Tuesday, 30 September 2025

டெண்டுல்கரின் பரிந்துரைகள்

 இன்று செய்திப்பத்திரிக்கை ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கும் விஷயம் ஒன்றை வாசித்தேன். உலகெங்கும் உள்ள குடும்பங்களை உலகெங்கும் இருக்கும் குழந்தைகளைத் தாக்கும் கொள்ளைநோய் என சச்சின் டெண்டுல்கர் ஸ்மார்ட்ஃபோனைக் குறிப்பிடுக்கிறார். உலகின் மிக முக்கியமான விளையாட்டு வீரரான அவரது இந்த அவதானம் அவருடையது என்பதால் மேலும் முக்கியமானதாக ஆகிறது. வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் மைதானத்தில் ஆடப்படும் குழந்தைகள் விளையாட்டுகளே குழந்தைகளுக்கு பல விஷயங்களைப் போதிப்பவை என்பதை சச்சின் எடுத்துக் கூறுகிறார். நடைப்பயிற்சி என்பது மிக அடிப்படையான மிக எளிய மிக அதிக பயனளிக்கும் உடற்பயிற்சி என்றும் மாதக்கட்டணம் செலுத்தி ‘’ஜிம்’’மில் செய்யப்படும் உடற்பயிற்சிகளை விட நடைப்பயிற்சி முக்கிய்மானது என சச்சின் குறிப்பிடுகிறார். குழந்தைகள் பெரியவர்களையும் சமூகத்தையும் கண்ணால் கண்டே பல விஷயங்களைப் பழகிக் கொள்கிறார்கள் என்பதால் எல்லா வயதினரும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உலக நலனுக்கு மிகவும் உகந்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். 

Monday, 29 September 2025

இடர் களைதல்

 எனக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஒரு லௌகிக இடர் ஒன்றில் சிக்கிக் கொண்டார். நான் பணிந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரை அந்த சிக்கலிலிருந்து மீட்க எனது இன்னொரு நண்பர் மிகத் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதில்லை ; ஒருவரை இன்னொருவருக்கு அறிமுகம் கிடையாது. அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தொடர்புவெளி நான் மட்டுமே. நம்பிக்கையளிக்கும் தீர்வை நோக்கி விஷயம் சென்று கொண்டிருந்தது. திடீரென அதில் ஒரு முட்டுக்கட்டை. சென்ற வாரம் முழுக்க இந்த விஷயம் தொடர்பான உரையாடல்கள், சந்திப்புகள் என நாட்கள் சென்றன. லௌகிக இடர்களில் தீர்வு எட்டப்படுவதற்கு முன் இருக்கும் பகுதி மிக முக்கியமானது. அந்த விஷயத்தின் அத்தனை தரப்புகளும் உச்சபட்சமான உணர்விலும் பதட்டத்திலும் இருப்பார்கள். பொறுமையுடன் கையாள வேண்டிய இடம் அது. நான் சற்று சோர்ந்து போனேன். இருப்பினும் மெல்ல என்னைத் திரட்டிக் கொண்டு இந்த விஷயத்தை மேலும் கவனத்துடன் அணுகுவது என முடிவு செய்து கொண்டேன். 

Wednesday, 24 September 2025

அஞ்சலி : எஸ் எல் பைரப்பா


 கன்னட மொழியின் ஆகப் பெரிய படைப்பாளிகளில் ஒருவரான எஸ் எல் பைரப்பா இன்று காலமானார். 

மகாபாரதத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய ‘’பருவம்’’ நாவல் மிக முக்கியமானது ; புகழ் பெற்றது. ஒரு தென் கன்னட கிராமத்தின் கதையான ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ மகத்தான ஆக்கம் ஆகும். 

கன்னட இலக்கியச் சூழலில் 80 ஆண்டுகளாக மிகத் தீவிரமாகச் செயலாற்றியவர் எஸ் எல் பைரப்பா. 

ஆசானுக்கு அஞ்சலி 

Tuesday, 23 September 2025

எரிக் சோல்ஹிம்

 

நான் கல்லூரி மாணவனாயிருந்த போது இலங்கையில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும் தாய்லாந்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த அமைதி நடவடிக்கைகளை பெரும் அக்கறையுடன் முன்னெடுத்தவர் எரிக் சோல்ஹிம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையைச் சந்தித்து பலமுறை கிளிநொச்சியில் பேசினார் எரிக். அப்போது அந்த சந்திப்பு குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதி உடன்படிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. தான் ஈடுபட்ட பெரும்பாலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமான உடன்பாடுகளை உருவாக்கிய செயல் திறன் எரிக் சோல்ஹிம் அவர்களுக்கு இருந்தது. பயங்கரவாதத்தை தனது அணுகுமுறையாய்க் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இலங்கையின் சாமானிய தமிழ் மக்களின் அமைதியான வாழ்வை தங்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தங்கள் அமைப்பின் நலன்களே முதன்மையாக இருந்தன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இலங்கையில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் மூண்டது. இலங்கையின் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானார்கள்.   விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தையில் சமாதான உடன்படிக்கைக்கு விடுதலைப் புலிகள் வந்திருந்தால் இலங்கை தமிழ் மக்களுக்கு இத்தனை துயர் இருந்திருக்காது என்பதை எவரும் யூகித்து உணர முடியும். 

எரிக் சோல்ஹிம் நேற்று சிதம்பரம் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளுக்கு வருகை புரிந்தார் என்று இன்று அறிந்தேன். அவர் சிதம்பரம் வருகிறார் என்று தெரிந்திருந்தால் நேற்று அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளனாகச் சென்று கலந்து கொண்டிருப்பேன். சாமானிய தமிழ் மக்களின் வாழ்வில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் செயலாற்றிய ஒருவருக்கு மதிப்பளிக்கும் விதமாக. 

எரிக் சொல்ஹிம் இப்போது உலகெங்கும் நிகழும் பல்வேறு சூழியல் சார்ந்த முன்னெடுப்புகளில் பங்கெடுக்கிறார். செயல்படுகிறார். 

Thursday, 18 September 2025

குமரகுருபரரும் உ.வே.சா-வும்

’’குமரகுருபரரின் பிரபந்தத் திரட்டு’’ என்னும் நூலை வாசித்து வருகிறேன். உ.வே.சா விளக்கவுரையுடன் கூடியது. அந்நூலில் குமரகுருபரரின் முக்கியத்துவம் குறித்து உ.வே.சா மிக விரிவாகப் பதிவு செய்கிறார். குமரகுருபரரின் வாழ்க்கையை உ.வே.சா சொற்களில் வாசிப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  

Friday, 12 September 2025

தேன்சிட்டு

 குழந்தையின் உள்ளங்கை அளவில் ஒரு தேன்சிட்டு
குழந்தையின் சிறுவிரல் அசைவுகள் அதன் பறத்தல்கள்
சாளரத்துக்கு வெளியே வேப்பமரத்தின் கிளைகள்
அங்கும் இங்கும் தாவுகிறது கிளைகளுக்கு நடுவே
இந்த உலகம் எத்தனை பெரியது
எத்தனை பெருமலைகள்
எத்தனை பெருங்கடல்கள்
எத்தனை பெருக்கெடுக்கும் உணர்வுகள்
எத்தனை விதமான எத்தனை எத்தனை சுழற்சிகள்
யாவற்றுடனும்
இருக்கிறது
தேன்சிட்டு
குழந்தையின் உள்ளங்கையளவு தேன்சிட்டு

திருவாரூர் சாலை

ஊரிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் பாதை அகலமாக்கிப் போடப்பட்டுள்ளது. சிறு ஊர்களுக்குக் கூட புறவழிச்சாலை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது பல ஊர்கள் அகலப்படுத்தப்பட்ட சாலையால் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளன. பயண நேரம் என்பது கணிசமாகக் குறைந்திருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது அதனை உணர்ந்தேன். காரில் பயணிப்பவர்கள் அதனை மேலும் உணரக் கூடும்.  

Tuesday, 9 September 2025

குமரகுருபரர் சொல்லில் தமிழ்நாடு

 குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலில் கீழ்க்காணும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் ‘’தமிழ்நாடு’’ என்ற சொல் உள்ளது. 


விண்ணளிக் கும்சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த
வீடும் கடம்புபொதி காடும் தடம்பணை விரிந்ததமிழ் நாடும்நெற்றிக்

கண்அளிக் கும்சுந் தரக்கடவுள் பொலியும்அறு கால்பீட மும்எம்பிரான்
காமர்பரி யங்கக் கவின் தங்கு பள்ளிஅம் கட்டிலும் தொட்டில்ஆகப்

Monday, 8 September 2025

தமிழ்நாடு

பாரதியாரின் ‘’செந்தமிழ் நாடு’’ என்னும் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. 


செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)


வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)


காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி - என

மேவிய யாறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)


முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று

மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்

எத்தனையுண்டு புவிமீதே - அவை

யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)


நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட

மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்

மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)


கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)


வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)


சிங்களம் புட்பகம் சாவக - மாதிய

தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)


விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்

பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)


சீன மிசிரம் யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)


பாரதியார் 1921ம் ஆண்டு மறைந்தார். அவ்வாறெனில் இப்பாடல் இயற்றப்பட்டிருக்கக் கூடிய ஆண்டு 1921க்கும் முன்னால். 


காங்கிரஸின் முக்கிய தலைவராகவும் பின்னாட்களில்  ஹிந்து மஹா சபாவின் தமிழ்நாடு தலைவராகவும் இருந்த சேலம் வரதராஜூலு நாயுடு ‘’தமிழ்நாடு’’ என்ற தினசரி பத்திரிக்கையை 1925ல் தொடங்கி நடத்தி வந்தார்.  


ம.பொ.சி யின் தமிழரசுக் கழகம் 1955ம் ஆண்டிலிருந்தே சென்னை மாகாணத்துக்கு ‘’தமிழ்நாடு’’ என்று பெயரிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. 

 

Sunday, 7 September 2025

ஸ்ரீகுமரகுருபரரும் உ.வே.சா-வும்

 உ.வே.சா வின் ‘’என் சரிதம்’’ நூலில் திருவாவடுதுறை மடத்தில் நிகழும் பட்டினப் பிரவேசம் குறித்து விவரிக்கப்படுகையில் ஐயர் திருவாவடுதுறையை ‘’சிவ ராஜதானி’’ என்று குறிப்பிடுவார். எனக்கு அந்த சொல் மிகுந்த ஆர்வம் அளித்தது. அந்த சொல் என் மனதில் மிகவும் தங்கியிருந்தது. இன்று ஸ்ரீகுமரகுருபரரின் ‘’மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’’ என்னும் நூலினை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீகுமரகுருபரர் மீனாட்சியம்மையும் சொக்கநாதப் பெருமானும் வாசம் புரியும் மதுரையை ‘’சிவ ராசதானி’’ எனச் சிறப்பித்துக் கூறுகிறார். ஐயர் அவர்கள் உளத்தில் குமரகுருபரரின் சொல் பதிந்திருந்ததால் திருவாவடுதுறை குறித்த அவரது சித்தரிப்பில் அச்சொல் வெளிப்பட்டிருக்கிறது என எண்ணினேன். 

Saturday, 6 September 2025

சினிமா காட்சி

 குறைவாக மிகக் குறைவாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. கடைவீதிக்குச் செல்லும் போது சினிமா போஸ்டர்களைக் காண்பேன். சினிமா போஸ்டர் என்றல்ல ; எல்லா விதமான சுவரொட்டிகளையும் நான் காண்பேன் ; வாசிப்பேன். இப்போது ஃபிளக்ஸ் வந்து விட்டது. தமிழ்நாட்டில் அவற்றில் மனித முகங்கள் மட்டுமே அதிகமாக இருக்கின்றன. அதிகமான மனித முகங்களும் குறைவான வாசகங்களும். தமிழ்ச் சமூகம் சினிமாவின் மீது அதிகம் ஈர்ப்பு கொண்ட சமூகம். தமிழ்ச் சமூகமும் தெலுங்கு சமூகமும் இவ்விதத்தில் ஒப்புமை கொண்டவை. சில மாதங்களுக்கு முன்னால் கடைவீதி வழியாக நடந்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு அமைப்பின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது ; மாவட்ட பொறுப்பு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி. நான் நின்று வாசித்துக் கொண்டிருந்தேன். எனது நண்பர் ஒருவர் எனக்குப் பின்னால் வாகனத்தில் வந்து நின்றிருக்கிறார். நான் அவர் வந்ததை கவனிக்கவில்லை. வாசித்து முடித்ததும் தான் அவரைப் பார்த்தேன். இருவரும் புன்னகைத்துக் கொண்டோம். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த போஸ்டரை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றேன். பரபரப்பான கடைவீதி என்றார். சிலராலாவது பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே ஒட்டப்படுகிறது என்றேன். நான் சிறிய திரைகளில் அதாவது தொலைக்காட்சி மடிக்கணினி ஆகியவற்றில் திரைப்படம் பார்க்க மாட்டேன். பெரிய திரையில் மட்டுமே காண்பேன். ஆனால் இப்போது பெரிய திரையில் சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அனைவரும் அலைபேசியில் படம் பார்க்கிறார்கள். பெருந்திரளுடனான தொடர்பு ஊடகமாக திரைப்படங்களைப் பார்ப்பது உண்டு. ஜனத்திரள் அதனுடன் எவ்விதம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிய அதிலிருந்து சில விஷயங்களை ஆராய திரைப்படங்கள் உதவும். நான் பரவாயில்லை என்னும் வகையில் மதிப்பிடும் படங்கள் பொதுமக்கள் மிக விரும்புவதாய் இருக்காது. பொதுமக்கள் மிக விரும்பி பார்க்கும் படங்களை நான் பார்த்தால் எனக்கு பரவாயில்லை என்று தோன்றாது. இது ஒரு அவதானம் மட்டுமே. மூன்று மாதத்துக்கு ஒரு படம் என்பது எனக்கு ஒரு சராசரி கணக்கு. இப்போது திரையரங்கங்கள் பெரிதும் மாறி விட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.150 எனில் பொதுமக்கள் குடும்பத்துடன் வரும் போது ஒவ்வொரு டிக்கெட்தாரருமே பாப் கார்ன், பப்ஸ், ஐஸ் கிரீம் ஆகியவற்றுக்கு ரூ.150 செலவழிப்பார்கள் என்று தோன்றுகிறது. சினிமா டிக்கெட்டில் கிடைக்கும் வருமானத்தை விட பாப் கார்ன், பப்ஸ் விற்று கிடைக்கும் வருமானம் கணிசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குடும்பங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சினிமா தியேட்டரில் வைத்துக் கொள்கிறார்கள். சினிமா தியேட்டரில் கேக் ஆர்டர் செய்து அங்கேயே கேக் வெட்டி கொண்டாடி அலைபேசியில் செல்ஃபி எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமா தியேட்டர்களும் தங்கள் அரங்குகளை இவ்விதத்தில் வடிவமைக்கின்றன. நேற்று ஒரு சினிமாவுக்கு சென்றிருந்தேன். ஒரு டிக்கெட் அளித்தார்கள். ஆங்கில அட்சரம் ’’ஈ’’ எனக் குறிக்கப்பட்டிருந்தது. அது முன் வரிசை. நான் அதனை அவர்களிடம் திருப்பி அளித்து விட்டு ‘’ஏ’’ வரிசையில் அளிக்குமாறு கேட்டேன். அதுதான் பின் வரிசை. சினிமாவைப் பார்க்க சிறந்த இடம் ஆகக் கடைசி வரிசை. நாடகம் சர்க்கஸ் பார்க்க சிறந்த இடம் ஆக முன் வரிசை. உள்ளே சென்று அமர்ந்ததும் யோசித்தேன். ஏன் முன் வரிசை டிக்கெட்டை முதலில் தருகிறார்கள் என. பின்வரிசையிலிருந்து கொடுத்துக் கொண்டு வந்தால் தாமதமாக வருபவர்களுக்கு முன்வரிசையில் கொடுக்க நேரிடும். படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் போது இருக்கை எண்ணைத் தேடுகிறேன் என படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ம்றைப்பார்கள். பார்வையாளர்கள் பலருக்கு அதிருப்தி ஏற்படும். அதைக் குறைக்கவே இந்த வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். 

Thursday, 4 September 2025

ஒரு வட்டம்

இந்த சம்பவம் நடந்தது 1992ம் ஆண்டாகவோ அல்லது 1993ம் ஆண்டாகவோ இருக்கலாம். எனது தந்தைக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வெளியூரைச் சேர்ந்தவர். இங்கே ஊரில் அவருக்கு பலர் நண்பர்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். வந்தால் அனைத்து நண்பர்களையும் சந்திப்பார். அப்போது இன்றிருக்கும் அத்தனை தொலைத்தொடர்பு வசதிகள் கிடையாது. தொலைபேசியே சிலரிடம் தான் இருக்கும். நண்பர் ஊருக்கு பேருந்தில் வந்திறங்கி பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் ஒரு வாடகை சைக்கிள் கடையில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நேரம் மாலை 5 மணி இருக்கும். நான் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்திருந்தேன். வழக்கமாக எனது தந்தை காலை 8.30 மணிக்கு அலுவலகம் கிளம்பி விடுவார்கள். காலை 8.30க்கு கிளம்பினால் இரவு 7.30 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இது அவருடைய பல ஆண்டு வழக்கம். அவருடைய மொத்த பணிக்காலத்தில் ஓரிரு நாட்கள் இந்த வழக்கத்துக்கு மாறாக இருந்திருக்கும். 99 சதவீதம் இவ்வாறுதான். சனி ஞாயிறு ஆகிய தினங்களிலும் பணி இருக்கும். அப்போதும் பணிக்குச் செல்வார்கள். இன்று அது வியப்புக்குரிய ஒன்றாகத் தோன்றக் கூடும். ஆனால் அது யதார்த்தம். இன்றும் பல துறைகள் அவ்விதம் செயல்படுகின்றன. விஷயம் தெரிந்தவர்களுக்கு அது தெரியும். அபூர்வமாக அன்றைய தினம் வீட்டில் இருந்தார்கள். நண்பரும் அலுவலகம் சென்று விட்டு தான் வீட்டுக்கு வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நண்பரும் இன்னொரு சைக்கிளில் வந்திருந்தார். எனது தந்தையின் நண்பர் என்ற முறையில் அவர் எனக்கும் அறிமுகமாகியிருந்தார். அவருடைய ஊருக்கு என்னை எனது தந்தை பலமுறை அழைத்துச் சென்றிருக்கிறார். முதல் சந்திப்பிலிருந்தே அவர் மீது எனக்கு பெரும் அன்பும் பெரும் பிரியமும் உண்டு. இனிமையான மனிதர் அவர். அவர் வந்திருந்த சமயத்தில் தந்தை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். தந்தை வீட்டில் இருக்கும் போது நடைப்பயிற்சிக்கு செல்லும் போது என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார் என்பதால் அவர் நடக்க சாத்தியமுள்ள பாதைகள் எனக்கும் தெரியும். நண்பர் வந்திருக்கிறார் என்பதை தந்தை எங்கே நடைப்பயிற்சி செய்கிறாரோ அங்கே சென்று சொல்லி அழைத்து வர வேண்டும். இந்த பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் என்னுடைய சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு பாதையை யூகித்துச் சென்றேன். ஐந்து நிமிடத்தில் தந்தையைக் கண்டு விட்டேன். அவர் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தந்தையிடம் விஷயத்தைச் சொன்னவுடன் அவர் நண்பர் வருகையால் மகிழ்ந்து என்னிடம் சின்ன சைக்கிளை வாங்கி அவர் அதில் பயணித்து வீட்டுக்குச் சென்று விட்டார். நான் நடந்து வீடு வந்து சேர்ந்தேன். 

அதன் பிறகும் நண்பர் வீட்டுக்கு வந்திருக்கிறார். 

நான் முன்னர் சொன்ன சம்பவம் நடந்து 33 ஆண்டுகள் ஆகிறது. நண்பர் இன்று தந்தையைக் காண வீட்டுக்கு வந்திருந்தார். இம்முறை அவருடைய நான்கு சக்கர வாகனத்தில் வந்திருந்தார். நண்பரும் தந்தையும் நீண்ட நேரம் அளவளாவினார்கள். அவர்கள் இருவருக்கும் பொதுவான இன்னொரு நண்பரைக் காண நண்பர் விரும்பினார். அவரை அலைபேசியில் இருவரும் தொடர்பு கொண்டார்கள். அவர் அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. எனக்கு அவரது வீடு தெரியும் என்பதால் நான் எனது பைக்கில் முன் செல்ல நண்பரின் கார் என்னைத் தொடர்ந்து வந்தது. நண்பரின் வீட்டைச் சென்றடைந்தோம். அழைப்பு மணியை ஒலித்தோம். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. வாசலில் கார் வந்து நிற்பதைக் கண்டு அண்டை வீட்டில் இருக்கும் பெண்மணி ஒருவர் அவர் நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பார் என்று கூறினார். நண்பரிடம் நான் எனது பைக்கில் சென்று பார்த்து வரட்டுமா என்று கேட்டேன். அதற்குள் அந்த பெண்மணி அவர் வீட்டில் ‘’இரு சக்கர வாகனம் இருக்கிறதா எனப் பாருங்கள்’’ என்றார். வாகனம் இல்லை. அவ்வாறெனில் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றிருப்பார் என்று சொன்னார்கள். 

அப்போது நண்பரிடம் 33 ஆண்டுகள் முன்னால் நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன். ஆங்கிலத்தில் We have come around a full circle என்பார்கள். 

Wednesday, 3 September 2025

மல்லிகார்ஜூன் கார்கேவும் மத பயங்கரவாதமும்

மது நாடு நீண்ட கால போராட்டத்துக்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷார் நம் நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகத் துண்டாடி பிரிவினையை நம் நாட்டின் மீது திணித்தனர். பிரிவினையையொட்டி நடந்த கலவரங்களில் இருபது லட்சத்திலிருந்து முப்பது லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய சமஸ்தானங்கள் தங்கள் விருப்பப்படி தனி நாடாக இருக்கலாம் அல்லது இந்தியாவுடன் இணையலாம் அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் என்னும் வாய்ப்பு பிரிட்டிஷாரால் சமஸ்தானங்களுக்கு வழங்கப்பட்டது. பிரிவினைக் கலவரங்களின் கோர முகத்தைக் கண்ட சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாடெங்கும் விரவியிருந்த 543 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க உறுதி பூண்டு அச்செயலை செம்மையாக செய்து கொண்டிருந்தார். காஷ்மீரைக் கைப்பற்ற விரும்பிய பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. எனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370-வது சட்டப் பிரிவு இந்திய அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.சபையின் தலையீட்டைக் கோரினார் நேரு. அது அந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது.  காஷ்மீரில் தொடர்ந்து மத பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது பாகிஸ்தான். இப்போதும் ஊக்குவிக்கிறது. 1949ம் ஆண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 70 ஆண்டுகளுக்குப் பின் 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது. 

இன்னொரு காஷ்மீர் ஆகி விடுமோ என்ற பதட்டத்தை உருவாக்கிய இன்னொரு சமஸ்தானம் ஹைதராபாத். இந்திய நாட்டின் மையப் பகுதிக்கு மிக அருகே அமைந்திருந்த அந்த சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க ஹைதராபாத் நிஜாம் விரும்பினார். அங்கு வாழ்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். தற்போது அசாசுதீன் ஒவைஸியின் தலைமையில் செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம் என்னும் கட்சி அப்போது எம்.ஐ.எம் என்ற பெயரில் இயங்கி வந்தது. அக்கட்சியின் ரவுடிகள் ரஸாக்கர்கள் என அழைக்கப்பட்டார்கள். இந்த ரஸாக்கர்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தது ஹைதராபாத் நிஜாமின் அமைச்சர்களில் ஒருவரான காசிம் ரஸ்வி. பாகிஸ்தானின் ஏஜெண்டாக செயல்பட்ட ரஸ்வி ஹைதராபாத்திலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார். கிராமங்கள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் எரிக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழ்ந்த அப்பாவி பொதுமக்களான ஹிந்துக்களை கொலை செய்யும் அச்செயலை சமயக் கடமை என ரஸாக்கர்களுக்குப் போதித்தார் காசிம் ரஸ்வி. நாள்தோறும் வன்முறை பெருகிக் கொண்டேயிருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் நேரு ஹைதராபாத்தை இன்னொரு காஷ்மீர் ஆக்கி விடுவாரோ எனக் கவலை கொள்ளத் துவங்கினர். அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஹைதராபாத் விவகாரம் குறித்து பெரும் கவலை கொண்டிருந்ததையும் தில்லியின் நேரு சர்க்காரை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு ஹைதராபாத் நிலவரங்களை தெரிவித்து வந்ததையும் அவரது சரிதையான ‘’விவசாய முதலமைச்சர்’’ என்னும் நூல் தெரிவிக்கிறது. ரஸாக்கர்கள் நிகழ்த்திய வன்முறைகளின் பின்னணியில் எழுதப்பட்ட தமிழ் நாவல் அசோகமித்ரனின் ‘’பதினெட்டாவது அட்சக் கோடு’’. 

நேரு வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் ‘’ஆபரேஷன் போலோ’’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவ்டன் இணைத்தார். இருப்பினும் ரஸாக்கர்கள் நிகழ்த்திய வன்முறையின் இரத்தக் கறை இன்னும் மறக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. 

தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன் கார்கே 1942ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு ஏழு வயது இருந்த போது அதாவது 1949ம் ஆண்டு அவருடைய குடும்பம் ரஸாக்கர்களால் தாக்கப்பட்டது. அவருடைய அன்னையும் சகோதரியும் ரஸாக்கர்களால் தீ வைத்து உயிருடன் கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்தவர் மல்லிகார்ஜூன் கார்கே. மத பயங்கரவாதத்தின் கொடூர முகத்தை தன்னுடைய சிறு வயதிலேயே கண்டவர் கார்கே.    

Tuesday, 2 September 2025

ஆத்மார்த்த உரையாடல்

அந்த மகவு
அந்த மருத்துவமனையின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த
அன்னையிடம் 
கண்களால் பேசிக் கொண்டிருந்தது
மிகக் குறைவான இமைத்தலுடன்
அன்னையின் கண்களையே 
கண்டு கொண்டிருந்தது
காணுதலே அம்மகவு அறிந்த மொழி
அன்னையின் கண்களைக் காணுகையில் 
பல பல பலவற்றை உணர்ந்து கொண்டிருந்தது
தானும் தனது உணர்வும் அன்னையும் அன்னையின் உணர்வும்
ஒன்றென மட்டுமே உணர்ந்திருந்தது அம்மகவு
முன்னர் திங்கள் ஒன்பது
ஓர் அறையில் இருந்தது
சிறியது
திரவங்கள் சூழ்ந்தது
அன்னையின் உணர்வு உணரப்பட்டுக் கொண்டும்
அன்னையின் குரல் கேட்டுக் கொண்டும் 
இருந்தது
மேலும் பல குரல்களும் கேட்டன
இப்போது 
அவ்வப்போது அன்னையிடமும்
அவ்வப்போது அன்னையிடமிருந்து தள்ளியும்
இருக்கும் 
இன்னொரு பெரிய அறைக்கு 
வந்திருக்கிறது
அன்னையின் கண்கள் புதியவை
அன்னையின் கண்கள் இனியவை
அன்னையின் கண்கள் அன்பானவை
தனது இருப்பை
தனது மொழியை
தனது உணர்வை
உணர்ந்து கொள்கிறது
அன்னையின் கண்கள் வழியே
அன்னையுடனான ஆத்மார்த்த உரையாடல் வழியே 

Monday, 1 September 2025

ஒளி முடி

அதிகாலையிலேயே நடக்கத் தொடங்கி விட்டேன்
விண்மீன்கள் நிலவு பார்த்துக் கொண்டிருந்தன
வெள்ளி ஆர்வம் மிகக் கொண்டு கண்டது
கதிர் ஒளி குறைவாயிருந்த பகுதியிலிருந்து
கதிர் ஒளி மிகுந்திருந்த பகுதிக்கு
எப் போது வந்து சேர்ந்தேன் என
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நட்சத்திரங்களைத் தன்னுள் ஏந்திக் கொண்டது ஒளி சூரியன்
வெட்டவெளி வானத்தில் 
சிறிதினும் சிறிதான பரப்பொன்றில்
இருந்தது மேகத்திரள் ஒன்று
அதனுள் மறைந்த சூரியன்
அடர்ந்திருந்த மரம் ஒன்றின்
உச்சிப்பகுதியில் ஒளி முடி சூட்டியது
அக் கணமும் தெய்வமான
அதன்
தரிசனம் கண்டேன்
அப்பொழுது 

பிரதிபா சேது

 பிரதமர் மனதின் குரல் -125வது நிகழ்ச்சியில் மத்திய அரசின் ‘’பிரதிபா சேது’’ என்ற டிஜிட்டல் தளம் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதாவது, மத்திய அரசின் குடிமைப்பணிக்குத் தேர்வு நடக்கும் போது அது மூன்று கட்டமாக நிகழும். முதலில் துவக்கநிலைத் தேர்வு நிகழும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் கணிசமான மதிப்பெண் பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களில் பாதிக்குப் பாதி பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். துவக்க நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே சவாலான ஒன்று. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அதனினும் சவாலான ஒன்று. நேர்காணலில் வெற்றி பெறுவது மிக மிக மிக சவாலான ஒன்று. துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்காணலில் தேர்வாகாமல் போனால் மீண்டும் துவக்க நிலைத் தேர்விலிருந்து எழுதத் தொடங்க வேண்டும். பட்டப்படிப்பு படித்த பின்னர் குறைந்தது 5 லிருந்து 7 ஆண்டுகள் முழுமையாக தயாரிப்புகளைச் செய்து இந்த தேர்வுகளை எழுதுவார்கள். அரை மதிப்பெண் ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பைத் தவற விடுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் பெருந்திறன் கொண்டவர்களே. ஒவ்வொருவரும் இத்தனை முறைதான் தேர்வு எழுத முடியும் என்ற கணக்கீடு உண்டு. வயது உச்சவரம்பு உண்டு. இவற்றால் மீண்டும் தேர்வு எழுத முடியாமல் போகிறவர்களும் உண்டு. இவர்கள் நாட்டைக் குறித்தும் நாட்டின் அரசியல் சாசனம் குறித்தும் நாட்டின் நிர்வாக முறை குறித்தும் தாங்கள் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்திருக்கும் கலை அல்லது அறிவியல் அல்லது பொறியியல் பாடங்கள் குறித்தும் விரிவான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் திறனை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு உதவும் விதத்திலும் மத்திய அரசு ‘’பிரதிபா சேது’’ என்ற திட்டத்தைத் துவங்கியுள்ளது. இது ஒரு டிஜிட்டல் இணையதளம் ஆகும். இதில் குடிமைப்பணித் தேர்வுகளின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களின் பெயரும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் அட்டவணையிடப்படும். தனியார் நிறுவனங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் விரும்பினால் அவர்கள் நிறுவனங்களில் வேலை கொடுக்கலாம் என்பது ‘’பிரதிபா சேது’’ டிஜிட்டல் தளத்தின் நோக்கம். இவ்விதம் குடிமைப்பணிக்குத் தேர்வுக்கு தயாரிப்புகள் செய்து நேர்காணல் வரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த பலருடன் எனக்கு அறிமுகம் இருந்தது. அவர்களுக்காக நான் சில உதவிகள் செய்து கொடுத்திருக்கிறேன். பிரதமரின் மனதின் குரலைக் கேட்ட போது எனக்கு அந்த நினைவுகள் வந்தன. இந்த சம்பவங்கள் நடந்து எட்டு ஆண்டுகள் இருக்கும். 

அப்போது குடிமைப்பணித் தேர்வுகளின் துவக்க நிலைத் தேர்வில் மத்திய பணியாளர் தேர்வாணையம் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறெனில் முன்னர் பொதுத்தாள் ஒன்றும் விருப்பத்தாள் ஒன்றும் இருக்கும். இரண்டிலும் தேர்ச்சி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்று முதல்நிலை எழுத்துத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். அப்போது நிகழ்ந்த மாற்றம் என்னவெனில் பொதுத்தாளுடன் விருப்பத்தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘’ஆப்டிடியூட் திறன்’’ சோதிக்கும் தாள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனால் நிறைய பொறியியல் பட்டதாரிகள் ஐ ஏ எஸ் தேர்வின் துவக்க நிலையில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு முன்னேறிச் சென்றார்கள். அரசு பொறியியல் பட்டதாரிகளின் நுண் திறன் அரசாங்கத்துக்குத் தேவை என நினைத்தது. இந்த மாறுதல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. கொண்டு வரப்பட்டு இரண்டு மூன்று ஆண்டுகளின் தேர்வும் நடந்து விட்டது. அதற்கு முன்பு வரை கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வியாபித்திருந்த இடத்தில் இப்போது பொறியியல் பட்டதாரிகள் வியாபிக்கத் தொடங்கினார்கள். கலை அறிவியல் பட்டதாரிகள் தங்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு அளிக்கக் கோரினார்கள். அரசு ஒருமுறை அளித்தது. மீண்டும் ஒருமுறை கோரினார்கள். அப்போது அரசு ஏற்கவில்லை. இந்த சூழ்நிலையில் மன்மோகன் அரசுக்குப் பின் மோடி அரசு பதவியேற்றது. புதிய அரசிடம் தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல சென்னையில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் விரும்பினார். அவர்களுக்கு வேண்டியவர் ஒருவர் இந்த விஷயத்தில் என்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் அவ்வாறு கூறப்பட்டது என்பது எனக்கு இன்று வரை புரியாத விஷயம். சென்னையிலிருந்து எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தான் ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்வதாகவும் என்னை ஊரில் வந்து சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் தேர்வு முறைகள் குறித்தும் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் இடர் குறித்தும் கூறினார். எனக்கு ஐ ஏ எஸ் தேர்வு குறித்து விபரங்கள் தெரியும் என்பதால் அவர் கூறியதைப் புரிந்து கொண்டேன். பள்ளி மாணவனாயிருந்த போது ‘’ஐ ஏ எஸ் தேர்வும் அணுகுமுறையும்’’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். எனவே இந்த விஷயங்கள் குறித்து எனக்கு பரிச்சயம் இருந்தது. இரண்டு நாட்களில் சென்னைக்கு வந்து அவர்களை நேரில் சந்திக்கிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு நான் காட்டும் ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூறிய விதமே சென்னை சென்றேன். அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் 10 பேர் இருந்தனர். சென்னையில் பரீட்சைக்குத் தயார் செய்யும் மாணவர்கள் இந்த விஷயத்தை அரசாங்கத்திடம் பேச ஒரு குழுவை உருவாக்கியிருந்தார்கள். அவர்களையே நான் சந்தித்தேன். 

இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் உதவ வாய்ப்புள்ளவர்கள் என்று நான் இரண்டு பேரைக் கூறினேன். இருவருமே பெண்கள். ஒருவர் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி. அவர் நாட்டின் முதல் பெண் ஐ பி எஸ் அதிகாரியும் ஆவார். சென்னைக்கு மிக அருகில் புதுச்சேரி இருப்பதால் அவருக்கு விஷயத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதும்படியும் அவரது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் பெறுமாறும் ஆலோசனை சொன்னேன். இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அப்போது மத்திய அரசில் இணை அமைச்சராகப் பதவி வகித்தார். திருச்சியில் தனது பட்டப்படிப்பையும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் பயின்றவர். அவரையும் சந்திக்கச் சொன்னேன். அரசை அணுக தில்லியில் நாடெங்கும் இருந்த மாணவர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றும் கூறினர். நான் அளித்த ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தன. நான் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் கலை அறிவியல் மாணவர்களுக்கு உதவுகிறேன் என்பது அவர்களுக்கு பெரும் நெகிழ்வைக் கொடுத்தது. என்னிடம் உதவி கேட்கிறார்கள் ஆலோசனை கேட்கிறார்கள். அதனை அவர்களுக்கு வழங்குகிறேன் அவ்வளவே என்பதாக நான் நினைத்தேன். ஒரு சில வாரங்களில் என்னை தில்லி சென்று அங்கே உதவ முடியுமா என்று கேட்டார்கள். நான் சில முறை தில்லி சென்றிருக்கிறேன் என்றாலும் இதைப் போன்ற விஷயங்களில் எனக்கு பழக்கம் இல்லை. என் மீது நம்பிக்கை வைத்துக் கேட்கிறார்களே என்று நான் அவர்களுக்காக தில்லி சென்றேன். என்னுடன் சென்னையைச் சேர்ந்த ஐ ஏ எஸ் தேர்வில் நேர்காணலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஒருவர் உடன் வந்தார். தில்லி மாணவர்களை அவர் அறிமுகம் செய்து வைப்பார் என்று அனுப்பி வைத்தவர்கள் கூறினார்கள். தில்லி செல்ல தில்லியிலிருந்து மீண்டும் திரும்பி வர என நீண்ட அந்த பயணங்களில் நாங்கள் பல விஷயங்களை விவாதித்தோம். பாடப்புத்தகத்தில் படித்த அரசியல் மேடைகளில் முழங்கப்படும் விஷயங்களை அந்த நண்பர் தீவிரமாக நம்பியிருந்தார். நான் கூறிய விபரங்கள் அவருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தன. அவருக்கு கம்யூனிசம் மேல் ஈடுபாடு இருந்தது. உலகில் அப்பாவி பொது மக்களை கோடிக்கணக்கில் கொன்று குவித்தது ஸ்டாலினின் கம்யூனிச சர்க்காரும் மாவோவின் கம்யூனிச சர்க்காரும் என்று நான் கூறிய போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த தரவுகள் இருக்கும் இணையதளங்களை நான் அவருக்குக் குறித்துக் கொடுத்தேன். ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்பவர் என்பதால் நிதானமாக இந்த விஷயங்கள் குறித்து படித்து விட்டு என்னுடன் விவாதியுங்கள் என்று கூறினேன். நிறைய கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருந்தன. அவர்கள் வந்து நிற்கும் இடத்திலிருந்து தான் நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் அது இயல்பே.

தில்லியில் மாளவியா நகர் என்ற பகுதி என்று ஞாபகம். அங்கே ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களின் தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்த மாணவர். அவரது பாட்டனார் வங்கதேசப் போரில் பங்கேற்றவர். ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருதைப் பெற்றவர். தனது பாட்டனார் குறித்து என்னிடம் விரிவாகக் கூறினார். இந்த விஷயம் எனக்கு நேரடியாக தொடர்பு இல்லாத விஷயமாக இருப்பினும் உதவி கேட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு 2500 கி.மீ க்கு மேல் நான் பயணித்து அவர்கள் உடன் இருப்பது அவர்களை சிலிர்க்கச் செய்கிறது என்று கண்களில் நீர் திரள அந்த இளைஞன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களின் முயற்சியால் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குடன் இந்த விஷயம் தொடர்பாக பேச நேரம் கிடைத்திருக்கிறது என்னும் தகவலை அந்த அஸ்ஸாம் இளைஞன் எங்களிடம் சொன்னான். இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்து விட்டு நாங்கள் இருவரும் தமிழகம் புறப்பட்டோம். அதன் பின் சில நாட்களில் அவர்கள் ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்தார்கள். அந்த புகைப்படங்களை அந்த அஸ்ஸாம் இளைஞன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தான்.    

பிரதமர் மனதின் குரலில் கூறிய ‘’பிரதிபா சேது’’ குறித்த செய்தி இந்த நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது.  

பின்குறிப்பு : என்னுடன் தில்லி வரை உடன் பயணித்த மீண்டும் தில்லியிலிருந்து சென்னை வரை உடன் பயணித்த என்னுடன் பல விஷயங்களை விவாதித்த அந்த நண்பர் ஆன்மீக அமைப்பொன்றில் இணைந்து துறவியாகி விட்டார் என்ற தகவலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அறிந்தேன்.