தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதற்கு ஒரு காரணம் உண்டு. பொதுவாக தமிழகத்தில் பண்டிகைகள் பகல் பொழுதில் இன்னும் சரியாகச் சொன்னால் நண்பகல் பொழுதில் கொண்டாடப்படுகின்றன. பொங்கல், வருடப் பிறப்பு, ஆயுத பூஜை ஆகியவற்றை உதாரணமாகக் கூற முடியும். காலை 10 மணிக்கு மேல் பொங்கல் வைக்கத் தொடங்கி படையலிட மதியம் 2 மணி ஆகி விடும். ஆயுத பூஜைக்கும் பூசனை மதியம் அல்லது மாலைப் பொழுதில் தான். வருடப் பிறப்பும் அவ்விதமே. எனினும் தீபாவளி மட்டுமே காலை மதியம் மாலை இரவு என நாள் முழுதும் கொண்டாடப்படும் பண்டிகை. காலை எழுந்ததுமே எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், கங்கா ஸ்னானம் ஆகியவை நிகழ்ந்து அனைவரும் புத்தாடை அணிந்து கொள்வர். தீபாவளியன்று இனிப்புகள் நிறைந்த காலை உணவு உண்பர். பின்னர் மதியமும் விருந்துணவு. மாலை பட்டாசுகள் வெடித்தல் என நாள் முழுதுமே அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கும் நாள் தீபாவளி.
இன்று ஊருக்கு அருகில் இருக்கும் 1000 பசுக்கள் வாழும் ஆசாலைக்குச் சென்றிருந்தேன். ஒரு நல்ல நாளில் அந்த பசுக்களுடன் பொழுதை செலவிட்டது மிகவும் மகிழ்ச்சி தந்தது. பசுக்களுடன் பழகும் போது ஒரே சமயம் நாம் அன்னையாகவும் குழந்தையாகவும் இருப்போம். பசுவைப் போல சாதுவான பிரியமான இன்னொரு உயிர் இருக்குமா என்பது தெரியவில்லை.