் வாசிப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி. அதில் புத்தகம் வாசிப்பவர்கள் 1000 பேர். ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர் வசித்தால் அதில் ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்கிறார் என்று பொருள். இலக்கியத்தின் நிலைமை இவ்விதம் என்றால் நுண்கலை நூல்களை வாசிப்பவர் எண்ணிக்கை இலக்கியம் வாசிப்பவர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பாகமாக இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம். நுண்கலை நூல்களை நண்பர் அதிக எண்ணிக்கையில் வாசித்திருக்கிறார். புத்தகப் பரணில் இருந்து சோழர் கால சிற்பங்கள் குறித்த நூல் ஒன்றை எடுத்து வந்து நண்பர் முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஆர்வத்துடன் அந்த நூல் குறித்து என்னிடம் கூறினார். பின்னர் ‘’அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடுங்கள்’’ என்றார். நண்பர் பரவாயில்லை. புத்தகங்களைக் கண்ணில் படும் படி வைத்து எவரேனும் எடுத்தால் நிறைய நேரம் அமைதியாய் இருந்து விட்டு கடைசியில் புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள் என பணிவுடன் விண்ணப்பிக்கிறார். நான் என் புத்தக அலமாரியை எவருக்கும் காட்டுவதே இல்லை!