Monday, 31 January 2022
சாமானியனின் குரல்
Friday, 28 January 2022
தினமணி செய்தி
கிராமத்தில் நிகழ்ந்த குடியரசு தினம் குறித்த செய்தியை இன்றைய தினமணி இதழ் (நாகப்பட்டினம் பதிப்பு) வண்ணப்படத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Thursday, 27 January 2022
தீபங்களுடன் குடியரசு தினம்
தடுப்பூசிக்காகச் செயல் புரிந்த கிராமத்தில், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டில் நிகழும் குடியரசு தினம் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டி கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை அவர்கள் குடியரசு தினத்தன்று காலையில் அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது தோட்டத்திலோ நட்டனர். இதன் மூலம் அந்த கிராமத்தில் குடியரசு தினத்தன்று ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினர். தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கிராமத்தின் எல்லா குடும்பங்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Monday, 24 January 2022
உலகினும் பெரிது
முதல் நபர்
நிலம் என்பது ஸ்திரமானது. அதனால் தான் அதனை ‘அசையாச் சொத்து’ எனக் கருதுகிறோம். நிலத்துடன் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டவர்கள் மனம் ஒரே விதமான செயல்முறைக்குப் பழகியிருக்கும். அதுவே இயல்பானது. அதில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என ‘’காவிரி போற்றுதும்’’ நம்புகிறது. அந்த நம்பிக்கையின் திசையில் பயணிக்கிறது.
கிராம மக்கள் சந்திக்கும் சிக்கல்களாக பல விஷயங்களை ‘’காவிரி போற்றுதும்’’ அவதானிப்பதுண்டு. கிராம மக்களே தாங்கள் எதிர் கொள்ளும் இடர்களாக சில விஷயங்களை நம்மிடம் சொல்வதுண்டு. அவற்றைப் பரிசீலித்து செய்து கொடுக்க தொடர்ந்து முயல்வேன்.
நான் சந்திக்கச் சென்ற நபர் ஒரு சிக்கலை என்னிடம் சொன்னார். அதாவது , அவர்கள் குடியிருப்பு ஒரு பெரிய கால்வாயின் கரையில் உள்ளது. குடியிருப்புக்கு இட்டுச் செல்லும் பாதை ஒன்று மட்டுமே அவர்கள் இடத்துக்குச் செல்வதற்கு ஒரே வழி. அதே வழியாகவே திரும்பி வர வேண்டும். வேறு திசைகளில் எந்த சாலையும் கிடையாது. இந்த சாலையிலிருந்து தோராயமாக 500 மீட்டர் தூரத்தில் அவர்களுடைய மயானம் அமைந்துள்ளது. மண் சாலை. மழை பெய்தால் கணுக்கால் புதையும் அளவுக்கு சேறாகி விடுகிறது. இறந்தவரின் உடலைக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கூறினார். நான் அந்த இடத்தைப் பார்ப்போம் என்று சொல்லி அவருடன் புறப்பட்டேன். இடத்தினைப் பார்வையிட்டேன்.
’’கலெக்டர் கவனத்துக்கு கொண்டு போனீங்களா?’’
‘’ஊராட்சில தீர்மானம் போட்டு யூனியனுக்கு அனுப்பியிருக்கு சார்’’
‘’கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதுவோம். அதுல இந்த பகுதி மக்கள் ட்ட மட்டும்னு இல்லாம ஒட்டு மொத்த கிராமத்திலயும் ஆயிரம் பேர்ட்ட கையெழுத்து வாங்கி அனுப்புவோம்.’’
‘’பொதுவா எங்க ஏரியா பிரச்சனைகள எங்க ஏரியா காரங்கதான் பாத்துப்பாங்க. ‘’
’’அதாவது நாம ஒரு விஷயம் செய்யணும்னு முயற்சி பண்றோம்னா நமக்கு எல்லா விதமான சப்போர்ட்டும் தேவை. நாம ஒரு நியாயமான விஷயத்தை முன்வைக்கிறோம். அதுக்கு நியாய உணர்வு இருக்கற பல பேரு தங்களோட ஆதரவைத் தருவாங்க. ஒரு விஷயத்துக்கு பல பேரோட ஆதரவு இருக்குன்னு ஆகும் போது நாம முன்வைக்கிற விஷயம் அதுக்கு சாத்தியமான ஒரு வழில தீர்வை அடைஞ்சுடும்.’’
பேசிக் கொண்டே அந்த 500 மீட்டர் தூரத்தைக் கடந்து அந்த மயானம் வரை சென்று விட்டோம். அந்த மயானத்தைப் பார்வையிட்டேன்.
‘’தூரம் அதிகமாயிருக்கு. அப்ரோச் ரோடு போட இவ்வளவு தொகை ஆகும்னு பஞ்சாயத்து யூனியன்ல எஸ்டிமேட் எதுவும் போட்டிருக்காங்களா? உங்களுக்கு விபரம் தெரியுமா?’’
‘’தெரியல சார்’’
‘’நான் அடுத்த வாரம் மெஷரிங் டேப் எடுத்துட்டு வரேன். இந்த ரோடோட நீளம் அகலத்தை துல்லியமா அளந்துக்கறன். ஸ்ட்ரக்சர் டெமாலிஷ் பண்ண டப்ரீஸ் டிராக்டர்ல கொண்டு வந்து போட்டு நடந்து போக ஏற்பாடு செய்ய முடியுமான்னு பாக்கறன்.’’
‘’ரொம்ப கஷ்டமா இருக்கு சார். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’’
‘’என்னால முடிஞ்சத நிச்சயம் செய்றேன்.’’
‘’சார் நான் பல பேர்ட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டேன். இந்த இடத்தை நேராப் பாக்கணும்னு ரோட்டில இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கற இந்த இடத்தை நேரடியா வந்து பாத்த முதல் நபர் நீங்க தான்.’’
‘’நம்ம எல்லாருக்குமே காசி ரொம்ப உசந்த புண்ணியமான இடம். அந்த காசியே ஒரு பெரிய மயானம் தான். மணிக்கர்ணிகா காட் மயானத்தோட முதல் பிணத்தின் சாம்பல்ல தான் காசி விஸ்வநாதருக்கு அதிகாலை அபிஷேகம் நடக்குது. இறந்த ஒருத்தரோட உடல் ஆறு மணி நேரத்துக்குள்ள எரியூட்டப்படணும்னு இந்தியாவோட யோக மரபு சொல்லுது. பலவிதத்திலயும் நாம முயற்சி செய்வோம்’’ என்று சொன்னேன்.
Saturday, 22 January 2022
விதி மீறல் (நகைச்சுவைக் கட்டுரை)
Thursday, 20 January 2022
கோர்ட் ( நகைச்சுவைக் கட்டுரை)
Wednesday, 19 January 2022
அசைவு
குளோஸ் கட்
சிறு வயதில் என்னைத் தந்தை சலூனுக்கு அழைத்துச் செல்வார். சலூன்காரரிடம் எனக்கு ‘’குளோஸ் கட்’’ பாணியில் முடி வெட்டக் கூறுவார். ஒவ்வொரு முறையும் இப்படியே சொல்வார். நான் சிறுவனாக இருந்ததால் அதன் அர்த்தம் தெரியாது. ஒருநாள் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டேன். இராணுவத்தில் பணி புரிபவர்கள் அனைவரும் தலைமுடியை ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். இந்த பாணி முடிவெட்டுதலுக்கு ‘’குளோஸ் கட்’’ என்று பெயர் என என் தந்தை கூறினார். கடற்படையில் பணி புரிபவர்கள் கிருதாவை சுத்தமாக மழித்து முடி வெட்டியிருப்பார்கள். அதற்கு ‘’நேவி கட்’’ என்று பெயர் என மேலதிக விபரமும் தந்தார். சற்று பெரியவனாகி சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதும் முடி வெட்டிக் கொள்ள நானே செல்ல ஆரம்பித்தேன். சலூன் நாற்காலியில் ஏறி அமர்ந்ததும் மாறாச் சடங்காக ‘’குளோஸ் கட்’’ என்பேன். இது முப்பது வயது வரை நீடித்தது. நான் முடி வெட்டிக் கொள்ளும் சலூன் கடைக்காரர் சிங்கப்பூர் சென்று விட்டார். அதனால் ஒரு புதிய சலூனுக்கு சென்றேன். அவர் ‘’குளோஸ் கட்’’ ஐ விட சிறப்பான சில முறைகள் உள்ளன எனக் கூறி முடியை அளவாக வெட்டுவார். நான் சரி அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். அவ்வாறு ஒரு பத்து வருடம் ஓடிவிட்டது.
சலூன்களுக்கு சுவாமி விவேகானந்தர் நூல்களை வழங்கிய போது சீர்காழியில் ஒரு கடைக்காரர் தனது சலூனுக்கு ஒரு பகவத்கீதை நூலை வழங்க முடியுமா என்று கேட்டார். நெடுநாட்கள் அங்கு செல்ல வாய்ப்பு இல்லாமல் இருந்தது. சில முறை நான் மறந்து விட்டேன். ஓரிரு முறை அவர் ஃபோன் செய்து நினைவுபடுத்தினார். நேற்று இரவு, இன்று காலை 7 மணிக்கு அங்கு செல்வதாக முடிவு செய்தேன். காலையில் அங்கு சென்றேன். சலூன் திறந்திருந்தது ஆனால் சலூன்காரர் அங்கே இல்லை. பக்கத்தில் இருந்த ஒரு தேனீர்க்கடையில் இருந்தார். சில மாதங்கள் முன்னால் பார்த்தது. முகம் ஒரு புகைமூட்டமாகவே நினைவில் இருந்தது. என் கையில் பகவத்கீதை புத்தகத்தைப் பார்த்ததும் அவருக்கு ஞாபகம் வந்து விட்டது. என் அருகில் மகிழ்ச்சியுடன் வந்தார். என்னைத் தேனீர் அருந்துமாறு சொன்னார். பிரியத்துடன் உபசரிக்கிறார் ; மறுத்தால் வருந்துவார் என்பதால் அவருடன் தேனீர் அருந்தினேன். பின்னர் இருவரும் சலூனுக்கு வந்தோம். பகவத்கீதையை அவரிடம் வழங்கினேன்.
எனக்கும் முடி வெட்ட் வேண்டியிருந்தது. வாடிக்கை சலூன் என்றால் சீர்காழி சாலையிலிருந்து அது ரொம்ப தூரம். எனவே இந்த கடையிலேயே முடி வெட்டிக் கொண்டு ஊருக்குச் சென்று விடலாம் என ‘’கட்டிங் & ஷேவிங்’’ என்றேன். சலூன் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறுவனாக இருந்த போது சொல்வதைப் போல ‘’குளோஸ் கட்’’ என்றேன். மெஷினை வைத்து கர கர என்று குளோஸ் கட் அடித்து விட்டார். ரொம்ப குறைந்து விட்டதோ என ஓர் ஐயம் எழுந்தது. சிறிது நேரம் ஆனதும் அப்படி இல்லை என்று தோன்றியது.
எனது தொழிலுக்கு ‘’குளோஸ் கட்’’ மிகவும் உகந்தது. சற்று கறாரான ஆள் எனக் காட்டும் . தலையில் நீர் கோர்க்காது. சிகை பராமரிப்புக்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. சீப்பு கூட கையில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
சலூன் கடைக்காரர்களுக்கு வங்கிகள் அவசியம் முத்ரா லோன் வழங்க வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச கடன் தொகையான ரூ. 50,000 வழங்கலாம். ஒரு நகராட்சிப் பகுதிக்குள் 100 சலூன்கள் இருக்கும். செவ்வாய்கிழமை சலூன்கள் விடுமுறை . அன்று எல்லா சலூன்காரர்களுக்கும் ஒரு ‘’மீட்டிங்’’ நடத்தி முத்ரா லோன் குறித்து விளக்கி அவர்களில் யாருக்கு கடன் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு கடன் உதவி செய்யலாம். சலூன்கடைக்காரர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 வாடிக்கையாளர்களுக்காவது முடி வெட்டி விடுவார்கள். ஒரு நாளைக்கு அவர்கள் சம்பாத்தியம் குறைந்த பட்சம் 700லிருந்து 1000 வரை இருக்கும். தினமும் நூறு ரூபாய் அவர்களால் மிக எளிதாக திருப்பிச் செலுத்த முடியும் . தினம் நூறு ரூபாய் என எடுத்து வைத்து வார விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையன்று வங்கியில் 700 ரூபாய் செலுத்தும் வகையில் அவர்களிடம் யோசனையை முன்வைக்கலாம். மாதம் மூவாயிரம் ரூபாய் கடன் கணக்கில் வரவாகும். வங்கிகளையும் சலூன் கடைக்காரர்களையும் இணைத்து இவ்வாறு ஒரு விஷயம் செய்யலாமா என்ற யோசனை எனக்கு உள்ளது. பார்க்கலாம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முத்ரா லோன் குறித்து அவர்கள் விளக்குவார்கள். Word of Mouth முறையில் விஷயம் பல பேரை சென்று சேரும்.
புறப்படும் முன் அவருக்குத் தர வேண்டிய சிகை அலங்காரக் கட்டணத்தை அளித்தேன். ஏற்றுக் கொள்ள மறுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
‘’பாஸ் ! ஏன் பணம் வேண்டாம்னு சொல்றீங்க?’’
‘’இல்ல சார் ! வேண்டாம் சார்’’
‘’அதான் ஏன்னு கேக்கறன்’’
‘’நம்ம கடைக்கு புக் கொடுத்திருக்கீங்க. மாவட்டத்தில எல்லா கடைக்கும் கொடுத்திருக்கீங்க. நீங்க செஞ்சதுக்கு பிரதி உபகாரமா இருக்கட்டும்.’’
‘’உங்க அன்புக்கு நன்றி. ஆனா தயவு செஞ்சு பணம் வாங்கிக்கங்க. இல்லன்னா என் மனசு கஷ்டப்படும்’’
‘’உங்களுக்கு நான் ஏதாவது செய்யணும் சார்’’
‘’சீர்காழி பகுதியில சர்வீஸ் ஒர்க் ஆர்கனைஸ் பண்ற எண்ணம் இருக்கு. அப்ப எங்க கூட சேந்து ஏதாச்சும் செய்ங்க. நானே உங்க ஹெல்ப்பை கேக்கறன்’’
நான் அவர் பாக்கெட்டில் ரூபாயை வைத்து விட்டேன்.
’’உங்களுக்காக ஐம்பது ரூபாய் கொறச்சுக்க பிரியப்படறன் சார்’’
நான் ஒத்துக் கொண்டேன். ஐம்பது ரூபாய் திருப்பித் தந்தார்.
Monday, 17 January 2022
இயல்பு
Sunday, 16 January 2022
பலவிதப் பணிகள்
Thursday, 13 January 2022
Tuesday, 11 January 2022
ஜெ தளத்தில்
இன்று jeyamohan(dot)in இணையதளத்தில் கவிஞர் ஆனந்த் குமார் எழுதிய ‘’டிப் டிப் டிப்’’ கவிதைத் தொகுப்பு குறித்து எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.
Monday, 10 January 2022
எஸ். ரா தளத்தில்
’’மண்டியிடுங்கள் தந்தையே’’ நாவல் குறித்து எழுதப்பட்ட ஒளிமலர் கட்டுரை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் இணைப்பு;
Sunday, 9 January 2022
ஒளிமலர்
ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
மூன்று அழைப்புகள்
சமீபத்தில் எழுதிய ‘’விளைதல்’’ பதிவை வாசித்து விட்டு மூன்று நண்பர்கள் அழைத்தார்கள். மூவருமே அவர்களுடைய சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கினேன்.