Tuesday, 31 December 2019

விட்டு விடுதலையாகி

ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ நிகழ்ச்சிகள். சம்பவங்கள். செயல்கள். சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள். 

இந்த உலகம் அழகானது. மனிதர்களால் மட்டுமே ஆனதல்ல உலகம். மனிதர்களுக்காக மட்டும் ஆனதும் அல்ல உலகம். 

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் எத்தனை எளியது மானுட வாழ்க்கை.

நாளில் சில கணங்களுக்கேனும் நமது இருப்பில் இருக்கும் இனிமையை உணர்வோம் எனில் வாழ்க்கைதான் எத்தனை இனியது.

இனிய வாழ்வு மானுடர் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று இந்த கணம் நினைக்கிறேன்.

எப்போதும் துணையிருப்பது பாரதியின் சொற்கள்.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; 
கனவு மெய்ப்பட வேண்டும், 
கைவசமாவது விரைவில் வேண்டும்; 
தனமும் இன்பமும் வேண்டும், 
தரணியிலே பெருமை வேண்டும். 
கண் திறந்திட வேண்டும், 
காரியத்தி லுறுதி வேண்டும்; 
பெண் விடுதலை வேண்டும், 
பெரிய கடவுள் காக்க வேண்டும், 
மண் பயனுற வேண்டும், 
வானகமிங்கு தென்பட வேண்டும்; 
உண்மை நின்றிட வேண்டும். 
ஓம் ஓம் ஓம் ஓம்

Sunday, 29 December 2019

ஒரு புதிய துவக்கம்

புத்தாண்டுத் தீர்மானங்கள் வாசித்து விட்டு நண்பர்கள் அழைத்து ஊக்கப்படுத்தினர். செயலாக்க முடிவு செய்துள்ள விஷயங்கள் மிக நல்ல தன்மை கொண்டவை; பயனளிக்கக் கூடியவை என்றனர். 

நுகர்வுச் சூழல் நம்மைச் சூழ்கிறது. நமது பிள்ளைப் பிராயத்திலிருந்தே நாம் நம்மை அறியாமல் பலவித சமூகப் பழக்கங்களால் சூழப்படுகிறோம். இரண்டு நூற்றாண்டுக்கு முன்னால், தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் உணவுப் பஞ்சத்துக்கு ஆளானது. அதன் விளைவாக மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையை பஞ்ச சாவு விழுங்கியது. அப்பஞ்சத்தின் விளைவாக இந்த மண்ணில் பாரம்பர்யமாக நிலவிய கல்வியும் சமூக அமைப்பும் இல்லாமல் ஆனது. சக மனிதர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லாத - சக மனிதர்களை நம்பாத மக்கள் சமூகமாக தமிழ்ச் சமூகம் ஆனது. அதன் விளைவுகளில் ஒன்று உடல் உழைப்பைச் சற்று கீழான இடத்தில் வைத்து மதிப்பிடும் போக்கு. 

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் மக்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் விஷயங்களாக தொற்று நோய்களே பெருமளவில் இருந்துள்ளன. உலகளவில் மருத்துவத் துறையில் நிகழ்ந்த ஆராய்ச்சிகள் தொற்றுநோய்களைக் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கியுள்ளன. எனினும், வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் இன்று சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது.

இன்று தமிழ்ச்சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் ஆகியுள்ளது. ஆனால் சமூகத்தில் குறைந்தது 80% பேர் மது அருந்துபவர்களாக ஆகியுள்ளனர். குறைவான உடல் உழைப்பும் மதுவும் பொருத்தமற்ற உணவுமுறையுமே இன்றைய நோய்களுக்கான மூலம். 

நுகர்வு நம்மைக் கட்டற்ற நுகர்வோராக மாற்றியிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்திய சமூகம் - தமிழ்ச் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பழக்கங்களை - கண்டுணர்ந்து நவீன வாழ்க்கை முறைக்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்ளுதல் மனிதனை நுகர்வோனாக மட்டும் பார்க்கும் முதலாளித்துவப் பார்வைக்கு எதிரான முக்கியமான செயல்பாடாக இருக்கும் என்று பட்டது. 

இன்று காலை அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர் அழைத்து காலை 3 மணிக்கே விழிப்பது நல்ல முடிவு என்றார். எழுந்ததும் ஓம் ஓம் ஓம் என  ஒரு மணி நேரம் தொடர்ந்து உச்சரிப்பது மனதை எல்லா விதமான அழுத்தங்களிலிருந்தும் நீங்கியிருப்பதற்கு பெருமளவில் உதவும் என்றார். பின்னர் உடன் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியும் யோகாசனங்களும் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள ஏற்றதாயிருக்கும் என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகாவில் இருந்து ஒரு அழைப்பு. அதிகாலை கண் விழித்தல் நாம் வழக்கமாக இயங்கும் நேரத்தில் நாலில் ஒரு பங்கை சூர்ய உதயத்துக்குள் வழங்கி விடுகிறதே என ஆச்சர்யப்பட்டார். 

ஒரு மனிதன் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இங்கே தரவுகள் மட்டுமே இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்துக்கு அவசியமான உபயோகமான கல்வி அளிக்கப்படவேயில்லை. 

2020 ஒரு புதிய துவக்கமாக அமையட்டும்.

Saturday, 28 December 2019

புத்தாண்டு எண்ணங்கள்


நான் திட்டமிடுதலில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவன். சிறுவயதிலிருந்தே எனக்குத் திட்டமிட்டு பழக்கம் உண்டு. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரின் பல பகுதிகளில் சுற்றுவேன். அப்போது எனக்கு நகரை எந்தெத்த விதங்களில் விரிவாக்கம் செய்யலாம் என்ற யோசனைகள் இருந்துள்ளன. உறவினர்களிடம் கூறுவேன். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நீ ஏன் இதையெல்லாம் யோசிக்கிறாய் என்பார்கள். யாரோ ஒருவர் யோசனையிலிருந்துதான் பழையனவற்றை மாற்றியமைக்கும் புதிய விஷயங்கள் பிறக்கின்றன என்பதால் ஏன் நான் யோசிக்கக் கூடாது என்று நினைப்பேன். சிலர் பாராட்டுவார்கள். எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்வதை மிக நேர்த்தியான பணிமுறையாகத் திட்டமிட்டு வடிவமைப்பார். அவரிடம் 25 விழுக்காடு மதிப்பெண்ணுடன் அவர் வகுப்புக்கு வருபவன் 45 மதிப்பெண் பெறுவான். 50 மதிப்பெண் எடுப்பவன் 75 மதிப்பெண் வாங்குவான். 80ஐ 90க்குக் கொண்டு வருவார். அவரிடம் வந்தும் ஓரிருவர் தேர்ச்சியடையாமல் போவர் என்பது அவர்களின் பிரத்யேகமான பிரம்மலிபி.

அவர் காலை 3 மணிக்கு எழுவார். யோகப்பயிற்சிகள் செய்வார். தினமும் நடத்த வேண்டிய பாடங்களை தினமும் படித்து குறிப்பு எழுதுவார். கோயிலுக்குச் சென்று வருவார். பள்ளிக்கு பள்ளி நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுவார். பள்ளி விட்ட பின்னும் ஒரு மணி நேரம் இருந்து விட்டு செல்வார். நான் பத்தாம் வகுப்பு தேர்வு கடைசித் தேர்வு எழுதியதும் அவரிடம் சென்று ஆட்டோகிராஃப் கேட்டேன். ’’தன்னம்பிக்கை நம்மை உயர்த்தும்’’ என்று எழுதி ஆட்டோகிராஃப் இட்டார். தான் ஆசிரியப் பணிக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன; ஒரு மாணவனின் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் இடும் முதல் கையெழுத்து என்று சொன்னார்.

பின்னர் கல்லூரி சென்றேன். பொறியியல் பட்டம் பெற்ற பின் வணிகத்துக்குள் வந்தேன். வணிகத்தை நிலைநிறுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி மற்றும் உழைப்பு. லௌகிக வாழ்க்கையின் சவால்களினூடும் என்னுடைய பணிகளைத் திட்டமிட்டே செய்கிறேன். துல்லியத் திட்டமிடலை சில இடங்களில் தளர்த்திக் கொள்ளவும் செய்கிறேன். எப்போதும் இலக்குகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றை நோக்கி மெல்லவானாலும் முன்னேறியே செல்கிறேன்.

2020 பிறக்க உள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு இந்திய விழாவில் பங்கெடுப்பது எனத் திட்டமிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஒரு அபார்ட்மெண்ட் கட்டத் திட்டமிட்டுள்ளேன். சற்று பெரிய பிராஜெக்ட். இடம் என்னுடைய சொந்த இடம். வீடுகள் கட்டி விற்பனை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு உடலைப் பராமரித்தலுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று நினைக்கிறேன். கடந்த சில வாரங்களாக நண்பரின் சிகிச்சைக்காக உடனிருந்தது நம் சமூகம் எவ்விதம் ஆரோக்கியம் தொடர்பாக எவ்விதத்திலும் உதவியற்ற சமூகமாக இருக்கிறது என்பதை அறிய வைத்தது. எனவே இந்த ஆண்டு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர உள்ளேன்.

ஒரு நாளின் செயல்திட்டம்

1. காலை 3 மணிக்கு எழுதல்.

2. நல்லெண்ணெய் மூலம் வாயைத் தூய்மை செய்தல் (ஈறு, பற்களை வலுவூட்டக்கூடியது)

3. ஓங்காரம் உச்சரித்தல் ( ஒரு மணி நேரம்)

4. நடைப்பயிற்சி (7 கி.மீ)

5. சூர்ய நமஸ்காரம்

6. யோகப் பயிற்சிகள், தியானம்

7. புத்தக வாசிப்பு (காலை ஒன்றரை மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம்)

8. மாலை 6 மணிக்குள் இரவு உணவை அருந்துதல்

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.   

Friday, 27 December 2019

ஆக்கம்

பறவைச் சிறு உடல் மென் துடிப்பிலிருந்து
அருவிச் சாரலின் நுண்மையிலிருந்து
புலரியின் மேகச் சிவப்பிலிருந்து
ஒரு துளி மழையிலிருந்து
மலைப்பாதையின் மௌனத்திலிருந்து
ஆர்வம் கொண்டு கிளை பரப்பும் தீயிலிருந்து
வான்மீனின் இமைத்தலிலிருந்து
அணு அணு அணுவாய்
நீ
உருவம் கொண்டிருக்கிறாய்

Thursday, 26 December 2019

12 விழாக்கள் – சில வினாக்கள்


2020ம் ஆண்டில் 12 மாதங்கள் 12 விழாக்கள் எனத் திட்டமிட்டிருந்தேன். நண்பர்கள் பலர் இது குறித்து அறிந்து இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினர். எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதிகமாக எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கு நான் அளித்த பதில்களையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பயணத் திட்டத்தை உருவாக்கி விட்டீர்களா?

பயணத்திட்டம் என நண்பர்கள் உருவகித்துக் கொள்வது எப்போது கிளம்புகிறோம் எப்போது திரும்பி வருகிறோம் என்பதை மட்டுமே. என்னுடைய அனுபவத்தில் எனக்கு புறப்படுதலே முக்கியமானது. புறப்படுதல் என்றால் புறப்படும் கணம். அதற்கு முன் என்னுடைய லௌகிகப் பணிகளை முடித்து விடுவேன். பணிகள் முடிந்ததுமே புறப்படும் மனநிலை வந்து விடும். பயணம் குறித்த உற்சாகம் பிறந்து விடும். உற்சாகம் உருவானதுமே கிளம்பி விடுவேன்.

12 விழாக்களுக்கான சுருக்கமான பயணத்திட்டம் இதுவே. ஒவ்வொரு மாதமும் 7 நாட்கள். விழா நடைபெறும் இடத்துக்கு ரயிலில் செல்ல 2 நாட்கள். விழாவில் மூன்று நாட்கள். ஊர் திரும்ப 2 நாட்கள். (2+3+2=7).

2. பயண ஏற்பாடுகள் செய்து விட்டீர்களா?

பயண ஏற்பாடுகள் எனக் குறிப்பிடுவது ரயில் முன்பதிவு, செல்லும் ஊரில் தங்குமிடம் பதிவு செய்தல் ஆகியவையே. நான் அதற்கு பெரிய முக்கியத்துவம் தர மாட்டேன். நான் வசதிகளுக்கு எதிரானவன் அல்ல; ஆயினும் வசதிகளைப் பொறுத்து பயணத்தை முடிவு செய்பவனும் அல்ல. பயணத் துவக்கத்துக்கான நல்சமிங்ஞை கிடைத்ததும் கிளம்பி விடுவேன்.

3. முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யவில்லையெனில் பயணம் எப்படியிருக்குமோ என்ற கவலை ஏற்படாதா?

ஏற்படாது. நான் இந்தியாவெங்கும் சுற்றியவன். எத்தனையோ முறை சுற்றியிருக்கிறேன். செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்ததும் அங்கே அப்போது எனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்றார் போல் தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொள்வேன். பொதுவாக நான் தங்குமிடத்துக்கு குறைவாகவே செலவு செய்வேன்.

4. செல்லும் ஊரில் என்ன செய்வீர்கள்?

காலை சூர்யோதயத்துக்கு முன் ஊர் சுற்ற கிளம்பி விடுவேன். புதிய நிலத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே புத்துணர்ச்சி தரும். அந்த ஊரை அங்கே வாழும் மனிதர்களைப் பார்த்தவாறு சாலைகளில் நடந்து செல்வேன். மனம் உற்சாகமாக இருப்பதால் அப்பொழுதுகள் துல்லியமாக நினைவில் பதிவாகும். மனித முகங்களின் வழியாக நாம் அறியும் இந்தியா ஒன்றுண்டு.

5.செல்லும் ஊரில் எங்கு செல்வீர்கள்?

அந்த ஊரில் இருக்கும் தொன்மையான ஆலயங்களுக்குச் செல்வேன். இந்தியாவின் தொல் ஆலயங்கள் என்பவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உயிரோட்டமான உணர்வை உணரச் செய்பவை. பின்னர் அங்கேயிருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வேன். இந்திய வரலாற்றில் அந்த ஊர் எவ்விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பார்ப்பேன். அந்த ஊரின் பரபரப்பான கடைவீதிகளையும் சந்தைகளையும் சென்று காண்பேன். அந்த ஊரின் பொருளாதாரமும் மக்கள் வாழ்நிலையும் மக்கள் மனோபாவமும் எதனால் ஆனது என்பதைக் குறித்த நேரடி மனப்பதிவை அதன் மூலம் பெற முடியும்.

6. விழாக்கள் இந்த ஆண்டு பயணத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது எதனால்?

ஒரு பண்பாட்டு விழா என்பது அச்சமூகம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கொண்டுள்ள சமூக ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவது. விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பது என்பதை இந்திய மரபு தனது விழுமியமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது. விழாக்களை பல்லாயிரம் மக்களை தம் நகர் நோக்கி வரவேற்கும் வாய்ப்பாகவே இந்தியர்கள் கண்டுள்ளனர். எனவே இந்திய விழாக்கள் நம்மை வருக வருக என அழைக்கின்றன. அந்த பண்பாட்டு அழைப்பை ஏற்றே இந்த ஆண்டு முழுதும் விழாக்கள் என்னுடைய பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

7. சக பயணிகளுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் பயணிக்க உள்ள விழாக்கள் குறித்து இடங்கள் குறித்து அங்குள்ள மக்கள் குறித்து இந்தியப் பண்பாட்டிற்கு அந்த விழா வழங்கியுள்ள பங்களிப்பு குறித்து எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்கவும். விழாக்கள் நம் பேதங்களை அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்பே. எல்லா விழாக்களும் அவ்வாறே.
விழா நடைபெறும் நகரங்களில் அலைந்து திரியுங்கள். உங்கள் ஆழ்மனம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும்.

8. புறப்படுவதற்கு முன்னான மனநிலை எப்படி இருக்கிறது?

ரிஷிகேஷில் ஒவ்வொரு அந்திப் பொழுதும் கொண்டாட்டமே. மாலை 4 மணியிலிருந்து அந்த நகரமே கங்கையின் படித்துறைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இந்தியாவின் வெவ்வேறு பிரதேசங்களை அடையாளம் காட்டும் வெவ்வேறு வண்ண ஆடைகள் அணிந்த மக்கள் திரள். நெற்றிக் குங்குமம் அணிந்த பெண்கள், குதூகலிக்கும் குழந்தைகள், வண்ண மலர் நிறைந்த தீபத் தொன்னைகளை வாங்கி கையில் வைத்திருக்கும் ஆண்கள், இறை நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் முதியவர்கள், உலகெங்கிலுமிருந்து குவிந்திருக்கும் பயணிகள் என ரிஷிகேஷ் அணி பூண்டிருக்கும்.

கங்கைச் சுடராட்டுக்கு முன்பான மனநிலை இப்போது இருக்கிறது.     

Wednesday, 25 December 2019

கற்கை நன்றே


சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் காந்திய அறிஞர் திரு. தரம்பால் அவர்களின் The Beautiful Tree நூலை வாசித்து விட்டு அதனைப் பற்றி என்னிடம் மிகவும் சிலாகித்துப் பேசினார். அந்நூல் உ.வே.சாமிநாத ஐயரின் ‘’என் சரித்திரம்’’ நூலை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். உ.வே.சா கல்வி கற்ற காலத்தில் இந்தியக் கல்விமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முழுமையாகக் கைவிடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையிலும் தனது இறுதி மூச்சைத் திரட்டிக் கொண்டு செயல்பட்டதன் சித்திரமே அந்நூலில் உள்ளது என்று சொல்லி உ.வே.சா எழுதிய ‘’மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’’ என்ற நூலை வாசிக்கச் சொன்னேன்.

சுந்தர ராமசாமி ’’விஷ வட்டம்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். தமிழகத்தின் இன்றைய சூழலைக் குறிக்க அதுவே சரியான வார்த்தை.

தமிழ்நாட்டின் கல்வி சீரழிந்துள்ளது. திராவிட இயக்கங்களும் இடதுசாரிகளும் தமிழ்நாட்டின் கல்வியைச் சீரழித்துள்ளனர். தமிழ்நாட்டின் எல்லா கல்விச் சீர்கேடுகளுக்கும் இவர்களே எல்லா விதத்திலும் காரணம்.

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். ராஜாஜி தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள் அதிக நேரம் இயங்க வேண்டும் என்றார். இருக்கும் குறைவான கட்டமைப்பில் அதிக அளவில் மாணவர்களுக்குக் கல்வி தர பள்ளிகள் இரண்டு ஷிஃப்ட்டாக செயல்பட வேண்டும் என்று எண்ணினார். இது மாணவர்களுக்குப் பயன் தரக்கூடியது. ஆசிரியர்களுக்கு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியத்தை உண்டாக்குவது. எனவே அதனை ஆசிரியர்கள் எதிர்த்தனர். ஆசிரியர்களுக்கு ராஜாஜி மேல் இருந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாகத் திருப்பிக் கொண்ட திராவிட இயக்கம் ‘’ஷிப்ட் முறையை’’ குலக்கல்வி திட்டம் எனத் திரித்து அதற்கு ஜாதி சாயம் பூசினர். தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களுக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவு அங்கிருந்து துவங்குகிறது. இன்றுவரை நீடிக்கிறது. தமிழ்நாட்டின் கல்விச் சூழல் அழிவை நோக்கிச் சென்றதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று இது.

மூன்று தலைமுறைகள் கடந்து விட்டன. அரசாங்கம் அளிக்கும் கல்வி என்பது சமூகங்களில் பெரும் மாற்றத்தை உருவாக்கக் கூடிய சாதனம். தமிழ்நாட்டில் அது சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதே யதார்த்தம். இன்றும் மத்திய அரசாங்கத்தின் நிதியும் உலக வங்கி அளிக்கும் நிதியுமே தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று அதில் உள்ள புதிய கட்டிடம் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது, ஆய்வகம் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது, கழிவறைகள் எந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது என்று பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களே அவை. மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்துகிறது அல்லது உலக வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது. கல்விக்காக மாநில அரசாங்கம் செலவழிக்கும் தொகை என்பது என்ன? செலவழிக்கும் முழுத் தொகையும் ஆசிரியர்களின் ஊதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

மிக அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாணவர்களின் கற்றலை அளவிட அளவுகோல் எது? தேர்வுகள். ஆனால் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. எனவே அனைவரும் ஒன்பதாம் வகுப்பு வரை எதுவும் கற்காமல் வந்து சேர முடியும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதுவும் கல்லாமல் வந்து சேர்ந்த மாணவன் தேர்ச்சி அடையாமல் போவானே? ஆசிரியர்களும் அரசாங்கமும் பார்த்தார்கள். மதிப்பீட்டை தளர்வாக வைத்து அதிலும் ஜோடிக்கப்பட்ட மதிப்பெண்களை வழங்கி மாணவர்களைத் தேர்ச்சி அடையச் செய்கின்றனர். உலகில் எந்த சமூகத்திலாவது இது போன்ற ஓர் அவலம் இருக்குமா என்று தெரியவில்லை.

நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆரம்பக் கல்வியைப் பயில்கின்றனர். அங்கே அடிப்படைப் பயிற்சியே நூல் வாசிப்பு தான். ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒரு நூல் அளிக்கப்படும். அதனை மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும். அந்நூல் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அந்நூல் குறித்து பதினைந்து நிமிடம் பேச வேண்டும். வாசிப்பு, எழுத்து, பேச்சு ஆகியவற்றுக்கான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் சுயமாக மாணவர்கள் சிந்திக்கும் திறனைப் பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளின் திறனின்மைக்குக் காரணம் திராவிடக் கட்சிகள். ஈசலெனப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் திராவிடக் கட்சிகள். தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை திராவிடக் கட்சியினரைச் சார்ந்தவை. அவர்களுடைய கல்லூரிகளில் சேர்க்கை எவ்விதத்திலும் குறையக் கூடாது என்பதற்காகவே பொறியியல் பட்டப்படிப்பில் சேர இருந்த குறைந்தபட்ச மதிப்பெண் நீக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சியடைந்த அனைவரும் பொறியியலில் சேரலாம் என்று உருவாக்கப்பட்டது. எல்லா நுழைவுத் தேர்வுகளுக்கும் எதிராக இருப்பவர்கள் திராவிடக் கட்சிகள்.

எந்த சமூகத்தின் கல்வியும் அச்சமூகம் எதிர்கொள்ளும் பிரதிபலிக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பள்ளிகள் மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டிய குறைந்தபட்ச விஷயங்கள் என நான் கருதுவதைப் பட்டியலிட்டுள்ளேன்.

1. பள்ளிக் கல்வியை 12 ஆண்டுகள் பயிலும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு இந்திய மாநிலம் அதன் தலைநகரம் அதில் உள்ள மாவட்டங்கள் அங்கு பேசப்படும் மொழிகள் ஆகியவற்றை அறிய வேண்டும்.

2. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பை முற்றும் அறிந்திருக்க வேண்டும்.

3. இந்தியாவின் முக்கியமான பேரரசுகள் ஆற்றிய மகத்தான மக்கள் நலப் பணிகள் குறித்து அறிய வேண்டும்.

4. இந்திய ராணுவம் குறித்த தகவல்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

5. மனித உடல், நோய்கள், உடற்பயிற்சி மற்றும் யோகா குறித்து விளக்கப்பட வேண்டும். தினமும் எல்லா மாணவர்களுக்கும் அரைமணி நேரம் யோகப்பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

6. ரயில் அட்டவணையைப் பயன்படுத்துதல், ரயில் முன்பதிவு படிவங்கள் நிரப்புதல், வங்கிப் படிவங்களை நிரப்புதல் குறித்து சொல்லித் தர வேண்டும்.

7. வணிகத்தின் அடிப்படைகள் போதிக்கப்பட வேண்டும்.  

Tuesday, 24 December 2019

ஒரு மலரில்
எப்போதுமே
வியப்பதற்கோ
புதிதாக நோக்குவதற்கோ
அறியாத ஒன்றை உணர்ந்து கொள்வதற்கோ
அதன்
மென்மணத்தை
பொறியியலை
அளவற்ற தனிமையை
பிரமிப்பதற்கோ
ஒன்று
இருந்து கொண்டே யிருக்கிறது

உன்னுடன்
நடந்த போது
சொன்னேன்

நீ
நுண் உருவங்கள்
சுழன்று பெருகும்
சிவந்த கோலம்
இடப்பட்டிருந்த
கரம் ஒன்றில்
நீண்ட இரு விரல்களுக்கு
இடையே
காம்பு புவி நோக்கியும்
இதழ்கள் வான் நோக்கியும்
மீண்டும் பூத்த
மலரொன்றை
ஏந்தியிருந்தாய்

Monday, 23 December 2019

மௌனங்களுடன்
துல்லியமான அமைதியுடன்
பனி பொழிந்து கொண்டிருக்கிறது

துவக்க ஆயத்தங்களை
மேற்கொள்கின்றன
வெளிச்சத்தின் ரேகைகள்

ஒரு புதிய புலரியில்
ஒரு புதிய பகலில்
ஒரு புதிய நாளில்
கிரீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன
புள்ளினங்கள்

நம்பிக்கையின் பிராத்தனைகள்
ஒலிக்கத்
தொடங்குகின்றன

உயிரை
மலரச் செய்யும்
கனிகளை
மேலும்
இனிமை கொள்ளச் செய்யும்
தானிய மணிகளை
முற்றச் செய்யும்
விதைச்சொல்லை
உச்சரித்தவாறு
சாலையில் நடக்கும்
இந்த ஒற்றைப்பயணி யார்
எங்கிருந்து வருகிறான்
எங்கே செல்கிறான்

Sunday, 22 December 2019


மாலை வானின் முதல் விண்மீன்
ஒளிரத் துவங்கும் கணத்தில்
உன் பாதங்கள்
மண் தொடுகின்றன
வான் பார்க்கிறாய்
வலசைப் பறவைகளை
அந்தி அமைதியை
குளிர்ப் பொழுதை
சிற்றகலின் சுடர் மின்னுகிறது
கருவறைத் தெய்வத்தின் முகத்தில்
காற்றில் கரையும் மணியோசை
இரவு என்பது எவ்வளவு நீண்டது
பிரிவைப் போல
நட்சத்திரங்கள் துணையிருக்கும் வெளியில்
உனது மௌனம்
நுண்மை கொள்கிறது
உயிரென