உற்சாகமும் உத்வேகமும் எனக்குத் தேவைப்பட்டது. காலைப் பொழுதில் நான் படித்த பள்ளியை நோக்கி இன்று நடந்தேன். ஒரு பள்ளி மாணவனாக பள்ளிக்கு நடந்து செல்லும் பருவம் என்பது இனிமையானது ; உன்னதமானது ; மகத்தானதும் கூட. என்னை சொந்தப் பிள்ளையாக - சொந்த பிள்ளையை விடவும் ஒரு படி மேலாகக் கருதிய - ஆசிரியர்கள் என் பள்ளியில் எனக்கு இருந்தார்கள். நடு வயதில் இருக்கும் நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். 10 வயது சிறுவனிடம் = 10 வயது சிறுவர்களிடம் ஆசிரியர்கள் அகத்துக்குத் தென்பட்ட ஒளி என்ன ? நம்பிக்கை என்ன? மானுடத்தில் பால பருவத்தின் ஒளியை தினமும் கண்ணுறும் ஆசிரியர்கள் பேறு பெற்றவர்கள். அத்தகைய ஆசிரியர்களிடம் பயிலும் பாலர்கள் மேலும் பேறு பெற்றவர்கள். என் பள்ளியில் என் மீது மிகவும் பிரியம் காட்டிய இரு ஆசிரியைகள் இருந்தனர். அவர்கள் பெயர் என்ன? எல்லா மகத்தான பெயர்களும் அவர்களின் பெயர்களே. பள்ளி முன் சென்று அந்த இரு ஆசிரியைகளையும் - அந்த இரு அன்னையரையும் - எண்ணிக் கொண்டேன். உளம் பொங்கி அழுதேன். அவர்கள் இருவரையும் நினைத்துச் சிந்தும் கண்ணீர் புனிதமானது. அவர்களை எண்ணி கண்ணீர் சிந்துபவன் என்பதே எனது தகுதி.