Friday, 20 November 2026

திருவிடைமருதூர்

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அரியவை; மகத்தானவை. அதனை நாம் ஒவ்வொரு கணமும் உணரலாம்; ஏதேனும் சில தருணங்களில் உணரலாம். நம் அகம் எத்தனை விரிந்திருக்கிறது என்பதைப் பற்றிய விஷயமாகும் அது. திருவிடைமருதூர் தமிழகத்தின் மகத்தான ஊர்களில் ஒன்று என்பது எனது அபிப்ராயம். தமிழகம் பேராலயங்களால் ஆனது; பற்பல பேராலயங்கள் தொகையால் ஆன ஊர்களால் ஆனது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், திருவாரூர் ஆகிய ஊர்கள் பேராலயங்களைக் கொண்டவை மட்டும் அல்ல; பேராலயத் தொகைகளைக் கொண்ட ஊர்களாகும் அவை.

நமது ஆலயங்கள் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி ஒரு மணி நேரம் இருந்துவிட்டு புறப்படத்தக்க வண்ணம் வடிவமைக்கப் பெற்றவை அல்ல. பேராலயம் ஒன்றின் அருகில் வசிப்பவர் அக்கோயிலுக்கு தினமும் சென்று தினம் ஒரு மணி நேரம் அங்கிருந்து வழிபடலாம். புதிய ஊரின் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் செல்ல வேண்டுமெனில் பேராலயங்களை முழுதுணர அங்கு மூன்று நாட்களாவது இருக்க வேண்டும். ஐந்து வேளை பூசைகளிலும் பங்கு பெற வேண்டும். அந்த ஊரின் வீதிகளைச் சுற்றி வலம் வர வேண்டும். அந்தப் பேராலயமும் அப்பேராலயம் அமைந்திருக்கும் ஊரும் ஊர் அமைப்பும் நம் அகத்துக்குள் நிறைய வேண்டும். நம் பேராலயங்கள் அவ்விதமே வடிவமைக்கப் பெற்றவை.

சில நாட்களுக்கு முன் திருவிடைமருதூர் சென்றிருந்தேன். பலமுறை சென்றிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அந்த ஊரின் வீதிகளில் இங்கும் அங்கும் நடந்து செல்ல நேர்ந்தது. "திருவாரூர் தேரழகு; மன்னார்குடி மதிலழகு; திருவிடைமருதூர் தெரு அழகு" என்பார்கள். திருவிடைமருதூர் தெருக்கள் அத்தனை அழகு கொண்டவை. நம் பேராலயங்கள் சோழர்களாலும் பாண்டியர்களாலும் நிர்மாணிக்கப்பட்டு, அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பால் 80 ஆண்டுகளுக்கு மேல் இருளில் மூழ்கி, அதன்பின் துறவி வித்யாரண்யரின் ஆசி பெற்ற விஜயநகரப் பேரரசால் மீண்டும் சீர் செய்யப் பெற்று தற்போதுள்ள வடிவில் தற்போதுள்ள முறையில் இயங்கி வருகின்றன.

ஜனநாயக காலகட்டத்தில் நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆலயங்களைச் சிறப்பாக முறையாகப் பராமரிப்பதில் பங்கு உண்டு. பேராலயம் இருக்கும் ஊரின் ஒவ்வொரு வீதியிலும் சாமானியமாக நடந்து செல்லும் ஒருவரின் செவிகளுக்கு வேத முழக்கம் எப்போதும் கேட்க வேண்டும்; திருமுறைகள் இசைக்கப்படுவது எப்போதும் கேட்க வேண்டும் என்பது எனது ஆவல்