Tuesday, 6 May 2025

குழந்தைகள் - 6

அவனுக்கு அப்போது 4 வயது இருக்கும். அவன் வயதையொத்த குழந்தைகளுடன் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவன் வீட்டுக்கு முன்னால் பைக்கில் சென்று நின்றேன். எப்போதுமே எந்த வீட்டின் முன் போட்டிருக்கும் மாக்கோலத்தின் மீதும் எனது வாகனத்தை ஏற்ற மாட்டேன். அன்று நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் குழந்தைகளிடமிருந்து கணிசமான தூரத்தில் வண்டியை நிறுத்த வேண்டும் என்பதால் கோலத்தின் மீது வண்டியை நிறுத்தி விட்டேன். எப்போதும் அவ்விதம் நிகழாது ; விதிவிலக்காக அன்று நிகழ்ந்து விட்டது. ‘’அங்கிள் ! என்ன அங்கிள் கோலத்து மேல வண்டியை ஏத்திட்டீங்க. அது ஒருத்தரோட உழைப்பு தானே அங்கிள்’’ என்றான். நான் பதறி விட்டேன். ‘’சாரி ! தம்பி . எப்பவும் இப்படி நடந்ததில்ல. இன்னைக்கு இப்படி ஆயிடுச்சு. என்னை மன்னிச்சுடு’’ என்றேன். ‘’பரவாயில்லை அங்கிள் ! உங்கள பகவான் மன்னிப்பார்’’ என்றான். அவன் வாக்கு தெய்வவாக்கு என்பதாக என் உளம் பொங்கி நெகிழ்ந்து விட்டேன்.  

Monday, 5 May 2025

எனது படைப்புகள் - மறுபிரசுரம்

      2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு


காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







குழந்தைகள் - 5


அவனுடைய பாட்டிக்கு 85 வயது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். முதுமை காரணமாக சிறு நோய்வாய்ப்பட்டார். பின்னர் இயற்கை எய்தினார். அவருடைய இறுதிச் சடங்குகள் நிகழ்ந்து முடிந்திருந்தன. அதற்கு அடுத்த நாள் அவன் வீட்டின் மாடிப்படியில் தனியாக கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனுடைய அம்மா அவனிடம் ‘’ஏன் தம்பி இப்படி கவலையுடன் தனியாக அமர்ந்திருக்கிறாய் ?’’ என்று கேட்டார்கள். ’’பாட்டி மேல் பிரியம் வைத்திருந்தேன். அவர்கள் இறந்து விட்டார்கள். உலகில் உள்ள எல்லாருமே ஒருநாள் பாட்டி போல் இறந்து விடுவார்களா?’’ என்று கேட்டான். ‘’ஆமாம்ப்பா ! பிறப்பெடுத்த எல்லாரும் இறந்து ஆக வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி ‘’ என்று அவன் அம்மா சொன்னார்கள். ‘’அப்ப நீயும் இறந்திடுவ. அப்பாவும் இறந்திடுவாங்கல்லம்மா. அதை நினைச்சு இப்ப துக்கப்படறன்’’. ‘’தம்பி! இப்ப நாங்க ரெண்டு பேரும் இருக்கோம். அதனால எதிர்காலத்துல நடக்கப் போறத நினைச்சு இப்பவே கவலைப் படாத. அப்படி ஒரு நாள் வர்ரப்ப அப்ப கவலைப் பட்டுக்கலாம்’’ என்று அவன் அம்மா சொன்னார்கள். இந்த உரையாடல் நிகழ்ந்த போது அவனுக்கு இரண்டரை வயது. 


 

Sunday, 4 May 2025

குழந்தைகள் - 4


 எனது நண்பரின் குழந்தை அவன். மிகச் சிறு வயதிலேயே பக்குவத்துடன் நடந்து கொள்வான். அவனுக்கு வாசிப்பில் மிக்க ஆர்வம் உண்டு. மொழி பயிலத் தொடங்கிய இரண்டரை வயதிலிருந்து அட்சரங்களை உச்சரிப்பதும் எழுதுவதுமாக இருப்பான். எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றதும் அவன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று நீங்கள் என்ன நட்சத்திரம் என்று கேட்பான். அவர்கள் நட்சத்திரத்தைக் கூறியதும் வீட்டில் மாட்டியிருக்கும் தினசரி காலண்டரில் அந்த நட்சத்திரத்துக்கு என்ன ராசிபலன் போட்டிருக்கிறது என்பதை அவர்களுக்குச் சொல்வான். எப்போதும் சிலேட்டை வைத்துக் கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருப்பான். நண்பர் பணி நிமித்தம் வட இந்திய நகரத்துக்குச் சென்றார். அங்கே சென்ற போது அவன் இரண்டு வயது குழந்தை. அண்டை வீட்டுக் காரர்கள், அண்டை வீட்டுக்கார குழந்தைகள் என அவர்களிடம் பேசிப் பேசி ஹிந்தியை மிக சரளமாக பேசக் கற்றுக் கொண்டான். இங்கே ஊரில் எவரேனும் ஹிந்தி தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் மிகச் சரளமாக ஹிந்தி பேசுவான். அவனுடைய ஹிந்தியை எல்லாரும் வியப்பார்கள்.  

Saturday, 3 May 2025

இறைமையிடம் வேண்டுதல்

எனது நண்பரின் சகோதரர் உடல்நலம் குன்றியிருக்கிறார். சென்ற வாரம் அவருக்கு ஒரு அறுவைசிகிச்சை நிகழ்ந்தது. அறுவைசிகிச்சைக்குப் பின்னான காலகட்டத்தில் இருக்கும் சில உடல் நல சிக்கல்கள் இப்போது அவருக்கு இருக்கின்றன. விரைவில் உடல்நலம் மீள்வார். எனினும் நண்பர் தற்போது வருத்தம் கொண்டிருக்கிறார். சகோதரரின் நலமின்மை அவரை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது. நண்பரின் வருத்தம் என்னையும் வருந்தச் செய்தது.  சென்னை சென்று மருத்துவமனையில் பார்த்து விட்டு வரலாமா என யோசித்தேன். நண்பருடன் இந்த தருணத்தில் உடனிருக்க விரும்பினேன். அதை விட மேலான செயல் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். 

இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் ( காலை 3 மணி) எழுந்தேன். நீராடி காலை 3.30க்கு அமர்ந்தேன். 

காலை 3.30 லிருந்து காலை 6.30 வரை கண் மூடி மனத்துக்குள் ‘’குரு ஸ்துதி’’ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தேன். அதிகாலைப் பொழுது இறைமையிடம் வேண்டிக் கொள்ள மிக உகந்த பொழுது. நண்பரின் சகோதரர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என இறைமையிடம் வேண்டிக் கொண்டேன். அடுத்த இரண்டு நாட்களும் இவ்விதம் வேண்டிக் கொள்ள இருக்கிறேன். 

குழந்தைகள் - 3

அவன் எனது உறவினரின் குழந்தை. அவன் வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். சில நாட்கள் இருந்ததில் அவனுக்கு என்னுடன் ஊருக்கு வர வேண்டும் என்று தோன்றிவிட்டது. அவனுக்கு அப்போது இரண்டு வயது. அவன் அன்னை தந்தையைப் பிரிந்து இருந்தது இல்லை. இருந்தாலும் என்னுடன் ஊருக்கு வருகிறேன் என கூறினான். அப்போது சோழன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் வரை சென்று கொண்டிருந்தது. தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நாங்கள் ஆட்டோவில் புறப்பட்டோம் ; அவனது தந்தையும் ரயில் நிலையத்துக்கு எங்களுடன் வந்தார். உற்சாகமாக அவனுடைய அம்மாவுக்கு ஆட்டோவில் கையசைத்து விட்டு எங்களுடன் வந்தான். ரயில் நிலையத்தில் அவனது தந்தை இருந்ததால் அங்கும் உற்சாகமாக இருந்தான். ரயில் கிளம்பியது. அப்போது அவனுக்கு தந்தையைப் பிரிகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. தீவிரமாக அழ ஆரம்பித்து விட்டான். முன்பதிவு பெட்டியின் பயணிகள் அனைவருமே ஏன் ஒரு குழந்தை இவ்விதம் அழுகிறது என கரிசனத்துடன் நோக்கினார்கள். அவனை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. செங்கல்பட்டு வரை அழுகையை நிறுத்தவேயில்லை. செங்கல்பட்டு வந்து ரயில் நின்றதும் அழுகையும் நின்றது. சிரித்து விளையாடத் துவங்கி விட்டான். சக பயணி ஒருவர் ‘’அப்பாடா ! நல்ல வேளை ! செங்கல்பட்டோடு அழுகையை நிறுத்தி விட்டான். எப்படி விழுப்புரம் வரை பயணிக்கப் போகிறோம் என்று கவலைப்பட்டேன்’’ என்றார். அதன் பின்னர் ஊர் வரும் வரை சிரிப்பும் கொண்டாட்டமும் தான். ஊரில் ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தான். பின் அவனை சென்னை கொண்டு சென்று வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.  

Friday, 2 May 2025

குழந்தைகள் - 2

அவன் எப்போதும் எங்கள் வீட்டில் தான் இருப்பான். தேனீர் அவனுக்கு மிகவும் பிரியமான பானம். நாளின் பெரும்பகுதி எங்கள் வீட்டில் இருந்து விட்டு மாலை அல்லது இரவு அவனது அன்னை வந்து அழைத்தாலும் அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் இங்கேயே இருக்கிறேன் என்று கூறுவான். அரிச்சுவடி புத்தகத்தில் அம்மா ஆடு இலை ஈ என்று இருக்கும் ; அவன் அத்தை ஆடு இலை ஈ என்று கூறுவான். என்னை அண்ணன் அண்ணன் என ஓயாமல் அழைத்துக் கொண்டேயிருப்பான். அவனை விட வயதில் பெரியவனான என்னுடன் குழந்தைப் பருவம் முதற்கொண்டு இருந்ததால் அவன் வயதில் பெரியவர்களோடு உரையாடுவதில் எப்போதும் ஆர்வமாக இருப்பான். யாருடனாவது சென்று பேசிக் கொண்டிருப்போம் என என்னை அழைப்பான். குழந்தையாயிருந்து மழலை பேசி பள்ளியில் அரிச்சுவடி பயின்று பள்ளிக்கல்வி முடித்து மருத்துவத்தில் பட்டம் பெற்று மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பும் நிறைவு செய்து இப்போது ஒரு பெரும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணி புரிகிறான் அந்த தம்பி. அவனுடைய மனைவியும் ஒரு மருத்துவர். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டாவது பெண் குழந்தையைக் கண்ட போது தம்பியை குழந்தையாய்ப் பார்த்தது நினைவில் வந்தது. அச்சு அசல் அவன் குழந்தையாய் எத்தகைய தோற்றத்தில் இருந்தானோ அதே போன்ற தோற்றம் கொண்டிருந்தது அக்குழந்தை. 

Thursday, 1 May 2025

குழந்தைகள் - 1


நான் கைக்குழந்தையாக பார்த்த பல குழந்தைகள் இன்று இளைஞர்களாக இருக்கின்றனர். எனினும் என்னுடைய உணர்வில் அவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். என் அகம் அவர்களை குழந்தைகளாக எண்ணுவதை அவர்களிடம் கூறினால் தாங்கள் இப்போது குழந்தைகள் இல்லை என்று சொல்வார்கள். தங்கள் குழந்தைப்பருவத்தை இன்னும் நான் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பதாகவும் அதை எப்போதும் நினைவுகூர்வதாகவும் சொல்வார்கள். இந்திய மரபில் சிவகுமாரனான முருகன் இன்னும் குழந்தையாகத்தானே நினைக்கப்படுகிறான். மூத்த பிள்ளை விநாயகன் பிள்ளையாராகத்தானே எண்ணப்படுகிறான். ஆயர்பாடியில் வளர்ந்த சிறுவனைத் தானே இன்னும் நாம் வணங்குகிறோம். குழந்தைகளின் உள்ளங்கள் படைப்பூக்கம் கொண்டவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எனவே குழந்தைகள் உடனிருப்பதையும் அவர்களுடன் உரையாடுவதையும் நான் விரும்புவேன். அவ்வகையில் என்னுடைய நினைவில் இருக்கும் சில சம்பவங்களைக் குறித்து எழுத விரும்பினேன். இந்த சம்பவங்களில் பல குழந்தைகள் இருக்கின்றன. எல்லா குழந்தைகளும் ஒன்று தான் என்றும் தோன்றுகிறது.

எங்கள் பகுதிக்கு புதிதாக ஒரு தம்பதி குடி வந்தனர். அவர்களுக்கு மகவு பிறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ஒரு வாரக் குழந்தையிலிருந்து கையில் தூக்கி வளர்த்த செல்வன் அவன். நாளின் பெரும்பாலான பொழுதுகள் எங்கள் வீட்டிலேயே இருப்பான். உணவுண்பது உறங்குவது எல்லாம் இங்கேயே. அவனுடைய அம்மா ஒரு ஹெர்குலிஸ் சிறிய உயரம் கொண்ட சைக்கிள் ஒன்று வைத்திருந்தார்கள். அவன் கைக்குழந்தையாக இருக்கும் போதே அதன் பின் இருக்கையில் அமர வைக்கப்படுவான். சக்கரத்தினுள் கால் விட்டு விடாமல் இருக்க சைக்கிள் சக்கரத்தையொட்டி ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து கொண்டு அமைதியாக வருவான்.

ஒருமுறை அவன் குடும்ப உறுப்பினர்களுடன் வைத்தீஸ்வரன் கோவில் சென்றிருந்தோம். அப்போது அவனுக்கு இரண்டு வயது இருக்கலாம். அவனுக்கு ஒரு எள்ளடை வாங்கித் தந்தோம். சிறு குழந்தை என்பதால் கோயிலின் பெரிய பரப்பில் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தான். சட்டென கணிசமான தூரம் சென்று விட்டான். எங்கள் கவனம் அவன் மேல் இருந்தது. அவன் எங்கு இருக்கிறான் என நாங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தோம். சட்டென வெகு தொலைவு சென்று விட்டதால் அவன் பார்வை எல்லைக்குள் நாங்கள் இல்லை. கோயிலில் நிறைய கூட்டம். நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவன் அறிந்தவர்கள் எவரும் இல்லை. இடம் தெரியாததால் எங்களை நோக்கி வருவதற்கு பதிலாக விலகிச் சென்றவாறு இருக்கிறான். சில கணங்கள். அவன் அழவில்லை. அவனது கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. ஒரு இடத்தில் நின்றான். தன் கையில் இருந்த எள்ளடையை மெல்ல சுவைத்தான். அப்போது நாங்கள் அவன் முன் சென்று விட்டோம். அவனை அள்ளி தூக்கிக் கொண்டோம்.

 

  

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - இரண்டாம் மேல்முறையீடு - மத்திய தகவல் ஆணையம்

ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய இரண்டாம் மேல்முறையீட்டின் தமிழாக்கம் : 

அனுப்புநர்

ர. பிரபு

*****

****

பெறுநர்

மத்திய தகவல் ஆணையம்
சி.ஐ.சி பவன், பாபா கங்காநாத் மார்க்
முன்ரிகா
புது தில்லி

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டம் - இரண்டாம் மேல்முறையீடு

பார்வை : எனது சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் : *****

(1) 19.11.2024 அன்று சி.பி.கி.ராம்.ஸ் ல் என்னால் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது.

(2) 21.01.2025 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளரிடம் எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பினைக் கோரினேன். 

(3) 19.02.2025 அன்று மேற்படி கோப்பின் ஆவணங்கள் பல கோப்புகளில் இருப்பதால் உடனடியாக திரட்டி அளிக்கும் நிலையில் அவை இல்லை என பதில் அளித்து எனக்கு கடிதம் மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளர் மூலம் அனுப்பப்பட்டது. 

(4) அவரது கடிதம் கிடைத்ததும் முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் இந்த விஷயம் தொடர்பாக முதல் மேல்முறையீடு செய்தேன். அந்த அதிகாரி ‘’மேல்முறையீடு செய்தவர் தொடர்புடைய ஆவணங்களை வழங்குமாறு’’ ஆணை பிறப்பித்தார்.

(5) இத்துடன் பொது தகவல் அதிகாரியின் பதில், முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை, பொது தகவல் அதிகாரி ஆணைக்குப் பின் அளித்த விபரங்கள் ஆகியவை மத்திய தகவல் ஆணையத்தின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன. 

(6) எனது இரண்டாம் மேல்முறையீட்டின் மூலம் மத்திய தகவல் ஆணையத்திடம் எனது சி.பி.கி.ராம்.ஸ் கோப்பின் முழுமையான ஆவணங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

***

இடம் : மயிலாடுதுறை
நாள் : 30.04.2025
 

நிலப்பிரபுத்துவ காலகட்டம் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஒரு மாநகரின் கடைவீதியில் அமைந்திருக்கும் ஒரு ஏக்கர் பரப்பு கொண்ட மனை அது. அதன் சுற்றுச்சுவரின் தோற்றமும் அதில் இருந்த இரும்பாலான நுழைவாயில் கதவும் அவை அமைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டாவது ஆகியிருக்கும் என்பதை உணர்த்தின. அங்கே நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்ற போது நண்பர் ‘’ஒரு இடம் ரொம்ப வருஷமாக காலிமனையாகவே இருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டார். நண்பர் ஆர்வமாகக் கூறுகிறாரே அதனைப் பார்ப்போம் என அவருடன் சென்றேன். அந்த இடத்தை மாநகரின் இதயம் என்றே சொல்ல முடியும். பிரதான கடைவீதி, ரயில்வே சந்திப்பு, ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பேருந்து நிலையம் என அனைத்துமே அந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருந்தன. கோடிக்கணக்கான ரூபாய் பெருமானம் கொண்ட சொத்து அது. இத்தனை ஆண்டுகள் எப்படி அந்த மாநகரின் வணிகர்கள் அதை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளாமல் இருந்தார்கள் என்பது வியப்பே. அந்த இடம் என் நினைவுகளில் எங்கோ ஒரு மூலையில் இருந்ததே தவிர எனது முக்கிய கவனத்தை விட்டு அகன்று விட்டது. சென்ற வாரம் ஐ.டி கம்பெனி வைத்திருக்கும் எனது நண்பரைக் காணச் சென்ற போது கூட அவருக்கு வேறு ஒரு ஊரின் இடத்தினைக் குறித்து எடுத்துரைக்கவே சென்றேன். ஊர் திரும்பியதும் இந்த மாநகரின் இடம் என் நினைவுக்கு வந்தது. ஒரு ஏக்கர் இடம் என்பது நினைவில் இருந்தது. எவ்வளவு விலை என்பது என் நினைவில் இல்லை. மீண்டும் அந்த இடத்தை நேரில் பார்க்கலாம் என அங்கு சென்றேன். ஒரு இடத்துக்கு நேரில் சென்றால் அந்த இடம் ஒவ்வொரு முறையும் சில சங்கேதங்களை அளிக்கும் என்பது ஒரு தொழில்முறை புரிதல். அந்த இடத்துக்கு நேரில் சென்று அதன் சுற்றுச்சூழலை அவதானித்தேன். அந்த இடத்தின் அண்டை வீட்டுக்காரர்களிடம் அந்த இடம் யாருக்கு உரிமையானது ; அவர்களுடைய முகவரி அவர்களுக்குத் தெரியுமா என விசாரித்தேன். அந்த கடைத்தெருவில் ஒரு கட்டுமானப் பொறியாளர் இருந்தார். அவர் ஏதும் அந்த இடம் குறித்து ஏதேனும் அறிந்திருக்கிறாரா என்று கேட்டேன். ‘’ சார் ! இந்த இடத்துக்கு என்ன மார்க்கெட் வேல்யூவோ அதான் கைடு லைன் வேல்யூவும். இவ்வளவு பெரிய இடத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கற பையர் ரொம்ப கம்மி’’. சிலரிடம் விசாரித்ததிலிருந்து உரிமையாளரின் தொடர்பு எண்ணைப் பெற்றேன். அந்த இடத்துக்கு எதிர்சாரியில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அதன் நிழல்பரப்பில் நின்றவாறு அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். 

‘’வணக்கம். என்னோட பேர் பிரபு. கன்ஸ்ட்ரக்‌ஷன் என்னோட தொழில். நான் இப்ப உங்களோட ஒரு ஏக்கர் மனைக்கு பக்கத்துல இருந்து பேசறன். உங்க இடத்தோட நெய்பர் உங்க நம்பர் கொடுத்தாரு. உங்க இடம் ஸேல் பண்றதா?’’

‘’ஆமாம். ஸேலுக்கு இருக்கு’’

‘’என்னோட ஃபிரண்ட் ஒருத்தர் ஐ.டி கம்பெனி வச்சிருக்காரு. அவர் ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ண விருப்பமா இருக்காரு. அவருக்கு இந்த இடம் பொருத்தமா இருக்கும்னு என் மனசுக்கு படுது.இடத்தோட விபரங்கள் சொல்றீங்களா?’’

இடத்தின் நீள அகலம் , பரப்பு, விலை ஆகியவற்றைச் சொன்னார். 

‘’உங்களை நேரில் பாக்கணும்’’ என்றேன். 

‘’இப்ப சென்னையில இருக்கன். இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு வந்துடுவன். ஃபோன் பண்ணிட்டு வாங்க’’

அவரது வீடு இன்னொரு மாநகரில் இருந்தது. இரண்டு நாட்களில் அவரைக் காணச் சென்றேன். 

அவரது வீடு இருந்த மனை ஒரு ஏக்கர் பரப்பு கொண்டதாக இருக்கும் எனத் தோன்றியது. வீட்டின் முகப்பு குறைந்தது 200 அடி அகலமாகவது இருக்கும். அந்த வீடு கட்டி குறைந்தபட்சம் 125 ஆண்டுகளாவது இருக்கும் என அனுமானித்தேன். அப்போதே தரைத்தளம் முதல்தளம் எனக் கட்டியிருக்கிறார்கள். ரெட் ஆக்சைடின் பளபளப்பு கொண்ட ஃபுளோரிங். ஒன்றே கால் அடி அகலம் கொண்ட சுவர்கள். அங்கிருந்த அறைக்கலன்கள் கூட நூறாண்டு காலம் தொன்மையானவை எனத் தோன்றியது. அந்த வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த இடம் நிறைய காளை மாடுகள் கட்டப்பட்டிருந்த இடம் என்று தோன்றியது ; இப்போது அங்கே மாட்டு வண்டிகளோ மாடுகளோ இல்லை என்றாலும் கூட அவை அவற்றுக்கான இடம் என்றே மனம் எண்ணியது. 

அந்த வீட்டின் பணியாளர் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்றார். வீட்டின் உரிமையாளர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு வயது எண்பது இருக்கக் கூடும். அப்போது தான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன் ; அந்த வீட்டில் அவர் மட்டுமே தனித்திருக்கிறார். 

சோஃபாவில் அமர்ந்திருந்த நான் அவரிடம் என்னுடைய விசிட்டிங் கார்டை அளித்தேன். அவர் அதனைக் கண்டார். 

‘’பெரிய புராணத்தோட முதல் வார்த்தையை உங்க இ-மெயில் ஐ.டி யா வச்சிருக்கீங்க. வெரி நைஸ்’’ என்றார். 

அவருக்கு தமிழிலக்கிய அறிமுகம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்‘’அந்த வார்த்தை ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தத்துலயும் இருக்கு. கம்பன் உலகம் யாவையும் னு தன்னோட காவியத்தை ஆரம்பிக்கிறான் ‘’  

பேச்சு கம்பராமாயணம் குறித்து திரும்பியது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த உரையாடல் ஒரு நற்துவக்கமாக அமைந்தது. 

இடத்தின் விபரங்கள், விலை ஆகியவற்றைக் கூறினார், சொத்து அவருடைய தகப்பனார் வாங்கியது. அவருக்குப் பின் அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சொந்தமாகிறது. எல்லாருமே சென்னையில் இருக்கிறார்கள். அவரும் சென்னையில் தான் இருக்கிறார். பதினைந்து நாளுக்கு ஒரு முறை ஓரிரு நாள் இங்கே வந்து விட்டு செல்வார். இந்த முறை ஒரு வாரம் இங்கே இருப்பார். அதன் பின் 15 நாட்கள் ஊட்டியில் இருக்கும் தனது எஸ்டேட்டில் இருப்பார். எனது நண்பரை இங்கே அழைத்து வந்தாலும் பேசிக் கொள்ளலாம் அல்லது ஊட்டிக்கு அழைத்து வந்தாலும் பேசிக் கொள்ளலாம் என்றார். 

அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். 

அவர் வீட்டிலிருந்து வீதியில் இறங்கி பேருந்து நிலையம் நோக்கி நடந்த போது 1900ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டுக்கு வந்தது போல் இருந்ததை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டேன்.