அன்புள்ள அண்ணா,
1.என் வாழ்வில் நான் சந்தித்த உற்சாகமும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர். லௌகிக வாழ்வில் ஒரு மனிதன் உற்சாகமும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறான் என்பது மகத்தான விஷயம். செல்வம் அதிக அளவில் இருப்பது உற்சாகம் நம்பிக்கை மகிழ்ச்சியைக் கொண்டு வந்து விடும் என மானுடர் பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அது உண்மையல்ல. அது அப்படியுமல்ல. செல்வம் உற்சாகம் நம்பிக்கை மகிழ்ச்சிக்கு துணை செய்யும். அத்துணைக்கு 1 சதவீத மதிப்பு அளிக்கலாம் ; 9 சதவீத மதிப்பு அளிக்கலாம் ; 25 சதவீத மதிப்பு அளிக்கலாம். அதற்கு மேல் அதற்கு மதிப்பெண் வழங்கப்படுமாயின் அம்மதிப்பீடு பிழையான மதிப்பீடு ஆகும்.
2. 9 கி.மீ தொலைவில் இருக்கும் ஊரில் இருக்கும் ஒரு குளத்தை ஒரு ஏரியை ஒரு நதியை ஒருவனுக்குப் பார்க்க வேண்டும் என ஓர் அக உந்துதல் ஏற்பட்டு அவன் அதனை நோக்கி புது வெள்ளத்தை நோக்கி உற்சாகமாக நடக்கத் தொடங்குபவனாயின் அவனே மனித உயிரைக் கொண்டவன். அவனுக்கு செல்வமோ வசதியோ வாகனங் களோ உதவி செய்யும். செல்வம் உள்ள அனைவருக்கும் தன்னைத் தாண்டிய விஷயங்கள் மீது அக உந்துதல் அத்தனை எளிதில் ஏற்பட்டு விடாது.
3. கடந்த 30 மாதங்களாக மனை வணிகம் குறித்த முயற்சிகளிலும் உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தோம். அந்த நாட்கள் பரபரப்பானவை. அந்த நாட்களிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். தங்களுடன் இருந்த பொழுதுகள் அந்தக் கற்றலை மேலும் தீவிரப்படுத்தின. தாங்கள் அளித்தவற்றுக்கு நன்றி.
4. மனை வணிகம் மிகவும் பரபரப்பான தொழில். மேட்டின் உயரங்களையும் பள்ளத்தின் ஆழங்களையும் அடுத்தடுத்து கடந்து செல்லும் பயணம் அது. எந்நிலையிலும் தன்னைக் காத்துக் கொள்வதும் எது சாதகமான சூழ்நிலை என்பதை அறிந்திருப்பதும் அச்சூழ்நிலை கனியும் வரை காத்திருப்பதும் இடர்கள் ஏற்படாமல் தவிர்ப்பதும் எதிர்பாராமல் ஏற்படும் இடரை அறிவுபூர்வமாக அணுகித் தீர்ப்பதும் மனைவணிகத்துக்கு தேவைப்படும் குணங்கள். காலசுழற்சியை நம் மரபு சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் என வகைப்படுத்துகிறது. மனை வணிகத்தின் சுக்ல பட்ச தன்மைகளை நான் கூறியுள்ளேன். இந்த வணிகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இதில் இருக்கும் கிருஷ்ண பட்சமும் தெரியும். இரண்டிலும் தெளிவடையும் போது முழுப் புரிதல் உண்டாகும்.
5. அண்ணா! தங்களுடன் இணைந்து விவாதித்த நாட்களில் நான் மனை வணிகத்தின் சுக்ல, கிருஷ்ண பட்சங்கள் இரண்டையும் அறிந்தேன். மானுடர்கள் நாம் அனைவருமே எல்லா நாட்களும் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
6. எனது உறவினர் ஒருவர் ஒரு சொத்தை விற்பனை செய்து கையில் கணிசமான தொகையை வைத்திருக்கிறார். ’’கணிசமான’’ என்றால் 63,000 சதுர அடி மனையை வாங்கும் அளவுக்கு என்று பொருள். அவரிடம் 63,000 சதுர அடி மனை குறித்து சொன்னேன். முதலீடு செய்தால் அந்த வணிகத்தில் 400 சதவீத லாபம் நிச்சயம் கிடைக்கும். 200 சதவீதம் முதலீடு செய்பவருக்கு. மீதம் 200 சதவீதத்தை நீங்களும் நானும் சமபாகமாக பிரித்துக் கொள்வோம் என்பதைக் கூறினேன். அவர் முதலீடு செய்யும் தொகைக்கு அவருக்கு கிடைக்கும் லாபம் திருப்தியெனில் மட்டும் இதில் இறங்கவும் என உறவினரிடம் கூறினேன்.
7. உறவினர் மொத்த சொத்தையும் எனது பெயரில் பதிவு செய்து கொள்ளுமாறு கூறினார். மொத்த மனைப்பரப்பில் பாதியை சிறு சிறு மனைகளாக விற்பனை செய்து அந்தத் தொகையை முழுமையாக அவருக்கு அளித்து விட்டு அவருக்கு வந்து சேர வேண்டிய தொகை வந்து சேர்ந்ததும் மீதி மனையை நாம் பொசிஷன் எடுத்துக் கொண்டு நமக்குள் பிரித்துக் கொள்வது என்று கூறினார். உறவினருக்கு நான் பரிச்சயம் உடையவன் என்பதால் என் பெயரில் நிலம் இருப்பது அவருக்கு பாதுகாப்பு எனக் கருதுகிறார். அவருக்குச் சேர வேண்டிய தொகை கிடைத்த பின் தான் மீதி நிலத்தை நாம் பொசிஷன் எடுக்க முடியும் என்பதால் எவ்வளவு விரைவில் விற்பனையை முடிக்கிறோமோ அவ்வளவு விரைவில் அது நமக்கு உகந்தது என நாம் எண்ணுவோம் என உறவினர் எண்ணுகிறார்.
8. எனக்கு அவர் கூறும் விஷயங்கள் சம்மதம். தங்கள் அபிப்ராயம் என்ன என்பதைத் தெரிவிக்கவும்.
9. ஒரு விஷயத்தை இப்படித்தான் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என வெளிப்படையாகத் தெரிவித்து விட்டு செய்வது மனை வணிகத்தில் உதவிகரமாக இருக்கிறது. நமது திட்டமிடல்கள் நிகழ்ந்தால் மகிழ்ச்சி ; நிகழவில்லையென்றால் ஏன் நிகழவில்லை என்பதை அறியும் கல்விக்கு வாய்ப்பு.
10. உறவினரின் முன்னெடுப்பை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து தங்களுக்கு சம்மதம் எனில் என்னைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். சேர்ந்து செயல்பட மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.
அன்புத் தம்பி,
பிரபு