Wednesday, 23 September 2026

சிறந்த அரசுசூழ்கை

சூழ் என்னும் சொல்லுக்கு சூழ்தல், சூழ்ந்து கொள்ளுதல், ஆலோசித்தல் ஆகிய பொருள் உண்டு. 

சூழ்கை என்பது ஆலோசித்தல் மற்றும் சிந்தித்தலைக் குறிக்கும் சொல். 

மதிசூழ்கை என்னும் சொல் ‘’தந்திரம்’’ என்னும் சொல்லின் தமிழ்ச்சொல். 

அரசுசூழ்கை என்னும் சொல் ராஜதந்திரம் என வழங்கப்படும் சொல்லின் தூய தமிழ்ச்சொல். 

***

இன்று மத்திய அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, 26ம் தேதி நான்காம் சனிக்கிழமை 27 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு விடுமுறை தினங்களை ஒட்டி வரும் அடுத்த 28,29.30 ஆகிய மூன்று தினங்களில் வேலைநிறுத்தம் செய்து நாட்டின் குடிமக்களுக்கு இன்னல் விளைவிக்கத் திட்டமிட்டனர் வங்கி ஊழியர் சங்கங்கள். அதனை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எல்லா தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிறந்த அரசுசூழ்கை நகர்வாகும்.  

1. இதன் மூலம் 26ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை வங்கி இயங்காது என்பதால் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஐந்து நாட்கள் இருக்கலாம் என எண்ணிய வங்கி ஊழியர்களின் எண்ணத்துக்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. பயணத்தை விமானத்திலோ ரயிலிலோ முன்பதிவு செய்திருந்த வங்கி ஊழியர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்ய நேரும். 

2. பொதுமக்கள் ஐந்து நாள் வங்கி இயங்காது என்னும் நிலையிலிருந்து இப்போது 3 நாள் வங்கி இயங்காது என்னும் நிலைக்கு வந்திருக்கின்றனர். தங்கள் அத்தியாவசிய பணிகளை ஞாயிற்றுக்கிழமை அன்றே செய்து கொள்ள ஒரு வழி இந்த அறிவிப்பால் பிறந்திருக்கிறது. 

3. இப்போது மாதத்தின் இரண்டு சனிக்கிழமை விடுமுறை என்பதை நான்கு சனிக்கிழமை விடுமுறை என மாற்றியமைக்க வேண்டும் என்பதே வங்கி ஊழியர்களின் கோரிக்கை. நான்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க இயலும் ; எனினும் ஞாயிற்றுக்கிழமைகள் இனி விடுமுறையாக இருக்காது என்னும் சாத்தியத்தை அரசு குறிப்புணர்த்தியிருக்கிறது. இது மிகப் பெரிய அரசுசூழ்கை நகர்வு. 

வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்தை எவ்விதம் எதிர்கொள்வது என்பதை தாங்கள் நன்றாக அறிவோம் எனக் குறிப்புணர்த்தியிருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசுக்குப் பாராட்டுக்கள்.