14.11.2026 அன்று மதியம் விழுப்புரத்துக்கு எனது இரு சக்கர
வாகனத்தில் வந்திருந்தேன். விழுப்புரம் ஜங்ஷனில் உள்ள ரயில்வே வாகன பார்க்கிங் இடத்தில்
எனது வண்டியை பார்க் செய்தேன். நேரம் அப்போது மாலை 3.30. பார்க்கிங் பொறுப்பாளர்களாக
அங்கே இரண்டு நபர்கள் இருந்தனர். நான் வண்டியை பார்க் செய்து விட்டு வெளியே வரும் போது
பார்க்கிங் கட்டணம் வசூலிக்க உள்ள மேஜையில் எனது வாகன எண்ணைக் கேட்டு எழுதிக் கொண்டு
எப்போது திரும்பி வந்து வண்டியை எடுத்துக் கொள்வீர்கள் எனக் கேட்டனர். சென்னை – விழுப்புரம்
மெமு ரயிலில் இரவு 9.30 அளவில் திரும்பி வந்து வண்டியை எடுத்துக் கொள்வேன் எனக் கூறினேன்.
வாகன பார்க்கிங் கட்டணம் ரூ.20 எனக் கூறி என்னிடம் ரூ.20 பெற்றுக் கொண்டு ரசீதில் ரூ.20
எனக் குறிப்பிட்டு என்னிடம் அளித்தனர். அந்த ரசீதில் எனது வாகன எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்
எழுதப்பட்டிருந்தது. அப்போது நான் அங்கிருந்த ரயில்வே துறையின் பார்க்கிங் கட்டண விபர
அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அதில் இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் 12 மணி
நேரத்துக்கு ரூ.10 என இருந்தது. அதனை சுட்டிக் காட்டி ஏன் என்னிடம் ரூ.20 வசூல் செய்தீர்கள்
என அவர்களிடம் கேட்டேன். வசூல் செய்யும் இடத்தில் இருந்த இருவரும் சைக்கிளுக்குத்தான்
12 மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.10 ; இரு சக்கர வாகனத்துக்கு ரூ.20 எனக்
கூறினர். நான் மெமு ரயிலைப் பிடித்து மேல்மருவத்தூர் செல்ல வேண்டியிருந்ததால் பேச்சைத்
தொடராமல் ரயில் டிக்கெட் எடுக்க சென்று விட்டேன். எனது வேலை முடிந்த பின் நான் திட்டமிட்டவாறு
சென்னை – விழுப்புரம் மெமு ரயிலில் விழுப்புரம் திரும்பினேன். ரயில்வே பார்க்கிங் சென்று
வாகனத்தை எடுத்துக் கொண்டு வசூல் மேஜைக்கு வந்தேன். ரசீதைக் கொடுத்தேன். வாங்கி வைத்துக்
கொண்டனர். ரசீதில் கையொப்பம் இட்டுத் தருமாறு அவர்களிடம் கேட்டேன். அவ்வாறு கொடுப்பதற்கில்லை
எனக் கூறினர். நாம் திரும்பி வந்து வண்டியை எடுக்கும் 9.45 என்னும் நேரத்தை ரசீதில்
எழுதிக் கொடுங்கள் ; ஒளிப்படம் எடுத்துக் கொள்கிறேன் எனக் கேட்டேன். அப்போது அங்கிருந்த
இருவரில் ஒருவர் உரையாடல் மாமூல் உரையாடலாக இல்லாமல் இருப்பதை உணர்ந்து என்னிடம் ரூ.10
திருப்பிக் கொடுத்து விட்டார். நான் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி விட்டேன். நேற்று
(14.11.2026) நடந்த சம்பவம் குறித்து இன்று ( 15.11.2026) புகார் அளிக்கிறேன். எனது
புகார் என்னவெனில் விழுப்புரம் சந்திப்பு ரயில்வே பார்க்கிங் ஒப்பந்தக்காரர் தினமும்
12 மணி நேர கால இடைவெளியில் இரு சக்கர வாகனங்களை பார்க் செய்து எடுத்துச் செல்லும்
பொதுமக்களிடம் ரயில்வே நிர்ணயித்த ரூ.10 கட்டணத்துடன் கூடுதல் கட்டணமாக ரூ.10 வசூல்
செய்கிறார். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் முறைகேடாக பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்டு
முறைகேடான ரயில்வே ஒப்பந்ததாரர் கைகளுக்கு சென்று சேருகிறது. இது ஒரு தனிநபரின் ரூ.10
தொடர்பான விஷயம் மட்டுமல்ல. எனக்கு நடந்த சம்பவம் முறைகேடு இந்த விஷயத்தில் பெரிய அளவில்
நடக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் ஆகும். விழுப்புரம் ரயில் சந்திப்பு போன்ற தினமும்
ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில் நிலைய பார்க்கிங்கில் தினமும் சராசரியாக
300 இரு சக்கர வாகனங்கள் 12 மணி நேரத்துக்குள் பார்க்கிங் செய்யப்பட்டு எடுக்கப்படுகின்றன
எனக் கொண்டால் அந்த 300 வாகனங்களுக்கும் முறைகேடாக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம்
ஒரு நாளைக்கு ரூ.3000 என்றாகிறது. ஓராண்டுக்கு கணக்கிட்டால் அந்தத் தொகை ரூ.10,00,000
ஆகும். இந்தப் புகாரின் நோக்கம் விழுப்புரம் ரயில் நிலைய பார்க்கிங்கில் நிகழும் ஆண்டுக்கு
ரூ.10,00,000 அளவிலான ஊழல் முறைகேட்டை ரயில்வே உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு
வருவதே ஆகும். ரயில்வே அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து உரிய விசாரணை நடத்தி ஆண்டுக்கு
ரூ.10,00,000 பொதுமக்கள் பணத்தை முறைகேடாக பறிக்கும் ரயில் நிலைய பார்க்கிங் ஒப்பந்ததாரர்
மீதும் இந்தத் தவறைக் கண்டறிந்து சரிசெய்யாமல் உடந்தையாக இருக்கும் விழுப்புரம் ரயில்
நிலைய உரிய அதிகாரிகள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விழுப்புரம்
ரயில் நிலைய பார்க்கிங் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ஒப்பந்த விதிகளின் படி ரத்து செய்ய
வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். எனது புகாருக்கான ஆதாரங்களாக எனக்கு வழங்கப்பட்ட
பார்க்கிங் ரசீதின் ஒளிப்படம், எனது பயணச்சீட்டுகளின் ஒளிப்படம் ஆகியவற்றை இத்துடன்
இணைத்துள்ளேன். பார்க்கிங் ஒப்பந்ததாரரின் 14.11.2026க்கான ரசீது நகல் புத்தகத்தையும்
பார்க்கிங் பகுதியின் சி சி டி வி பதிவுகளையும் விசாரணைக்கு உதவும் விதத்தில் கோரிப்
பெற்று தன் வசம் வைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்விதமான
முறைகேடுகளில் ஈடுபடுவோர் பொதுவாக எண்ணுவது யாதெனில் நாட்டின் குடிமக்கள் முறைகேடுகளையும்
ஊழலையும் எதிர்த்து ஒரு சிறு குரல் கூட எழுப்பாமல் சிறு எதிர்ப்பு கூடத் தெரிவிக்காமல்
ஊழல்வாதிகளுக்கும் முறைகேட்டாளர்களுக்கும் பயந்து பணிந்து இருப்பார்கள் என்பதே. தங்களைக்
கேட்பார் யாருமில்லை என்னும் அசட்டுத் துணிச்சல் அவர்களிடம் இருக்கிறது. அந்த அசட்டுத்
துணிச்சலை உடைத்தெறிய வேண்டும் என்னும் உணர்விலேயே இந்தப் புகாரைப் பதிவு செய்கிறேன்.
இந்தப் புகார் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு விழுப்புரம் ரயில் நிலைய பார்க்கிங்
ஒப்பந்தக்காரர் மீதும் அவருக்கு உடந்தையாக இருக்கும் ரயில்வே அதிகாரிகள் மீது சட்டபூர்வமான
நடவடிக்கை எடுக்கவும் விழுப்புரம் ரயில் நிலைய பார்க்கிங் ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை
ரத்து செய்து பொதுமக்களிடம் ரயில்வே நிர்ணயிக்கும் நியாயமான கட்டணத்தை வசூல் செய்யும்
ஒப்பந்ததாரருக்கு பார்க்கிங் ஒப்பந்தம் அளிக்கவும் கேட்டுக் கொள்கிறேன். ஓர் இந்தியக்
குடிமகனாக இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வகுத்திருக்கும் அடிப்படைக் கடமையையே
இந்தப் புகார் மூலம் செய்திருக்கிறேன். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் போகுமாயின்
சட்டபூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.