அனுப்புநர்
ர.பிரபு
*****
****
***
பெறுநர்
இயக்குநர்
மாநிலத் தணிக்கை அலுவலகம்
நிதியமைச்சக அலுவலகக் கட்டிடங்கள்
நந்தனம்
சென்னை
ஐயா,
பொருள் : மயிலாடுதுறை மாவட்டம், ***** கிராமம் , 120 நாளில் 127 தெருவிளக்குகள் மாற்றப்பட்டதில் முறைகேடு இருப்பதாகப் புகார்
பார்வை : இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற ***** ஊராட்சியின் கிராம சபைக் கூட்டம்
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று (15.08.2026) மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் ##### ஊராட்சியில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலை வகிக்க கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் பார்வையாளனாகக் கலந்து கொண்டேன். 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான 120 நாட்களின் ஊராட்சி வரவு செலவு கணக்கு அதில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேற்படி ஊராட்சியில் மேற்படி 120 நாட்களில் தெருவிளக்கு பராமரிப்பு செலவுக்கு ரூ.25,440ம் தெருவிளக்கு பொருள் வாங்க ரூ.8400ம் செலவானதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. முதற்பார்வையிலேயே இத்தொகை மிகைப்படுத்தப்பட்ட தொகை என்பதும் மேற்படி கணக்கு வகையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதும் தெரியவரக் கூடியதாகும். தற்போது ஊராட்சிகளில் சி எஃப் எல் மற்றும் எல் இ டி விளக்குகள் பயன்படுத்தப்படும் நிலையில் அவை தினம் ஒன்று என்ற வீதத்தில் ஒளிராமல் போய் மாற்றப்படுகின்றன என்பது நம்பும் விதமாக இல்லை.
மேற்படி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஆகஸ்ட் 15 அன்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்றது என்பதாலும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சிகளின் கணக்கு தணிக்கை அதிகாரி என்ற வகையிலும் இந்த விஷயம் தொடர்பான புகார் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது. மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியரிடம் தகவலும் கோரப்பட்டது.
இந்த மனுவின் மூலம் இந்த விஷயத்தை மாநிலத் தலைமை தணிக்கை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மயிலாடுதுறை மாவட்டம் ***** கிராமம் 01.04.2026 - 31.07.2026 வரையிலான 120 நாட்களில் 127 மின் விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விஷயத்தை முற்றிலுமாக எல்லா விதங்களிலும் ஆராய்ந்து தணிக்கை மற்றும் மறுதணிக்கை செய்து முறைகேடுகளைக் களைந்து அரசாங்கத்திற்கு எந்த விதமான இழப்பும் ஏற்படாத வண்ணம் ஆவன் செய்ய வேண்டும் என்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
நாள் : 20.09.2026
இடம் : மயிலாடுதுறை
நகல்
1. மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை
2. வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை