எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம் பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!
-மகாகவி பாரதி
‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஒரு கிராமத்தில் ஒரு பணியை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இன்று அந்த கிராமத்துக்குச் சென்று என்னுடைய திட்டமிடலை அந்த கிராமத்தில் உள்ள எனது நண்பரிடம் கூறினேன். அவர் நான் கூறியதை கேட்டுக் கொண்டார். முதல் பார்வைக்கு அவருக்குத் தோன்றிய ஐயங்களைக் கேட்டார். அவற்றுக்கு நான் பதில் கூறினேன். மேலும் பல ஐயங்களை அடுத்த சில நாட்களில் எழுப்புமாறு கேட்டுக் கொண்டேன். ஒரு விஷயத்தைத் திட்டமிடும் போது பலர் பல ஐயங்களை எழுப்புவது மிகவும் உகந்தது. ஓர் ஐயம் எழுப்பப்படும் போது அதற்கான பதில் நம்மிடம் இருக்க வேண்டும் அல்லது அந்த ஐயத்துக்கான பதிலை சிந்தித்து அடைய வேண்டும். செயலாக்கத்துக்கு முன்பு ஐயங்கள் இருப்பது நலம் பயப்பது. ஐயம் தெளிதல் துல்லிய செயலாக்கத்துக்கு மிகவும் உகந்தது.
நண்பரிடம் உரையாடலின் போது ஒரு விஷயத்தைக் கூறினேன். அதாவது, திட்டம் என்ன என்பதை பிரசுரமாக அச்சிட்டு 1000 பிரதிகள் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குவதை முதல் பணியாக வைத்துக் கொள்வோம் என்றேன். ஒரு விஷயம் ஒரே நேரத்தில் 1000 பேரைச் சென்றடைந்தால் அந்த விஷயம் ஒருவருக்கொருவரான உரையாடலில் பலவிதமான வடிவம் கொண்டு பெரிதாகியிருக்கும். பல ஐயங்களும் பல கேள்விகளும் உருவாகியிருக்கும். வியக்கத்தக்க அளவில் அதற்கான பதில்களும் மக்கள் மனதில் உருவாகியிருக்கும். 15 நாள் கழித்து ஒவ்வொருவராக சந்திக்கும் போது திட்டம் முழு வடிவம் பெற்றிருக்கும்.
அந்தக் கிராமத்தின் மக்கள்தொகை தோராயமாக 4000.
அந்தக் கிராமத்தின் 1000 பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு நாட்டு மாடு ( உம்பளாச்சேரி, ஓங்கோல், கிர், சாஹிவால், தார்பார்க்கர் ஆகிய நாட்டு மாட்டு இனங்கள் ) வழங்க வேண்டும். இந்த நாட்டு மாட்டினை வாங்க 1000 பெண்களும் இணைந்து ஒரு கூட்டுறவு அமைப்பாக உருப்பெறுவார்கள். அந்தக் கூட்டுறவு அமைப்பு 1000 நாட்டு மாடுகளை வாங்கும்.
மாடு என்றால் பால் உற்பத்தியும் பால் விற்பனையுமே எல்லாருடைய நினைவுக்கும் வரும். ஆனால் இந்தத் திட்டத்தில் பால் உற்பத்தி உண்டு எனினும் பால் விற்பனை இல்லை. பாலைத் தயிராக்கி தயிரிலிருந்து வெண்ணெய் கடைந்து வெண்ணெயை நெய்யாக மாற்றுதலே பணி. பால் விற்பனை என்றால் அது தினசரி செய்ய வேண்டிய செயல். 1000 மாடுகளிடமிருந்து குறைந்தது 5000 லிட்டர் பால் கிடைக்கும். கறந்த பாலை 3 மணி நேரத்துக்குள் விற்பனை செய்திட வேண்டும். சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதற்கு குளிரூட்டும் உபகரணங்கள் தேவை. பாலைக் கொண்டு செல்ல அதிக வாகனங்கள் தேவை. நிறைய பணியாளர்கள் தேவை. இவற்றைத் தவிர்க்கவே பாலை நெய்யாக மாற்ற முடிவு செய்தேன். 5000 லிட்டர் பாலிலிருந்து 200 கிலோ நெய் கிடைக்கும். பால் போல நெய் அன்றன்றே பயன்படுத்திட வேண்டிய உணவுப்பொருள் அல்ல. நாட்கள் வாரங்கள் கூட சேமிக்க முடியும்.
நெய் உற்பத்தியுடன் நாட்டு மாட்டு சாணத்தின் மூலம் ’’இயற்கை எரிவாயு’’ தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இயற்கை எரிவாயு தயாரித்த பின் எஞ்சும் சாணத்தை மூட்டைகளில் சேகரித்து வயல்களுக்கு இயற்கை உரமாக அளிக்கவும் திட்டம்.
கணக்கீடு:
குறிக்கோள் : கிராமத்தின் 1000 பெண்களை இணைத்து கூட்டுறவு அமைப்பொன்றை உருவாக்கி அவர்களுக்கு வங்கிக் கடன் மூலம் 1000 நாட்டு மாடுகள் வாங்கிக் கொடுத்து மேலும் வங்கிக் கடன் மூலம் நெய் உற்பத்தியும் இயற்கை எரிவாயு உற்பத்தியும் செய்து விற்பனை செய்வதன் மூலம் கிராமத்தின் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துதல், கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நாட்டுப் பசுமாடுகளைப் பாதுகாத்தல்.
தேவை : கிராமத்தில் வாடகைக்கு 5 ஏக்கர் நிலம். மாட்டுக் கொட்டகை அமைக்க. நெய் உற்பத்தி சாதனங்கள் அமைக்க. இயற்கை எரிவாயு தயாரிக்க. (1000 மாடுகளுக்கு பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 100 ஏக்கர் நிலம் தேவை. எனினும் அந்தக் கிராமத்தின் விவசாயிகளிடமிருந்து பசுந்தீவனம் உற்பத்தி செய்து தரச் சொல்லி விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். கிராம மக்கள் தொகை 4000ல் ஆயிரம் பெண்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இடம் பெற்றிருப்பார். எனவே கிராமத்தின் எல்லா குடும்பங்களும் இதில் பங்கு பெற்றிருப்பார்கள். அந்தக் கிராமத்தில் இருப்பவர்களே பசுந்தீவனம் உற்பத்தி செய்து தருவதால் அதனை வாங்க அளிக்கப்படும் தொகையும் கிராமத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும்)
நாட்டு மாடு ஒன்றின் விலை ரூ. 1,00,000 - 2,50,000 இருக்கும். கணக்கீட்டுக்கு ரூ.1,00,000 என்றே கொள்வோம்.
1000 மாடுகளின் விலை = ரூ. 10 கோடி
அடிப்படைக் கட்டமைப்புகள் - ரூ. 2 கோடி
பெண்கள் கூட்டுறவு அமைப்பு, கால்நடை வளர்ப்பு, இயற்கை எரிவாயு ஆகியவை இணைந்திருப்பதால் 25 சதவீதம் வரை மானியம் கிடைக்கலாம்.
அவ்வாறெனில் மூலதனம் = ரூ. 9 கோடி
மாத உற்பத்தி - நெய் - 6000 கிலோ - ரூ. 60 லட்சம்
மாத உற்பத்தி : இயற்கை எரிவாயு- ரூ.10 லட்சம்
மொத்த மாத வருவாய் - ரூ. 70 லட்சம்
மாதாந்திர இயக்க செலவு - ரூ. 35 லட்சம்
மாதாந்திர லாபம் = ரூ. 35,00,000
மாதாந்திர இ எம் ஐ - ரூ. 8,00,000
மாதாந்திர லாபம் - ரூ. 27,00,000
முதல் 3 ஆண்டுகள் லாபத்தை எடுத்துக் கொள்ளாமல் வங்கிக் கடனை பெண்கள் கூட்டுறவு அமைப்பு அடைத்தால் 3 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கூட்டுறவு அமைப்புக்கு மாதம் ரூ. 35,00,000 லாபம் கிடைக்கும்.
மேலும் அந்தக் கூட்டுறவு அமைப்புக்கு 1000 மாடுகளும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் முற்றிலும் சொந்தமாகியிருக்கும்.
3 ஆண்டுகளில் 1000 மாடுகள் 2000 மாடுகளாகப் பெருகியிருக்கும்.
அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.3500 லாபமாகக் கிடைக்கும்.
இந்த 1000 பெண்களில் விருப்பம் உள்ளவர்கள் மாடுகளைப் பராமரிக்கும் பணியிலும் நெய் உற்பத்திப் பணியிலும் இயற்கை எரிவாயு உற்பத்திப் பணியிலும் ஈடுபட்டு ஊதியம் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு வேண்டுகோள்
’’1000 பெண்கள் - 1000 பசுக்கள்’’ இந்தக் கணத்தில் ஒரு கற்பனை மட்டுமே. கற்பனை செயலாக வேண்டும் என்பது விருப்பம்.
வாசகர்கள் இந்தத் திட்டம் குறித்து தங்கள் எண்ணங்களையும் அபிப்ராயங்களையும் ulagelam(at)gmail(dot)com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். நம் கவனத்துக்கு வராமல் இந்தத் திட்டத்தில் ஏதேனும் அம்சங்கள் இருந்தால் அவற்றைக் கவனத்துக்குக் கொண்டு வரவும். திட்டம் முழுமையான வடிவம் பெற அவை உதவும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘’ நீறு பூத்த நெருப்பு‘’ என ஒரு பதிவை எழுதினேன். அதன் இன்னொரு வடிவமே ‘’ஆயிரம் பெண்கள் - ஆயிரம் பசுக்கள்’’.
ஒரு கிராமம் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத் திட்டம் உருவாகியிருக்கிறது.
நவராத்திரி கொண்டாடப்படும் இன்றைய நாளில் மகாசக்தியின் பாதத்தில் இதனை சமர்ப்பிக்கிறேன்.
*********