Thursday, 30 January 2020

நுண் மாற்றங்கள்


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக இருக்கிறார். அவர் இங்கே மயிலாடுதுறைக்கு அருகே ஒரு கிராமத்தில் விவசாய நிலம் வாங்க விரும்பினார். அவர் இங்கு வருவதற்கு உடனடியாக வாய்ப்பின்றி சில ஆண்டுகளுக்கு அமெரிக்காவிலேயே இருந்தாக வேண்டும் என்ற நிலை. எனவே நான் முன்னின்று அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் வாங்கித் தந்தேன். நிலத்தைக் கிரயம் பேசியது முதல் பத்திரப்பதிவு செய்து பட்டா மாற்றம் செய்தது வரை என்னுடைய பணி. வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு நான் இது போல உதவிகள் செய்வதுண்டு. நான் எந்த பணியையும் ஒரே மூச்சாகச் செய்யக் கூடியவன். எனது இந்த இயல்பு சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் உதவும்.

நல்ல மேட்டுப்பாங்கான வடிகால் வசதியுள்ள தண்ணீர் மேல்மட்டத்தில் இருக்கும் நிலத்தை நண்பருக்கு வாங்கிக் கொடுத்தேன். அதாவது நண்பர் குடும்ப உறுப்பினர்களுக்கு. விலை கிரயம் பேசி கிரயத் தொகை முழுவதும் கொடுக்கப்பட்டது. பத்திரப்பதிவு செய்யும் நாள் வந்தது.

நான் பத்திரம் எதுவும் வாங்கவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு பத்திரம் வாங்கினால் சில ஆயிரம் ரூபாய் பத்திரம் வாங்குவதற்கான கமிஷனாகத் தர வேண்டும். அது எனக்கு அனாவசியம் என்று பட்டது. நான் பத்திர மதிப்புக்கு வங்கி வரைவோலையாக எடுத்துக் கொடுத்தேன். பத்திரத்துக்கான கமிஷன் தொகையில் கால்பங்கு கூட அதற்காக ஆகவில்லை. பத்திரப்பதிவுக்கு தாக்கல் செய்தோம். அச்சிடப்பட்ட சாதாரண காகிதத்தில் பத்திர வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த அலுவலகத்தில் அவ்வாறு பதிவு செய்யப்படுவது அநேகமாக முதல் முறை என்றார்கள்.

அங்கே இருந்த அலுவலக ஊழியர் ஒருவர், ‘’தம்பி! இங்கே ஒரு பொது வழிமுறை என்ற ஒன்று காலகாலமாக உருவாகியிருக்கிறது. அதை ஏன் மாற்றுகிறீர்கள்?’’ என்றார்.

‘’நான் எதையும் மாற்றவில்லை. அரசாங்கம் அனுமதிக்கும் வழிமுறைகளில் ஒன்றை எங்களுக்கு லாபம் அளிப்பது என்பதால் செய்திருக்கிறேன்’’ என்றேன்.

‘’இதனால் எங்கள் வேலைப்பளு கூடும்’’ என்றார்.

‘’சில ஆண்டுகளுக்கு முன்னால் போலி முத்திரைத் தாள்கள் சந்தையில் நுழைந்தன. அதைத் தடுக்க நான் பின்பற்றியது நல்ல முறை’’ என்றேன்.
‘’சில விஷயங்களை மாற்ற முடியாது தம்பி’’ என்றார்.

பின்னர் பட்டா மாற்றம் செய்ய வருவாய்த்துறையில் விண்ணப்பங்களைத் தந்தேன். அதனைப் பார்த்து விட்டு அங்கிருந்த ஒருவர், ‘’நான் 21 வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போது 57 வயது. அடுத்த வருடம் ரிடையர் ஆகிறேன். இந்த 36 வருடத்தில் வெறும் தாளில் அச்சிடப்பட்ட இந்த மாதிரியான பத்திரத்தை முதல்முறையாக இப்போது தான் பார்க்கிறேன்’’ என்றார்.

அரசாங்கம் இப்போது பத்திரப்பதிவுத் துறையை முற்றிலும் கணிணிமயமாக்கியுள்ளது. முத்திரைத் தாளுக்குரிய தொகையை பத்திரமாக வாங்க வேண்டிய அவசியமில்லை; டெபிட் கார்டு மூலம் இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் இணையதளம் முத்திரைத் தாள் பயன்படுத்துவதை கட்டாயமில்லை என்கிறது.

மாற்றம் நிகழாமல் இல்லை; மெல்ல நிகழ்கிறது. அவ்வளவே.

Tuesday, 28 January 2020

ஒரு பெண்

ஒரு பெண்
அவள் பெயர் காதல்
எளிமையும் அழகுமான
அவள் பெயர் காதல்
அவள் இன்று இல்லை
அவள் இங்கு இல்லை

சிறு தேவதையின் முகம்
தெய்வத்தின் கருணை இதயம்
அவள் மலர்கையில்
மலர் சிரிக்கிறது

சின்னஞ்சிறு பறவைகள் கூடடையும்
ஆலமரத்தைப் போல உயரமானவள்
அவள் சின்னஞ்சிறு பெண்
ஆனால் கண்களின் மொழியில்
இதயத்தை அறிபவள்
அவள் பெயர் காதல்
அவள் இன்று இல்லை
அவள் இங்கு இல்லை
அவள் ஒரு பெண்

(ஒரு ஹிந்திப் பாடலின் தமிழாக்கம்)

Monday, 27 January 2020

பழக்கம்

சில மாதங்களுக்கு முன், ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும் எனது நண்பர் ஒருவரைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

தேவையும் அவசியமும்

இப்போது மீண்டும் இன்னொரு நிகழ்ச்சி. இன்னொரு நண்பருக்கு.

சென்ற வாரம் அவரைச் சந்தித்தேன். மங்கல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சென்று வந்ததாகச் சொன்னார். நான் சந்தித்த தினத்துக்கு முதல் நாள் கிளம்பியிருக்கிறார். நான் பார்த்த அன்று காலை ஊர் திரும்பியிருந்தார். முதல் நாள் காலை அவர் கிளம்பிய நேரம் காலை 4 மணி.

‘’ரயிலில் தானே சென்றீர்கள்?’’ யதார்த்தமாகக் கேட்டேன்.

‘’இல்லை. பஸ்ஸில் சென்றேன். ‘’

‘’ஏன் பஸ்ஸில் சென்றீர்கள். அந்த நேரத்துக்கு சென்னை தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா இருக்குமே? திண்டுக்கல்லுக்கு காலை எட்டு மணிக்கே சென்று விடுமே?’’

‘’அந்த ரயில் இருப்பதை மறந்து விட்டேன்’’

‘’உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதே. முதல் நாள் இரவே என்னென்ன ரயில்கள் இருக்கிறது எனப் பார்த்திருக்கலாமே? பஸ் ஸ்டாண்ட் வந்த பின்பு கூட அந்த ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்து விட்டதா எனப் பார்த்து அறிந்திருக்கலாமே?’’

‘’காலை 4 மணிக்கு பஸ் ஏறினேன். பஸ் எடுக்க 4.45 ஆனது. அப்போதுதான் அந்த்யோதயா ஞாபகம் வந்தது. ரயில் ஆப்-ஐ ஆன் செய்து பார்த்தேன். ரயில் பாபநாசத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் அந்த ரயிலின் இயக்கத்தை ஜி.பி.எஸ்-ல் பார்த்துக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்லுக்கு மதியம் ஒரு மணிக்குச் சென்றேன். ரயில் அப்போது திருநெல்வேலியைத் தாண்டியிருந்தது. ’’

ஒரே நேரத்தில், பஸ்ஸிலும் மானசீகமாக ரயிலிலும் பயணித்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

Thursday, 23 January 2020

பறவைச் சத்திரங்கள்

அகமதாபாத் சாலைகளில் பரவலாக பறவைகளுக்கான சத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரம். கல், இரும்பு ஆகியவற்றால் பத்து அடி உயரத்திலிருந்து இருபதடி உயரம் வரை கொண்டதாக கீழ்ப்புறம் தூண்களாகவும் மேற்புரம் மாடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மாடங்களிலும் நீர்க்கலன்கள் உள்ளன. அவை பறவைகள் நீர் அருந்துவதற்கானவை. அவை தினமும் நீரால் நிரப்பப்படுகின்றன. தூண்களைச் சுற்றி குறைந்தது நூறு சதுரடி இடம் சுவரிடப்பட்டுள்ளது. பறவைகள் கூட்டமாக இந்த இடங்களில் அமர்கின்றன. நகரின் பெரும்பாலான முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் இவை உள்ளன. இவற்றைச் சுற்றி சிறுதானியங்கள் விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் கூடையிலும் தள்ளுவண்டிகளிலும் தானியங்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். நகரவாசிகள் பலர் தானியங்களை வாங்கி பறவைகள் குழுமியிருக்கும் பரப்பில் தூவுகின்றனர். பறவைகள் ஆர்வத்துடன் கொரிக்கின்றன. அகமதாபாத் நகரில் பார்ப்பதற்கு இனிய காட்சிகளில் இதுவும் ஒன்று.

Tuesday, 21 January 2020

இந்த தவிப்பை
இந்த மௌனத்தை
இந்த துயரத்தை

கணந்தோறும்

சொல் சொல் லாய்
உரு ஆக்கிக் கொண்டிருக்கிறேன்

லாவா குளிர்ந்த மலையின் இடுக்கொன்றில்
வேர் விட்டிருக்கின்றன
பசும்புற்கள்

Monday, 20 January 2020

சபர்மதி ஆசிரமம்

சென்ற வாரம் அகமதாபாத் சென்றிருந்த போது, சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றேன். காந்தியின் வாழ்வில் ’’சபர்மதி ஆசிரமம்’’ மிக முக்கியமான பங்கை வகித்திருக்கிறது. 
தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய போது, முக்கியமான பல போராட்டங்களை சபர்மதி ஆசிரமத்திலிருந்தே அறிவித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும் உப்பு சத்யாக்கிரகமும் இங்கே அறிவிக்கப்பட்டவை.

காந்தியின் வாழ்வில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. காந்தி தன் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலுமே கூடி வாழ்வதையும் இணைந்து கல்வி பயில்வதையும் சேர்ந்து பணிகளை ஆற்றுவதையுமே செய்திருக்கிறார். மேற்கத்திய சமூக அமைப்பு மனிதனை ஒரு தனியனாகப் பார்க்கிறது. ஒரு தனியனுக்கான சமூகக் கடமைகளும் உரிமைகளும் மட்டுமே அவனுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. காந்தி அரசியலுக்கு வந்த பின்னர் அவர் வசித்த இடங்கள் அனைத்துமே நூற்றுக்கணக்கானோர் உடன் வசிக்கும் ஆசிரமங்கள். தனது வசிப்பிடத்தைச் சுத்தம் செய்வதிலிருந்து ஆசிரமத்தின் எல்லா அன்றாடச் செயல்பாடுகளிலும் தினமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


இன்று இந்தியர்களாகிய நமது வாழ்க்கையில் நாம் சமூகப் பிரக்ஞை என்பதை முழுமையாக இழந்திருக்கிறோம். தன்னலம் என்ற ஒன்றே வாழ்வை வழிநடத்திச் செல்ல இயலும் என்ற எண்ணம் மட்டுமே நம் சிந்தனையை நிரப்பியுள்ளது. சக மனிதர்களை எப்போதும் சந்தேகிக்கும் நம்ப மறுக்கும் போக்கு நம்முள் உருவாகி விட்டது.

ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்

என பிராத்திக்கிறது உபநிஷத்.

காந்தி இந்தியர்களிடம் அந்த ஒருமைப்பாடு உருவாக வேண்டும் என விரும்பினார்.

Sunday, 19 January 2020

காந்தியும் தேசமும்

இந்திய நிலத்தில் பயணிப்பது என்பது எனக்கு எப்போதுமே விதவிதமான மனநிலைகளை வெவ்வேறு மனோபாவங்களை எப்போதும் உருவாக்குவதாக இருக்கிறது. மோட்டார்சைக்கிளில் பயணிப்பது எப்போதுமே இனிமையானது. மண்ணின் மாற்றத்தை மெல்ல உள்வாங்கி பிரதேசங்களை போதிய அவகாசத்துடன் அவதானித்து பல்வேறு மனிதர்களைக் கண்டு பேசி உரையாடி என நிறைய வாய்ப்புகளுடன் கூடிய பயணம் அது. நான் மிகவும் விரும்புவதும் கூட. இரயில் பயணங்கள் சக மனிதர்களின் ஈடுபாடுகளை அக்கறைகளை உணர்ந்து கொள்ள உதவுவது. தில்லி நான் மிகவும் விரும்பும் நகரம். ஏன் என்று யோசித்துப் பார்த்தால், அங்கே இந்தியாவின் எல்லா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களையும் காண முடியும். இந்திய முகங்கள் அலையென எழுந்து நதியெனப் பெருக்கெடுத்து நமக்குக் காணக் கிடைக்கும். தில்லியை ‘’மினி இந்தியா’’ என்பார்கள். அது உண்மைதான். தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் என்றால் அது அதிவேக ரயில். இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பினால் மறுநாள் காலை விஜயவாடா. மதியம் 2 மணிக்கு நாக்பூர். இரவு போபாலைக் கடந்து விடும். ஜான்சியை நெருங்கி விட்டால் தில்லிக்குப் பக்கத்தில் வந்து விட்டதான உணர்வு. காலை ஏழு மணிக்கு தில்லி. 31 மணி நேரப் பயணம். துரந்தோ இன்னும் விரைவாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறது.

வெளிநாடுகளில் பணி புரியும் எனது நண்பர்கள் இந்தியா வரும் போது என்னைச் சந்திப்பதுண்டு. அப்போது அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். வெளிநாடுகளில் அந்நாடு குறித்த அந்நாட்டுத் தலைவர்கள் குறித்த கல்வி பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை? நமது நாட்டைப் பற்றி ஏன் நம் கல்வி நிலையங்கள் எவ்விதக் கல்வியும் அளிப்பதில்லை எனத் துயரத்துடன் விசாரிப்பார்கள். அவர்களின் கவலையை நானும் பகிர்ந்து கொள்வேன். 

நாம் காந்தியிலிருந்து துவங்கி சிந்தித்துப் பார்ப்பது இந்த விஷயத்தில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த போது இந்தியர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகநிலை மற்றும் கல்வி ஆகியவற்றில் விடுதலை பெற வேண்டும் என விரும்பினார். ஆகவே இந்த நான்கு தளங்களிலும் தன் செயல்பாடுகளை முன்னெடுத்தார்.

அரசியல் தளத்தில் தனது கட்சியின் உறுப்பினர் ஆண்டு சந்தாவை நாலணா (25 பைசா) என்றாக்கினார். ஆயிரக்கணக்கான சாமானியர்களை அரசியலுக்குள் கொண்டு வந்தார். இந்திய கிராமங்கள் மற்றும் கிராமத் தொழில்கள் மூலமே இந்தியர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற முடியும் என்பதால் இந்தியத்தன்மை வாய்ந்த பொருளியல் கொள்கைகளை முன்வைத்தார். மானுட சமத்துவத்தை இந்திய சமூகங்களில் கொண்டு வர சமூகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான உரையாடலையும் நம்பிக்கையையும் கொண்டு வர நினைத்தார். மதிப்பீடுகளைக் கற்பிக்கும் கல்வியை அறிமுகம் செய்தார்.


இன்று தமிழ்நாட்டின் கல்வி என்பது மிகப் பரிதாபகரமான நிலையை அடைந்திருக்கிறது. இங்கே கற்பிக்கப்படும் கல்வியால் சாமானிய மக்களுக்கு எந்த வித பலனும் இல்லை. பெரும்பாலானோரை பயனற்ற கல்வியே சென்றடைகிறது என்பதாக நான் நினைப்பது:

1. தமிழ்நாடு விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்ட நாடு. கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்களுக்கு விவசாயம் குறித்த எவ்விதமான அறிமுகமும் பாடப்புத்தகங்களில் வழங்கப்படுவதில்லை.  நெசவுத்தொழில் குறித்த அறிமுகமும் இல்லை.

2. மொழிப்பாடங்களின் தரம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த மொழிப்பாடத்தின் தரத்தையும் இப்போதுள்ள எட்டாம் வகுப்பு பாடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியக்கூடிய உண்மை இது.

3. இந்திய நாடு குறித்த முழுமையான விபரங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. நாடு குறித்த தரவுகள் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியை முடிக்கும் எவருக்கும் முழுமையாகத் தெரியும் என்ற நிலையை சர்வசாதாரணமாக உருவாக்க முடியும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. நாடு குறித்த தரவுகள் என்பது இந்திய நாட்டின் பரப்பளவு எவ்வளவு, இந்தியாவின் சுற்றளவு எத்தனை கி.மீ, இந்தியாவில் பாயும் பெருநதிகள் யாவை, இந்தியாவின் சிறுநதிகள் எத்தனை, போன்றவை. இவை மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பன்னிரண்டு ஆண்டும் போதிக்கப்பட வேண்டும்.

4, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வியும் விளையாட்டும் இல்லவே இல்லை.

5. தேசத் தலைவர்களின் வாழ்க்கை குறித்து 12 ஆண்டும் போதிக்க முடியும். ஆனால் அவை மிகக் குறைவாகவே உள்ளன.

6. வணிகம், சுயதொழில் ஆகியவை குறித்து எந்த அறிமுகமும் இல்லை.

7. குடிமைப் பண்புகள் நம் சமூகத்தில் அனைவருக்குமே தேவை. அவை குறித்து எதுவுமே கற்பிக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு தவறான பாதையில் நெடுந்தூரம் நெடுநாட்கள் பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி கல்வியை சமூக மாற்றத்துக்கான கருவியாகக் கண்டார். அவர் உருவாக்கிய - விரும்பிய கல்விமுறையில் கீழ்க்காணும் அம்சங்கள் இருந்தன.

1. உயர் விழுமியங்களுக்கான மேலான வாழ்க்கைக்கான பிராத்தனையை காந்தியின் கல்வி கொண்டிருந்தது.

2. மூளை உழைப்புக்குச் சமமாகவே உடல் உழைப்புக்கும் அதில் இடம் இருந்தது.

3. குடிமைப் பண்புகளும் சுகாதாரமும் அதில் இருந்தன.

4. மொழியும் கைத்தொழிலும் கற்றுத் தரப்பட்டன.

5. காந்திய முறைப்படி கல்வி கற்ற ஒருவரால் தனது வாழ்க்கைக்கான பணிகளை பிறரை மிகக் குறைவாய் மட்டுமே சார்ந்து வாழ முடியும்.

இப்போதுள்ள கல்விமுறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.





Saturday, 18 January 2020

கதர்

கதராடை என்பது கைநெசவால் நெய்யப்பட்ட பருத்தி ஆடையைக் குறிக்கும். கதர் என்ற சொல்லுக்குப் புரட்சி என்ற அர்த்தமும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனுக்குத் தேவைப்பட்ட ‘’அவுரி’’ என்ற சாயம் பயிரிட இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் விளைவித்த பருத்தி கட்டாயமாக மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இயந்திர நெசவின் மூலம் ஆடைகள் உருவாக்கப்பட்டு அவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. மிகக் குறைவான விலைக்குப் பருத்தியைக் கொள்முதல் செய்ததில் கிடைக்கும் லாபமும் நல்ல விலைக்கு ஆடைகளை விற்பதில் கிடைக்கும் லாபமும் சேந்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர் பிரிட்டிஷார். 

பல நூற்றாண்டுகளாக உலகிலேயே மிக அதிக பருத்தியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சார்ந்தவை.

நான் சென்ற வாரம் அகமதாபாத் சென்றிருந்த போது மேற்கொண்ட ரயில் பயணம் 33 மணி நேரம் நீண்டது. சென்னைக்கும் அகமதாபாத்துக்கும் இடையேயான நவஜீவன் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தேன். சென்னைக்கும் தில்லிக்கும் இடையேயான தூரம் சென்னைக்கும் அகமதாபாத்துக்கும். இதில் ஒரு சுவாரசியமான அம்சம் ஒன்றைக் கவனித்தேன். நவஜீவன் எக்ஸ்பிரஸ் தனது 33 மணி நேரப் பயணத்தில் தோராயமாக 2 மணி நேரம் தமிழ்நாட்டில் செல்கிறது. 12 மணி நேரம் ஆந்திராவில் (பழைய ஆந்திரா - இப்போது ஆந்திரா, தெலங்கானா), 12 மணி நேரம் மகாராஷ்ட்ராவில். ஆறிலிருந்து ஏழு மணி நேரம் குஜராத்தில் என அந்த வண்டி செல்கிறது. இந்த மூன்று மாநிலத்தையும் ரயிலில் கண்டவாறு பயணிக்கும் எவரும் அறிய முடியும் - இந்த மாநிலங்களில் விவசாயம் செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதை. இன்றும் இந்த பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு பருத்தியை விளைவித்தலே வாழ்க்கையைத் தருவதாக இருக்கிறது. 

மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்ததும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்குள் விவசாயிகளையும் எளிய மக்களையும் கொண்டு வர விரும்புகிறார். அப்போதிலிருந்து அவர் பருத்தி ஆடைகளையே அணியத் துவங்குகிறார். இந்திய விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணம் ஒன்றைப் பெறுகிறது. தனது தொண்டர்கள் ஒவ்வொருமே கைத்தறியால் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்கிறார். அது ஒரு குறியீடு. நாங்கள் விவசாயத்தை விவசாயிகளை உழைப்பை உழைப்பின் மேன்மையை மிகப் பெரிதாய் மதிக்கிறோம் என்பதற்கான குறியீடு. இந்தியப் பெண்களை இராட்டையால் நூல் நூற்க பணிக்கிறார். அந்த இராட்டை இந்தியாவின் வெவ்வேறு ஊர்களில் சுழன்ற போது ஒரு சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஒரு தேசம் தன் எதிர்ப்பைத் திரட்டிக் கொண்டிருக்கிறது என்பது பிரிட்டிஷாருக்குப் புரிந்து போனது. 

உணவு உற்பத்தியில் நாம் பல ஆண்டுகளாகத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். நமது மிகப் பெரிய ஜனத்தொகைக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்கிறோம். எங்கே ஆற்றுப்பாசனமும் கால்வாய்ப் பாசனமும் சாத்தியமாயிருக்கிறதோ அங்கே நெல்லும் கோதுமையும் விளைகிறது. ஆனால் பருத்தி விவசாயிகள் இலகுவான நீர்ப்பாசனம் அற்ற பகுதிகளில் போராடி விவசாயம் செய்கின்றனர். கைத்தறி நெசவில் ஈடுபடும் நெசவாளிகள் மௌனமாகத் தங்கள் தறியை இயக்கிக் கொண்டுள்ளனர். உண்ணும் உணவுக்குச் சமமானது உடுத்தும் உடை. பருத்தி விவசாயிகளையும் கைத்தறி நெசவாளிகளையும் காப்பது இந்திய மக்களின் கடமை. 

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை தேசத்தை தேசமக்களை கணமும் நினைவில் அகற்றாமல் பணி புரிந்த மகத்தான தலைவர்கள் வழிநடத்தினர். மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பால கங்காதர திலகர். கதர் நம் போராட்டத்தின் சின்னமாக ஆன போது நாம் அரசியல் விடுதலையை வென்றெடுத்தோம். 

நமது நாட்டு மக்கள், பருத்தி விவசாயிகளையும் கைத்தறி நெசவாளர்களையும் குறித்து சிந்திக்கும் போது நமது விடுதலை அதன் அடுத்த பரிமாணத்தை அடையும்.


Friday, 17 January 2020

நல்வரவு


ஜனவரி 14 அன்று காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு. அப்போது, திருமதி. ஷமிமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்பெண் வசிக்கும் கிராமத்தின் மண்ணும் சாலைகளும் நான்கடி உயரத்துக்கு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது. எந்த மோட்டார்வாகனமும் அதில் செல்ல இயலாது என்ற நிலைமை. அந்நிலையில் அப்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் தூக்கியவாறு இந்திய ராணுவத்தின் நூறு ஜவான்களும் அந்த கிராமத்தின் 40 பொது மக்களும் நான்கு மணிநேரம் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கே குழந்தை பிறந்துள்ளது.

இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

அதன் காணொளியைக் காண கீழே கிளிக் செய்யவும்.

பனியும் பணியும்


Thursday, 16 January 2020

மகர சங்கராந்தி

இந்தியா ஒரு விவசாய நாடு. பள்ளிப்பாடங்களில் பலமுறை இதனைப் படித்து தேர்வுகளில் பதிலாக எழுதியிருப்போம். எனினும் நாம் - நமது எல்லா செயல்கள் - நமது பழக்கவழக்கங்கள் - நமது பண்பாடு என அனைத்தையுமே இந்த ஒரு வரியிலிருந்தே துவங்கி நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைப் புரிந்து கொள்ள நமது மண்ணின் விவசாயத்திலிருந்தே நாம் எதையும் துவங்க வேண்டும். நமது நாட்டுக்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டின் வரலாறும் பண்பாடும் அந்த நாட்டின் விவசாயத்திலிருந்தே துவங்குகிறது. துவக்கம் ஒரே புள்ளியிலிருந்து என்றாலும் மானுடப் பண்பாட்டுக்கு நாம் அளித்திருக்கும் பங்களிப்பில் நம் நாடு உலகின் எந்த நாட்டை விடவும் பல படிகள் முன்னால் இருக்கிறது. 

இன்றும் இந்திய நிலத்தில் பயணிக்கும் போது நாம் ஒன்றை உணரலாம். மாநகரங்கள், நகரங்கள், சிறுநகரங்கள் ஆங்காங்கும் அவற்றுக்கு இடையே வான் போன்று விரிந்த பெரும் நிலப்பரப்பு எங்கும் பரவியும் இருப்பதைக் காண முடியும். இங்கே பெரும் பண்ணைகள் மிக மிகக் குறைவே. இரண்டு ஏக்கரிலிருந்து ஐந்து ஏக்கர் வரையிலான நிலத்தை உரிமையாகக் கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளே இன்றும் நாடெங்கும் இருக்கிறார்கள். இந்திய வரலாறு குறித்த ஆரம்பகால தகவல்கள் ஐயாயிரம் ஆண்டுகளாகக் கிடைக்கின்றன எனக் கொண்டால் அன்றிலிருந்து இன்று வரை சிறு ஏற்ற இறக்கங்களுடன் ஏறக்குறைய இதே நிலையே நீடிக்கிறது. இந்த அடித்தளத்திலிருந்தே இந்தியப் பண்பாட்டின் எல்லா சாதனைகளும் எழுந்து வந்துள்ளன.

இந்தியப் பண்பாடு ஏன் நதிகளை அன்னையராகக் கருதுகிறது? இந்த கேள்விக்கான பதிலை எளிமையாகக் கூற முடியும். எங்கே நதிகள் பாய்கின்றனவோ அந்த மண் விளைச்சலை அமோகமாய்த் தருகின்றது. விளைச்சல் நல்ல முறையில் இருக்கும் பிரதேசத்தில் இரும்புக் கருவிகள், கலை நுட்பம் வாய்ந்த பொருட்கள், தறி நெசவு, தச்சு வேலை மற்றும் கட்டிடத் தொழில் ஆகியவை சிறப்பாக அமைகின்றன. அங்கே மனிதர்கள் குழுமுகிறார்கள். அவர்களை நெறிப்படுத்தி ஓர் அரசை உருவாக்க பொது நியதிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அரசும் நிர்வாகமும் மக்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அதனால் வளர்ச்சி சாத்தியமாகிறது. வளர்ச்சியை அடிப்படையாய்க் கொண்ட அரசுகள் நீடித்து நிற்கின்றன.

இந்தியாவில் நீர், மண், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை இறை வடிவமாகக் கருதப்படுவதற்கு காரணம் அவை விவசாயத்துடன் - விவசாயியின் மனநிலையுடன் நேரடியான தொடர்புடையவை என்பதே. இந்தியாவில் சூரியன் கடவுளாக வழிபடப்படுவது இந்திய வரலாறு குறித்த துவக்க கால குறிப்புகளிலிருந்தே தெரிய வருகிறது. இராமாயணத்தில் இராமனுக்கு அகத்தியர் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். மகாபாரதத்தில் கர்ணன் சூர்யபுத்திரனாகக் கருதப்படுகிறான். ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் சௌரம் ஒன்று. 

இந்தியாவின் பாரம்பர்யமான நாட்காட்டிகள் விவசாயத்துக்காக உருவாக்கப்பட்டவை என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று. புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பது நிரூபணவாத அறிவியல் படி நிறுவப்பட்டதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் என எல்லா இந்திய நாட்காட்டிகளிலும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற பகுதிகளிலும் நாட்காட்டிகள் சற்றேறக்குறைய 365 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் என்பதை மதத்துடன் தொடர்புபடுத்தும் ஒரு பிரச்சாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அதன் அடிப்படை விவசாயத்துக்கானது. எந்த மாதம் எப்போது மழைப்பொழிவு இருக்கும் என்பதைக் கணித்து அதன்படி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட கணக்கீடே பஞ்சாங்கம் என்பது.

இந்தியாவில் நாம் இன்றும் நினைவில் கொள்ளும் பேரரசுகள் எவை என்று யோசித்துப் பார்த்தால் அவற்றுக்கு சில பொதுத் தன்மைகள் இருப்பதை உணர முடியும்.  அவை பாசன வசதிகளைப் பெருக்கிய அரசுகளாக இருக்கும் அல்லது சாலைகள் மூலம் நகரங்களை இணைத்த அரசுகளாய் இருக்கும். 

இன்றும் சென்னை மக்கள் அருந்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு துளி நீரும் சோழ மன்னர்கள் தம் மக்களைக் கொண்டு தம் மக்களுக்காக உருவாக்கிய வீர நாராயண ஏரியில் சேகரமாகும் மழை நீரும் ஆற்று நீருமே. தெலங்கானாவின் பல ஏரிகள் காகதீயர்களால் வெட்டப்பட்டவை. கர்நாடகாவின் குளங்களை ஹொய்சாளர்கள் ஊருக்கு ஊர் வெட்டினர். தென் தமிழ்நாட்டின் ஊருணிகளும் சாலைகளும் மதுரை நாயக்கர்களால் உருவாக்கப்பட்டவை. திருவிதாங்கூர் அரசர்கள் பல பாசனக் கால்வாய்களை வெட்டினர்.

இந்திய மனநிலையை கடந்த இருநூறு ஆண்டுகளின் பலவிதமான நிகழ்வுகள் பற்பல எதிர்மறையான இடத்துக்குக் கொண்டு சென்று விட்டன. பஞ்ச சாவுகள் குறித்த தரவுகள் பெரும்பாலான இந்தியர்கள் அறியாதவை என்றாலும் அந்த பஞ்சங்கள் சக மனிதனை நம்பாதே; சக மனிதனுடன் இணையாதே என்ற சமூகவியலை இந்தியப் பொதுப்புத்தியில் உருவாக்கி விட்டது. இருநூறு ஆண்டுகளில் நிலைபெறவும் செய்து விட்டது.

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்துக்குச் சமமாகவே கதர் இயக்கத்தை முன்னெடுத்தார். கதர் ஆடை மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கைமுறை; அது ஒரு பிரகடனம்; இந்தியர்கள் கதர் வாங்குவதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு சக இந்திய விவசாயியின் ஒரு சக இந்திய நெசவாளியின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருகிறார்கள். நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் 73 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டை விட்டு நீங்கி விட்டனர். நாம் இன்று நமது நாட்டை நமது விவசாயத்தை நமது பண்பாட்டைக் குறித்து எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறோம் அதற்காக நாம் எவ்விதமான பங்களிப்பை ஆற்றுகிறோம் என வினா எழுப்பிக் கொள்வதற்கான தருணம் இது.