Saturday, 3 October 2026

புன்னகைக்கும் சிறுவர்கள்


நிலமெங்கும் இருக்கிறார்கள்
புன்னகைக்கும் சிறுவர்கள் 
சிறிய எளிய காரணங்களும்
எளிய சிறிய காட்சிகளும்
அவர்களுக்குப்
போதுமானதாக இருக்கிறது
புன்னகைக்க
பறவை சிறகடித்து கிளையில் அமரும் போது
கிளையிலிருந்து பறவை வானெழும் போது
குட்டி நாய் ஒன்றைக் காணும் போது
வெயிலில் நிற்கும் போது
 தூறல் கொட்டிடும் போது
என
பலப்பல தருணங்களில்
புன்னகைக்கின்றனர்
புன்னகைக்கும் சிறுவன்
இன்று
தந்தையுடன்
பெட்ரோல் டேங்க் மேல்
அமர்ந்து
பயணித்த சிறுவன்
அவன் வாகனத்தை
என் வாகனம்
தாண்டும் போது
என்னைப் பார்த்து
புன்னகைத்தான்
அப்புன்னகையின் ஒளி
சந்திர சூரியர்களுக்குரியது
அதை
வான் அறியும்
நிலம் அறியும்