Thursday, 24 September 2026

தனிப்பெரும் பெண்மை

அன்னை

பேசத் துவங்கும் முன்பிருந்து
எனது உலகமாயிருந்தது
உனது முகம்
உனது மொழி
உனது புன்னகை

உன் ஒக்கலில் அமர்ந்து
துவங்கியது
என் பயணங்கள்

உனது விரல்களின் வழியே
அருந்திக் கொண்டிருந்தேன்
பசி தீர்க்கும் உணவை

காகங்களுக்கும்
எனக்கும்
மத்தியில் இருந்த உலகத்தை
நீ உருவாக்கிக் கொடுத்தாய்

வால் குழைக்கும்
முதல் நண்பனை
அறிமுகம் செய்து வைத்தாய்

தினமும் நிலவைக் காட்டினாய்

நட்சத்திரங்கள்
மினுக்கிக் கொண்டிருப்பதன்
முதல் கதையைச் சொன்னாய்

உன் விரல் பிடித்து
எழுதத் துவங்கினேன்
உன் மடியமர்ந்து
விரல் பிடிக்கவே
எழுதத் துவங்கினேன்

உன்னை
எவ்வளவு விளித்திருப்பேன்
லட்சோப லட்சம்

நீ சொன்ன
முதல் நெடுங்கதை
நான்கு சகோதரர்கள்
ஒரு படகோட்டி
ஒரு குரங்கு மாவீரன்
பத்து தலை மனிதன்

நீ சொன்ன
அடுத்த கதை
ஐந்து சகோதரர்கள் கதை
ஒரு யுத்தம்
ஒரு புல்லாங்குழல்

உன் முகம்
மலரும்
நிமித்தங்களை
நான் நன்றாக அறிந்திருந்தேன்

உனது
துக்கமும்
கண்ணீரும் கூட
மெல்ல மெல்ல அறிமுகமானது

எல்லாமும்
யாவையும் ஆன
தெய்வத்திடம்
எப்போதும் பிராத்திக்கச் சொன்னாய்

என் கனவுகளை
உன்னிடம் கூறிக் கொண்டிருந்தேன்
உன்னிடம் மட்டும்
கூறிக் கொண்டிருந்தேன்

உனது இனிமைகளின்
பெரும்பங்கை
என்னிடம்
என்னிடம் மட்டுமே
தந்து கொண்டிருந்தாய்

என் கண்ணீரை
எப்போதும் துடைத்தது
உனது கரம்


நதி

உன்னை
நான்
எப்போதும் விரும்பினேன்

அகத்திலிருந்து
உனது படித்துறைகளுக்கு
வந்து கொண்டிருந்தேன்

உனது குளிர்ச்சியும்
கால் வைக்கையில்
கடித்துத் திரும்பும்
உன் சிறு மீன்களும்
மூழ்குகையில்
மேலும் கீழும்
அலையும் உன் உலகமும்
வசீகரித்துக் கொண்டேயிருந்தன

எனது காகிதக் கப்பல்கள்
உன்னில் பயணித்தன
தேச தேசங்களுக்கு

எனது களிமண் கடவுள்களை
ஒவ்வொரு ஆண்டும்
உன்னிடம்
கரைத்துக் கொண்டிருந்தேன்

நான் பார்க்கும்
வயல்களிளெல்லாம்
நீயே நிறைந்து கொண்டிருந்தாய்

நீ
நிறையும் தன்மையின்
நீர்மை
என்னால்
கருணை
என புரிந்துகொள்ளப்பட்டது

வறண்டிருக்கும் தருணங்களில்
உனது கைப்பிடி மண்ணை
எடுத்து வந்து
என் தோட்டங்களில் இட்டு வைத்தேன்
அவை வளர்ந்து கொண்டிருந்தன
வான் நோக்கி

ஒவ்வொரு ஆண்டும்
நீ வருகையில்
மஞ்சள் அரிசியும்
பாலும்
அர்ப்பணித்தேன்

உன் வேகமும்
உன் உறுதியும்
உன் ஓசையும்
உன் மௌனமும்
எத்தனையோ
கற்றுக் கொடுக்கிறது
எப்போதும்


தெய்வம்

உன்னை
எனக்குக் காண்பித்தது
என் அன்னை

இருளில்
செஞ்சுடர் எழுந்த போது
கண்டது
உன் முகம்

உனது பாதங்களைச்
சுட்டினாள்
என் அன்னை
அவை
எப்போதும் அழகாயிருந்தன

சுடர் எழும் போது
காண்பது
உன் மலர்ப்பாதங்கள்

பெற விரும்புவதை
எப்போதும்
உன்னிடம் யாசிக்க்கச் சொன்னாள்
என் அன்னை

என்னைப் பற்றிய பிராத்தனைகளை
எப்போதும்
உன்னிடம்
முன் வைத்துக் கொண்டேயிருந்தாள்
என் அன்னை

தெய்வம்

நீ
கல்லில் உறைந்த
புன்னகை

என்
தொலை ஆழங்களைக்
கண்டுகொண்டிருந்தன
உனது
மலர்க்கண்கள்

அருகழைத்து வந்து
அன்னை
எனக்குக் காண்பித்தது
உன்னை

சுடர் எழும் போது
கண்டது
உன் முகம்
உன் மலர்ப்பாதங்கள்

உன் கரத்தின்
படைக்கலன்களும்
கனிவு கொண்டிருந்தன

ஒரு தொல்நகரில்
ஓர் அதிகாலை சுடராட்டில்
கண்டேன்
கல்லில் உயிர்த்த உன்னை
உன்னிடம் கொஞ்சிப் பேசிய கிள்ளையை

உன் பாதங்களில்
என் சிரம் கொய்து
சமர்ப்பிக்கிறேன்

உன் தடத்தில்
என் பசுங் கொழுங் குருதி கொட்டி
இரத்தச் சேறாக்குகிறேன்

உன்
குங்குமமும்
மஞ்சளும்
காக்கிறது
உலகை
எப்போதும்

நீ வீற்றிருக்கும் கொலுவில்
அண்டசராசரம்
ஒளிர்கிறது
ஒரு சிறு வைரமாய்

- - -

தனிப்பெரும் பெண்மை

தருநிழலே

கலைமகளே

அளி கரமே

இன்சொல்லே

நம்பிக்கையே

கருணையே

முழு முதலே

ஓம் ஓம் ஓம்