Sunday, 9 November 2025

மாபெரும் சூதாட்டம்

 மகாபாரதத்தின் பின்னணியில், சமீபத்தில் எழுதிய சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு : 

மாபெரும் சூதாட்டம்

ஒரு தேசியவாதியின் சரிதம்

 
நூல் : காகா காலேல்கர் வகை : சரிதம் பக்கம் : 148 நூலாசிரியர் (ஹிந்தி): விஷ்ணு பிரபாகர் தமிழாக்கம் : அகிலா சிவராமன்

சாகித்ய அகாதெமி வெளியீடு

இணையத்தில் வாசிக்க : காகா காலேல்கர்

***

மராட்டிய மாநிலம் ஸதாராவைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசு அதிகாரியான பாலகிருஷ்ண காலேல்கருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பெரியவர் வருகை புரிந்தார். அவர் பாலகிருஷ்ண காலேல்கரிடம் ‘’இந்த வீட்டில் இன்னும் ஒரு குழந்தை பிறப்பான். அவன் குரு ஸ்ரீதத்தாத்ரேயர் அளிக்கும் வரப்பிரசாதம். ஆதலால் அவனுக்கு அவருடைய பெயரையே சூட்டுங்கள்’’ எனக் கூறி ஆசியளித்துச் சென்றார். அப்பெரியவர் கூறிய வண்ணமே அந்த வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஸ்ரீதத்தாத்ரேயரின் நாமம் சூட்டப்பட்டது. பின்னாட்களில் காகா காலேல்கர் என அழைக்கப்பட்ட அறியப்பட்ட காலேல்கரின் முழுப் பெயர் தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்பதாகும். 

தந்தை அரசு அதிகாரியாக இருந்ததால் அவருக்கு பணி நிமித்தம் பல ஊர்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. காலேல்கர் சிறு வயதிலேயே ஆர்வத்தின் காரணமாக தந்தையுடன் பயணிக்கத் தொடங்குகிறார். அது  வாழ்நாள் முழுவதும் அவர் ஒரு தேசாந்திரியாக வாழப் போவதன் தொடக்கமாக அமைந்திருக்கிறது. 

மராட்டியத்தின் தேசியவாதிகள் பலரை உருவாக்கிய பூனா பெர்கூசன் கல்லூரியில் பயில்கிறார் காலேல்கர். தேசியவாதிகள் பலருடன் அவருக்கு அங்கே தொடர்பு ஏற்படுகிறது.திலகர் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த காலேல்கர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அமைப்பில் பங்கெடுக்கத் தொடங்குகிறார். அன்றைய இந்திய தேசிய காங்கிரஸின் மூன்று பெரும் தலைவர்களான லால் - பால் - பால் ஆகிய மூவர் மீதும் பெரும் மதிப்பும் பெரும் பற்றும் கொள்கிறார் காலேல்கர். ‘’சாந்தி நிகேதனம்’’ நிறுவிய கவி ரவீந்திர நாத் தாகூரிடம் அணுக்கமாகிறார் காலேல்கர். விதி அவரை கல்வித்துறை நோக்கியும் இதழியல் நோக்கியும் அவரை திருப்புகிறது. தனது நீண்ட ஆயுள் முழுமைக்கும் தனது தேசியப் பணியை கல்வித் துறையிலும் இதழியலிலும் ஆற்ற அவருக்கு காலம் வாய்ப்பு கொடுக்கிறது. 

தனது இளம் வயதில் ஒத்த மனம் படைத்த மேலும் இருவருடன் இணைந்து இமயமலைப் பகுதிகளில் 2500 கி.மீ பாத யாத்திரையை நிகழ்த்துகிறார் காலேல்கர். அப்போது அவருக்குத் துறவியாக வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மகாத்மா காந்தியைச் சந்திக்கிறார். மகாத்மாவின் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூல் தனது எல்லா தேடல்களுக்கும் பதில் அளிப்பதாக உணரும் காலேல்கர் அப்பொழுதிலிருந்து மகாத்மாவின் அணுக்கத் தொண்டன் ஆகிறார். 

குஜராத்தியரான மகாத்மா மராத்தியரான காகா காலேல்கரிடம் ஹிந்தி மொழிக்கான ஒரு கல்வி நிலையம் தொடங்குமாறு கூறுகிறார். குஜராத் வித்யா பீடம் அவ்விதம் உருவாகிறது. அக்கல்வி நிலையத்திற்குப் பொறுப்பேற்பதால் காகா காலேல்கர் புதிதாக குஜராத்தி மொழியைப் பயிலத் தொடங்குகிறார். தனது ஆர்வத்தின் காரணமாக மிக விரைவில் குஜராத்தி மொழியைப் பயின்று குஜராத்தியில் நூல்கள் இயற்றும் அளவுக்கு திறன் பெறுகிறார் காகா காலேல்கர். குஜராத்தியில் எண்ணற்ற நூல்கள் காகா காலேல்கரால் இயற்றப்பட்டுள்ளன. அவரை 125 சதவீத குஜராத்தி என்று மகாத்மா குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி சிறை சென்ற காலங்களில் நவஜீவன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறார் காகா. 

மகாத்மா தேசத்தின் தேசிய மொழியாக ஹிந்தியே திகழ வேண்டும் என்ற ஆவலுடன் ஹிந்தி அதிகம் பேசப்படாத மாநில மக்களுக்கும் ஹிந்தி மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற ‘’ஹிந்தி பிரச்சார சபா’’ அமைக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து நீண்ட காலம் அதனை வழிநடத்தியவர் காகா காலேல்கர். ஒருமுறை அஸ்ஸாம் சென்று அங்கே அங்குள்ள மக்களிடம் ஹிந்தி கற்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார் காகா காலேல்கர். பல ஆண்டுகள் கழித்து அங்கே மீண்டும் செல்கிறார் காலேல்கர். அப்போது நூற்றுக்கணக்கான அஸ்ஸாமியர்கள் அவரைச் சந்தித்து பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த காலேல்கர் பொதுக்கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டதாகவும் அதில் காலேல்கர் பேச்சில் ஈர்க்கப்பட்டு ஹிந்தி பயின்றதாகவும் தற்போது தாங்கள் மிக ந்ன்றாக ஹிந்தி அறிவோம் என்று கூறுகிறார்கள். தனது ஒரு கூட்டத்தின் சொற்கள் மேல் அஸ்ஸாம் மக்கள் வைத்திருந்த ஈர்ப்பும் அவர்களின் நம்பிக்கையும் காலேல்கரை நெகிழச் செய்கிறது.  

நாடு சுதந்திரம் பெற்றவுடன் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு முதல் பொதுத்தேர்தல் நிகழ்ந்து அமைக்கப்பட்ட முதல் பாராளுமன்றத்தில் கல்வி மற்றும் பண்பாட்டுப் பணிக்காக மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிகப்படுகிறார் காகா காலேல்கர். மகாத்மா காந்தியின் எழுத்துக்களைத் தொகுக்கும் பெரும் பணியின் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராக்கப்படுகிறார். இன்று நமக்குக் கிடைக்கும் ‘’The complete works of Mahatma Gandhi'' தொகுப்பின் உருவாக்கத்தில் காகா காலேல்கருக்கு பெரும் பங்கு உண்டு. அவருடைய கலை இலக்கிய சேவையைப் பாராட்டி அரசாங்கம் அவருக்கு ‘’பத்ம விபூஷண்’’ அளித்து கௌரவித்தது. 

குஜராத்தி, ஹிந்தி, மராத்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்தாளராக விளங்கிய காகா காலேல்கர் சாகித்ய அகாதெமி விருதும் பெற்றுள்ளார். 

எழுத்தாளராக தேசத் தொண்டராக தேசாந்திரியாக விளங்கிய காகா காலேல்கர் நிறை வாழ்வு வாழ்ந்து தனது 96ம் வயதில் 1981ம் ஆண்டு இயற்கை எய்தினார். 

சில புத்தகங்கள்

நேற்று ‘’கல்லெழும் விதை’’ நூல் வாசித்ததிலிருந்து மிக உற்சாகமாக இருந்தேன். பால பருவத்தின் உணர்வுகளை அப்புத்தகம் நினைவுபடுத்தியதால் உற்சாக உணர்வு ஏற்பட்டிருக்கலாம். பாலர்களின் உலகம் என்பது மாசற்றது. கற்பனைகள் மிகுந்தது. நம்பிக்கையும் செயலூக்கமும் கொண்டது. மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டிருக்கும் பாலர்கள் அதனை பின்னாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதை நாம் லௌகிகம் என்று சொல்லலாம் என்று பட்டது. லௌகிகத்தில் ஈடுபட்டிருப்பினும் உற்சாகமும் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டவர்கள் ஆசியளிக்கப்பட்டவர்கள். அவ்விதமான ஆசியை வாழ்க்கை என்று சொல்லலாம்.  

நேற்று எழுதிய பதிவுக்குப் பின் இன்று காலை எழுந்ததும் ராதுகா பதிப்பக நூல்கள் ஏதும் இணையத்தில் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். சில நூல்கள் இருந்தன. அவற்றை சில பக்கங்கள் புரட்டினேன். அதன் பின்னர்  அரவிந்த் குப்தா இணையதளத்துக்குள் சென்றேன். அங்கே சிறுவர்களுக்கான பல மொழி புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. 

அதில் இருந்து ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து உள்நுழைந்தேன். தேசிய புத்தக நிறுவனம் வெளியிட்ட ஆபிரகாம் லிங்கன் குறித்த சிறுநூல் அது. அதனை வாசித்தேன். எனக்கு ஆபிரகாம் லிங்கனை மிகவும் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே. இந்த நூல் 40 பக்கம் கொண்டது. படக்கதை வடிவில் லிங்கனின் வாழ்க்கை அதில் இடம்பெற்றிருந்தது. அத்தனை புத்தகங்களில் ஏன் லிங்கன் குறித்த நூல் நோக்கி முதலில் சென்றேன் என்பதை யோசித்துப் பார்த்தேன். ’’மக்களால் மக்களுக்காக மக்களுடைய’’ அரசாங்கம் என்று ஒரு ஜனநாயக அரசு குறித்த கனவை பிரகடனத்தை முழங்கியவர் என்பதாலா? எத்தனையோ அரசு அதிகாரிகளுக்கு ஒரு குடிமகனாக இதனை எழுதுகிறேன் ; இந்த விஷயத்தைத் தெரிவிக்கிறேன் என பல தபால்கள் எழுதியிருக்கிறேன். அவை அனைத்துக்கும் லிங்கன் சொற்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தான் காரணமா? மனிதனை மனிதன் அடிமை செய்யும் இழிநிலையை தான் அதிகாரத்துக்கு வந்ததும் துணிச்சலாக ஒழித்தவர் லிங்கன். அவர் புகழ் என்றும் இருக்கும். 

அடுத்த நூல் ‘’Gandhi in pictures'' . இதுவும் ஒரு சிறுநூல். காந்தியின் வாழ்க்கை படங்களாக வரையப்பட்ட நூல். 

மூன்றாவதாக ‘’காகா காலேகர்’’ சரிதம். காந்தியின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர் ‘’காகா காலேகர்’’. நம் நாட்டின் நதிகள் அனைத்துக்கும் பயணம் செய்து நம் நாட்டின் நதிகளைக் குறித்து ‘’ஜீவன் லீலா’’ என்னும் நூலை அவர் எழுதியிருக்கிறார். அதனை நான் வாசித்திருக்கிறேன். அவருடைய சரிதையில் 40 பக்கங்கள் படித்தேன். உணர்ச்சிகரமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. 250 பக்க நூல் அது. இன்று வாசிக்க வேண்டும்.  

Saturday, 8 November 2025

ஓர் அறிஞர் காட்டும் உலகம்

 நூல் : கல்லெழும் விதை 

பக்கம் : 282 

ருஷ்ய மொழியில் ‘’ராதுகா’’ என்றால் வானவில் என்று பொருள். சோவியத் யூனியன் ’’ராதுகா பதிப்பகம்’’ என ஒரு பதிப்பகத்தை நடத்தியது. உலகின் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான நூல்களை அப்பதிப்பகம் வெளியிட்டது. ராதுகா பதிப்பகத்தின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. கெட்டியான அட்டை, தடிமனான தாள்கள், அழுத்தமான அச்சமைப்பு ஆகியவை அந்நூல்களின் சிறப்பம்சங்கள். அந்நூல்களின் வடிவமைப்பே அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டக்கூடியவை. ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘’Mathematics can be fun'' என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. அந்நூலின் பல புதிர்கள் பல தகவல்கள் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிந்திப்பதற்கு இனிமையானவை . 

அதில் ஒரு புதிர் வரும் : நம் முன் ஒரு சதுரங்கப் பலகை இருக்கிறது. அதில் 8 X 8 என்ற அளவில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இரண்டு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் நான்கு தானியம் வைக்கப்படுகிறது. இவ்விதம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே சென்றால் 64 வது கட்டத்தில் எத்தனை தானியங்கள் இருக்கும் என்பது புதிர். 

அந்த புதிருக்கான விடைய அளித்திருப்பார்கள் . அதாவது ஆழி சூழ் உலகு முழுவதையும் மேலும் ஆழியின் பரப்பளவையும் கோதுமை வயலாக்குவதுடன் சந்திரனின் பரப்பு முழுவதையும் கோதுமை வயலாக்கினால் எவ்வளவு கோதுமை விளையுமோ அவ்வளவு கோதுமையை சதுரங்கப் பலகையின் கடைசி கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பார்கள். முதல் கட்டம் ஒரு கோதுமை தானியம் என்பது 2ன் அடுக்கு பூஜ்யம். 64 வது கட்டம் என்பது 2ன் அடுக்கு 63. அது அத்தனை அதிகமானது. 

எனக்கு இந்த புதிர் அளித்த இனிமை என்பது அளப்பரியது. 

அத்தகைய இனிமையை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு தாவரவியல் நூல் ஒன்றை வாசித்து இன்று அடைந்தேன். அந்த நூலின் பெயர் ‘’கல்லெழும் விதை’’. அதன் ஆசிரியர் அறிஞர் லோகமாதேவி. உண்மையில் அவரது இந்த நூலை தாவரவியல் நூல் என்று மட்டும் குறிப்பிடுவது அந்நூலின் முழுமையான பெருமையை எடுத்துரைக்காது ; அந்நூல் அறிவியல் நூல். இருப்பினும் அதில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், புவியியல் ஆகியவையும் உள்ளன. 

காஃபி குறித்த அத்தியாயமே நூலின் முதல் அத்தியாயம். காஃபி பயிர் குறித்து ஏகப்பட்ட சுவாரசியமான நுண்ணிய விவரணைகள் இதில் உள்ளன. இந்திய தேசத்துக்கு காஃபி பயிர் வந்தது குறித்து உலவும் கதை ஒன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவியொருவர் மெக்காவுக்கு செல்கிறார். அங்கே அளிக்கப்படும் பானம் அவர் அதுவரை அருந்தியிராதது. அந்த பானத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடன் இந்தியாவுக்குக் கொண்டு வர எண்ணுகிறார். ஆனால் அந்த பானம் எந்த தாவரத்தின் கொட்டையிலிருந்து தயாராகிறதோ அதனை அராபியர்கள் அதன் பச்சைத்தன்மையை நீக்கி வறுத்தே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த பானத்தின் கொட்டை தங்கள் வழியே வேறு எந்த நாட்டுக்கும் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். சூஃபி துறவி எப்படியோ அந்த தாவரத்தின் ஏழு பச்சைக் கொட்டைகளை தன்னுடைய நீண்ட அடர்த்தியான தாடியில் மறைத்து இந்தியாவின் மேற்குக் கரைக்கு சிக்மகளூருக்குக் கொண்டு வந்து விடுகிறார். அந்த 7 கொட்டைகள் முளைக்க வைக்கப்பட்டே இந்தியாவில் காஃபி உற்பத்தி துவங்கியது என்கிறார் நூலாசிரியர். கர்நாடகாவின் பிரபலமான காஃபித்தூள் நிறுவனங்களும் காஃபி கடைகளும் நீண்ட அடர்தாடி கொண்ட சூஃபி ஒருவரின் படத்தை தங்கள் சின்னமாக வைத்திருப்பதை சுட்டுகிறார் ஆசிரியர். 

மெக்காவில் ஹஜ் பயணம் வரும் யாத்ரிகர்களுக்கு காஃபி அளிக்கப்படுகிறது. திடீரென காஃபி ஒரு போதைப்பொருள் என ஒரு கருத்து பரவுகிறது. அரேபிய அரசாங்கம் காஃபியை நாடு முழுவதும் தடை செய்கிறது. காஃபி தடை செய்யப்பட்டதைக் கண்டித்து அரேபியா முழுவதும் மக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். பின்னர் அரேபிய அரசாங்கம் காஃபி தடையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கிறது. 

மேற்படி இரு சம்பவங்களும் பொது யுகம் 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடும்!

நீலகிரி மலைப்பகுதியில் பழங்குடிகள் ‘’ஆரோக்கியப் பச்சை’’ என்னும் தாவரத்தை ஆற்றல் தரும் உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றம் சென்ற குழு ஒன்று அந்த தாவரத்தின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது. ‘’ஜீவனி’’ என்ற பெயரில் அந்த தாவரத்தின் பொடி பல்வேறு சவால்களை சமாளித்து விற்பனைக்கு வருகிறது. இதைக் குறித்த கட்டுரை நூலின் இரண்டாம் அத்தியாயம். 

பாப்பரஸ் என்ற தாவரம் பதப்படுத்தப்பட்டு அதில் மனிதர்கள் மசி கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த விபரத்தை கிளியோபட்ரா வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஒன்றிலிருந்து தொடங்கி மூன்றாம் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 

வினாடி வினாக்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி ‘’ சாக்ரடீஸுக்கு அளிக்கப்பட்ட நஞ்சின் பெயர் என்ன?’’ என்பது. ஹெம்லாக் என்பது அந்த வினாவுக்கான விடை. ஹெம்லாக் தாவரம் குறித்த கட்டுரையில் ஒட்டு மொத்த சாக்ரடீஸின் வாழ்வை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதனை வாசிப்பவர்கள் சாக்ரடீஸையும் மறக்க மாட்டார்கள்; ஹெம்லாக்கையும் மறக்க மாட்டார்கள். 

சில ஜப்பானிய உணவு வகைகளைக் குறித்த அத்தியாயங்களை வாசிப்பவர்களை ஜப்பான் தேசத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களாகவும் தன் சொற்களின் மாயத்தால் ஆக்கி விடுகிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிப்பவர்களில் கணிசமானோர் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் இந்த உணவு வகைகளுக்காகவேனும் வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பான் செல்வார்கள் என்று துணிந்து சொல்லலாம் !

தர்ப்பை புல் குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் மிகச் சிறப்பானது. 

லினன் துணி குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் இந்நூலின் உச்சம். 

குற்றப் புலனாய்வுத் துறையில் தாவரவியல் எவ்விதம் உதவியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தந்தது. 

அரிசி, கடுகு, அன்னாசி, சோற்றுக்கற்றாழை ஆகிய்வை குறித்தும் சிறப்பாக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

இந்நூலை வாசித்த பின் எந்த வாசகனும் இதுவரை பார்த்த கவனித்த புரிந்து கொண்ட உள்வாங்கிக் கொண்ட எண்ணிக் கொள்ளும் தாவர உலகத்துக்கும் இனி அவன் காணப் போகும் கவனிக்க இருக்கும் புரிந்து கொள்ள இருக்கும் உள்வாங்க இருக்கும் எண்ணப் போகும் தாவர உலகுக்கும் பெரும் தூரம் இருக்கும். 

சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்துக்கும் 64ம் கட்டத்துக்கும் இருக்கும் தூரத்தைப் போல !   

ஜனநாயக அரசியல் - ஒரு விளக்கம் (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை) என்று ஒரு நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன். எழுதும் போதும் எழுதிய பின்னும் மனதில் ஒரு விஷயம் சிறு சஞ்சலம் ஒன்றைத் தோற்றுவித்திருந்தது. அது என்னவெனில் தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக அரசியல் 75 ஆண்டுகால பழக்கம் கொண்டது என எழுதியிருந்தேன். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் முதலே இங்கே கட்சி அரசியல் தீவிரமாக இருந்திருக்கிறது. அப்படியெனில் 75 ஆண்டு காலம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலா என்ற சஞ்சலம் இருந்தது.  

இன்று காலை அதற்கான பதில் என் மனதுக்குக் கிடைத்தது. நாடு சுதந்திரம் அடைந்து 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடந்த போது தான் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்திருக்கிறது. அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த தேர்தல்களில் சொத்துரிமை உடையவர்களும் பட்டம் பெற்றவர்களும் மட்டும் வாக்களித்திருக்கிறார்கள். 

இன்றைய தேதிப்படி கணக்கிட்டால் கூட ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 3000 எனில் அதில் சொத்துரிமை உடையவர்கள் என்று அதிகபட்சம் 300 பேர் இருக்கக் கூடும். அந்த காலகட்டத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது. எழுத்தறிவே 10 சதவீதம் என்றால் பட்டம் பெற்றவர்கள் 1 சதவீதம் ஆக இருந்திருப்பார்கள். 3000 மக்கள்தொகை கொண்ட கிராமத்தில் 300 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பார்கள். 

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வாக்குரிமையே இருந்திருக்காது. 

75 ஆண்டுகளாகவே ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகமாகியிருக்கிறது எனக் கூறியது சரியான கூற்றே என்னும் புரிதலை அடைந்தேன்.  

Friday, 7 November 2025

மாலைப் பயணம்

 இன்று நாள் முழுக்க மழை. பெய்த மழை காற்று மண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்களை துப்புறவாகத் துடைத்து வைத்திருந்தது. மாலை 6.30க்கு 20 கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர் ஒன்றனுக்கு கிளம்பினேன். வாகன விளக்கு வெளிச்சத்தில் அந்த அந்திப் பொழுதிலேயே துலக்கமாக இருந்தது. மழை பெய்த பின் இருக்கும் பகல் பொழுதைப் போலவே மழை பெய்த பின்னான இரவுப் பொழுதும் வசீகரம் மிக்கதாக இருந்தது. 8 மணிக்கு ஊர் திரும்பி விட்டேன். 

ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். என்னுடைய சில நகைச்சுவைக் கட்டுரைகள் சீரியசானவை என்று. அவர் கூறியதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்.  

தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக தேர்தல் அரசியல் எழுபத்து ஐந்து ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிரதானமான ஒரு அரசியல் சக்தியாக இருந்தது. அதன் எதிர்ப்புறத்தில் திராவிட இயக்கம் இருந்தது. பின்னர் கம்யூனிஸ்டுகள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக உருவாக முயன்றனர். அந்த இடத்தை திராவிட இயக்கம் எடுத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளை சுருக்கினர். இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் எனப் பிரிந்தது. திராவிட இயக்கம் இரண்டு திராவிடக் கட்சிகளாகப் பிரிந்தது. கம்யூனிஸ்டு கட்சியும் இரண்டானது. ஜனநாயக தேர்தல் அதிகார அரசியலில் கட்சிகள் அதிக எண்ணிக்கையிலாகி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என எண்ணுவது இயல்பானது. தமிழ்ச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதிகாரத்தின் மீது கொள்ளும் பற்று என்பதும் அதிகாரத்தின் மீது கொள்ளும் ஈர்ப்பு என்பதும் பெரும்பான்மையாக விரவிக் கிடப்பது. இங்கே கட்சிகள் தங்களை பழைய மன்னராட்சியின் தொடர்ச்சியாக எண்ணிக் கொள்கிறார்கள். தமிழகத்தின் சராசரி மனிதன் ஓர் அரசு அலுவலகத்தினுள் நுழைய மிகவும் தயங்குவான் ; விரும்பவே மாட்டான். அங்கே ஊழலும் லஞ்சமும் மலிந்து கிடக்கிறது என்பதும் சென்றால் கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் என்பதும் அவன் அச்சம் கொள்வதற்கான காரணங்கள். அவன் சாமனியமாக செல்ல நேரிடும் போக்குவரத்துத் துறை ( இரு சக்கர வாகனம் பதிவு செய்ய, ஓட்டுநர் உரிமம் பெற), வருவாய்த்துறை ( தனது சொந்த இடத்துக்கு பட்டா வாங்க) ஆகிய அலுவலகங்களுள்ளேயே இந்த நிலைமை. மற்ற அலுவலகங்கள் இதை விட மோசமான நிலைமை. தமிழ்ச் சமூகத்துக்கு இந்த நிலையின் மீது தீராக் கோபம் இருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு மிக மோசமாக அனுபவம் ஆகும் அரசு நிர்வாகம் மீது கோபம் கொள்வது ஒரு புறமும் இத்தகைய நிர்வாகத்தை சீர்திருத்தாமல் இருக்கும் அரசியல் கட்சிகளின் மீது பெரும் பற்று கொள்வது இன்னொரு புறமும் என முரணான நிலையில் தமிழ்ச் சமூகம் கடந்த 60 ஆண்டுகளாகவே இருக்கிறது. தங்கள் மாவட்ட ஆட்சியர் யார் என்று நேரில் பார்த்திருக்காதவர்கள் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூட அறியாதிருப்பவர்களே சட்டமன்ற உறுப்பினரையும் பாராளுமன்ற உறுப்பினரையும் பெரிய பதவியில் இருப்பவர்கள் என்று எண்ணுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு துணை தாசில்தார் அளவுக்குக் கூட அதிகாரம் இல்லை என்பதை சாமானிய பொதுமக்கள் அறிந்திருக்கிறார்களா என்பது ஓர் ஐயமே. சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை உணர்ந்திருக்கிறார்களா என்பது இன்னும் பெரிய ஐயம். 

சமூகம் முன்னேற அரசியல் கட்சிகள் மிகச் சிறு பங்கே ஆற்ற முடியும். ஏனென்றால் அவர்கள் ஜனநாயக தேர்தல் அதிகார அரசியலில் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிக்கும் எவ்விதம் பதவிக்கு அதிகாரத்துக்கு வருவது என்பதே அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிப்பதாக இருக்கும். எதைச் செய்தால் அதிக வாக்குகளைப் பெற முடியுமோ அதனையே அவர்கள் முயல்வார்கள். 

தமிழ்ச் சமூகம் முன்னேற ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் மிகச் சிறு அளவே உதவும். கல்வி , வணிகம், விளையாட்டு , சுகாதாரம், பண்பாடு ஆகிய விஷயங்களில் பயிற்சி அளிக்கும் சமூக அமைப்புகள் மட்டுமே பெரும்பாலான மக்களுக்கு ஆக்கபூர்வமான உதவியை அளிக்க முடியும். தமிழ்ச் சூழலில் அவ்வாறான சமூக அமைப்புகள் குறைவாக இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் எங்கும் பரவி சமூகத்தை அரசியல்ரீதியில் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றனர். கட்சி ரீதியான அரசியல் ரீதியான பிளவு தமிழ்ச் சமூகத்தில் சமூக அமைப்புகள் உருவாகி நிலைபெறுவதை மிகக் குறைவாக ஆக்கியிருக்கிறது. இந்நிலைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகளை மட்டும் பொறுப்பாக்கிட முடியாது. பொதுமக்களுக்கும் இதில் பெரும்பான்மையான பங்கு இருக்கிறது. 

எழுதுதல்

 இன்று காலை எழுந்து எழுத்துமேஜை முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கு எனக்கு ஒரு பணி இருந்தது. வானம் மேகமூட்டமாக இருந்ததால் மழை வந்தால் உத்தேசித்த பணி நிகழுமா அல்லது தள்ளிப் போகுமோ என்னும் ஐயம். லௌகிகப் பணிகள் சிறியவையாயிருப்பினும் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல ஆண்டு பழக்கம் இருப்பினும் ஒவ்வொரு எதிர்கொள்ளலும் புதிய எதிர்கொள்ளலே. வெளிநாட்டு அழைப்பு ஒன்று அலைபேசியில் ஒலித்தது. உடன் அலைபேசியை எடுத்தேன். என்னுடைய அலைபேசியில் ‘’கிரிங்’’ என்ற ஒற்றை ஒலியே அழைப்பு ஒலி. அந்த ஒற்றை ஒலிக்குப் பின் அலைபேசி ஒலி ஏதும் எழுப்பாது. வழக்கமாக எல்லா அலைபேசி அலைப்பு ஒலிகளும் ஒரு நிமிடத்துக்கு ஒலிக்கும். என்னுடைய அழைப்பு ஒலி இரண்டு வினாடிகள் மட்டுமே ஒலிக்கும். குறுஞ்செய்தி ஒலி சிறியது எனினும் என்னுடைய அழைப்பு ஒலியுடன் ஒப்பிட்டால் அதுவே மிக நீண்டது. 

நண்பன் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தான். பள்ளி நாட்களிலிருந்து எனது தோழன். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி புரிகிறான். மொழி , சமூகம், தேசம் ஆகியவை குறித்து தீவிரமான அக்கறை கொண்டவன். அவற்றுக்கு தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்னும் தீராத ஆர்வம் கொண்டவன். இலக்கியத்தில் தீவிரமான ஆர்வம் உண்டு. பல ஆண்டுகளாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் கணிசமான படைப்புகளை வாசித்திருக்கிறான். இன்று அவன் என்னுடன் உரையாடிய போது அவனை எழுதுமாறு சொன்னேன். அமெரிக்க லௌகிக வாழ்க்கையில் எழுத்துக்கான நேரத்தையும் அதற்கான மனநிலையையும் தன்னால் அளிக்க முடியவில்லை என்று சொன்னான். 

அவனுடைய குழந்தைகள் அமெரிக்காவில் பயில்கின்றனர். அங்குள்ள பள்ளிகளில் எவ்விதம் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளிலேயே ஏதேனும் ஒரு நூலை வாசித்து அந்த நூல் குறித்து விரிவான கட்டுரை அல்லது மதிப்புரை எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை வியந்து கூறினான். ஒருவேளை தனக்கு அவ்விதமான பயிற்சி பள்ளி நாட்களில் இருந்திருந்தால் அது எழுதுவதற்கு உதவியாக இருந்திருக்குமோ என்ற தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தான். 

ஜனநாயக யுகம் சட்டதிட்டங்களால் ஆனது. சட்டத்தின் ஆட்சி ஜனநாயக நாட்டிலேயே எல்லா குடிகளையும் சென்றடைய முடியும். லௌகிகத்தில் கூட எழுதப்பட்ட விஷயங்களே பெரும்பாலான விஷயங்களின் அடிப்படையாய் இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசு சட்ட உருவாக்கத்தையும் சட்ட செயலாக்கத்தையும்  நிர்வாகத்திடமும் நீதிமன்றத்திடமும் அளித்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது. செய்தித்தாள்கள் இந்த சூழ்நிலையில் இடையீடாக வந்து பொதுமக்களிடம் பரவலாக வாசிப்பைக் கொண்டு சேர்த்தன. ஒரு சமூகம் பெருமளவு வளர்ச்சி பெற அந்த சமூகத்தில் வாசிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் இருப்பது முக்கியமானது. நாம் அந்த நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம். செல்ல வேண்டிய தூரம் இன்னும் பெருந்தொலைவாக இருக்கிறது. 

நண்பனின் குழந்தைகள் சிறு குழந்தைகள். இருவருக்கும் பத்து வயது இருக்கலாம். அங்கே பள்ளியில் வாரம் ஒரு நூலை வாசித்து மதிப்புரை எழுதி அந்த நூல் குறித்து 5 நிமிடங்கள் பேசுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினான். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து விசாரித்தான். 

‘’பி.ஜி. கருத்திருமனின் கம்பர் -கவியும் கருத்தும்’’ நூலில் உள்ள கம்பராமாயணப் பாடல்களை ஜூம் செயலி மூலம் வாசிக்கலாமா என்று கேட்டான் . நான் கணினியில் மிகக் குறைவான செயல்முறைகளை மட்டும் அறிந்தவன். ஜூம் குறித்து முயன்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.  

Tuesday, 4 November 2025

திருமகள்

எனது நண்பர் ஒருவர் நலம் குன்றியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தவர் வீடு திரும்பியிருக்கிறார். நாளின் பெரும்பாலான பொழுது பிராண வாயு அவரது சுவாசத்தை எளிதாக்க கருவி மூலம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைவாக உணவருந்துகிறார். நினைவு துல்லியமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு பேசுகிறார்.  அவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகள் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். அவருக்குத் தேவையானவை அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அந்தக் காட்சி மனித வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று என எனக்குத் தோன்றியது. இந்திய மரபு செல்வத்தின் தெய்வமாக திருமகளைக் கூறுகிறது. பிரியமும் பேரன்பும் கொண்ட மகள் திருமகளின் வடிவமே என்று எனக்குத் தோன்றியது. 

Saturday, 1 November 2025

புதிய பாதை

இந்த வாரம் திங்களன்று சந்தித்த போது கடலூர் சீனு சொன்னார். ‘’வீட்டிலிருந்து 5 கி.மீ தூரம் நடந்து ஒரு இடத்துக்குச் சென்றால் கூட அது பயணம் தான். மனிதன் நகர்வதற்காக படைக்கப்பட்டவன்.’’. இங்கே ஊரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே ஊரிலிருந்து மேற்கு திசை நோக்கிச் செல்லும் வாகனங்களும் மேற்கு திசையிலிருந்து ஊருக்கு வரும் வாகனங்களும் ரயில்வே சந்திப்பிலிருந்து ஒரு கி.மீ வடக்கில் இருக்கும் கல்லணை - பூம்புகார் சாலை வழியே திருப்பி விடப்படுகின்றன. அதில் ஏகப்பட்ட பேருந்துகளும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதால் அந்த சாலையில் இருக்கும் ரயில்வே லெவல் கிராசிங்கில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. கடலூரிலிருந்து கரி ஏற்றி வரும் கூட்ஸ் வண்டிகள் காரைக்கால் துறைமுகம் செல்வதால் தினமும் கணக்கற்ற தடவை ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது. ஊரின் ரயில்வே சந்திப்பிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்  நீடூர் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஊரிலிருந்து நீடூர் வரைக்குமான ரயில் பாதைக்கு இணையாக ஒரு கிராமத்து சாலை இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த பாதையில் பாதி தூரம் பயணித்திருக்கிறேன். இம்முறை அந்த பாதையை முயற்சி செய்து பார்க்கலாமா என எண்ணினேன். நீடூர் சென்று அங்கிருந்து ஆனந்தகுடி என்ற கிராமம் வழியே சென்று அங்கிருந்து கோட்டூர் என்ற ஊரைக் கடந்து கல்லணை - பூம்புகார் சாலையை அடைந்தேன். அருகில் இருக்கும் ஒரு பாதையை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்ற சிறு வருத்தமும் இன்றைக்கு அறிந்தோமே என்னும் பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.