Saturday, 31 October 2020

ஆசான் சொல் - 7

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும் (525)

உறவுச் சுற்றம் என்பது ஒருவரை சூழ்ந்து இருப்பது. எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் பங்கெடுப்பது. அடிக்கடி சந்திக்க வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதாலேயே நெருக்கம் பாராட்டுவது; மாற்றிக் கொள்ள இயலாதது. 

அந்த சுற்றத்துக்கு எப்போதும் தம்மால் இயன்ற எளிய உதவிகளை அளிக்க வேண்டும். அவர்கள் துயரில் இருக்கும் போதோ சிக்கலில் இருக்கும் போதோ அல்லது அவர்களுக்கு ஆலோசனை தேவைப்படும் போதோ இனிமையான சொற்களால் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். 

இவ்வாறான தன்மை உடைய ஒருவர் சுற்றம் சூழ இருப்பார். 

Friday, 30 October 2020

ஆசான் சொல் - 6

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். (485)

உலகியலில் காத்திருப்பது என்பது நெடிய செயல்பாடு. மிக உயர்ந்த ஒன்றை இலக்காகக் கொண்டவர்கள் சாமானிய மனநிலையை விட மேம்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு மேம்பட்ட மனநிலையைக் கொண்டிருப்பதாலேயே சுற்றி இருப்பவர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்படுவார்கள் ; அவர்களால் சற்று விலக்கத்துடனும் வைக்கப்படுவார்கள். 

எந்த பெரிய செயலும் பெரிய விளைவை உருவாக்கும் என்பதால் அதற்குரிய அடர்த்தி அச்செயலின் எல்லா அம்சத்திலும் இருக்கும். அது வெளிப்படுவதற்கு ஏதுவான காலம் என்பது இன்றியமையாத ஒன்று. 

ஒரு பெரிய செயலை - ஒரு பெரிய புதிய செயலை - நிகழ்த்த திட்டமிட்டிருப்பவர்கள் உரிய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்கும் காலத்தில் அவர்கள் மனம் முழுக்க அச்செயலே நிறைந்திருக்கும் எனினும் அதனை மேலும் மேலும் கூர்மையாக புறவயமாக நோக்கியவாறும் அளவிட்டவாறும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய செய்ய அச்செயல் மேலும் துலக்கம் பெறும்; துல்லியமடையும். 

அவ்வாறு காத்திருக்கும் காலகட்டத்தில், தம்மை உடலளவில் மனத்தளவில் வலிமைப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகளில்  ஈடுபட வேண்டும். ஒரு புதிய செயலை நிகழ்த்த வேண்டும் என்னும் ஆர்வமும் துடிதுடிப்பும் பரவசமும் அலையென எழும் எனினும் தம்மை வலிமைப்படுத்தியவாறு தக்க காலத்துக்கு காத்திருக்க வேண்டும்.

பொதுவாக ராஜதந்திரிகள் அவ்வாறு காத்திருப்பார்கள். இன்னொரு கோணத்தில் ராஜதந்திரம் என்பதே அவ்வாறு காத்திருத்தலே. 

சாமானியர்களுக்கும் இந்த தன்மை முக்கியமான தேவையே. 

காத்திருக்கும் காலத்தில் செயலற்று இருப்பதாய் விமர்சனங்கள் வைக்கப்படலாம். காத்திருப்பவரின் செயல்திறன் ஐயத்துக்குள்ளாக்கப்படலாம். வசை பாடப்படலாம். எனினும் பெரும் செயல் ஆற்ற விரும்புபவர்கள் கலங்காமல் அமைதி காப்பார்கள். 

Thursday, 29 October 2020

உன் இசையில்

மெல்லப் பாய்கின்றன நீரோடைகள்
இரவின் அடர்த்தி கொண்ட
குளிர் அருவி கொட்டிக் கொண்டிருக்கிறது
மண் வாசனை எழுப்பும் தூறல் 
மட்பாண்ட நீரின் குளிர்ச்சி
மோனித்திருக்கும் 
இந்த பாறைக்குத் தான்
எத்தனை
வழவழப்பு

நீர்மை என்பது என்ன கண்ணே

நெருங்கினால் குளிரும் தீ யா?

உனது இசையின் பிராந்தியங்களில்
வன்முறைகள் இல்லை
வலிகள் இல்லை
அச்சங்கள் இல்லை
ஏமாற்றங்கள் இல்லை

உனது பிராந்தியங்களில்
அவ்வப்போது
உலவிச் செல்கின்றனர் 
கடவுள்கள்

உனது பிராந்தியங்களில்
உடனிருக்கின்றனர்
கடவுளர்

தமருகம்

உன் இசைக்கருவியின்
நரம்பொன்றை
மீட்டுகிறாய்
அதிர்வு எங்கும்
உன் குரல் 
இணைகிறது
பெருவெள்ளம்
கண்ணீர்
மழை
கடல்
மேகம்
நீர்மை
ஜீவன்களின் குருதி அத்தனை குளிர்ந்திருக்கிறது
உன் ஒலி 
மெல்ல 
முற்றும் கரைகையில்
நிலைபெறுகிறது
நிச்சலனம்
பனிவரையில்
ஒலிக்கத் தொடங்குகிறது
இறைமையின்
உடுக்கை

Wednesday, 28 October 2020

சுயம்பு

வேர்கள் கொண்டிருக்கவில்லை
திசையெங்கும் கிளை பரப்பவில்லை
ஆற்றல் திரட்டி
துளி துளி யாய் மேலெழவில்லை
நீ
மலராக இருக்கிறாய்
கருணையின் மணம் பரப்புகிறாய்
கடவுளைப் போல

ஆசான் சொல் - 5

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

உலகியல் விஷயங்கள் பலர் தொடர்புடையவை. பலரது எண்ணங்களும் சமூகப் பழக்கங்களும் இணைந்தவை. சமூகப் பழக்கங்கள் என்பவை பன்னெடுங்காலமாக உருவாகி வந்திருப்பவை. உலகியலில் ஒருவர் செய்யும் செயல் மற்றவர்களால் எவ்வாறு உள்வாங்கப்படுகிறது என்பது மிகக் குறைந்த சதவீதமேனும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

இந்த திருக்குறளில் வள்ளுவர் ஒரு வணிகனிடம் பேச வேண்டியதைப் பேசுகிறார். 

ஒரு வணிகன் தன் வணிகத்தைக் கணக்கிட்டே செய்வான். எனினும் அதனால் ஈட்டும் செல்வத்தை அவன் எவ்விதம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் செலவழிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவன் நிலை பெறுவது இருக்கும். வணிகத்தைப் போலவே குடும்பச் செலவையும் அவன் கறாராக மதிப்பிட்டு செய்தால் குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி அடைவார்கள். பொருள் ஈட்டுவதற்கு தேவைப்படும் உழைப்பைப் போலவே அதனை எவ்விதமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் வணிகனுக்கு கவனம் தேவை. 

இது வணிகர்களுக்கு மட்டும் உரியது அல்ல. அனைவருக்குமானது. எனினும் வள்ளுவர் சிறு பகடியுடன் ‘’அளவறிந்து’’ என்கிறார். பொருட்களை அளந்து நிறுத்து விற்பதில் வணிகர்களின் அணுக்கத்தை உணர்ந்தே இவ்வாறு கூறுகிறார். 

செல்வம் ஈட்டியவர்களை முகஸ்துதி செய்பவர்கள் சூழ்வார்கள். அவர்கள் சொல்லும் சொற்கள் அவன் ஆணவத்தை திருப்தி செய்யும். அதற்காக அவன் செலவழிக்கத் தொடங்குவான். இல்லாத தகுதிகள் தனக்கு இருப்பதாக எண்ண ஆரம்பிப்பான். அத்தகைய எண்ணம் ஏற்பட்டதுமே உடன் இருப்பவர்களிடம் துச்சமாக நடக்கத் தொடங்குவான். புகழ்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வான். அவனது சரிவு அங்கிருந்து தொடங்கும். பெரும் வீழ்ச்சி நிகழும். 

இந்த திருக்குற்ளில் ’’உளபோல இல்லாகித் தோன்றா’’ என்கிறார். இருப்பது போலவும் இருக்கும்; இல்லாமல் ஆகும்; நினைத்தது நடக்காமல் நினைக்காதது நடக்கும். 

பொருள் ஈட்டுதலில் எவ்வளவு அக்கறை காட்டப்படுகிறதோ அதே அளவு அக்கறை அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் செலவழித்தலிலும் காட்டப்பட வேண்டும். 

Tuesday, 27 October 2020

என்னை அழித்து விடு அன்பே
உன் இயல்பால்
உன் மென்மையால்
உன் இசையால்
என்னை அழித்து விடு அன்பே

பனி படர்ந்த பர்வதங்களில்
ஓடி ஓடி நீரோடை
மென்மையாக்கியிருக்கும் 
கூழாங்கற்களில்
அடர்ந்திருக்கும் இரவிலிருந்து
முளைத்திருக்கும்
பச்சைப் பசும் புல்லில்
பறவையின் சின்னஞ்சிறு சிறகொன்றில்
உயிர் பெற்று 
மீள்கிறேன் 

Monday, 26 October 2020

விஜயதசமி

சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி தினத்தன்று மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை நீண்ட மோட்டார்சைக்கிள் பயணம் ஒன்றைத் துவக்கினேன்.  (காவிரியிலிருந்து கங்கை வரை). 22 நாட்கள் பயணம் அது. மொத்த தூரம் 6166 கி.மீ. 

இன்று காலை மரக்கன்றுகள் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமத்துக்குக் கிளம்பிச் சென்றேன். அங்கே சென்று கொண்டிருக்கும் போது சட்டென நான் மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தை விஜயதசமி அன்று துவக்கியது நினைவுக்கு வந்தது. எண்ணற்ற கிராமங்கள். பல்வேறு விதமான கிராம மக்கள். பல மொழி பேசுபவர்கள். அவர்கள் காட்டிய அளவற்ற பிரியம். எந்த முன்னேற்பாடும் இன்றி இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் நாளும் பயணிகளுக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘’அதிதி தேவோ பவ’’ என்ற சொல்லின் பொருளாக விளங்குபவர்கள். 

உண்மையில், அந்த பயணம்தான் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலை அளித்தவாறே இருக்கிறது. எனது கடமையை முழுமையாகச் செய்கிறேன் - முயற்சிகளை முழுமையாக அளிக்கிறேன். முயற்சிகள் முழுமையாக இருக்கையில் திட்டமிடல் துல்லியமாக இருக்கையில் நல்ல பயன் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். 

இன்று கிராமத்தில் பார்த்த பல விவசாயிகள், அவர்கள் தோட்டத்திற்கு வந்து நன்றாக வளரும் மரக்கன்றுகளைப் பாருங்கள் என்கிறார்கள். மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சி பெறும் தோறும், அவர்களுக்கு என் மீதான பிரியம் கூடிக் கொண்டே செல்கிறது. 

அன்பு நிறைந்த அந்த முகங்களிலிருந்து, மேலும் செயல் புரிவதற்கான ஊக்கத்தை அடைகிறேன். 
உயிர் எங்கிருக்கிறது என் அன்பே
உயிர் என்னவாய் இருக்கிறது 
நா கொள்ளும் தாகம் உடல் அறியும்
ஆத்ம தாகத்தை அறியுமா
உன் இசையின் நீர்மை
தாகத்தை 
இன்னும் இன்னும் என
கூட்டிக் கொண்டே செல்கிறது
தாகம் இத்தனை இனியதா கண்ணே
மரணம் இத்தனை இனியதா
கணங்களின் நீள் வரிசை 
விடுபடப்போகும்
அத்தருணத்தில் 
மென்மையான
அந்த மலரின் மணம்
உன் இசையுடன்
முடிவற்ற வெளியில்
விடுதலை கொண்டு
சஞ்சரிக்கும்