Sunday, 4 October 2026

நீக்கல்

 இன்றைய வாழ்வில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நண்பர்கள் அமைவது என்பது நல்லூழ். உலகியல் வாழ்க்கை உத்யோகத்தை அடிப்படையாய்க் கொண்டது என்ற நிலையில் உலகியல் தாண்டிய ஆர்வம் கொண்ட நண்பர்கள் வாய்ப்பது என்பது அபூர்வமானது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அமைவது என்பது அதனினும் அபூர்வமானது. பால்ய சினேகிதர்களைத் தாண்டி என்னுடைய 25 வயதுக்கு மேலும் சந்தித்த சிலரின் நண்பனாக இருக்கிறேன் ; என்னுடைய 35 வயதுக்கு மேலும் சந்தித்த சிலரின் நண்பனாக இருக்கிறேன். மனிதர்கள் அனைவரிடமும் நட்புணர்வு கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். மொழி எனது செயற்களம் என்னும் நிலையில் ஒத்த ரசனையும் ஒத்த சிந்தனையும் கொண்ட நட்பு வாய்ப்பது என்பது அரிதான நல்லூழே. இறைமை அதனை எனக்கு நல்கியது. 

எனது இலக்கிய நண்பனை நேற்று சந்தித்தேன். அலுவலகத்துக்கு விடுப்பு அளித்து விட்டு சில நாட்கள் ஓய்வுக்காக ஊருக்கு வந்திருந்தான். எனது வீட்டிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கிறது அவனது வீடு. நேற்று மதியம் அவன் வீட்டுக்குச் சென்றேன். செல்லும் முன்பே பி ஜி கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூலில் வரும் கம்பராமாயணப் பாடல்களை ஒவ்வொன்றாக விவாதிப்போம் எனக் கூறியிருந்தேன். அவனது தொடர்புப் பொறி இணைய வசதி கொண்டது. அவனிடம் ஐ பேட் ஒன்றும் உள்ளது. கம்பர் - கவியும் கருத்தும் நூலை பதிவிறக்கம் செய்து என்னிடம் ஐ பேட் ல் அளித்தான். தன் தொடர்புப் பொறியின் திரையில் பதிவிறக்கம் செய்து கொண்டான். 

கம்பனில் மூழ்கினோம். 

காவியங்கள் காவிய வாசகனின் உணர்வுநிலையைப் பொருத்து ஒவ்வொரு தோற்றம் கொள்ளும். காவியம் காவிய அமைதியில் நிறைந்திருக்கும். எனினும் காவிய வாசகன் வாழ்க்கைச் சூழல்களுக்கு ஏற்ப உணர்ச்சிகரமாவான். எல்லா உணர்ச்சிகரங்களுக்கு அப்பால் அமைதி கொண்டாலும் அந்த அமைதி இன்னும் இன்னும் என ஆழம் கொள்வதும் உண்டு. எனவே வாசகன் பார்வைக்கு ஏற்ப காவியம் தோற்றம் தரும்.

நேற்று நாங்கள் கம்பனில் மூழ்கிய போது கண்டடைந்தவற்றை பேசியவற்றை சிறு குறிப்பாக எழுதிக் கொள்கிறேன். மனிதர்கள் சிறு சிறு துளிகள். காவியம் என்பது சிறு துளிகளாலான பெருங்கடல். 

சில ஆண்டுகளுக்கு முன்னால் நண்பனுக்கு பி ஜி கருத்திருமனின் கம்பர்- கவியும் கருத்தும் நூலை நான் பரிந்துரைத்திருந்தேன். பரிந்துரைத்த அடுத்த நாளே அவன் முழுதும் வாசித்து விட்டான். அதன் பின் அவனுக்கும் எனக்குமான பொது ரசனையாக கம்பன் காவியம் ஆனது. 

(1) கம்பனின் முதல் பாடல். 

உலகம்‌ யாவையும்‌ தாம்‌உள ஆக்கலும்‌, 
நிலைபெ றுத்தலும்‌, நீக்கலும்‌ நீங்கலா 
அல(கு)இ லாவிளை யாட்டுடை யார்‌அவர்‌
தலைவர்‌; அன்னவர்க்‌ கேசரண்‌ நாங்களே.

நம் மரபு சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனக் குறிப்பிடுகிறது. ஆக்கல், காத்தல் , அழித்தல் என்பர். நம் மரபு பிரபஞ்சத்தின் ஒத்திசைவை நோக்கியே யாவும் செல்கின்றன எனக் கொள்கிறது. எனவே சம்ஹாரம் என்னும் அழித்தல் எதிர்மறையானது அல்ல. முயலகன் மேல் ஆனந்த நடனம் புரியும் ஆடலரசன் ஆடலில் முயலகனுக்கும் நுண் இடம் கிடைக்கிறது. மகிஷன் தலை மேல் ஏறி நிற்கும் கொற்றவையின் பாதத்துக்குக் கீழே செயலற்று இருக்கிறான் மகிஷன். சூரபத்மனை இரண்டு கூறாகக் கிழித்து மயிலாகவும் சேவலாகவும் ஆக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார் ஆறுமுகன். 

கம்பன் பரம்பொருளின் இயல்பைக் கூறி போற்றும் முதல் பாடலில் சம்ஹாரத்தை நீக்கல் என்கிறான். நீக்கப்பட்ட ஒன்று மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பு உண்டு. நீக்கல் என்பது தற்காலிகமானதே. 

சதுரங்க ஆட்டத்தில் சேனைகள் அணிவகுக்கின்றன. வெட்டப்பட்டு நீக்கப்படும் காய்கள் அடுத்த ஆட்டத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொள்கின்றன. காய்கள் வெட்டப்படுவதும் வெற்றியும் தோல்வியும் சமன்நிலையும் அடையப்பட்ட பின்னர் மீண்டும் அடுத்த ஆட்டம் தொடங்குவதும் அப்போது காய்கள் மீண்டும் களத்துக்கு வருவதும் இயற்கை. அதே போல இறைவனின் திருவிளையாடலில் நீக்கல் என்பதும் ஒன்று. 

ஒன்றாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஓராண்டு முழுமையும் வகுப்பில் அட்சரம் பயில்கிறான். ஆசிரியரின் அன்பைப் பெறுகிறான். வகுப்புத் தோழர்களைப் பெறுகிறான். தேர்வு நடக்கிறது. தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்கிறான். அவன் வாழ்வில் ஒன்றாம் வகுப்பு நிறைவு பெற்று நீக்கம் பெற்று  இரண்டாம் வகுப்பு தொடங்குகிறது. ஒரு மாணவன் தான் ஒன்றாம் வகுப்பின் சூழலில் மட்டும் லயித்து அதிலேயே இருக்கிறேன் என்றால் அது பயன் மிக்கதன்று. நீக்கப்பட்டு அடுத்த ஒன்றுக்குச் செல்வதே அவனுக்கும் பயன் ; பள்ளிக்கும் பயன். 

ஜீவன்களின் இறப்பு கூட ஒரு வித நீக்கமே. நம் மரபு புனரபி மரணம் புனரபி ஜனனம் என்கிறது. பிறப்பு இறப்புச் சுழற்சியில் கம்பன் இறப்பை நீக்கல் என்கிறானா என விவாதித்தோம். 

(2) உலகமே தன்னை பழி சொல்லும் அளவுக்கேத்  தன்  படைப்புத்திறன் இருந்தாலும் வால்மீகி படைத்த காவியத்தை நானும் என் மொழியில் பாடுவேன் என்கிறான் கம்பன். வால்மீகிக்கு கிடைத்த புகழ் அவனுக்கும் கிடைத்தது  என்பது வரலாறு. ஆயிரம் ஆண்டுகளாகப் பெருகிக் கொண்டேயிருக்கும் புகழ். 

(3) இம்பர் வாரி - புவியுலகில் உள்ள கடல். 

(4) சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரியில் ‘’பூவர் சோலை மயிலாட புரிந்து குயில்கள் இசை பாட காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி’’ என்னும் பாடல் வரும். அதைப் போல இருக்கும் கம்பன் பாடல். ’’தண்டலை மயில்கள்‌ ஆடத்‌, தாமரை விளக்கம்‌ தாங்கக்‌, கொண்டல்கள்‌ முழவின்‌ ஏங்கக்‌, குவளைகண்‌ விீழித்து நோக்கத்‌, தெண்திரை எழினி காட்டத்‌, ்‌ தேம்பிழி மகர யாழின்‌ வண்டுகள்‌ இனிது பாட, மருதம்வீற்(று) இருக்கும்‌ மாதோ’’

(5) அயோத்தியில், ‘’மன்னவர்‌ தருதிறை அளக்கும்‌ மண்டபம்‌; அன்னமென்‌ நடையவர்‌ ஆடும்‌ மண்டபம்‌; உன்னரும்‌ அருமறை ஓதும்‌ மண்டபம்‌;

பன்னரும்‌ கலைதெரி பட்டி மண்டபம்‌’’ ஆகியவை உள்ளன என்கிறான் கம்பன். இலக்கிய சந்திப்புகள் நடக்கும் இடம் பட்டி மண்டபம். 

நண்பனிடம் தற்போது நாம் கம்பனை விவாதிக்கும் வீட்டின் இந்த அறை கூட பட்டி மண்டபமே எனக் கூறினேன். 

(6) ராமர் புனர்பூச நட்சத்திரம் ; கடக ராசி. லஷ்மணன் ஆயில்ய நட்சத்திரம் ; கடக ராசி . பரதன் பூச நட்சத்திரம் கடக ராசி. சத்ருக்கணன் - மக நட்சத்திரம் ; சிம்ம ராசி. ராமன் பரதன் லஷ்மணன் மூவரும் ஒரே ராசி என்பதை நேற்று தான் அறிந்தோம். 

(7) அகத்தியனைக் குறித்து சொல்லும் போது கம்பன் ‘’ தமிழ் என்னும் அளப்பரும் சலதி தந்தவன்’’ என்கிறான். தமிழ் என்னும் பெருங்கடலைத் தந்தவன் என்பது அதன் பொருள். 

(8) வாசவன் - வசுக்களின் தலைவன் - இந்திரன்

(9) பரசுராமன் ராமனுக்கு அளிக்கும் ஆசி : எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக. 

(10) இறப்பென்னும் மெய்ம்மை என ஒரு இடத்தில் சொகிறான் கம்பன். 

(11) வாழ்க்கையின் சிக்கலான தருணங்களை ‘’விதியின் பிழை’’ எனக் கடந்து போதலே சிறந்த உபாயம். பிழைகள் தவிர்க்க இயலாதவை. எண்ணாது நிகழ்ந்தவை. மானுடப் பிழைகளே திருத்தப்படும் போது விதியின் பிழையும் வேறு விதத்தில் திருத்தப்படலாம். 

“நதியின்‌ பிழைஅன்று நறும்புனல்‌ இன்மை, அற்றே பதியின்‌ பிழைஅன்று பயந்து நமைப்‌ புரந்தாள்‌ மதியின்‌ பிழைஅன்று; மகன்‌ பிழை அன்று; மைந்த விதியின்‌ பிழை,நீஇதற்குஎன்கொல்வெகுண்ட(து)'

(12) வெய்யோன்‌ ஓளி, தன்‌ மேனியின்‌ விரிசோதியன்‌ மறையப்‌, பொய்யோ எனும்‌ இடையாளொயடும்‌, இளை யானொடும்‌ போனான்‌; மையோ,மர கதமோ;மறி கடலோ, மழைமுகிலோ ஐயோ இவன்‌ வடிவென்பதோர்‌ அழியா ஆழ குடையான்’’

(13) கங்கையின் ஆழம் போன்ற உயரம் கொண்டவன் என குகனைக் கூறுகிறான் கம்பன். 

(14) ராமன் குகனை சுட்டிக் காட்டி சீதையிடமும் இலக்குமனிடமும் ‘’தீராக் காதலன் ஆகும்’’ என்கிறான். குகனை ‘’யாதினும் இனிய நண்ப’’ என விளிக்கிறான்.

(15) *கங்கைஇரு கரையுடையான்‌, கணக்கிறந்த நாவாயான்‌, உங்கள்குலத்‌ தனிநாதற்‌(கு) உயிர்த்துணைவன்‌, உயர்தோளான்‌, வெம்கரியின்‌ ஏறனையான்‌, விற்பிடித்த வேலையினான்‌, கொங்கலரும்‌ நறும்தண்‌ தார்க்‌ குகன்‌ என்னும்‌ குறியுடையான்.