Saturday, 7 November 2026

இருளும் ஒளியும்

இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க
மரணத்திலிருந்து அழியாமைக்கு இட்டுச் செல்க

என்கிறது உபநிஷத் பிரார்த்தனை. 

நித்யம் உலகின் ஒரு பாதி இருளிலும் உலகின் ஒரு பாதி ஒளியிலும் உள்ளது இயற்கையின் தன்மை. எனில் உபநிஷத் ஏன் இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க என்கிறது? உலகில் உயிர்கள் இறப்பதும் பிறப்பதும் ஒவ்வொரு கணமும் நிகழ்வது. அவ்விதம் இருக்க உபநிஷத் ஏன் மரணத்திலிருந்து அழியாமைக்கு இட்டுச் செல்க என்கிறது?   

இருள் என்பது துவக்க நிலை. இருளில் அனைத்தும் பகுதியளவிலேயே காணப்படுகின்றன. ஒளி என்பது மேல்நிலை. ஒளியில் அனைத்தும் முழுதாகக் காணப்படுகின்றன. மேல்நிலையில் உணர துவக்க நிலையில் உணர்ந்தது அடிப்படையாக இருக்கும். துவக்க நிலையை முற்றுணராமல் மேல்நிலையை முற்றுணர முடியாது. இருளை முழுதாக அறியாமல் ஒளியை முழுதாக அறிய முடியாது. இருளும் ஒளியும் ஒரே விதமாக இருக்க உலகின் காட்சிகள் கணமும் மாறிக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சியும் சிதைவும் நிகழ்த்தும் தொடர் நாடகமே உலகம். 

மரணத்தை அறிந்த உணர்ந்த ஒருவரால் மட்டுமே அழியாமையை உணர முடியும். அழியாமையை உணர்தலின் ஒரு பகுதியே மரணத்தை உணர்தல் ; மரணத்தை அறிதல். 

உபநிஷத் இமைப் பொழுதும் ஓயாத ஒரு பயணத்தை பிரார்த்தனை செய்கிறது. உயிர்கள் ஒளியை முற்றுணரும் பயணம் ; உயிர்கள் அழியாமையை முற்றுணரும் பயணம். 

இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க
மரணத்திலிருந்து அழியாமைக்கு இட்டுச் செல்க