Wednesday, 31 August 2022

விடைகள்

நான் அப்போது பள்ளி மாணவனாயிருந்தேன். 

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது இரண்டு வெவ்வேறு வகுப்புகளில் உள்ள மாணவர்கள் அருகருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். சமயத்தில் பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு அந்த அருகாமையைப் பயன்படுத்தி ஏதேனும் விடைகளை சொல்லித் தருவதுண்டு. தேர்வு அறையின் கண்காணிப்பாளரைத் தாண்டி நிகழ வேண்டும். மேலும் கீழ் கிளாஸில் படித்தது பெரிய கிளாஸ் மாணவனுக்கு நினைவில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு சாத்தியம் மிகக் குறைவு. அதிகபட்சம் ‘’சரியான விடையைத் தேர்ந்தெடு’’ , ‘’கோடிட்ட இடங்களை நிரப்புக’’, போன்ற ஒரு மார்க்  ஒரு வார்த்தை பதில்களை மட்டுமே சொல்லித் தர முடியும். 

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தான்.  சமூக அறிவியல் தேர்வு அந்த பையனுக்கு. விடைகள் தெரியாமல் என்ன எழுதுவதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். எனக்கு வரலாற்றின் மீது அப்போதே பேரார்வம் உண்டு. அவனுடைய கேள்வித்தாளை வாங்கி ஒரு மார்க் கேள்விகளைப் பார்த்தேன். எல்லா விடையும் எனக்குத் தெரிந்திருந்தது. பதில்களை டிக் செய்து கொடுத்தேன். தேர்வு முடிந்து தேர்வு விடுமுறைகள் முடிந்து அவனை பள்ளியில் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து , ‘’தம்பி ! நீ டிக் செய்த எல்லா பதில்களும் கரெக்ட்’’ என்றான். 

அனேகமாக ஏழாம் வகுப்பு பையன் சொல்லிக் கொடுத்து பதில் எழுதிய ஒன்பதாம் வகுப்பு பையன் அவனாகத்தான் இருப்பான்.  

Tuesday, 30 August 2022

உள்ளே வெளியே


 சென்ற மாதம் ஊருக்குப் பக்கத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் - பள்ளியின் சுற்றுச் சுவருக்கு உள்ளே இருக்கும் மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். அது குறித்து வலைப்பூவில் ஒரு பதிவை எழுதினேன். மேலும் ஒரு வாரத்தில் நான் அனுப்பிய புகார் மீது மேற்கொள்ளப்பட்ட மேல்நடவடிக்கை என்ன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரினால் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. இருப்பினும் நம் மாநில அரசு ஊழியர்களின் பழக்கம் என்பது 30வது நாள் மட்டுமே பதில் அளிப்பார்கள். அதனை ஒரு பழக்கமாகவே கைக்கொள்கின்றனர். அவர்களால் எளிதில் அளிக்கக்கூடிய விபரமாகவே இருந்தாலும் முப்பதாவது நாளே அந்த விபரத்தை அனுப்பி வைப்பார்கள். இம்முறை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விபரம் கோரிய போது நான் இரண்டு விஷயங்களை யோசித்தேன். முதலாவது, அவர்கள் முப்பது நாட்கள் எடுத்துக் கொண்டால் அத்தனை நாட்களில் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் அந்த விபரம் வந்தடையும் என எண்ணினேன். இரண்டாவது, மனு கிடைத்த அன்றே பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி விரும்பினால் நடவடிக்கை துரிதமாகும் என யூகித்தேன். 

பொதுவாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் முப்பது நாட்களுக்குப் பின் மேலும் ஏழு நாட்கள் காத்திருப்பேன். அதற்குள்ளும் தபால் வரவில்லை என்றால் மட்டுமே முதல் மேல்முறையீட்டை தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேற்கொள்வேன். ஆனால் இந்த முறை முப்பது நாள் கெடு முடிந்த அன்றே முதல் மேல்முறையீடு செய்து விட்டேன். 

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். அதாவது , அந்த பள்ளி வளாகத்தில் உள்ள மரம் வெட்டப்படவில்லை என அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். ‘’புகைப்பட ஆதாரம் உள்ளதே ! அதுவும் அனுப்பப்பட்டிருக்கிறதே! ‘’ என்று சொன்னேன். என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். 

‘’மரத்தை வெட்டிய குற்றத்தை செய்தவர் ஒருவர். இப்போது அந்த மரம் வெட்டப்படவேயில்லை என்று கூறும் அதிகாரிகளும் இந்த குற்றத்துக்கு உடந்தை என அதனுடன் இணைந்து விடும் அபாயம் இருக்கிறதே! அது குறித்து அச்சமும் தயக்கமும் கொள்ள மாட்டார்களா?’’ என்று கேட்டேன். 

‘’பொதுவா யாரும் புகார் கொடுக்க மாட்டாங்க சார். அப்படியே கொடுத்தாலும் அதை ஃபாலோ பண்ண மாட்டாங்க சார். அதனால தான் இப்படி’’ என்றார். 

மிகப் பெரிய மரம் அது . அதன் நிழலில் இருநூறு பேர் அமர முடியும். அத்தனை பெரியது. ஒரு நாளில் இல்லாமல் ஆகியிருக்கிறது. ஆனால் அப்படி ஒன்று நிகழவேயில்லை என்றும் கூறப்படுகிறது. 

‘’சார் ! அப்புறம் ஒரு விஷயம்’’

‘’என்ன சொல்லுங்க.’’

‘’ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளிய இருக்கற மரம் தான் வெட்டப்பட்டிருக்குன்னு ரிப்போர்ட் பண்ணியிருக்காங்க சார்’’

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என ஒரு தமிழ்ப் பழமொழி நினைவில் வந்தது. 

நான் புகார் அளிக்க வேண்டும் என முடிவு செய்ததும் முதலில் புகார் கொடுத்தது மத்திய அரசாங்கத்தின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில். அது தானாகவே மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகாரை அனுப்பி விடும். மேலும் அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை எனக்கு திருப்தி தரவில்லை எனில் அந்த தளத்திலேயே என்னால் மேல்முறையீடு செய்ய முடியும். புகார் அளித்தவர் எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கையில் திருப்தி அடையவில்லை எனில் அந்த புகார் நிலுவை என்றே தொடரும். 

சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் புகாரைத் தரவேற்றம் செய்த பின் கிராம நிர்வாக அதிகாரிக்கு நடந்த சம்பவத்தை விவரித்து பதிவுத்தபால் அனுப்பினேன். அதன் நகலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பினேன். மனுவின் நகல் இத்தனை பேருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை குறித்தும் தக்வல் பெறும் உரிமைச் சட்டப்படி விபரம் கோரப்பட்டது. இத்தனை இருந்தும் மரம் வெட்டப்பவேயில்லை என்று சொல்லப்படுகிறது என்றால் நிர்வாகம் இந்த விஷயத்தை எத்தனை அலட்சியத்துடன் கையாள்கிறது என்பதையே காட்டுகிறது. 

‘’நியாயமான உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் இந்த விஷயத்தை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து கொண்டே இருப்பேன். நாட்கள் கடத்தப்பட்டால் நான் இந்த விஷயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொள்வேன் என எவரும் நினைத்தால் அது நடக்கப் போவதில்லை. நாட்கள் அதிகமாக அதிகமாக மரத்தை வெட்டியவர்கள் அத்ற்கு உடந்தையாயிருந்தவர்கள் ஆகியோர் செய்த செயல் மேலும் அடர்த்தி கொண்டு விடும். மரத்தை வெட்ட எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புகைப்படத்திலேயே அது தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயம் சட்டத்தின் முன் சென்றால் பேசப்போவது ‘’டாகுமெண்ட்டல் எவிடெண்ஸ்’’. இதனை எளிதாகக் கடந்து விடலாம் என எண்ணுபவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்’’ என்று கூறினேன். 

Monday, 29 August 2022

விடுதலை

சொல்வனம் இதழில் சமீபத்தில் எழுதிய ‘’விடுதலை’’ சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு 

பைரவம் - திட்டமிடல்

’’பைரவம்’’ அமைக்க என்னென்ன தேவைப்படும் என்று யோசித்தேன். பைரவத்தை அமைக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பது சக உயிர்களை நேசிக்கும் நமது சமூகத்தின் பண்பாட்டுச் சூழல். அந்த அடித்தளம் உருவாக்கப்பட்டிருப்பதன் மூலமே நம்மால் இந்த முன்னெடுப்பைத் திட்டமிட முடிகிறது.  அந்த தொல்மரபை வணங்கி நம் திட்டமிடலைத் தொடங்குகிறோம். 

1. ‘’பைரவம்’’ வாழிடத்தில் ஒரு சிறு காலபைரவர் சன்னிதி அமைக்கப்படும். 

2. காலபைரவர் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் அரளிப்பூக்கள் சிறு அளவில் அங்கே பயிரிடப்படும். 

3. ‘’பைரவம்’’ வாழிடம் ஒரு ஏக்கரிலிருந்து இரண்டு ஏக்கர் வரை பரப்பளவு கொண்டதாக இருக்கும். அதனைச் சுற்றி நடைப்பயிற்சிக்கான பாதை ஒன்று அமைக்கப்படும். இதனால் தினமும் இங்கே நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் குட்டி நாய்களைக் காணவும் அவற்றுடன் பழகவும் ஒரு வாய்ப்பு ஏற்படும். குட்டி நாய்களும் தினமும் காலையும் மாலையும் மனிதர்களைக் காண விரும்பும். 

4. வளாகத்தில் 10,000 மரக்கன்றுகளைக் கொண்ட ஒரு அடர் வனம் உருவாக்கப்படும். இதனால் வளாகம் ஆக்சிஜன் அதிகம் கொண்ட இடமாக இருக்கும் மேலும் பறவைகளும் பிராணிகளும் அதனை வாழிடமாகக் கொள்ளும். அதன் நடுவே சிறு பரப்பில் நீர்க்குளமொன்று அமைக்கப்படும். 

5. குட்டி நாய்கள் தங்க என கூரையிடப்பட்ட ஒரு பரப்பு

6. குட்டி நாய்கள் விளையாட ஒரு மைதானம்

7. அவற்றுக்கான மருத்துவமனை

8. அவற்றுக்கான உணவு தயாரிக்கும் இடம்

பைரவம்

எனது நாட்டில் ஒரு நாய் உணவில்லாமல் இருந்தாலும் அதற்கு உணவு தருவதே என்னுடைய மதம். 
-சுவாமி விவேகானந்தர்

இன்று எனது நண்பர் ஒருவரிடம் ஒரு விஷயம் குறித்து விவாதித்தேன். 

அதாவது, இந்திய மரபில் நாய்கள் காலபைரவரின் வாகனமாக உள்ளன. நாய்களுக்கும் மனிதர்களுக்குமான நட்பு என்பது மானுட குலத்தில் அனாதி காலத்திலிருந்து இருந்து வருகிறது. இன்றும் கைக்குழந்தைகள் தொடங்கி பாலபருவம் அடைந்துள்ள குழந்தைகள் வரை அனைத்துக் குழந்தைகளின் அக உலகையும் இந்தியாவில் காகங்களும் நாய்களுமே இனிமையால் நிரப்புகின்றன. 

ஊரில் புதிதாகப் பிறக்கும் நாய்க்குட்டிகள் தெருக்களில் வளர்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கும் இங்கும் திரியும் போது வாகன சக்கரங்களில் மாட்டிக் கொண்டு இறந்து போகின்றன. புதிதாய்ப் பிறந்த நாய்க்குட்டிகளுக்காக ஊரில் ஒரு வாழிடம் உருவாக்க வேண்டும் என்று நண்பரிடம் சொன்னேன். அங்கே குட்டி நாய்களுக்கு உணவு, தண்ணீர் விளையாடி மகிழ இடமும் அளிக்கப்படும். ஊரில் இவ்வாறான வாழிடம் இருப்பதை ஊர் முழுவதும் தெரியப்படுத்தினால் தெருக்களில் உள்ள குட்டி நாய்கள் குறித்து அலைபேசி மூலம் தெரிவித்தால் அவற்றை இந்த வாழிடத்துக்கு கொண்டு வந்து விடலாம். 

பலர் நாய் வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எவ்விதம் நாய்க்குட்டிகளைக் கண்டடைவது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இந்த நாய்க்குட்டிகளை நல்ல முறையில் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுமாயின் அதன் பராமரிப்பு குறித்த விபரங்களைக் கூறி அவற்றை அளிக்கலாம் என்றும் மேலும் அவ்வப்போது அதன் நலன் குறித்து விசாரித்து அறியலாம் என்றும் யோசித்தோம். 

இந்திய மரபு நம்முடன் வாழும் உயிர்களை நமக்கு சமமான உயிர்கள் எனக் கருதுகிறது. சக உயிர்கள் மேல் அக்கறை கொள்ளுதலே மேலான மானுட விழுமியம் என முன்வைக்கிறது. அவ்வகையில் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என நினைத்தோம். 

குட்டி நாய்களின் வாழிடத்துடன் வானத்துப் பறவைகளான காக்கை , குருவிகளுக்கு உணவளிக்கும் விதமாக பறவைச் சத்திரம் ஒன்றை ஊரில் அமைக்க வேண்டும் என்று யோசித்தோம். வட இந்தியாவில் ஊர் நடுவில் சாலைச் சந்திப்புகளில் இவ்வாறான பறவைச் சத்திரங்கள் இருக்கும். அங்கே பறவைகளுக்கு நீரும் தானியங்களும் அளிக்கப்பட்டிருக்கும். அதனைப் போன்ற ஒன்றை குட்டி நாய்களின் வாழிடத்துடன் இணைத்து அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 

நம் சமூகத்தில் பத்தில் ஒருவருக்கேனும் சக உயிர்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஊரில் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களையும் சாத்தியமான எல்லா வழிகளிலும் இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். 

 

Sunday, 28 August 2022

நேரம்

நேரத்தைக் கடைப்பிடிப்பது என்ற வழக்கம் தமிழ்நாட்டில் மிகவும் குறைவானதாக உள்ளது. நேரத்தைக் கடைப்பிடிப்பது என்ற பழக்கத்தை முயற்சி செய்து பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நேரத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பதை நூற்றுக்கு 99 சதவிகிதத்தினர் மிக இயல்பாகப் பழகியிருக்கின்றனர். இருவர் சேர்ந்து ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இருவரும் சேர்ந்து இத்தனை மணிக்கு புறப்படலாம் என முடிவு செய்தால் ஒருவர் அந்த நேரத்துக்கு ஐந்து நிமிடத்துக்கு முன்பு தயாராக இருப்பார். இரண்டாமவர் 15லிருந்து 20 நிமிடம் தாமதமாக வருவார். நேர உணர்வு இல்லாத சமூகத்தில் கூட்டுச் செயல்பாட்டுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். சமத்துவமான வாய்ப்புகளுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கும்.  நான் தவிர்க்க இயலாமல் ஏதேனும் நிகழ்ந்தாலன்றி தாமதமாக மாட்டேன். ஆனால் 99 சதவிகித நிகழ்வுகளில் நான் நேரத்துக்குச் சென்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 

Friday, 26 August 2022

அரசு வளாகம்

நான் அரசமைப்பின் மேல் நம்பிக்கை கொண்டவன். மக்களாட்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்ற தன்மையைக் கொண்டது என முழுமையாக நம்புபவன். அதன் எல்லைகளுக்குள் குடிமக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் விருப்பங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுபவன்.

தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது செல்பவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. அவற்றை இந்த தருணத்தில் பதிவு செய்வது சில விஷயங்களை பரிசீலனை செய்ய உதவிகரமாக இருக்கும் என்பதால் அவற்றைப் பதிவு செய்கிறேன். 

1. பொதுமக்கள் அரசு அலுவலகம் ஒன்றனுக்கு செல்ல வேண்டும் என்றால் அதை எவ்வளவு ஒத்திப் போட முடியுமோ அவ்வளவு ஒத்திப் போட முயற்சி செய்கிறார்கள். ஒத்திப் போட்டு போகாமல் இருப்பதே உத்தமமானது என நினைக்கிறார்கள். அரசு அலுவலகத்தை விட இடைத்தரகர்கள் மூலம் அந்த அலுவலகத்தில் அவர்கள் பெற வேண்டிய சேவையை அடைந்து கொள்வதே மேலானது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. 

2. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்கள் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருவதையே விரும்புவதில்லை. அவர்கள் பழகியிருக்கும் உதாசீனமே இடைத்தரகர்கள் தலையீட்டை அதிகமாக்குகிறது. 

3. அரசு ஊழியர்கள் ஒரு குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். 

4. அரசு ஊழியர்களின் திறன் என்பது ஊழல் செய்வதிலும் ஊழலை மறைப்பதிலும் மட்டுமே உள்ளது. 

5.  அரசு ஊழியர்களின் பணித்திறன் என்பது மிகக் குறைவானதாக உள்ளது. அவர்களுடைய சட்ட அறிவு என்பது பணித்திறனைக் காட்டிலும் குறைவானது. 

6. மிகத் தவறான செயல்பாட்டு முறையை அரசு ஊழியர்கள் இங்கே பழக்கி வைத்துள்ளார்கள். 

ஓரிரு முறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்தவர்கள் கூட இவை அனைத்தும் உள்ளவை தானே புதிதாக என்ன இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வாறு தான் நிலைமை இருந்தது என்றாலும் இன்றும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பெரும் அபாயம் ஒன்றின் அறிகுறி. 

‘’சிஸ்டம்’’ பெரிய அளவில் கெட்டுப் போயிருக்கிறது.   இந்த ’’சிஸ்டம்’’ மாற வேண்டும்.  

Thursday, 25 August 2022

சென்னையில் இரு நாட்கள்

உத்யோக நிமித்தமாக எனது நண்பர் ஒருவருடன் இரு நாட்கள் சென்னை சென்றிருந்தேன். நண்பருக்கு என்னுடைய உதவி ஒரு விஷயத்தில் தேவைப்பட்டது. என்னை உடன் வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். நானும் அவரும் சென்னைக்கு காரில் பயணித்தோம். நண்பர் சிறப்பாக கார் ஓட்டக் கூடியவர். சென்னையை முழுமையாக அறிந்தவர். ஒரு நாளில் பணி முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றிருந்தோம். எனினும் இரு நாட்கள் ஆயிற்று. சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அவரது நண்பர்கள் சிலரைச் சந்தித்தோம். அந்த சந்திப்புகள் மகிழ்ச்சி அளிப்பவையாக இருந்தன. அவர்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய தொழில்களின் நடப்பு நிலவரம் குறித்து கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பரும் நானும் சென்னையில் ஒரு திரைப்படம் பார்த்தோம். கண் முன்னால் ஒரு பெரும் திரையில் காட்சிகள் விரிவதை எனக்குப் பார்க்க மிகவும் பிடிக்கும். வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படம் பார்ப்பேன். 

சென்னையில் புதிது புதிதாக உருவாகியிருக்கும் கட்டடங்களினூடாக நான் அறிந்த பழைய சென்னையை தேடிக் கொண்டிருந்தேன். சில பகுதிகள் முழுவதும் அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கின்றன. இரு சக்கர வாகனங்களும் கார்களும் மிகப் பல மடங்கு பெருகியுள்ளன. அதன் தாக்கம் நகரில் பயணிக்கும் போது தெரிகிறது. 

விதவிதமான மக்களைப் பார்ப்பது என்பது எனது பெருவிருப்பங்களில் ஒன்று. ஒரு பொது செயல்பாட்டாளன் மக்களைக் காணும் போது அவர்களிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறான்.  

Saturday, 20 August 2022

சிலர்

எனது தந்தையின் பணி நிமித்தம் நாங்கள் சில ஆண்டுகள் சீர்காழியில் வசித்தோம். அப்போது குமரன் அண்ணன் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாங்கள் வாடகைக்குக் குடியேறினோம். அண்ணன் வீட்டில் பசு மாடுகள் இருந்தன. அந்த வீதியின் பல வீடுகளுக்கு குமரன் அண்ணன் தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்வார். அவ்வாறு தான் எங்கள் குடும்பத்துக்கு அண்ணன் பழக்கமானார். என்னைச் சிறு குழந்தையாக சீர்காழியில் நடக்கும் கோயில் விழாக்களுக்கு தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நான் பேசத் துவங்கும் முன்பிருந்தே எனக்கும் அவருக்குமான நட்பு இருந்திருக்கிறது. 

அண்ணனுடைய இயல்பு எவ்விதமானது எனில் ஒருவரிடம் சில நிமிடங்கள் பழகினால் கூட அவர்களுடைய குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிடுவார். அவர்கள் குடும்பத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல் ஆளாக இருந்து எல்லா வேலைகளையும் பார்ப்பார். அவர் வசித்த பகுதியில் குடியிருந்தவர்கள் வெளியூரில் இருக்கும் அவர்களுடைய உறவினர்கள் என எல்லா குடும்பத்தினரும் வீட்டில் மங்கள நிகழ்ச்சி என்றால் முதலில் கும்ரன் அண்ணனைத்தான் அழைப்பார்கள். 

அந்த பகுதியில் இருக்கும் சிறு குழந்தைகளை அவர் தான் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அவ்வாறு அவருடன் சென்றிருக்கிறேன். 

அவருக்குத் திருமணம் நிகழ்ந்த போது அந்த நிகழ்ச்சி சீர்காழியின் மிகப் பெரிய திருமணங்களில் ஒன்றாக இருந்தது. உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் வருகை புரிந்தார்கள். மண்டபம் நிரம்பி வழிந்தது.  

சாமானியமாக அவரை எங்கும் காண முடியும். பல ஊர்களில் நடைபெறும் திருமணங்களுக்குச் செல்பவர் என்பதால் அவரை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடலூரில் புதுச்சேரியில் செங்கல்பட்டில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூரில் கும்பகோணத்தில் என எங்கும் பார்க்க முடியும். நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் மாலை விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில்  வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் பயணித்த பெட்டியில் குமரன் அண்ணன் கடலூரிலிருந்து சீர்காழிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். நான் சிறுவனாயிருந்த போது என்னைப் பல நாட்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கிறார். ஊரில் ஒரு அபார்ட்மெண்ட்ஸ் கட்ட கட்டிட அனுமதி பெற தஞ்சாவூரில் இருந்த டி.டி.சி.பி அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்ப தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போது தஞ்சாவூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்ப குமரன் அண்ணன் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். ரயிலில் ஒன்றாகப் பயணித்தோம். நான் ஊரில் இறங்கிக் கொண்டேன். அண்ணன் அதே ரயிலில் சீர்காழி சென்றார். 

கம்பராமாயணத்தில் ஒரு இடம் வருகிறது. அனுமனை முதல் முறையாகக் காணும் சீதை அனுமனின் பணிவான நம்பிக்கையளிக்கும் சொற்களாலும் அர்ப்பணிப்புடன் கூடிய அணுகுமுறையாலும் உளம் நெகிழ்ந்து அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறாள். அதாவது ‘’இன்று இருப்பதைப் போல என்றும் இரு’’ என. 

நீண்ட நாட்களுக்குப் பின் குமரன் அண்ணன் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் ஒரே தன்மையுடன் இருப்பதை நினைத்துக் கொண்டேன்.  

Thursday, 18 August 2022

ஒரு வயல் - ஆயிரம் மரங்கள்

’’காவிரி போற்றுதும்’’ உடனிருக்கும் விவசாயி ஒருவரின் வயலில் நடப்பட்டுள்ள மரங்களின் ஒளிப்படம்.