மூன்று நண்பர்கள்
மேல்நோக்கிய முக்கோணத்தின்
மூன்று முனைகளில்
இருக்கிறார்கள்
உச்சியில் இருக்கும் நண்பன்
எல்லாவற்றுக்கும் அப்பால் இருக்கிறான்
அதி தூய ஒலியின் உலகம் அவனுடையது
முக்கோணத்தின் கீழ்ப்பகுதியில் வலது பகுதியில் இருப்பவன்
பிறக்கிறான்
வளர்கிறான்
மகிழ்ச்சி கொள்கிறான்
துயரம் கொள்கிறான்
இடது பகுதியில் இருப்பவன்
வலது பகுதியில் இருப்பவனை
எப்போதும்
பார்த்துக் கொண்டே இருக்கிறான்
எப்போதும்
உடனிருந்து கொண்டே இருக்கிறான்
இடமிருப்பவனும் வலமிருப்பவனும்
சந்திக்கையில்
முக்கோணம்
மேல் நோக்கிய நேர்க்கோடு ஆகிறது
உச்சியில் ஒரு முனை
அடியில் ஒரு முனை
கோடானுகோடி நேர்க்கோடுகளில்
ஒன்று
அடியும் உச்சியும்
இணைந்து
ஒற்றைப் புள்ளி
ஆகிறது