இன்று காலை 10 மணியளவில் ஊரிலிருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக ஒரு வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அந்த வீடு 100 ஆண்டு காலப் பழமை கொண்டது. துடிப்புடன் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மிகவும் கலாபூர்வமாக வீட்டுக்கு வர்ணம் தீட்டியிருந்தார்கள். அந்த வீட்டாரின் தாய்மொழி மராத்தி என அறிந்தேன். மராத்திய எழுத்தாளர் வெங்கடேஷ் மாட்கூல்கர் எழுதிய ‘’பன்கர்வாடி’’ என்னும் மராத்திய நாவலை நான் வாசித்திருப்பதைக் கூறினேன். அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். அந்த நாவலின் சுருக்கத்தை நான் அவர்களிடம் கூறினேன். மிகவும் மகிழ்ந்தார்கள். நான் வங்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை சந்திக்க நேர்ந்த போது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தாராசங்கர் பானர்ஜி எனக் கூறியதைக் கேட்டு அவர்கள் நெகிழ்ந்து உருகியிருக்கிறார்கள். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் கிரிராஜ் கிஷோரின் ‘’சதுரங்கக் குதிரைகள்’’ எனக்கு மிகவும் பிடித்த நாவல் எனக் கூறும் போது வியப்படைந்திருக்கிறார்கள். குர் அதுல் ஐன் ஹைதர் எனக்கு மிகவும் பிரியமான உருது மொழி எழுத்தாளர் என்பதும் அவரது ‘’அக்னி நதி’’ எனக்கு மிகவும் விருப்பமான நாவல் என்பதும் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. பைரப்பாவையும் சிவராம காரந்தையும் வாசித்தவன் என்பதை அறிந்து சந்தோஷம் கொள்ளாத கன்னடர் இல்லை. தகழியின் செம்மீன் வாசித்தவன் என்பதை மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எவரிடமும் பேசும் போது சொல்லியிருக்கிறேன். இந்தியா என்பது ஒரே உணர்வு என்பதை இப்படைப்பாளிகளின் படைப்புகள் எனக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தின.
அந்த வீட்டின் நூலகத்தில் 1000 நூல்கள் இருந்தன. அதை எனக்குக் காட்டினார்கள். கி. ராஜநாராயணன் அவர்கள் அனைவருக்கும் பிரியமான எழுத்தாளர் என்பதைக் கூறினார்கள். ரொம்ப நேரம் மிகவும் உற்சாகமாக அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அங்கே செல்லும் போது அவர்கள் நூல் வாசிக்கக் கூடியவர்கள் என்பது எனக்குத் தெரியாது.
மராட்டிய நிலம் குறித்தும் மராத்திய இலக்கியம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு விஷயம் அவர்களிடம் சொன்னேன். தமிழகத்தில் சத்ரபதி சிவாஜிக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் எனக் கூறினேன். எனது மோட்டார் சைக்கிள் பயணங்களில் பல ஊர்களில் சத்ரபதி சிவாஜியின் சிலைகளைக் கண்டிருக்கிறேன். வீர சிவாஜியின் சிலை எவருக்கும் ஒரு துடிப்பை உருவாக்கும். அந்த சிலையைக் காண்பது என்பதே பெரும் உணர்வெழுச்சி. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு இந்த யோசனை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தமிழகத்தில் 1,00,000 சதுர அடியில் மையத்தில் வீர சிவாஜியின் பிரும்மாண்ட சிலை, சுற்றிலும் பூங்கா, அதில் வீர சிவாஜியின் வாழ்க்கையை விவரிக்கும் அருங்காட்சியகம், ஒளி ஒலி காட்சிகள் ஆகியவை அமைத்தால் சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து பார்வையிட்டு சிவாஜி வாழ்க்கையைக் குறித்து அறிந்து செல்ல உதவிகரமாக இருக்கும்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அரசு வீர சிவாஜிக்கு சிலை நிறுவ உள்ளது.
