Wednesday, 23 September 2026

தனிப்பெரும் பெண்மை (குறுங்காவியம்)(மறுபிரசுரம்)




அன்னை

பேசத் துவங்கும் முன்பிருந்து
எனது உலகமாயிருந்தது
உனது முகம்
உனது மொழி
உனது புன்னகை

உன் ஒக்கலில் அமர்ந்து
துவங்கியது
என் பயணங்கள்

உனது விரல்களின் வழியே
அருந்திக் கொண்டிருந்தேன்
பசி தீர்க்கும் உணவை

காகங்களுக்கும்
எனக்கும்
மத்தியில் இருந்த உலகத்தை
நீ உருவாக்கிக் கொடுத்தாய்

வால் குழைக்கும்
முதல் நண்பனை
அறிமுகம் செய்து வைத்தாய்

தினமும் நிலவைக் காட்டினாய்

நட்சத்திரங்கள்
மினுக்கிக் கொண்டிருப்பதன்
முதல் கதையைச் சொன்னாய்

உன் விரல் பிடித்து
எழுதத் துவங்கினேன்
உன் மடியமர்ந்து
விரல் பிடிக்கவே
எழுதத் துவங்கினேன்

உன்னை
எவ்வளவு விளித்திருப்பேன்
லட்சோப லட்சம்

நீ சொன்ன
முதல் நெடுங்கதை
நான்கு சகோதரர்கள்
ஒரு படகோட்டி
ஒரு குரங்கு மாவீரன்
பத்து தலை மனிதன்

நீ சொன்ன
அடுத்த கதை
ஐந்து சகோதரர்கள் கதை
ஒரு யுத்தம்
ஒரு புல்லாங்குழல்

உன் முகம்
மலரும்
நிமித்தங்களை
நான் நன்றாக அறிந்திருந்தேன்

உனது
துக்கமும்
கண்ணீரும் கூட
மெல்ல மெல்ல அறிமுகமானது

எல்லாமும்
யாவையும் ஆன
தெய்வத்திடம்
எப்போதும் பிராத்திக்கச் சொன்னாய்

என் கனவுகளை
உன்னிடம் கூறிக் கொண்டிருந்தேன்
உன்னிடம் மட்டும்
கூறிக் கொண்டிருந்தேன்

உனது இனிமைகளின்
பெரும்பங்கை
என்னிடம்
என்னிடம் மட்டுமே
தந்து கொண்டிருந்தாய்

என் கண்ணீரை
எப்போதும் துடைத்தது
உனது கரம்


நதி

உன்னை
நான்
எப்போதும் விரும்பினேன்

அகத்திலிருந்து
உனது படித்துறைகளுக்கு
வந்து கொண்டிருந்தேன்

உனது குளிர்ச்சியும்
கால் வைக்கையில்
கடித்துத் திரும்பும்
உன் சிறு மீன்களும்
மூழ்குகையில்
மேலும் கீழும்
அலையும் உன் உலகமும்
வசீகரித்துக் கொண்டேயிருந்தன

எனது காகிதக் கப்பல்கள்
உன்னில் பயணித்தன
தேச தேசங்களுக்கு

எனது களிமண் கடவுள்களை
ஒவ்வொரு ஆண்டும்
உன்னிடம்
கரைத்துக் கொண்டிருந்தேன்

நான் பார்க்கும்
வயல்களிளெல்லாம்
நீயே நிறைந்து கொண்டிருந்தாய்

நீ
நிறையும் தன்மையின்
நீர்மை
என்னால்
கருணை
என புரிந்துகொள்ளப்பட்டது

வறண்டிருக்கும் தருணங்களில்
உனது கைப்பிடி மண்ணை
எடுத்து வந்து
என் தோட்டங்களில் இட்டு வைத்தேன்
அவை வளர்ந்து கொண்டிருந்தன
வான் நோக்கி

ஒவ்வொரு ஆண்டும்
நீ வருகையில்
மஞ்சள் அரிசியும்
பாலும்
அர்ப்பணித்தேன்

உன் வேகமும்
உன் உறுதியும்
உன் ஓசையும்
உன் மௌனமும்
எத்தனையோ
கற்றுக் கொடுக்கிறது
எப்போதும்


தெய்வம்

உன்னை
எனக்குக் காண்பித்தது
என் அன்னை

இருளில்
செஞ்சுடர் எழுந்த போது
கண்டது
உன் முகம்

உனது பாதங்களைச்
சுட்டினாள்
என் அன்னை
அவை
எப்போதும் அழகாயிருந்தன

சுடர் எழும் போது
காண்பது
உன் மலர்ப்பாதங்கள்

பெற விரும்புவதை
எப்போதும்
உன்னிடம் யாசிக்க்கச் சொன்னாள்
என் அன்னை

என்னைப் பற்றிய பிராத்தனைகளை
எப்போதும்
உன்னிடம்
முன் வைத்துக் கொண்டேயிருந்தாள்
என் அன்னை

தோழி

என்னைக் கண்டதும்
நீ கொண்ட மகிழ்ச்சி
பிரகாசித்தது

எனது சொற்கள்
உனக்கு அளித்த வியப்பு
தீராதது

துக்கங்கள்
அகம் புதைத்துக் கொள்ளக் கூடியவை
என
உன்னால் அறிந்தேன்

ஓடி ஓடி
விடாமல் துரத்தி
விளையாடி
ஓய்ந்திருக்கும்
சிறு பொழுது
என்றும் இருக்கிறது
நீங்கா நினைவில்

நீ
பகிர்ந்த
வண்ண மிட்டாய்களின்
நிறம்
இன்னும்
கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது

காகிதங்களில்
தவழும்
உன் பென்சில்
உருவாக்கிக் கொண்டிருந்தது
எப்போதும்
ஓர் அழகான உலகத்தை


காதலி

உன்னிடம்
எப்போதும் இருந்தது
ஒரு கருணை

உன்னிடம்
எப்போதும் எஞ்சியது
ஒரு பெருந்தன்மை

நீ
மன்னித்தாய்
மறுபடியும் மன்னித்தாய்
மீண்டும் மன்னித்தாய்

உலகு பற்றி
ஏன் இவ்வளவு சிக்கலாக
அபிப்ராயம் சொல்கிறேன்
என்ற வியப்பு
உன்னிடம் அப்படியே இருக்கிறது

அந்தியைப் போல
சிவந்திருக்கிறது
உனது முகம்

நிலவைப் போல
ஒளிவிடுகின்றன
உனது புன்னகைகள்

உனது இயல்பின் நேர்த்தி
உனது ஆடைகளில்
எப்போதும் வெளிப்படுகிறது

உன்னைப் போலவே
உன்னுடன் இருக்கும் அனைத்தும்
அழகு கொள்கின்றன

நீ
எப்போதும்
எதையாவது
அழகுபடுத்திக் கொண்டேயிருக்கிறாய்

உனது அச்சங்கள்
உனது சிறைகளைப் பற்றியவை

எப்போது வேண்டுமானாலும்
ஒரு சிறை
உன்னைச் சூழக் கூடும்
என்ற பதட்டம்
உன்னிடம்
அவ்வப்போது
இருந்தது

நானும்
உன்னைச் சூழும் சிறை தானோ
என்ற ஐயம்
எனக்கு இருந்தது 

மனைவி

திருமணம் குறித்து
உன்னிடம்
மகத்தான கனவுகள் இருந்தன

நெருங்கும்
திருமணத்திற்கான நாட்கள்
உனக்கு
பெருமகிழ்ச்சி அளித்தன

உனது பிரியங்களை முத்தங்களாகவும்
உனது காதலைத் தழுவல்களாகவும்
உனது அன்பை கனிந்த பார்வையாகவும்
அளித்துக் கொண்டிருந்தாய்

திருமணச் சடங்குகள்
உனக்குப்
பெரும் ஆர்வம் அளித்தன

திருமண தினத்தன்று
நீ புத்தம் புதியவளாக இருந்தாய்
அன்று உன் கழுத்திலிருந்த மங்கள நாண் போல
அன்று நீ அணிந்திருந்த புத்தாடை போல

எப்போதும்
அருகிலேயே இருக்க
விரும்பினாய்

என்னை
ஓயாமல்
பார்த்துக் கொண்டிருந்தாய்

தற்செயலான
தீண்டலையும்
தொடுகையையும்
விரும்பினாய்

பிரியாமல்
அணைத்திருந்த ஒரு பொழுதில்
‘நாம் எப்போதும் பிரியவே கூடாது’ என்றாய்
அப்போது
உன் கண்ணில் நீர் துளிர்த்தது

எனது கோபத்தை
முதல் முறை
கண்ட போது
நீ
அஞ்சினாய்

எனது கோபம்
உன்னை
திகைக்கச் செய்தது

பின்னர்
உனக்கு
நான் ஒரு திகைப்பாகவே
எஞ்சினேன்

கருவுற்றிருந்த போது
நீ
தளர்ந்தாய்

என்னைப் பற்றிக் கொள்ள
அப்போது
பெரிதும் விரும்பினாய்

எனது ஆறுதல்கள்
உனக்கு
மகிழ்வளித்தன

உனது
ஒரு கரத்தை
எப்போதும்
உனது வயிற்றின் மேல்
வைத்துக் கொண்டாய்

சாளரங்களின்
வழியே
நீ
வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாய்

வானத்துப் பறவைகளை
கண்ணிலிருந்து
மறையும் வரை
நீ
பார்த்துக் கொண்டிருந்தாய்

பேறுக்குப் பின்
ஈற்றரையில்
உன் முகம் கண்ட போது
அது
எப்போதும் இல்லாத
அமைதியுடனிருந்தது

மகவைக் கண்டு
நான் கண் கலங்கிய போது
நீ
ஆச்சர்யப்பட்டாய்

மகவைக்
கைகளில் ஏந்த
நான்
திணறிய போது
நீ சிரித்தாய்


மகள்

உனது நோக்குகள்
என்னைக்
கரைத்துக் கொண்டிருந்தன

நீ
தவழ்ந்த போது
உலகம்
அப்படியே உறைந்து நின்றது

எழ முயன்று
எழ முயன்று
நீ விழுந்து கொண்டிருந்த போது
எனது கரங்கள்
உன்னைத் தூக்கின
வான் நோக்கி

நீ
எப்போதும்
என்னிடம்
உரையாடிக் கொண்டிருந்தாய்

நான்
எப்போதும்
உன்னிடம்
உரையாடிக் கொண்டிருந்தேன்

எனக்கு
நீ
வழிகாட்டிக் கொண்டிருந்தாய்

எனக்கு
நீ
ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தாய்

உனக்கு
நிறைய
புதிய விஷயங்கள் தேவைப்பட்டன

உனக்கு
நிறைய
புதிய
புதிய பொருட்கள் தேவைப்பட்டன

நீ
பெரும் சாகசங்களைக்
கனவு கண்டு கொண்டிருந்தாய்

தெய்வம்

நீ
கல்லில் உறைந்த
புன்னகை

என்
தொலை ஆழங்களைக்
கண்டுகொண்டிருந்தன
உனது
மலர்க்கண்கள்

அருகழைத்து வந்து
அன்னை
எனக்குக் காண்பித்தது
உன்னை

சுடர் எழும் போது
கண்டது
உன் முகம்
உன் மலர்ப்பாதங்கள்

உன் கரத்தின்
படைக்கலன்களும்
கனிவு கொண்டிருந்தன

ஒரு தொல்நகரில்
ஓர் அதிகாலை சுடராட்டில்
கண்டேன்
கல்லில் உயிர்த்த உன்னை
உன்னிடம் கொஞ்சிப் பேசிய கிள்ளையை

உன் பாதங்களில்
என் சிரம் கொய்து
சமர்ப்பிக்கிறேன்

உன் தடத்தில்
என் பசுங் கொழுங் குருதி கொட்டி
இரத்தச் சேறாக்குகிறேன்

உன்
குங்குமமும்
மஞ்சளும்
காக்கிறது
உலகை
எப்போதும்

நீ வீற்றிருக்கும் கொலுவில்
அண்டசராசரம்
ஒளிர்கிறது
ஒரு சிறு வைரமாய்

- - -

தனிப்பெரும் பெண்மை

தருநிழலே

கலைமகளே

அளி கரமே

இன்சொல்லே

நம்பிக்கையே

கருணையே

முழு முதலே

ஓம் ஓம் ஓம்