Wednesday, 7 December 2022

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

தமிழ்நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தன்மை அது. அதாவது இங்கே மக்கள் நெருக்கமாக வாழ்வார்கள். எனினும் பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பது சற்றும் தொடப்படாமலே மாற்றத்துக்கான மிகக் குறைந்த வழிகளுடன் இருந்து கொண்டே இருக்கும். அது குறித்த கவனம் அச்சமூகத்தின் மக்களின் கவனத்திற்கே வந்து சேர்ந்திருக்காது. 

காவிரி வடிநிலப்  பிரதேசத்தில் ஓர் ஆணின் உத்யோகம் என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படும் ஒரு விஷயம். உத்யோகம் என்பதையும் இன்னும் நுணுக்கிச் சொன்னால் வருமானம் என்று சொல்லி விடலாம். ஓர் ஆண் வருவாய் ஈட்ட வேண்டும். குறைந்தபட்சமோ அல்லது நடுத்தரமோ அல்லது அதிகமோ. எவ்வாறாயிருப்பினும் வருவாய் ஈட்ட வேண்டும். பத்தில் எட்டு பேருக்கு அது வாய்த்து விடும். விடுபட்டுப் போனவர்களுக்கு ஊரே அறிவுரை சொல்லும். இளக்காரமாகப் பார்க்கும். தாங்கள் உயர்ந்த பீடத்தில் இருப்பதைப் போலவும் குறைந்த வருவாய் ஈட்டுபவன் தரையில் கிடப்பது போலவும் நினைக்கும். 

அவ்வாறான ஒரு ஆண் - குடும்பத்தாலும் ஊராலும் - இளக்காரமாக நினைக்கப்பட்ட ஒருவன் அவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நற்செயலை சர்வசாதாரணமாகச் செய்து தனது வாழ்தலுக்கான வருவாயை ஈட்டிக் கொள்கிறான். அந்த செயல் மூலம் அவன் உயர்ந்து நிற்கிறான். ஒரு வாமனன் சட்டென விஸ்வரூபம் கொள்வது போல. 

தி. ஜா வின் சிறந்த கதைகளில் ஒன்று ‘’சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்’’.  

Monday, 5 December 2022

அணி அமைத்தல்

நாம் ஒரு கிராமத்தில் செயல் புரிகிறோம். ஐந்நூறு குடும்பங்கள் அங்கே உள்ளன. எல்லா வீடுகளுக்கும் ஒரு சில முறையாவது சென்றிருப்பேன். வீடுகளில் உள்ள எல்லாரிடமும் சில நிமிடங்களாவது உரையாடியிருப்பேன். எல்லாருக்கும் என்னைத் தெரியும். ‘’தெரியும்’’ என்று சொல்வது கூட ஒரு அளவுக்குள் தான். பலர் என்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவன் என்றே எண்ணுவார்கள். விவசாயத் துறை அல்லது தோட்டக்கலைத் துறை அல்லது வனத்துறை அல்லது சுகாதாரத் துறை. கிராமத்தில் முதல் முறை ஒருவரை சந்திக்கும் போது என்னுடைய பெயரைச் சொல்லி கட்டிடக் கட்டுமானம் எனது தொழில் என்று சொல்லியே அறிமுகப்படுத்திக் கொள்வேன். என்னை அப்படி யாரும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.  ஒவ்வொரு முறையும் செயல் புரியும் கிராமத்துக்குச் செல்வது என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கும் செயலே. வீட்டிலிருந்து உற்சாகத்துடன் கிளம்பி செல்வேன். என்னைப் பார்க்கும் போது அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியும் அவர்களைப் பார்க்கும் போது நான் கொள்ளும் மகிழ்ச்சியும் மிகப் பெரியவை. அடியேன் மிக எளியவன். அந்த மக்களின் அன்பு மிகப் பெரியது. 

என்னிடம் எப்போதும் கேட்கப் படுவதுண்டு. செயல் புரியும் கிராமத்தில் எவரும் உங்களைக் கடுமையாகப் பேசினால் நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள் என்று. என்னிடம் யாரும் கடுமையாகப் பேசியதில்லை. எவரும் என்னிடம் கடுமையாகப் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அதனை நான் இயல்பாகவே எடுத்துக் கொள்வேன். நம் மீது பலர் அன்பு காட்டுகிறார்கள். பிரியம் காட்டுகிறார்கள். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் நான் எவரும் கடுமையைக் காட்டினாலும் அதனையும் இயல்பாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நியாயம். 

இன்று கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களில் உடனிருக்கும் சிலருடன் 2023ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். நான் மிகத் துரிதமாக செயல்களை ஆற்ற வேண்டும் என்ற மனப்பாங்கு அமையப் பெற்றவன். கிராமம் மெல்ல மிக மெல்ல என்னும் நடைமுறையைக் கொண்டது. இந்த இரண்டுக்குமான சமநிலைப் புள்ளியே செயல்கள் நகரும் வேகம். 2023ம் ஆண்டுக்கு மூன்று செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளேன். பணிகளும் இலக்கங்களும் கூடிக் கொண்டே தான் போகும். நாம் செயலாற்றும் ஆர்வம் கொண்டிருப்பதால் மேலும் மேலும் என செயலாற்றவே விருப்பம் கொள்வோம். குறைந்தபட்சமாக இந்த மூன்று விஷயங்களை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளேன். 

1. பொருளியல் : நண்பர்களிடம் முதல் விஷயமாகக் கூறியது செயல் புரியும் கிராமத்தின் எல்லா குடும்பங்களும் நேரடியாக பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 தேக்கு மரக் கன்றுகள் வழங்கும் திட்டத்தை தை மாத அறுவடை முடிந்ததும் செயல்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தேன். தை மாதத்துக்குள் எல்லா குடும்பங்களையும் நேரில் சந்தித்து  10 தேக்கு மரக் கன்றுகள் பயிரிட்டுக் கொள்வதன் அவசியத்தைக் கூற வேண்டும். ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி 10 தேக்கு மரக் கன்று நட்டு பராமரித்து வளர்த்துக் கொள்ள அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சதவீதம் இடம் மட்டும் போதும். மீதி உள்ள 99 சதவீத இடத்தில் அவர் வழக்கமாக செய்யும் விவசாயம் செய்து கொள்ளட்டும். விஜயதசமி அன்று செயல் புரியும் கிராமத்தின் விவசாயி ஒருவர் வயலின் மேட்டுப்பகுதியில் நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. அதனை மற்ற விவசாயிகளுக்கு நேரடியாக எடுத்துக்காட்டாக காட்டுவது என முடிவு செய்தோம். 

காவிரி வடிநிலப் பிராந்தியத்தில் மேட்டுப்பாத்தி அமைக்கையில் தான் தேக்கு நன்றாக வளர்கிறது. தேக்கின் சல்லி வேர்கள் நீருக்குள் சில நாட்கள் இருந்தால் அழுகி விடும். வேர்கள் அழுகிப் போன மரத்துக்கு பின்னர் வளர்ச்சி இருக்காது. விவசாயிகளுக்கு ஓர் ஆர்வத்தையும் நல்விருப்பத்தையும் உருவாக்கவே நாம் தேக்கு மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் வழங்குகிறோம். அவர்கள் மேட்டுப்பாத்தி அமைக்க சாண எரு இட கணிசமான செலவு பிடிக்கும். மிகப் பெரிய தொகை தேவைப்படாது. மூன்று இலக்க எண்ணில் உச்சபட்சமான எண் அளவு செலவாகும். அதனை விவசாயிகள் தான் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ விழிப்புணர்வை உண்டாக்கும் ஒரு தூண்டுகோலாகவே விளங்குகிறது. 

இரண்டு அடி நீளம் , இரண்டு அடி அகலம், இரண்டு அடி ஆழம் கொண்ட குழிகள், ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் இடையே பன்னிரண்டு அடி இடைவெளி என்பதை சரியாகச் செய்கிறார்களா என்பதை நாம் கண்காணித்து உறுதி செய்கிறோம். 

கிராம மக்களை ஒவ்வொருவராக சந்திப்பதைக் காட்டிலும் பத்து பேர் கொண்ட குழு குழுவாக சந்தித்து உரையாட ஏற்பாடுகள் செய்யுமாறு கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்களும் அதனைச் செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். 

2. வலிமை : ’’இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’ என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். ‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் { மூன்று வயதிலிருந்து  பதினைந்து வயது வரை } கால்பந்து, கைப்பந்து , கூடைப்பந்து, பாட்மிட்டன், ரிங் பால், கிரிக்கெட் என அவர்கள் விரும்பும் அனைத்து வகை பந்து விளையாட்டு சாதனங்களையும் அவர்களுக்கு வழங்க விருப்பம் கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பொறுப்பு குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டும் அல்ல; ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பின் அடிப்படையில் ‘’காவிரி போற்றுதும்’’ இந்த செயலை முன்னெடுக்க உள்ளது. கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும். 

3. ஞானம் : செயல் புரியும் கிராமத்தில் 2023ல் கல்விப்பணி ஒன்றை தொடங்கிட வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. அனேகமாக 2023 மே மாதம் இதன் துவக்கம் நிகழக் கூடும். 

செயல் புரியும் கிராமம் விஷயத்தில் நாம் ஏதும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்த செயலுக்கான ஆதரவு என்பது எப்படியோ ‘’காவிரி போற்றுதும்’’ மிற்கு வந்து சேர்கிறது என்பது நம் அனுபவம். அவ்வாறே இந்த விஷயங்களுக்கும் நிகழும் என்று நம்பிக்கை கொள்கிறோம். அவ்விதம் எண்ணும் நிலையை உருவாக்குபவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள். இம்முறையும் அவர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். 

’’காவிரி போற்றுதும்’’ க்காக செயல் புரியும் ஒரு சிறு அணி கிராமத்தில் உருவாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. 

Sunday, 4 December 2022

வீடும் வெளியும்

மனிதர்களை லௌகிகம் அலைக்கழிக்கிறது. அங்கும் இங்கும் என அல்லாடச் செய்கிறது. அதனை திமிறும் காளை எனக் கொண்டால் அதனை முழுதறிந்து அடக்கிக் கட்டுப்படுத்தியிவர்கள் வெகு சிலர். ஏதென்றே அறியப்படாத மாயம் ஒன்றால் தற்செயலாக அதனை வெற்றி கொண்டவர்களும் உண்டு. அதன் கூர்க்கொம்பால் கிழிபட்டு வாழ்க்கை முழுதும் அந்த வலியை அனுபவித்தவர்கள் உண்டு. ‘’வீடும் வெளியும்’’ இவ்வாறான அனுபவம் வாய்க்கப் பெற்ற தங்களுக்குத் தொடர்புடைய மனிதர்கள் சிலரைப் பற்றி இரண்டு மனிதர்கள் புண்ணிய நதியாம் காவிரியின் துறை ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சித்திரத்தை  தி.ஜா  ஒரு சிறுகதையாக்கியுள்ளார். லௌகிகத்தில் மனம் சிறிதாயினும் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை முற்றமைதி என்பது சாத்தியம் இல்லை. அங்கு வர ரொம்ப நேரமும் ஆகும் ; ரொம்ப காலமும் ஆகும்.   

Saturday, 3 December 2022

பெய்யும் மழையும் மரங்களின் எழுச்சியும்

’’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையின் படி நன்செய் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து மரப்பயிர்கள் நட்டு வளர்க்கும் விவசாயி தனது வயலின் ஒளிப்படங்களை அனுப்பி வைத்திருந்தார். மழையில் அவை மிக நல்ல முறையில் வளர்ந்துள்ளன. மேட்டுப்பாத்தியில் உள்ள களைகளை நீக்க  உத்தேசித்துள்ளார் அந்த விவசாயி. ஓரிரு நாளில் அவருடைய வயலைப் பார்வையிட செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன். 


Thursday, 1 December 2022

ஷாரிணி

இன்று வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வந்திருந்தாள். அவளின் பெயர் ஷாரிணி. பாரதி ‘’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’’ என்று சொன்னதைப் போல புத்தம் புதிதான தன்மையை தனது இயல்பாகக் கொண்டிருந்தாள். கம்பன் இராமனை அன்றலர்ந்த தாமரை முகத்தினன் என்கிறான். ஷாரிணியின் முகம் ஒரு வெண் தாமரையென சுடர் விடும் முகம். சிறு சிறு வாக்கியங்களை மழலை இன்னும் முழுமையாக மாறிவிடாமல் உச்சரிக்கிறாள். அவளது சொற்கள் மெல்லக் கேட்கும் வாத்திய இசை போல் ஒலிக்கின்றன. அவள் வயது இன்னும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. ஒற்றை இலக்கத்தின் உச்சபட்ச எண் அவளது வயது.  ராமனை ‘’பூர்வபாஷி’’ என்பார்கள். அதாவது, அவர் புதிதாக எவரையும் சந்தித்தால் அவர்கள் உரையாடலைத் தொடங்கட்டும் என இருக்க மாட்டாராம். முதற்சொல்லை உச்சரித்து  உரையாடலைத் தானே துவங்கி விடுவாராம். ஷாரிணியும் அப்படிப்பட்டவள். ஷாரிணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். ‘’புவியைக் காப்பவள்’’ என்று சொன்னாள். உண்மையில் அவளது ஒளியும் ஜீவனும் இந்த புவியைக் காக்கும் திறனும் வல்லமையும் கொண்டது. 

அந்த குழந்தையின் பூர்வீகம் மயிலாடுதுறை. அவளது பெற்றோர்கள் சிங்கப்பூரில் பணி புரிவதால் சிங்கப்பூரில் படிக்கிறாள். சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்பது அங்குள்ள கல்விக் கொள்கை என்பதால் நூல்களை வாசித்தல் - வாசித்த நூல்கள் குறித்து எழுதுதல் என்பது அங்கே எல்லா குழந்தைகளும் பயின்றிருக்கும் ஒன்று. ஷாரிணிக்கும் அவ்வாறான நூல் வாசிப்பு அங்குள்ள கல்விச் சூழல் காரணமாக அறிமுகமாகியிருக்கிறது. சமீபத்தில் தான் வாசித்த பேய்க்கதை ஒன்றை என்னிடம் கதையாக சொன்னாள். அவளுடைய சித்தரிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அவளுடைய மொழித்திறன் வியப்புக்குரியது. சொன்ன கதை எல்லாரையும் திகிலடைய வைக்கும் கதை. 

தனக்கு விளையாட்டில் தான் அதிக ஆர்வம் என்றாள் ஷாரிணி. வாலிபால், பேஸ்கட்பால், பேட்மிட்டன் ஆகியவை தனக்கு மிகவும் ஆர்வம் மிக்க விளையாட்டுகள் என்கிறாள். அவளது உடல்மொழி ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரியது. ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் செயல் புரியும் கிராமத்தில் உள்ள 8 வயதிலிருந்து 13 வயது வரையான குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்களை வழங்க உத்தேசித்திருக்கும் திட்டம் குறித்து அவளிடம் கூறினேன். அவளுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்திருந்தது. அவள் எனக்கு ஒரு ஆலோசனை சொன்னாள். 8 லிருந்து 13 வயது என்பதை 3 லிருந்து 13 வயது வரை என்று ஆக்கி விடுங்கள் என்று சொன்னாள். குழந்தைக்கு விளையாட்டு என்பது பள்ளி செல்லும் முன்பிருந்தே தொடங்கி விட வேண்டும் என்பதால் ஃபுட்பால், பேஸ்கட் பால், வாலிபால் ஆகிய பந்துகள் மூன்று வயதுக் குழந்தைகளுக்கே வழங்கப்பட்டுவிட வேண்டும் என்று சொன்னாள். நான் அவள் பரிந்துரையை உடனே ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று அவளிடம் சொன்னேன். அந்த கிராமத்துக்கு என்னையும் அழைத்துச் செல்கிறீர்களா என்று கேட்டாள். அவளது ஆர்வம் என்னை சிலிர்க்கச் செய்தது. 

உரையாடிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் அவளது உலகம் முழுமையையும் என்னிடம் சொன்னாள். அவளது தோழிகள் குறித்து சொன்னாள். அவளது எதிர்காலக் கனவுகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டாள். பால்ய சினேகிதர்களைப் போல நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். 

ஷாரிணி கிருஷ்ண பக்தை. பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாள். வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கு செல்கிறாள். அவளது சாரீரம் இனிமையானது. இங்கே ஊரில் நிறைய விஷ்ணு ஆலயங்கள் உள்ளன ; நான் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னேன். உங்களிடம் என்ன பைக் உள்ளது என்று கேட்டாள். ஹீரோ ஹோண்டா என்று சொன்னென். காவிரியிலிருந்து கங்கை வரை நான் மோட்டாட்சைக்கிளில் பயணித்திருக்கிறேன் என்று சொன்னேன். 

குழந்தைகள் தெய்வ ஆசியின் ரூபங்கள். எல்லா குழந்தையும் கிருஷ்ண சொரூபங்கள்.  

காசி யாத்திரை

காசி இந்தியாவின் இதயம் போன்ற நகரம். குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டு காலம் ஒரு நகரமாகத் திகழ்ந்து வருவது. இவ்வாறான சிறப்பைப் பெற்ற இன்னொரு உலக நகரத்தைக் கண்டடைவது அரிது. இந்திய மரபில் ஒரு சுலோகம் உண்டு. புனிதமான ஏழு நகரங்களை தினமும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலான சுலோகம் அது. ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’ என்ற ஏழு நகரங்கள்.  இதில் மாயா என்பது ஹரித்வாரைக் குறிக்கும். இந்த ஏழு நகரங்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்க்கையுடன் தொடர்புடைய்வை மதுரா மற்றும் துவாரகா. காசியும் அயோத்தியும் அதற்கு  முந்தைய காலகட்டத்திலிருந்தே தொன்மையானவை. 

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் காரைக்குடியிலிருந்து காசி வரை பாத யாத்திரையாக நடந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். மிகச் சமீப காலம் வரை அவர்களுக்கு இந்த வழக்கம் பெரிய அளவில் இருந்திருக்கிறது. இப்போதும் சிறு அளவில் நீடிக்கிறது. இந்த பாதயாத்திரைக்காக அவர்கள் மேற்கொண்ட ஏற்பாடு கவனத்துக்குரியது. முன்னுதாரணமானது. 

அதாவது, காரைக்குடியிலிருந்து காசி 2220 கி. மீ தூரம் கொண்டது. இந்த தூரத்தை நகரத்தார் மக்கள் 50 பேர் கொண்ட குழுவாக அல்லது நூறு பேர் கொண்ட குழுவாக இணைந்து பாதயாத்திரையாக செல்வார்கள். இதற்காக ஒவ்வொரு 40 கிலோ மீட்டருக்கும் இந்த பாத யாத்ரிகர்களின் சேவைக்காக சத்திரங்களை அமைத்தனர். 40 கி.மீ தூரம் என்பது ஒரு பாத யாத்ரிகன் நடக்கக் கூடிய சராசரி தூரம். காரைக்குடியில் காலை ஒரு குழு புறப்பட்டால் அன்று மாலை 6 மணி அளவில் 40 கி.மீ தொலைவில் இருக்கும் புதுக்கோட்டை வந்தடைந்து சத்திரத்தில் தங்கிக் கொள்வார்கள். அங்கே அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படும். இரவு உறங்கி விட்டு காலை அடுத்த நாள் பயணத்தைத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். அன்றைய தினத்துக்கான மதிய உணவு கட்டுச்சோறாக அளிக்கப்பட்டுவிடும். அன்று கிளம்பி திருச்சிராப்பள்ளி செல்வார்கள். அங்கும் இதே முறை. இவ்வாறாக காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை திருச்சி பெரம்பலூர் விருத்தாசலம் விழுப்புரம் திண்டிவனம் காஞ்சிபுரம் சித்தூர் என ஒவ்வொரு 40 கி.மீட்டருக்கும் சத்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். காரைக்குடியிலிருந்து புறப்படும் குழு முன்னரே எந்த தேதியில் எந்த ஊரில் இருப்போம் என தபால் மூலம் தெரிவித்து விடுவார்கள். அதன் படி உணவு ஏற்பாடுகள் நிகழ்ந்திருக்கும். தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் , உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒவ்வொரு 40லிருந்து 50 கி.மீ க்கு இவ்வாறான சத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

பிற்காலத்தில் இந்த சத்திரங்களை பராமரிப்பவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததால் வெளி மாநிலங்களில் உள்ள நகரங்களில் திருமண மண்டபங்களை ஒரு நாள் தங்குவதற்கு பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். பின்னர் 2000 கி.மீ தூரம் நடப்பவர்களின் எண்ணிக்கை சிறிது குறையத் தொடங்கியதும் உணவு ஏற்பாடுகளுக்காக ஒரு மோட்டார் வாகனம் ஒவ்வொரு குழுவாலும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. முன்னர் இருந்த சத்திரம் போன்ற அமைப்பு புத்துயிரூட்டப்படும் என்றால் காசிக்கு பாத யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சராசரியான உடல் வலிமை கொண்ட எவராலும் சற்று முயன்றால் ஒரு நாளில் நாற்பது கிலோ மீட்டர் தூரம் என்பதை நடக்க முடியும். அவ்வாறு ஐம்பது நாட்கள் நீடிக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என்பது அந்த பாதயாத்ரிக்கு வாழ்நாள் அனுப்வமாக இருக்கும். மேலும் தொன்மை மிகுந்த நம் தேசத்தையும் அதன் புண்ணிய நதிகளையும் நேரில் கண்டறிய உதவுவதாக இருக்கும். 

மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்ட போது வட இந்திய யாத்ரிகர்களுக்காக சேது ரஸ்தா என்ற சாலையை அமைத்துக் கொடுத்து அதில் ஒவ்வொரு 40 கி.மீ க்கும் சத்திரங்களை அமைத்திருக்கின்றனர். 

காசி யாத்திரைக்கு புதிதாக சத்திரங்கள் அமைக்கப்பெற்றால் அல்லது பழைய சத்திரங்கள் புத்துயிரூட்டப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து அதிகம் பேர் காசிக்கு பாத யாத்திரையாக செல்லக் கூடும். இந்த பயணம் சவாலான பயணம். குறைந்த பட்சம் நூற்று இருபது நாட்களைக் கோருவது. ஒவ்வொரு மாதமும் சில நூறு பேர் அல்லது அதிகபட்சமாக சில ஆயிரம் பேர் செல்லக்கூடும். இப்போது உள்ள தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி காசி யாத்திரை செல்பவர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எளிதில் அமைத்துக் கொள்ள முடியும். நர்மதை நதியை வலம் வரும் ‘’நர்மதா பரிக்ரமா’’ என்ற முறை மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. 

காசி யாத்திரை செல்லும் பக்தர்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவு செய்யும் அன்னதானத்துக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவளிப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதீனங்கள், மடங்கள், அறக்கொடை அமைப்புகள் ஆகியவை இவ்வாறான ஒரு வழிமுறையை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.     

Wednesday, 30 November 2022

காவிரி போற்றுதும் - தொடரும் பயணம்

சில ஆண்டுகள் எல்லாருக்கும் எப்போதும் நினைவில் இருக்கும். பிறந்த ஆண்டு. புதிய ஒரு பள்ளியில் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் பட்டம் பெற்ற ஆண்டு. வணிகம் தொடங்கிய ஆண்டு அல்லது பணியில் சேர்ந்த ஆண்டு. இன்னும் பலப்பல. 2020ம் ஆண்டு எல்லாராலும் நினைவு கூரப்படும். அந்த ஆண்டுதான் உலகம் கோவிட்-ஐ எதிர்கொண்டது.  என்னுடைய வாழ்வில் 2020 பலவிதத்திலும் முக்கியத்துவம் கொண்டது. அந்த ஆண்டுதான் ‘’காவிரி போற்றுதும்’’ தனது பயணத்தைத் துவக்கியது. அதன் அமைப்பாளன் என்ற முறையில் நான் மகிழவும் செய்கிறேன். அதே நேரம் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளின் பட்டியல் மிக நீளமாக மிகப் பெரிதாக இருப்பதால் ஒரு நிறைவின்மையையும் உணர்கிறேன். செயலின் பாதையில் நடக்கும் எவருக்கும் மகிழ்ச்சியும் இருக்கும் ; நிறைவின்மையும் இருக்கும். இது இயல்பானதே. 

‘’காவிரி போற்றுதும்’’ கிராமங்களில் மரம் நடுதலை தனது முதன்மையான பணியாகவும் முதல் பணியாகவும் கருதியது. ஒரு மரம் என்பது தன்னளவில் மகத்தானது. ஒரு மரத்தின் இருப்பு என்பது தன்னளவில் பல நற்பண்புகளை மனிதர்களுக்குக் காட்டுகிறது. ஒரு மரம் எத்தனையோ ஜீவராசிகளுக்கு உணவாக உறையுள்ளாகப்  பயன்படுகிறது. விருப்பு வெறுப்பு இன்றி எல்லா ஜீவன்களையும் அது சமமாகப் பார்க்கிறது. இந்திய மரபு இறையை சத்குண பிரம்மம், நிர்க்குண பிரம்மம் என இரண்டாகப் பார்க்கிறது. ஒரு மரம் என்பது சத்குண பிரம்மத்தின் ஒரு வடிவமே. இறை வடிவமான விருட்சங்களுக்கு முதல் வணக்கம். 

‘’காவிரி போற்றுதும்’’  கிராமம் என்ற நுண் அலகில் செயல்படுவது என்று முடிவு செய்தது. கிராமத்தை சமூகத்தின் தேசத்தின் நுண் வடிவமாகக் ‘’காவிரி போற்றுதும்’’ காண்கிறது. இந்தியாவில் ஒரு கிராமத்தில் சாத்தியமாகும் விஷயம் என்பது நாடு முழுதுக்கும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் பெருமளவு சாத்தியமே. எனவே ஒரு கிராமத்தில் நிகழும் நற்செயல்களை அதே பாணியில் அல்லது சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தி எல்லா கிராமங்களுக்கும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ‘’காவிரி போற்றுதும்’’ தனது பயணத்தை வடிவமைத்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையை அளிப்பவர்கள் செயல் புரியும் கிராமத்தின் மக்கள். ஒரு அமைப்பாளன் என்னும் முறையில் நான் உணரும் விஷயம் ஒன்று உண்டு. இந்திய கிராமம் ஒன்றின் மக்கள் என்பவர்கள் மகோன்னதமான உலகப் பண்பாடு ஒன்றின் சொந்தக்காரர்கள். அந்த பண்பாட்டின் அடிப்படையான கூறுகள் அவர்களிடம் எஞ்சி இருக்கின்றன. தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற முழு உண்மை அவர்கள் பிரக்ஞையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களே அறியாமல் அவர்கள் ஆழுள்ளம் இன்னும் அந்த பண்பாட்டை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்களை அடித்தளமாகக் கொண்டே உலகின் மிகச் சிறந்த பேரரசுகள் இந்திய மண்ணில் உருவாயின. நம் நாடு உலகை வழிநடத்தும் நாள் வரும். அன்றும் இந்த நாட்டின் கிராமங்களே அந்த மாண்புக்குக் காரணமாக அமையும். கிராமங்கள் அனைத்துக்கும் வணக்கம். 

‘’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. தன்னைத் தானே நிர்மாணித்துக் கொண்டு முன் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அமைப்பு. ஓர் அமைப்பை நிலை நிறுத்தும் வழி நடத்தும் திறன்கள் என்னிடம் போதுமான அளவு இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. இருப்பினும் எந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று சொன்னாலும் ஊக்கமூட்டி ஆதரவு அளிக்கும் நண்பர்களே ‘’காவிரி போற்றுதும்’’ன் நாடித்துடிப்புகள். ’’காவிரி போற்றுதும்’’முன்னெடுக்கும் அனைத்து நற்செயல்களுக்கும் ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். அவர்களின் ஆலோசனைகளுடன் பங்கேற்புடன்  அமைப்பை மேலும் வலுவாகக் கட்டமைப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது என்று தோன்றுகிறது.  

‘’பெரிதினும் பெரிது கேள்’’ என்கிறான் தமிழ் மூதாதையான பாரதி. ‘’கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’’என்கிறான் வள்ளுவப் பேராசான். நாம் குறைந்தபட்சம் ஒரு கிராமத்திலாவது வாழும் அனைத்து மக்களும் அவர்களால் அடையக்கூடிய அடிப்படையான பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் அடைய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளோம். அதற்காகப் பணியாற்றுகிறோம். ஒரு கிராமம் என்பது மரங்கள் நிறைந்த பட்சிகள் நிறைந்த மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் நிறைந்த ஒரு பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற நிலையை மீண்டும் கொண்டு வர முயற்சிகளை முன்னெடுக்கிறோம். கிராமத்தின் எல்லாக் குழந்தைகளுக்கும் உலகியல் கல்வியும் பண்பாட்டுக் கல்வியும் சமூகத்தின் முழுப் பொறுப்பின் அடிப்படையில் கிடைக்க வேண்டும் என்பது நமது விருப்பம். ஒரு கிராமத்திலாவது அதனை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றுகிறது ‘’காவிரி போற்றுதும்’’. 

சலனத்தைத் தன் சுபாவமாகக் கொண்டது நதி. நதிகளில் சிறந்தது காவிரி. நாம் அப்புண்ணிய நதியைப் போற்றும் தொண்டர்கள். அன்னை காவிரிக்கு வணக்கம். 

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும்!

Monday, 28 November 2022

ஊர்ப்பயணம்

இரண்டு தினங்களுக்கு முன்னால், நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். 

‘’பிரபு! மெட்ராஸ் போகணும். ஒரு வேலை இருக்கு. நாம ரெண்டு பேரும் போய்ட்டு வந்திடுவோம்’’

’’மெட்ராஸ்க்கா?’’

’’ஆமாம் ஆமாம் மெட்ராஸ்க்குதான். காலைல டிரெயின்ல கிளம்புறோம். ஈவ்னிங் அதே டிரெயின்ல ரிடர்ன் ஆயிடறோம்’’

‘’திருச்செந்தூர் சென்னை வண்டியிலயா?’’

’’ஆமாம் ஆமாம் . அதே வண்டிதான்’’

‘’அந்த வண்டி டைமிங் காலைல 5.45 தானே?’’

‘’நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? இப்ப அதோட டைம் காலை 5 மணி. ‘’

‘’அஞ்சு மணியா?’’

‘’இப்ப இப்ப உங்களுக்கு உலக விபரமே அதிகம் தெரியறது இல்ல பிரபு’’

அவர் கூற்று உண்மையாயிருக்குமோ என்ற ஐயம் இருந்ததால் மௌனமாக இருந்தேன். 

‘’உங்களுக்கு என்ன ஒர்க்?’’

‘’ஒரு லேப்டாப் வாங்கணும்’’ 

எனக்கு லேப்டாப்பில் தமிழில் எழுதத் தெரியும். அதைத் தவிர மற்ற எந்த தொழில்நுட்ப விபரமும் எனக்குத் தெரியாது என்பது நண்பருக்குத் தெரியும். இருந்தும் ஏன் என்னை கூட வருமாறு கேட்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நண்பரிடம் கேட்க முடியாது.  

‘’டிரெயின் டிக்கெட் இருக்கா பாருங்க. இல்லன்னா காலைல கிளம்பி பஸ்ல போவோம்’’

‘’பஸ்ஸா ? சான்ஸே இல்ல. நான் டிரெயின் பாக்கறன்.’’

நண்பர் அலைபேசியில் ரயில்வே இணைய தளத்துக்குச் சென்று ரயில்களின் இருக்கை இருப்புகளை பரிசோதித்தார். 

‘’செந்தூர் ஃபுல்’’

‘’பல்லவன் பாருங்க. காலைல 6.15க்கு விழுப்புரம் பாசஞ்சர் இருக்கு. அதுல போயி விழுப்புரத்துல காலைல 9.15க்கு பல்லவனைப் பிடிச்சுடலாம்’’

நண்பர் அந்த வாய்ப்பையும் பரிசோதித்தார். 

‘’பல்லவனும் ஃபுல்’’

கொஞ்ச நேரம் வேறு ஏதோ தோண்டிக் கொண்டிருந்தார். 

‘’பிரபு எர்ணாகுளம் தாம்பரம்னு ஒரு வண்டி இருக்கு’’

‘’புதுசா இருக்கே. நம்ம ஊர் வழியாவா போகுது.’’

‘’ஆமாம் காலைல 6.15க்கு நம்ம ஊர்ல. 11.45க்கு தாம்பரம் போகுது. அன்னைக்கு சாயந்திரம் 3.45க்கு தாம்பரத்துல கிளம்புது. நைட் 8.15க்கு நம்ம ஊருக்கு வந்திடுது. ஆனா வாரத்துல ஒரு நாள் மட்டும் தான் இந்த டிரெயின்’’

வழக்கமான தூக்கமும் கெடாது. இரவு முன் நேரத்தில் ஊர் திரும்பி விடலாம். 

‘’உங்க ஒர்க் மூணு மணி நேரத்துல முடிஞ்சிடுமா?’’

‘’நாம பர்ச்சேஸ் செய்யப் போற கடை குரோம்பேட்டைல இருக்கு. செல்லர் ஒரு ஹோல் சேலர். தாம்பரம் ஸ்டேஷன்ல ஓலா புக் பண்றோம். நேரா குரோம்பேட். அங்க பர்ச்சேஸ் முடிக்கறோம். தாம்பரத்துல லஞ்ச். உடனே ஸ்டேஷன் வந்துடறோம். டிரெயினைப் பிடிக்கறோம். ஊருக்கு வந்துடறோம்’’ 

எங்கள் ஊர்க்காரர்களுக்கு புறப்பாடு கொஞ்சம் முன் பின் இருந்தாலும் ஊர் திரும்புதல் துல்லியமாக இருக்க வேண்டும். 

நாளை ஒருநாள் பயணமாக சென்னை சென்று திரும்புகிறேன். 

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்

பழைய தமிழ் திரைப்படப் பாடல்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள் இந்தப் பதிவின் தலைப்பு கண்ணதாசனின் வரி என்பதை நினைவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள். ‘’ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’’ என்ற பாடல். 

இன்று எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஊரின் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர். நாளின் பெரும்பாலான பொழுது மருத்துவமனையிலேயே இருக்கும் விதமான வாழ்க்கைமுறை அவருடையது. காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வார். மதியம் மூன்று மணி வரை அங்கிருப்பார். வீடு திரும்பி மதிய உணவு அருந்தி விட்டு மீண்டும் மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டுச் செல்வார். இரவு வீடு திரும்ப ஒன்பது மணி ஆகி விடும். யார் மூலமோ ‘’காவிரி போற்றுதும்’’ மரம் நடும் பணிகள் குறித்து அறிந்திருக்கிறார். அவருக்கு மரம் நடுதல், மரக்கன்றுகள் தயார் செய்தல், மலர்ச்செடிகள் உற்பத்தி ஆகிய விஷயங்களில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. தான் மிகவும் விரும்பும் மிகவும் நேசிக்கும் இவ்வாறான விஷயங்களுக்கு நேரம் கொடுக்க முடியவில்லையே என்ற மனவருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது கிராமங்களில் மரம் வளர்த்தல் குறித்து ஐயம் ஒன்றை எழுப்பினார். எனது அனுபவத்திலிருந்து நான் அவருடைய ஐயத்தைப் போக்கினேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து நான் எழுதிய பதிவுகளை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவற்றை வாசித்து விட்டு என்னிடம் மீண்டும் பேசினார். அவருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் இருக்கும் தீவிரமான ஆர்வத்தை உணர்ந்து கொண்டேன். 

அவருடைய இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் என்னைத் தற்செயலாக கடைவீதியில் சந்தித்தார். அவரும் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு முன்னாலும் இறைப் பூசனைக்குப் பயன்படும் மலர்ச்செடிகள் நட வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்து நூறு மலர்ச்செடிகள் வாங்கித் தர முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கு அறுவை சிகிச்சை நிபுணரின் ஞாபகம் வந்தது. அவரை மனதில் உத்தேசித்து இரண்டு நாட்களில் சொல்கிறேன் என்று சொன்னேன். பின்னர் அறுவைசிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன். விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

‘’பிரபு ! ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா நீங்க எவ்வளவோ செய்றீங்க. ஆனா இந்த விஷயம் உங்க கவனத்துக்கு வந்ததும் என்னோட ஞாபகம் வந்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறீங்க. ரொம்ப தேங்க்ஸ்’’

‘’நீங்க நிறைய விஷயம் மனசால செய்யணும்னு நினைக்கறீங்க. அது ரொம்ப நல்லது. நீங்க தினமும் பாக்கற ஏரியால நீங்க தினமும் ஹாஸ்பிடலுக்கு டிராவல் பண்ற ஏரியால நீங்க டொனேட் செய்ற செடிகளை அந்த செடிகள் பூ பூக்கறத பாத்தா நீங்க ரொம்ப சந்தோஷமா நிறைவா ஃபீல் பண்ணுவீங்க. அது உங்களை இன்னும் அதிகமா இந்த விஷயம் குறித்து யோசிக்க வைக்கும். அதனால தான் உங்க கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்தேன்’’ 

‘’நந்தியாவட்டை அல்லது அடுக்கு நந்தியாவட்டை 100 செடிகள்’’ 

‘’நீங்க சொல்றபடியே செஞ்சுடுவோம்’’. நண்பரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். 

இன்று காலை அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு. 

‘’பிரபு ! எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு’’

‘’என்ன விஷயம் சொல்லுங்க’’

‘’இப்ப நம்ம டிஸ்ட்ரிக்ட்ல நிறைய கோவில் இருக்குல்ல அந்த கோவிலைச் சுத்தி அங்க இருக்கற சுவாமிகளோட அம்சமா இருக்கற மரங்களை நடணும். அதாவது சிவன்னா வன்னிமரம், வில்வமரம், நாகலிங்க மரம், கிருஷ்ணன்னா கடம்ப மரம் முருகன்னா கருங்காலி செங்காலி மரம் தக்‌ஷணாமூர்த்தினா ஆலமரம் இப்படியான டிரெடிஷனல் மரங்களை ஒவ்வொரு கோவிலிலும் நடணும்’’

‘’நல்ல ஐடியா . நாம இதப் பத்தி டிஸ்கஸ் செய்வோம்’’

‘’நீங்க ஃபீல்டுல ஒர்க் பண்றீங்க. எனக்கு ஃபீல்டுல ஒர்க் பண்ண டைம் கிடையாது.  நான் என்னால முடிஞ்ச மேக்ஸிமம் சப்போர்ட் பண்றன். ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா நீங்க இந்த விஷயத்தை செய்ங்க’’

‘’ஃபீல்டுல ஒர்க் பண்றதுக்கு சமமான விஷயம் தான் ஒரு நல்ல விஷயத்தை மனசால யோசிக்கறதும். மனசுல நினைக்கப்படற ஒரு விஷயம் தான் பின்னாள்ல ஒரு செயலா மாறும். ஒரு செயல் நடக்குதுன்னா அது எப்பவோ யாராலயோ நினைக்கப்பட்டிருக்குன்னு அர்த்தம். அதனால ஐடியா எக்ஸிகியூஷன் ரெண்டையும் தனித்தனியா பாக்க வேணாம். ஒரு நாணயத்தோட ரெண்டு பக்கங்கள் தான் ரெண்டும். ‘’ 

‘’நானும் யோசிக்கறன் . நீங்களும் யோசிங்க. நாம சேர்ந்து ஒரு ஆக்‌ஷன் பிளான் தயார் செய்வோம். பிற்பாடு அதை ரொம்ப சீக்கிரமா எக்ஸிகியூட் செய்வோம். ‘’ 

அவரது ஆர்வமும் தீவிரமும் எனக்கு ஆச்சர்யமளித்தது. 

‘’காவிரி போற்றுதும்’’ மிகச் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.