Friday, 20 November 2026

புதுச்சேரி வெண்முரசு கூடுகை - 100

தமிழகத்தில் ஓர் இலக்கியப் படைப்பு வாசிக்கப்படுவது என்பது அரிதானது. ஒரு ஊரில் பல வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட படைப்பை வாசிப்பது என்பதும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட படைப்பில் தாங்கள் வாசித்த பகுதியைக் குறித்து வாசகர்கள் கூட்டாக இணைந்து விவாதிப்பது என்பதும் மகத்தானது. எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்ட உலகின் மிகப் பெரும் காவியமான "வெண்முரசு" நாவலை புதுச்சேரி வாசகர்கள் மாதத்துக்கு 80 பக்கம் என்னும் அளவில் வாசித்து மொத்த 22,000 பக்கத்தில் 8,000 பக்கம் வரை விவாதித்திருக்கின்றனர்.

உலகில் முதல் முறையாக எழுத்தாளன் தன் படைப்பை தினமும் எழுதி இணையத்தில் பதிவேற்ற வாசகர்கள் அதனை தினமும் வாசிப்பது என்பது ஜெயமோகனால் "வெண்முரசு" படைப்பின் மூலம் சாத்தியமானது. புதுச்சேரி வாசகர்கள் "வெண்முரசு” வெளியாகிக் கொண்டிருக்கும் போதே முழுமையாக வாசித்தவர்கள். மொத்த நாவலும் எழுதப்பட்ட பின்னர் அதனைப் பலமுறை வாசித்த புதுச்சேரி வாசகர்களும் உண்டு. இருப்பினும் கிரமமாக ஒவ்வொரு மாதமும் 80 பக்கம் என்பதை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றனர். 22.11.2026 அன்று 100 வது கூடுகையை நடத்த உள்ளனர். 

நவீன இலக்கிய வாசிப்பை முன்னெடுப்பதிலும் நவீன இலக்கியத்துக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதிலும் "முன்னத்தி ஏர்" என புதுச்சேரி பேராசிரியர் நாகராஜன் அவர்களைக் குறிப்பிடலாம். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்திருந்த "மகாத்மா காந்தி" குறித்த ஜெயமோகனின் உரை மறக்க முடியாதது; புதுச்சேரி இலக்கிய விழாக்களில் தனிச்சிறப்பு கொண்டது. புதுச்சேரி வெண்முரசு கூடுகையின் ஒருங்கிணைப்பாளரான புதுச்சேரி மணிமாறன் சிறந்த ஒருங்கிணைப்பாளர். யாதினும் இனிய நண்பர்; யாவர்க்கும் இனிய நண்பர். அவரது ஒருங்கிணைப்பே புதுச்சேரி வெண்முரசு கூடுகையின் அடிப்படை.

கூடுகையின் சிறப்புகள் அனைத்துக்கும் காரணமாக அமைந்திருப்பவர் அமைப்பாளர் புதுச்சேரி அரிகிருஷ்ணன். ஒவ்வொரு மாதக் கூடுகையிலும் சராசரியாக 12 வாசகர்களேனும் பங்கேற்கிறார்கள். ஒவ்வொருவரின் இலக்கியம் மீதான ஆர்வமும் ஈடுபாடும் மகத்தானது. காலாப்பட்டு முத்துக்குமரன், விழுப்புரம் சிவகுமார் ஆகியோர் எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறார்கள். தாமரைக்கண்ணன் புதுச்சேரி கலை, நுண்கலை இதழ்களின் ஆசிரியராக இருக்கிறார். ஒட்டுமொத்த புதுச்சேரி வெண்முரசு கூடுகையின் ஆன்மா கடலூர் சீனு. இலக்கியம் மேல் இத்தனை ஆர்வம் கொண்டிருக்கும் புதுச்சேரி வெண்முரசு கூடுகை பங்கேற்பாளர்களுக்கு எண்ணிய யாவும் இனிது முற்ற சொல்லரசியின் அருளை வேண்டிக் கொள்கிறேன்.