உபநிடதத்தில் ஒரு கதை உள்ளது. உத்தாலகர் என்ற முனிவர் தன் மகன் சுவேதகேது மறை பயின்றும் அகத்தில் அகங்காரம் கொண்டிருப்பதைக் கண்டு வருந்தி அவனிடம் 100 மாடுகள் கொண்ட மந்தையை அளித்து அவை 1000 ஆகப் பெருகியதும் வீடு திரும்புமாறு கூறினார். சுவேதகேது பசுக்களுடன் வாழ நேர்கையில் தன் அகத்தில் இருந்த அகங்காரம் முழுதும் நீங்கப் பெற்று தன் இருப்பை மட்டும் உணர்ந்தவனானான். உத்தாலகர் சுவேதகேது வசித்த வனத்துக்கு வந்து ‘’மகனே ! உன் மந்தை 1000 பசுக்களாகப் பெருகி விட்டது’’ என்று கூறினார். சுவேதகேது தன் மாட்டு மந்தையை எண்ணிப் பார்த்தான். 1001 பசுக்கள் இருந்தன. மீண்டும் மீண்டும் எண்ணினான். பசுக்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுதலாகவே இருந்தது. தந்தையிடம் , ‘’தந்தையே! எத்தனை முறை எண்ணினாலும் ஒரு பசு கூடுதலாகவே உள்ளது’’ என்றான். உத்தாலகர் ‘’நீதான் அது (தத்வமஸி) ‘’ என்றார். அகங்காரம் முற்றிலும் அகன்ற சுவேதகேது தன்னை ஒரு பசுவாக உணரத் தொடங்கியதால் ஆயிரம் பசுக்களுடன் தன்னையும் ஒரு பசுவாக எண்ணி 1001 எனக் கூறினான்.
பசு என்னும் உயிர் இனியது. அன்பும் கருணையும் பிரியமும் கொண்டது. மானுடர்க்கு அன்னையாகவும் குழந்தையாகவும் ஒரே சமயம் இருப்பது.
’’1000 பெண்கள் - 1000 பசுக்கள்’’ தொடர்பான சிந்தனைகள் மனதில் நிறைந்திருந்ததால் இன்று ஊரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 1000 பசுக்கள் கொண்ட கோசாலையில் உள்ள பசுக்களுடன் சில மணி நேரங்கள் இருக்க விரும்பி அங்கு சென்றிருந்தேன். அந்த கோசாலையில் 1000க்கும் மேற்பட்ட பசுக்கள் இருக்கின்றன. உம்பளாச்சேரி, காங்கேயம், ஓங்கோல், காங்கிரேஜ், கிர், பிருந்தாவனம், சாஹிவால் ஆகிய மாட்டினங்கள் இருக்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகத்தில் ’’பசுபதி முத்திரை’’ உள்ளது. அதில் இடம் பெற்றிருக்கும் மாரு ‘’காங்கரேஜ்’’ மாடு ஆகும். கிருஷ்ணரின் ஆட்சியில் யாதவர்கள் மேய்த்த மாடுகள் ‘’கிர்’’ மாடுகள் ஆகும். குஜராத்தின் கிர்னார் மலைப்பகுதியில் வாழ்ந்த மாடுகள் ஆதலால் அவை ‘’கிர்’’ மாடுகள் எனப்படுகின்றன. கோகுலத்தில் கிருஷ்ணன் மேய்த்த மாடுகள் ‘’பிருந்தாவனம்’’ என்னும் மாடுகள் ஆகும். பரம்பொருள் மாடு மேய்க்கும் சிறுவனாக அவதரித்து மாடுகளுடன் இருக்க விரும்பியிருக்கிறது என்பது மாடுகளின் அன்பு பரம்பொருளையே ஈர்க்க வல்லது என்பதை உணர்த்துகின்றது. வைணவ மரபு எல்லா உயிர்களையும் பசுக்கள் என்கிறது ; கிருஷ்ணன் எல்லா உயிர்களையும் இடையன் மாடுகளைப் பேணுவது போல பேணுகிறான் என்கிறது வைணவம்.
நாட்டு மாடுகள் அளவில் பெரியவை. அவற்றின் தோல்பரப்பில் பலவிதமான நுண்ணுயிர்கள் வாழும். எனவே நாட்டு மாடுகள் மனிதர்களின் ஸ்பரிசத்தை விரும்பும். நாம் மாட்டிடம் சென்று அதன் உடலைத் தடவிக் கொடுத்தால் உடல் முழுதும் தடவுமாறு கேட்கும். மாடுகளுடன் பழகியவர்களுக்கு அது தெரியும். இன்று பல மாடுகளின் உடலைத் தடவிக் கொடுத்தேன். மிக நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
பிராணிகள் அன்பு காட்டுபவை ; அன்புக்கு வசப்படுபவை. மாடு, நாய், காகம், குருவி, குதிரை, யானை, ஆடு என அனைத்துமே மானிடர்க்கு அன்பு காட்டுபவை.
*****
மாடுகள் வாழிடத்தை எவ்விதம் அமைப்பது என்பது குறித்து சில மனச்சித்திரங்கள் உருவாயின.
(1) கான்கிரீட் என்பது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த போது பாலங்கள் கட்ட உருவான தொழில்நுட்பம். இன்று உலகம் முழுதும் கட்டுமானங்கள் அனைத்திலும் கான்கிரீட் வியாபித்து விட்டது.
(2) உருவாக்க இருக்கும் மாடுகள் வாழிடம் தென்னங்கீற்றுகளால் ஆன கொட்டகையாகவே இருக்கும். அவ்விதமாகவே 3000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
(3) தீ அபாயத்தைத் தவிர்க்க எப்போதும் தண்ணீர் மேல்நிலை தொட்டியில் இருக்கும் விதமாக ஏற்பாடு செய்யலாம். இரவும் பகலும் பணியாளர்கள் காவலில் இருக்கும் விதமாக ஏற்பாடு செய்யலாம்.
(4) மாடுகள் வாழிடத்தின் தரையை செங்கல்லால் அமைக்க உள்ளேன். சாணமும் கோநீரும் அமிலத்தன்மை மிக்கவை என்பதால் தரையை அவை அரிக்கும். தேவையெனில் 3 ஆண்டுக்கு ஒருமுறை தரையின் செங்கற்களை உடைத்து எடுத்து விட்டு புதிதாக செங்கல் பாவிக் கொள்ளலாம்.
(5) கீற்று, மூங்கில், செங்கல், களிமண் கொண்டே மாடுகளின் வாழிடம் உருவாக்கப்படும்.
(6) நெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி ஆகியவற்றுக்கு கான்கிரீட் பயன்படுத்திக் கொள்ளலாம். கான்கிரீட் இல்லாமல் செங்கல் கட்டு வேலையாக அமைத்தால் சிறப்பு.
(7) சொந்தமாக இடம் வாங்கத் தேவையில்லை என எண்ணுகிறேன். இடம் வாடகைக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது.
(8) 4000 பேர் கொண்ட அந்த கிராமத்தில் தற்போது இருக்கும் ஆடு மாடுகள் அனைத்துக்கும் ஒரு பட்டி உருவாக்கி அதில் அவை அனைத்துக்கும் கூட்டுறவு அமைப்பு சார்பாகவே தீவனம் விலையில்லாமல் வழங்கி விடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்தக் கிராம விவசாயிகள் பசுந்தீவனம் உற்பத்தி செய்வது சிரமமில்லாமல் நிகழும். ஆடு மாடுகள் ஊரெங்கும் மேய்ந்து கொண்டிருந்தால் பசுந்தீவனம் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் வயலைச் சுற்றி வேலி அமைக்க பெரும் செலவு செய்ய நேரும். இவ்விதம் ஒரு பட்டியில் அடைத்தால் அந்தக் கிராமத்தின் தானிய உற்பத்தி பல மடங்கு பெருகும். பருப்பு வகைகளை வயலின் வரப்புகளில் பயிர் செய்ய முடியும்.
(9) 1000 பேரை நாம் இணைத்தால் பல ஆக்கபூர்வமான விஷயங்களை மிக எளிதில் செய்து விட முடியும். ஒற்றுமையே வலிமை என்பது ஆகப் பெரிய உண்மை.
(10) பெரும் திட்டம். பெரும் செல்வம் தேவைப்படுவது. பெரும் முயற்சி தேவைப்படுவது. இவை அனைத்தையும் உணர்கிறேன். பராமரிக்க விரும்பும் 1000 பசுக்களிடம் இந்த விஷயத்தை மானசீகமாக ஒப்படைத்து விடுவது இந்த விஷயம் நிகழ ஆகச் சிறந்த வழி என்று உணர்கிறேன்.