Wednesday, 27 August 2025

மன்றம்

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.

-குமரகுருபரர்

இன்று காலை சிதம்பரம் சென்றிருந்தேன். தமிழகத்தில் ஆலய வழிபாட்டு நியதிகள் கிரமமாகப் பின்பற்றப்படுவதும் தினமும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வழிபடுவதும் என இவ்விரு செயல்களும் ஒருங்கே நிகழும் ஆலயம் சிதம்பரம். சிதம்பரம் ஊர்க்காரர்களில் கணிசமானோர் ஏதேனும் ஒரு வேளை ஆலயத்துக்கு சென்று வழிபடுவதை தங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள். இன்று வினாயகர் சதுர்த்தி என்பதால் நான்கு வீதிகளிலும் பூசனை திரவியங்கள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. தில்லை காளியம்மன் ஆலயத்திலும் சிறப்பான வழிபாடு நடைபெற்றது. எனது தொழில் சார்ந்த சில பணிகள் இருந்தன. அவற்றை மேற்கொண்டேன். இன்று சிற்றம்பலத்தையும் தில்லை காளியையும் வணங்கியது மனதுக்கு அமைதியைத் தந்தது. 

Tuesday, 26 August 2025

இங்கும் அங்கும்

 ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கிறது சிதம்பரம். அங்கே எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். தோட்டம் ஒன்றை வாங்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த தோட்டம் விலைக்கு வருகிறது என்பதை நான் அவருக்குக் கூறினேன். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சீர்காழியில் உணவகம் ஒன்றை நடத்துகிறார். சீர்காழி ஊருக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் இரண்டு ஊர்களுக்கும் சம தொலைவில் இருக்கிறது. சீர்காழிக்கு அருகில் இருக்கும் நாங்கூர் தோட்ட உரிமையாளரின் வீடு. நேற்று காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். நண்பருக்கு காலை 6.15க்கு சந்திக்க வருகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் வீட்டு வாசலைச் சென்றடைந்த போது நேரம் எத்தனை என்று பார்த்தேன். 6.13 எனக் காட்டியது. அந்த வீட்டின் பணியாள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். 15 தினங்களுக்கு முன்னால் நண்பர் வீட்டுக்கு இதே நேரத்துக்குச் சென்றிருந்தேன். அப்போதும் அதே பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சர்யம். ’’தம்பி! நீங்க இந்த ஊர்தானா? உங்க வீடு எங்க இருக்கு?’’ என்று கேட்டார். நான் விபரம் சொன்னேன். அவருக்கு ஆச்சர்யம். நண்பர் 10 தினங்களாக ஊரில் இல்லை. அவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர் சில நிமிடங்களில் தயாராகி விட்டார். எனது வாகனத்தை அவர் வீட்டில் நிறுத்தி விட்டு நண்பருடன் காரில் நாங்கூருக்குப் பயணமானேன். நாங்கூரில் சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது. பின்னர் அங்கிருந்து சிதம்பரம் புறப்பட்டோம். அங்கே சென்று எங்களுக்குள் பேச வேண்டிய விஷயங்களைப் பேசினோம். நண்பரிடம் விடை பெற்று புறப்பட்டேன். சீர்காழி வந்தேன். தோட்டக்காரரின் உணவகத்துக்குச் சென்றேன். உரிமையாளர் வீட்டில் இருக்கிறார் என்றார்கள். அங்கே சென்று அவரைச் சந்தித்தேன். எங்கள் உரையாடல் 30 நிமிடம் நீடித்தது. சீர்காழியில் இன்னொரு வேலை இருந்தது. மீண்டும் வந்தேன். அந்த வேலையை முடித்து விட்டு ஊர் திரும்பினேன். நேரம் மதியம் 12.30. வீட்டுக்கு வந்ததும் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து விட்டு வங்கிக்குச் சென்றேன். அங்கே சில பணிகள். வேலை முடிய 2 மணி ஆயிற்று. வீட்டுக்கு வந்து மதிய உணவருந்தினேன். அமர்ந்திருந்தாலும் நகர்ந்து கொண்டிருப்பதான உணர்வு ஏற்பட்டது.  

Monday, 25 August 2025

துறவியுடன் ஒரு நாள்

எனது நண்பர் ஒருவர் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர். ஆன்மீக அமைப்பொன்றின் இளம் துறவி ஒருவரை கும்பகோணம் அருகில் இருக்கும் மடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். தவிர்க்க முடியாத பணியொன்றின் காரணமாக திட்டமிட்ட விதத்தில் அவரால் உடன் செல்ல முடியாத நிலை. என்னை அப்பணியை மேற்கொள்ள முடியுமா என்று கேட்டார். நான் ஒத்துக் கொண்டேன். 

இன்று அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி முடித்ததும் குளித்துத் தயாரானேன்.  காலை உணவை ஊரில் முடித்து விட்டு காட்டுமன்னார்குடி சென்றேன். துறவி தன்னார்வலர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். விடிகாலை எழுந்து யோகப் பயிற்சிகள் தினமும் மேற்கொள்வது துறவியின் வழக்கம். காலை குறைந்தது 3 மணி நேரம் யோகப் பயிற்சிகள் செய்வார்கள். எஞ்சிய பொழுதில் 2 மணி நேரம் பயிற்சி இருக்கும். நான் சென்ற போது பயிற்சி முடித்து காலை உணவருந்தி தயாராக இருந்தார். காலை 8 மணி அளவில் ஒரு வேளை உணவும் இரவு 7 மணிக்கு அடுத்த வேளை உணவும் என ஒரு நாளைக்கு 2 வேளை மட்டுமே உணவருந்தும் வழக்கம் அவர்களுக்கு. 

இரு சக்கர வாகனத்தில் இருவரும் பயணித்தோம். எங்கள் பிராந்தியத்தின் சமூக பொருளாதார சூழ்நிலைகள் குறித்து துறவியிடம் கூறிக் கொண்டு வந்தேன். நாங்கள் செல்ல வேண்டிய மடத்தில் காலை 10 மணி என சந்திப்புக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். நான் எப்போதும் மணிக்கு 40 லிருந்து 45 கி.மீ வேகம் மட்டுமே வாகனம் ஓட்டக் கூடியவன். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்து விட்டோம். சந்திப்பு சிறப்பாக இருந்தது. ஒரு மணி நேரம் அங்கு இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது வண்டியை துறவி ஓட்டினார். அவரது வாகன இயக்குதிறன் சிறப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகள் குறித்து அவரிடம் கூறினேன். சேத்தியாதோப்பில் அவரை இறக்கி விட்டு விட்டு நான் ஊருக்குப் புறப்பட்டேன். அவர் பேருந்தில் கடலூருக்குப் பயணமானார்.  

Sunday, 24 August 2025

ஐயம் தெளிதல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் தனது நடுவயதில் இருக்கிறார். இன்று அமைப்பாளரை வயதின் அடிப்படையில் இளைஞர் என்று கூறமுடியாது. 18 லிருந்து 40 வயது வரை இருப்பவர்களை இளைஞர்கள் என்று கூற முடியும் என்றால் அமைப்பாளரை இளைஞர் எனக் கூற முடியாது. வயது ஒரு உண்மை என்பதால் அமைப்பாளருக்கு அது குறித்து வருத்தம் இல்லை. ஆனால் அவருக்கு வேறு வகையான வருத்தங்கள் இருக்கின்றன. வாழ்க்கை என்றால் சுக துக்கம் வருத்தம் இன்பம் இருக்கும்தானே ! இதனைப் புரிந்தவர்தான் அமைப்பாளர். அவருடைய பிரத்யேக வருத்தம் என்னவெனில் ஓர் இளைஞனுக்கு ஏற்படும் கேள்விகளும் ஐயங்களும் அமைப்பாளருக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இவ்விதம் இருப்பது யதார்த்தமானதுதானா என்னும் கேள்வி அமைப்பாளருக்கு இருக்கிறது. அது குறித்துதான் அவ்வப்போது வருந்துவார்.  

பெரும்பாலான மனிதர்கள் பொதுவாக ‘’ஷண சித்தம் ஷண பித்தம்’’ என முடிவெடுத்து விடுகிறார்கள் என்பது அமைப்பாளரின் எண்ணம். இருப்பினும் அவ்விதமான மனிதர்களுக்கும் அல்லல்கள் இருக்கின்றன. அலசி ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் மனிதர்களுக்கும் அல்லல் இருக்கிறது. இப்போது அமைப்பாளரின் கேள்வி அல்லல் குறித்து. மனித வாழ்க்கை என்று வந்து விட்டாலே அல்லலும் துன்பமும் தவிர்க்க முடியாதது தானா ? இந்த கேள்வி அமைப்பாளருக்கு இளைஞனாயிருந்த போதும் இருந்தது . அப்போது ஒட்டு மொத்த மானுட அல்லலும் இல்லாமல் போகும் நாள் வரும் எனத் தீவிரமாக நம்பியிருப்பார். இப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. 

அமைப்பாளர் சில மாதங்களுக்கு முன்னால் அவர் பகுதிக்கு குடி வந்த ஒரு இளைஞரைச் சந்தித்தார். இரண்டு தெரு தள்ளி குடியிருப்பவர் அவர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட ஒரு கட்சியின் கிராமப் பொறுப்பாளர் அந்த இளைஞர். நடைமுறை அரசியல் குறித்து நடைமுறை அரசியலின் இயங்குமுறை குறித்து அரசியலுக்கு சாமானியர்கள் மனதில் அளிக்கும் இடம் குறித்து என பல விஷயங்களைப்  பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது அமைப்பாளர் அந்த இளைஞருக்கு  மேற்படி விஷயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க அவதானங்கள் இருக்கின்றன என எண்ணினார் அமைப்பாளர். ‘’நீட்’’ தேர்வு குறித்து பேச்சு வந்தது. அந்த இளைஞர் ‘’நீட்’’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார். அமைப்பாளர் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்கள் இருக்கின்றன என்று கேட்டார். அந்த இளைஞர் அதனை அறிந்திருக்கவில்லை. அமைப்பாளர் சொன்னார் : ''தம்பி ! மொத்த சீட்டே 12,000 தான். இந்த விஷயம் 12,000 பேர் சம்பந்தப்பட்டது. 234 தொகுதிக்கு கணக்கு பண்ணா சராசரியா தொகுதிக்கு 50 பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ‘’ அரசியலில் இருப்பதால் அந்த இளைஞர் அந்த கணக்கைப் புரிந்து கொண்டார். அவருக்கு அதிர்ச்சி . ஆச்சர்யமும் கூட. ’’எந்த விஷயமா இருந்தாலும் யோசிக்கணும் தம்பி’’   

சமூகத்துக்காக தான் செய்யும் செய்ய நினைக்கும் செயல்கள் பலன்களைத் தருகிறதா என்னும் ஐயம் அமைப்பாளருக்கு ஏற்படும். சமூகச் செயல்பாடுகளை ஆற்றுவதற்குத் தேவைப்படும் அனைத்தையும் தாம் வழங்குகிறோமா என்னும் கேள்வி அமைப்பாளருக்கு உண்டு. அமைப்பாளர் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். பலன் பற்றி கருத வேண்டாம் ; பலன் முக்கியம்தான் ; ஆனால் நாம் நினைக்கும் பலன் மட்டுமே எல்லாமும் அல்ல ; செயல் மட்டுமே நிகழ்காலத்தில் இருக்கிறது. பலன் எதிர்காலத்தில் இருக்கிறது; எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்தே ஆக வேண்டும். இதைப் புரிந்து கொண்டு நம்மால் முடிந்ததை சிறப்பாக இன்னும் ஆகச் சிறப்பாக செய்ய முயற்சி செய்வோம் என முடிவெடுத்துள்ளார். 

ஊருக்கு அருகில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வது ; ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு மரக்கன்றை எவ்விதம் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியைத் தோண்டி அதில் மக்கிய சாண எருவைக் கொட்டி நடுவது என்பது குறித்து எடுத்துச் சொல்வது ; ஒவ்வொரு வீட்டுக்கும் முதல் கட்டமாக ஒரு கொய்யா, ஒரு பலா, ஒரு எலுமிச்சை ஆகிய மூன்று மரக்கன்றுகளை வழங்குவது என முடிவெடுத்துள்ளார். 

எல்லா வீடுகளிலும் மரக்கன்றுகள் சிறப்பாக வளர வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு தான். எனினும் எல்லா மனிதர்களும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் ; பகுதியளவு மட்டும் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் ; ஊக்கத்துடன் செயலாற்றுபவர்கள் இருக்கிறார்கள் ; சோம்பல் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த புரிதல் இருந்தால் நமது செயல்பாடுகள் இன்னும் நேர்த்தி அடையும். நாம் எதிர்பார்க்கும் பலன் ஒருவேளை கிடைத்தாலும் கிடைக்கும். 

Saturday, 23 August 2025

ஒரு புதிய கண்டடைதல்

 இன்று ஒரு புதிய சாலையின் வழியே பயணித்தேன். இந்த பிராந்தியத்தின் எல்லா சாலைகளிலும் அனேகமாக ஒரு முறையேனும் பயணித்திருப்பேன். முன்னரெல்லாம் புதிதாக ஊர்களைக் காணவும் புதிதாக சாலைகளின் வழி பயணிக்கவும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கூட பயணங்கள் மேற்கொள்வேன். நடுவயதில் இருக்கும் இப்போது ஏதேனும் சாலைகளில் செல்லும் போது கிளைச்சாலைகளைக் கண்டால் இது எங்கே செல்லும் என்பது ஞாபகம் வரும் ; அப்போது இளமைக் காலத்தில் எத்தனை பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என்னும் வியப்பும் ஏற்படும். தினம் பயணிக்க வேண்டும் என்னும் உணர்வே அகத்தை புதிதாக வைத்துக் கொள்ளும் என எண்ணுவேன். குத்தாலத்திலிருந்து அணைக்கரைக்கு காமாட்சிபுரம் கோணலாம்பள்ளம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல ஒரு சாலை இருப்பதை மைல்கற்கள் மூலம் அறிந்தேன். அந்த பாதை வழியே நான் சென்றதில்லை என்பதால் இன்று அந்த வழியே பயணித்தேன். அசல் தஞ்சாவூர் கிராமங்கள். எப்போதுமே புதிய நிலத்தைப் பார்க்கும் போது அந்த நிலத்தில் வாழலாம் எனத் தோன்றும். இன்று நான் பார்த்த கிராமங்கள் வளமான தஞ்சாவூர் மாவட்ட கிராமங்கள். மானசீகமாக அந்த ஊர்களில் 15 ஏக்கர் நிலம் வாங்கி அதில் மரப்பயிர்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்! ரியல் எஸ்டேட் எனது தொழில் என்பதால் இவ்விதமான எண்ணமும் கற்பனையும் எழுவதைத் தடுக்க முடியாது ! இன்று ஒரு புதிய வழித்தடத்தை அறிந்து கொண்டதும் அதில் பயணித்ததும் மகிழ்ச்சியை அளித்தது.   

Friday, 22 August 2025

புரட்சித் துறவி

 

நூல் : புரட்சித் துறவி ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் மயிலாப்பூர் சென்னை.

மேரி கெரெல்லி ‘’தி மாஸ்டர் கிருஸ்டியன்’’ என எழுதிய நாவலை ரா.கி.ரங்கராஜன் தமிழில் புரட்சித் துறவி என எழுதியிருக்கிறார். ஐரோப்பாவின் அரசியல் மோதல்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் அங்கே ‘’சர்ச்’’ எனப்படும் அமைப்பு அரசாங்கங்களை விட வலிமையான அமைப்பாக உருவெடுத்து நிற்பது ஐரோப்பிய மற்றும் உலக நாடுகளையும் அதன் பொதுமக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது.  இந்நிலையில் மதம் உருவாக்கும் அழுத்தத்துக்கு ஐரோப்பிய சமூகம் ஆற்றும் எதிர்வினை ஐரோப்பாவின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பிரதிபலிக்கிறது. இந்த சூழலைப் பின்புலமாகக் கொண்டு குறியீட்டு ரீதியிலான கதாபாத்திரங்களால் மானுட வாழ்க்கையை இயக்கும் விசைகளையும் மானுடர்களை வியாபிக்கும் உணர்வுகளையும் மானுடர்களின் ஆன்மீகத் தேடலையும் சித்தரிக்கும் நாவல் ‘’புரட்சித் துறவி’’. 

Thursday, 21 August 2025

சுற்றுப்பயணம்

 ஊரில் எனது நண்பர் ஒருவர் இரண்டு கிரவுண்டுக்கும் அதிகமான இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அவருக்கு மனை வாங்கிக் கொடுத்து அந்த மனைக்கு வங்கிக்கடனும் ஏற்பாடு செய்து கொடுத்து பட்டா மாற்றமும் செய்து கொடுத்துள்ளேன். அந்த மனையில் ஒரு அபார்ட்மெண்ட்ஸ் கட்ட இருக்கிறோம். அதன் பிளான் ஒன்றை நண்பரிடம் அளித்துள்ளேன். ஒவ்வொரு வீடும் 495 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொன்றும் 1 BHK வீடுகள். இரண்டு வீடுகளைச் சேர்த்தால் ஒரு 3 BHK வீடாக ஆகும். நண்பர் இன்னும் கொஞ்சம் அதிக பரப்பில் வீடுகளை அமைக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறார். இரண்டு வீடுகளை இணைத்தால் ஒரு பெரிய வீடு கிடைத்து விடும் என்ற நிலையில் இப்போது உள்ள பிளான் சரியாக இருக்கும் என்பது தரப்பு. இந்த பரிசீலனையில் சில வாரங்கள் கடந்தன. ஊரிலிருந்து 10 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள ஊர்களில் இருப்பவர்களே இந்த அபார்ட்மெண்ட்ஸ்ஸின் வாடிக்கையாளர்கள். ஆகவே அந்த ஊர்கள் எவை எவை என புறவயமாக வரையறுத்துக் கொண்டால் அதற்குள் நமது பணிகளைக் குவித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த கிராமங்களைப் பட்டியலிட்டுக் கொண்டேன். மொத்தம் 45 கிராமங்கள் உள்ளன. அதில் 20 கிராமங்கள் முக்கியமானவை. 

இன்று அந்த கிராமங்களின் வழியே ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இவற்றுக்குள் தான் பணியாற்ற வேண்டியிருக்கும் என்ற புரிதல் மேம்பட இந்த சுற்றுப்பயணம் உதவியது. 

ஒரு குயர் நோட் ஒன்றில் ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் செய்தேன் எனக் குறித்து வைத்துக் கொண்டு வாடிக்கயாளர்களைச் சந்திக்க இருக்கிறேன்.  

Tuesday, 19 August 2025

நாடு முன்னேறியிருக்கிறதா?

இன்று என்னுடைய தொழில் நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். ஊரிலிருந்து மேற்கே 10 கி.மீ சென்று பின் அங்கிருந்து வடக்கே திரும்பி 10 கி.மீ சென்று அங்கேயிருந்து கிழக்கே திரும்பி மேலும் 10 கி.மீ சென்று அவரைச் சந்தித்து விட்டு அங்கிருந்து 10 கி.மீ தெற்கே வந்து புறப்பட்ட இடமான எனது ஊரை அடைந்தேன். 40 கி.மீ சுற்றளவு கொண்ட சிறு பயணம். சந்திக்கச் சென்றவர் ஊருக்கு வடமேற்கே 20 கி.மீ தூரத்தில் கடை வைத்திருக்கிறார். கடையில் அவர் இன்று இருந்திருந்தால் சென்ற மார்க்கத்திலேயே மீண்டும் திரும்பி வந்திருப்பேன். கடையில் இல்லாததால் அவரைக் காண வீட்டுக்குச் சென்றிருந்தேன். இந்த பயணம் முழுக்க முழுக்க சிறு கிராமங்களினூடாக நிகழ்ந்தது. நான் என்னுடைய ஐந்து வயதிலிருந்து கிராமத்துச் சாலைகளைக் கண்டு வருகிறேன். என்னுடைய இளம் வயதில் அவை எப்படி இருக்கும் என நான் அறிவேன். இன்று அனைத்து சாலைகளும் மிகவும் சிறப்பாக இருந்தன. இப்போது எல்லா சாலைகளும் சிறப்பாக இருக்கின்றன. சிறு சிறு கிராமங்களில் கூட ஹார்டுவேர் கடைகள் இருக்கின்றன என்பதை கவனித்தேன். கிராமங்களில் பெரிய பங்களா அளவிலான வீடுகள் கட்டப்படுகின்றன என்பதைக் கண்டேன். அது ஒரு சிறு கிராமம். அங்கே இரு சக்கர வாகன சீட் கவர் கடை ஒன்று பெரிய அளவில் இருப்பதைக் கண்டேன். கிராமங்களில் எல்லா வீடுகளிலும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. வீட்டின் ஆணுக்கு ஒரு வாகனம். வீட்டின் பெண்ணுக்கு ஒரு வாகனம். ஒரு கிராமத்தில் 500 வீடுகள் இருந்தால் அங்கே குறைந்தது 800 இரு சக்கர வாகனமாவது இருக்கும். நான் பார்த்த கிராமம் 20 கிராமங்களுக்கு மையம். அவ்வாறெனில் அந்த பிராந்தியத்தில் 16,000 இரு சக்கர வாகனமாவது இருக்கும். அந்த கிராமத்தில் அந்த கடையை அமைக்க வேண்டும் எனத் தோன்றியது மிக நல்ல யோசனையே. அவருக்கு அந்த கடை மூலம் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இது மிகக் குறைந்தபட்ச கணக்கீடு. இன்னும் அதிகமாக கூட வருமானம் கிடைக்கும். சந்திக்கச் சென்றவரிடம் அவரது சொத்து ஒன்றை அடமானமாக வைத்து வங்கிக் கடன் பெறுமாறு ஒரு யோசனை சொன்னேன். இது வரை வங்கிக் கடன் பெற்றதில்லை என்பதால் புதிதாக அந்த பழக்கத்தை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என்று அவர் கூறினார். சூழலைப் பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம் என ஒத்துக் கொண்டேன். ஊருக்குத் திரும்பும் வழியில் ஒரு சலூனில் முகச் சவரம் செய்து கொண்டேன். அந்த கடையைத் தொடங்கியிருப்பவர் ஓர் இளைஞர். கடை துவங்கி இரண்டு மாதம் ஆகிறது என்று கூறினார். தேவை ஏதும் இருப்பின் வங்கியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என அவரிடம் சொன்னேன். வங்கியில் கடன் வாங்கி பழக்கம் இல்லை ; எனவே அதனை புதிதாக உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என அந்த சலூன்காரர் சொன்னார். நான் முதலில் சந்திக்கச் சென்றவர் பெரும் செல்வந்தர். அவரும் இதையே சொன்னார். சலூன்கடைக்காரர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரும் அதையே சொன்னார். அந்த பிராந்தியத்தின் வங்கி அதிகாரிகள் இவர்களைப் போன்றவர்களைக் கண்டடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இரு தரப்புக்கும் பரஸ்பர பயன் விளையும். நல்ல தரமான சாலைகள், நிறைய புதிய தொழில்கள், நிறைய முயற்சிகள் ஆகியவற்றைக் கண்டது நாடு முன்னேறியிருக்கிறதா என்னும் கேள்விக்க்கான பதில் நேர்மறையானதாகவே இருக்கிறது என்னும் நம்பிக்கையை அளித்தது.  

Saturday, 16 August 2025

ஸ்திதப்பிரக்ஞன்

 
நூல் : ஸ்திதப்பிரக்ஞன் ஆசிரியர் : சோ பக்கம் : 138 விலை : ரூ.110 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், ப.எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர்,600004

துக்ளக் இதழில் அதன் அப்போதைய ஆசிரியர் சோ அவர்கள் முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் மறைவுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் அவரைப் பற்றிய வேறு சில கட்டுரைகளும் அவருடைய நேர்காணல்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் என்ற மகத்தான மனிதரின் ஆளுமையின் மகத்தான தன்மையின் சில பகுதிகளை இந்நூல் வழியே நாம் அடையாளம் காண முடிகிறது. 

லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றிருக்க வேண்டியவர் மொரார்ஜி தேசாய். அதுவே இயல்பான தேர்வாக இருந்திருக்கும். காமராஜர் இந்திரா காந்தியை நாட்டின் பிரதமராக்க சில முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவை வெற்றி பெற்றன. நேருவின் வாரிசு என்னும் அடையாளத்தை எப்போதும் தன் கவசமாகக் கொண்டிருந்த இந்திரா காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மீது அச்சமும் விலக்கமும் கொண்டிருந்தார். அது காங்கிரஸ் கட்சியை அவர் உடைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. நாடெங்கும் இந்திரா சர்க்காருக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் உருவாகி வந்ததை உணர்ந்த இந்திரா ஜனநாயகத்தைப் படுகுழியில் புதைத்து ‘’நெருக்கடி நிலை’’யை செயலாக்கினார். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள் கையில் ஆட்சியைக் கொடுப்பதன்றி வேறேதும் அல்ல அச்செயல். நாடு பல மாதங்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் சென்றது. அது மிகப் பெரிய கொந்தளிப்பான காலகட்டம். நமது நாட்டின் மேற்கு கிழக்கு ஆகிய இரு திசைகளிலும் பாகிஸ்தான் , சீனா என நம்மை ஆக்கிரமித்த பகை நாடுகள், உலகமே அமெரிக்கா - ருஷ்யா என இரு நாடுகளின் அணியில் சேர்ந்திருக்கும் நிலை , நாட்டின் வறுமை, நாட்டின் கல்வியறிவு, நாட்டின் பொருளாதாரம் என பல்வேறு விதமான சிக்கல்கள். இத்தகைய சிக்கல்களில் நாடு சிக்குண்டு இருந்த போது நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலம் குறித்தும் மொரார்ஜி பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான நிலையிலும் அவர் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை மட்டுமே கண்ணுற்றார் என்பதும் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை மட்டுமே பேசினார் என்பதும் அவர் எத்தனை மகத்தான மனிதர் என்பதைக் காட்டுகிறது. இலட்சியவாதத்திற்கான இடத்தை எப்போதும் இல்லாமல் செய்து விட முடியாது என்பதற்கு மொரார்ஜி தேசாய் அவர்களின் சொற்களே சாட்சி. 

முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஆளுமையின் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தும் நூல் ‘’ஸ்திதப்பிரக்ஞன்’’. 

Friday, 15 August 2025

குரு கோவிந்த் சிங்


 நூல் : குரு கோவிந்த் சிங் ஆசிரியர் : வ.வே.சு ஐயர் பக்கம் : 80 விலை ரூ.80 பதிப்பகம் : சுடர் பதிப்பகம், 5, ஜோதி நகர் 4-வது தெரு, மாடம்பாக்கம், சென்னை - 600073

நமது நாட்டின் வட மேற்கு திசையிலிருந்து நமது நாட்டை ஆக்கிரமிக்க நமது நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்க நமது நாட்டை ஆட்சி செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக முயற்சித்த வண்ணம் இருந்தனர். அராபியர்கள், துருக்கியர்கள், மொகலாயர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள் ஆகியோர் இவ்விதம் நம் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். போர்வெற்றியின் மூலம் நாட்டின் வட பகுதியிலும் மைய நிலத்திலும் அவர்கள் தங்கள் அரசை அமைத்தனர். இருப்பினும் அவர்கள் ஆட்சி நிலைகொண்டிருந்த காலம் முழுவதும் அந்த ஆட்சியை சுதேச மக்களும் சுதேச மன்னர்களும் எதிர்த்த வண்ணமே இருந்தனர். ராஜபுத்திரர்களும் மராத்தியர்களும் விஜயநகரப் பேரரசும் ஆக்கிரமிப்பாளர்களின் அரசை அகற்றி சுதேச அரசுகளை நிறுவினர். இந்த வரிசையில் முக்கியமானவர்கள் சீக்கியர்கள். இந்திய வீரத்தின் ஒளி விடும் வைரங்களில் முக்கியமானவர்கள். 

ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப்பில் விவசாயிகளாக குடியானவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த சமூகம் சீக்கிய சமூகம். ஞானியான குரு நானக்கின் போதனைகளைப் பின்பற்றி வந்தனர். ஔரங்கசீப் அந்த சமூகத்துக்கு பெரும் இடைஞ்சல்களைக் கொடுத்து அவர்களை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்தான். ஔரங்கசீப்பின் மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர் குரு கோவிந்த் சிங். அவர்கள் பஞ்சாப்பின் குடியானவ சமூகத்தை போர்ச் சமூகமாக மாற்றினார். நாட்டைக் காக்க பண்பாட்டைக் காக்க ஒவ்வொரு குடியானவனும் போர்வீரனாக மாற வேண்டும் என்று தம் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கேசம், கச்சை, கங்கணம், வாள், தலைப்பாகை ஆகிய ஐந்து சின்னங்களை எப்போதும் தரித்து மனதால் போர் வீரனாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய வீரம் செறிந்த வாழ்க்கைமுறையும் வீரம் செறிந்த மதிப்பீடுகளும் இன்றும் சீக்கியர்களை நம் நாட்டின் காவலர்களாக இருத்துகிறது. குரு கோவிந்த் சிங் போல நாட்டுக்காகவும் பண்பாட்டுக்காகவும் அத்தனை வலிகளையும் துயர்களையும் சுமந்த இன்னொருவர் இருக்க முடியாது. அத்தனை தியாகங்கள் நிறைந்தது அவருடைய வாழ்க்கை. தன் வாழ்நாள் முழுதும் வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாமல் போராடிக் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையே பின்னாளில் சீக்கியர்கள் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. 

குரு கோவிந்த் சிங்கின் தியாக வரலாற்றை தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு ஐயர் ‘’குரு கோவிந்த் சிங்’’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார்.